சிந்தனையும் செயலும்
கட்டுரைகள் 19 · 19 / 50
நம்முடைய உடம்புதான் - அதற்காக அக்குளில் விரல்களை வைத்துத் தேய்த்துத் தேய்த்து உருட்டியெடுக்கும் அழுக்கைத் திரட்டியெடுத்து அன்னை பார்வதி தேவியார், விநாயகர் உருவம் ஒன்றைச் செய்து அதைக் காவல் தெய்வமாகத் தனது அரை வாசலில் அமர்த்தியதுபோல் நாமும் அமர்த்த முடியுமா ? ‘தெய்வீக’ அழுக்கிற்கும் மனித அழுக்கிற்கும் உள்ள வித்தியாசத்தை உணர வேண்டாமா ? மனித அழுக்கு, துர்நாற்றம் மூக்கைத் துளைக்கிறது!
இந்த அழுக்கு, உமிழ் நீரோடு - உதட்டோடு - நாக்கோடு கலந்தால்; உயிருக்கே ஊனம் விளைகிற அளவுக்கு (Infection) தொற்றுக் கிருமிகள் தொற்றிக் கொள்ளாதா எனக் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். ‘தெய்வீக’ அழுக்கைப் பற்றி தெளிவான கணிப்பு எதுவும் கிடையாது. நாம் இப்பொழுது மனித நலம் பற்றியே கவலைப்படுவதால்; அவர்களுக்குத் தேவையானதை - தக்கதை மட்டும் சொல்ல வேண்டிய அவசியத்தில் இருக்கிறோம்.
அக்குளில் விரல் கொண்டு தேய்ப்பது மட்டுமல்ல; ஏதாவது ஓர் அங்க சேட்டை மனிதருக்கு இருக்கும் - சிலர் உதட்டை அடிக்கடி கடிப்பார்கள் - சிலரது கண்கள் இமைத்துக் கொண்டேயிருக்கும்; அளவுக்கு அதிகமாக! அடிக்கடி! அவரெல்லாம் அவசியம் மருத்துவர் ஆலோசனைகளைப் பெறவேண்டும்.
சிலர், தொண்டையில் காறிய சளியை ஒரு ஓரமாக உடனே தூப்பி விடாமல், வாயில் வைத்துக் குதப்பிக் கொண்டே பிறருடன் பேசிக் கொண்டிருப்பார்கள். அதைக் கேட்போர் முகத்தில்
விளக்கெண்ணெய் வடிவும் - விரைவில் அவர் விடைபெற்றுக் கொள்ளமாட்டாரா என்று ஏங்கித் தவிப்பார்கள் சிக்கிக் கொண்டவர்கள். சிலரது அங்கசேட்டைகள்; ரசிக்கும்படியாகக்கூட இருக்கும் - ஆனால்; அக்குளில் தொடங்குவது அழுக்குச் சேமிப்பு ஆலையாக உருவெடுக்கிறபோதுதான் ஆபத்து தொடங்குகிறது என நாம் அறிவுறுத்த வேண்டியிருக்கிறது.
7 - 8 - 2005
★★★
விளையாட்டாகக் கருதிக் கொண்டு இராமன், தனது இளமைப்பிராயத்தில் அயோத்தி அரண்மனைப் பூங்காவில் கூனியின் முதுகில் களிமண் உருண்டைகளைக் கொண்டு அடித்தான். அது கூனிக்கு வலித்ததோ இல்லையோ அவளுக்கு இராமன் மீது ஏற்பட்ட ஆத்திரம்தான் அவனது பட்டாபிஷேகத்தையே கைகேயி மூலமாகத் தடுப்பதற்குக் காரணமாயிற்று என்று கதை சொல்வார்கள், கதை முடிவில், “விளையாட்டு வினையாகும்” என்பது இராமன் விஷயத்தில் எவ்வளவு உண்மையாகிவிட்டது பாருங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்குவார்கள்.
அதாவது இராமாயணத்தில் விளையாட்டுத்தனமான செயலுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட அந்தப் பழமொழி; இந்திய நாட்டின் எல்லாக் கிராமங்களிலுமுள்ள இளைஞர்களைப் பயமுறுத்தும் மொழியாகி; நமது விளையாட்டுக் குழு எதுவாயினும் அது, வெளிநாடு ஒன்றில் வெற்றி பெற்றது - விருது பெற்றது - என்றோ; அல்லது வெளிநாட்டு விளையாட்டு அணியொன்று இங்கே தோல்வியுற்றுத் திரும்பியது என்றோ; செய்தி வருவதென்பது குதிரைக் கொம்பாகவே ஆகிவிட்டது.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் ஒலிம்பிக் பந்தய விளையாட்டுப் போட்டிகளில், இருபது பதக்கங்களை, முப்பது பதக்கங்களை அள்ளிச் செல்வதைக் கண்டு அந்த மகிழ்ச்சிகரமான நிலை, இந்திய நாட்டில் எப்போது வாய்க்கும் என்று ஏக்கப்பெருமூச்சல்லவா விட்டுக் கொண்டிருக்கிறோம்.
கால்பந்து, கைப்பந்து, டென்னிஸ், ஹாக்கி என எந்தவொரு ஆட்டமாயினும் அல்லது தொலைவுக் கணக்கு ஓட்டமாயினும்
‘ஒலிம்பிக்’கில் சேர்க்கப்படாத ‘கிரிக்கெட்’ ஆட்டம் தவிர்த்த உலகத் தரம் வாய்ந்த விளையாட்டுப் போட்டிகளில்கூட, நாம் பெறும் வெற்றிகளின் அளவு, நம்மை உற்சாகப் படுத்துவதாயில்லை. ஒவ்வொரு போட்டிகளையும் போட்டி முடிவுகளையும் வேடிக்கை பார்ப்பதற்கு அரங்குகளில் இந்திய தேசியக் கொடிகளுடன் குவிந்திருக்கும் நாட்டுப் பற்று மிகுந்த இளைஞர்கள்; நமது தேசத்து விளையாட்டு அணிகள் தோல்வியுற்றுத் திரும்பும்போது தங்களின் முகங்களையும் கொடிகளையும் தொங்கப் போட்டுக் கொண்டு, பார்வையாளர் பகுதிகளிலிருந்து வெளியேறும்போது, அதைத் தொலைக்காட்சிகளில் பார்த்துக் கொண்டிருக்கும் நம்மை வெட்கம் பிடுங்கித் தின்பதையும், வேதனை, நம் இதயத்தைப் பிராண்டி இரத்தம் கசிவதையும் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் அல்லவா துடித்துப்போக வேண்டியுள்ளது.
ஏதன்ஸ் நகரில் - “நவீன ஒலிம்பிக்” ஆரம்பமான 1896 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் நாம் நமது கை விரல்கள் அனைத்தையும் விட்டு எண்ணக் கூடிய அளவுக்கு தங்கமோ, வெள்ளியோ, அல்லது தரத்தில் அவற்றுக்கும் குறைந்ததான எந்தப் பதக்கங்களையோ; பெற்றிருக்கிறோம் எனப் பெருமிதம் கொள்ள முடிந்திருக்கிறதா ?
பத்து கோடிக்கும் குறைவான - இரண்டு கோடிக்கும் குறைவான - அவ்வளவு ஏன்; சில இலட்சங்கள்தான் எனப்படும் - மக்கள் தொகை கொண்ட நாடுகள் எல்லாம்கூட வெளிநாட்டில் ஆயினாலும் - உள்நாட்டிலேயே வெளிநாட்டு விளையாட்டுக் குழுவினரை எதிர்கொண்டாலும் நிச்சய வெற்றிக்கு உத்திரவாதம் என்று உறுதி கூறி விட்டு அதனைச் செயலிலும் காட்டும்போது; நம் நாட்டு விளையாட்டுக் குழுவினர் மட்டும் வெளி நாட்டாருக்கு அறைகூவல் விடுப்பதிலும் குறைவில்லை; முடிவில் அறைக்குள் உட்கார்ந்தபடி அழுது தீர்ப்பதிலும் குறைவில்லை என்கிற பரிதாப நிலைக்கு ஆளாகிறார்கள் என்றால்; நூறு கோடி மக்கள் தொகை கொண்ட இந்தப் பெரிய நாட்டில் வலிவும் திறனும் கொண்ட விதவிதமான விளையாட்டுக் குழுக்களை கடலிலிருந்து முத்தும் பவளமும் எடுப்பது போலத் தேர்வு செய்து எடுத்திட முடியாதா ?
இன்றைக்கு முடியுமா ? நாளைக்கு முடியுமா ? இந்த ஆண்டுக்குள் முடியுமா ? என்றெல்லாம் மலைத்து நிற்காமல்; என்றைக்கோ ஒருநாள் முடிந்தே தீர வேண்டும் - என்ற முனைப்புடன் செயல்பட்டால் எதுவுமே முடியக்கூடியதுதான்! தேவையான ‘நல்லது’ என்றால் முடிய வேண்டியதுதான்!
நம் வீட்டுப் பிள்ளையை வளர்த்து, பள்ளிக்கு, அனுப்பி வைப்பதுடன் கடமை முடிந்துவிட்டதாகப் பெற்றோர் கருதாமல்; நல்ல கல்வியாளர்களை மட்டுமல்லாது; வல்லவர்களான விளையாட்டு வீரர்களையும் தயாரித்து நாட்டுக்கு வழங்கிட முன்வர வேண்டும். அந்த வீரர்களைத் தேர்வு செய்து குழுக்களை அமைக்கும்போது; நாட்டின் ஒரு பகுதிக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல்; எல்லாப் பகுதிகளுக்கும் அந்த வாய்ப்பு பகிர்ந்தளிக்கப்படுதல் வேண்டும்.
இதில் பொறுப்பேற்றிருப்பவர்களுக்கோ, பொறுப்புக் குழுக்களுக்கோ நாட்டுப்பற்று ஒன்றுதான்; நெஞ்சில் நிறுத்தப்பட்டு நாலாதிசையும் ஒளி பரப்புகிற கலங்கரை விளக்கமாக அமைய வேண்டுமே தவிர; தன்னை மட்டும் உயர்த்திக் கொண்டால் போதுமென்ற குறுகிய பார்வை கொண்ட குடத்து விளக்குகளால் பயனேதும் விளையாது!
அரசு அலுவலர்களாக ஆசிரியப் பெருமக்களாக இருக்கும் பெற்றோர்கள்; முதலில் இதில் கவனம் செலுத்தி தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் கிராமங்களின் தெருவில் மற்றும் திடலில் விளையாடுவதென்றாலும், நகரங்களில் மைதானங்களில் விளையாடுவதென்றாலும்; அவற்றில் தூய்மைக்கும் உரிய இடம் அளித்திடவும் - ஏனைய பெற்றோர்களும் இவர்களைப் பின்பற்றித் தொடர ஊக்கம் வழங்கிடவும் - ஊரில் பெரியவர்களும், நகரப் பிரமுகர்களும், அதற்கான சகல வசதிகளும் செய்து கொடுக்கவும் முணுமுணுப்பின்றி முன்வந்தால்; விளையாட்டுத் துறையில் நம்நாடும் வெற்றிகளை ஈட்டியவாறு முன்னுக்கு வரும் என்பதில் ஐயமில்லை!
9 - 8 - 2005
★★★
“சோதிடம் பொய்யல்ல; சோதிடர்கள்தான் பொய் சொல்லி விடுகிறார்கள்” என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. அந்த வாதத்தை வலுப்படுத்தப் பல எடுத்துக்காட்டுகளும் கூறப்படுகின்றன.
“சோதிடம், ஆரூடம் என்பவைகள் எல்லாம் ஒரு கணக்கே தவிர வேறு ஒன்றுமில்லை. கிரகங்களின் நிலையை வைத்துக் கணிக்கப்படுபவை. அந்தக் கணக்கில் ஓர் இம்மி தவறினாலும் சொல்லுவது பலிக்காமல் போய்விடும். பாருங்கள் பக்கத்துக் கிராமம் மிட்டாதார் இருந்தாரே; பல நூறு ஏக்கரா நிலமும் - பாங்குகளில் ஏராளப் பணமும் - பாட்டன் பூட்டன் காலத்திலேயிருந்து பரம்பரை பரம்பரையாக இருந்த சொத்து; பட்டினத்துக்குக் குடிபோனார் - எப்படித்தான் எல்லா சொத்தும் அழிந்ததோ - இப்போது ஒரு தனியார் கம்பெனியில் குமாஸ்தா வேலை பார்த்து குடும்பம் நடத்துகிறார்.
இப்படி நடக்குமென்றும் - அவர் சீட்டாட்டம்; குதிரைப் பந்தயம் என்று ஆடி எல்லாவற்றையும் இழப்பார் என்றும் அவர் ஜாதகத்திலேயே முன்கூட்டியே கணிக்கப்பட்டு எழுதியும் வைக்கப் பட்டிருப்பதைத் தன்னிடமே காட்டினார்கள் என்றும், தானே அதைப் படித்துப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனேன் என்றும் நாமும் நம்புகிற அளவுக்கு நம்மிடமே சொல்கிறவர்கள் உண்டு. அந்த மிட்டாதார் வாழ்க்கை ஏட்டில் எதிர்காலப் பயன் என்ற குறுந்தலைப்பில் அத்தகைய நிகழ்வுகளை முன்கூட்டியே சங்கேத வார்த்தைகளில் குறிப்பிடப்பட்டிருக்கவும் கூடும்”
இவ்வளவையும் நான் கண்ணை மூடிக் கொண்டு இல்லையென்று மறுக்கவில்லை, மறுத்தே தீர வேண்டும் என்ற பிடிவாதமில்லாமல், நான் எடுத்துவைக்கும் நியாயமான வாதமெல்லாம்; இப்படி முன்கூட்டி நம் ஜாதகப் பலனைத் தெரிந்து கொள்வதால் என்ன நன்மை என்பதுதான்! “அந்த மிட்டாதார், சூதாட்டங்களில் ஈடுபடாமல் எச்சரிக்கையாக இருந்து விடலாமல்லவா?”
என்று கேட்கத் தோன்றும். ஆனால் அது எப்படி முடியும்? அவரது ஜாதகப்படி அவருக்கு சூதாட்ட மோகம் ஏற்படும் என்று இருக்கும்போது; அதனால் பெரும் பொருள் இழப்பு ஏற்படும் என்று அந்த மிட்டாதார் பிறந்த நேரத்து ராசி பலன்கள், கிரக நிலைகள் எல்லாம் அழுத்தமாக வரையப்பட்டு இருக்கும்போது அந்தக் கோடு தாண்டி; அவர் செயல்பட அவரது ஜாதகம் அவரை விட்டு விடுமா?
அவருக்கு ஒரு குறிப்பிட்ட வயதில் சூதாட்ட மோகம் ஏற்படும் - அதனால் பொருள் இழப்பு நேரிடும்; என்பதை முன்கூட்டியே அந்த ஜாதகம் சொல்லியிருக்குமானால் - அந்த ஜாதகப்படி இப்படிப்பட்ட ஓர் எச்சரிக்கை செய்யப்பட்டு; அவர் நல்வழியை மேற்கொண்டு தப்பித்து விடுவார் என்றும் கூறப்பட வேண்டுமல்லவா?
அவ்வாறு தப்பித்து விடுவார் என்று ஜாதகத்திலே இருக்குமானால்; அது தானாகவே நடக்க வேண்டிய ஒன்றுதானே! அது ஆரூடக்காரரால் முன்கூட்டி அறிவிக்கப்படவேண்டிய அவசியம் எதுவும் இல்லையல்லவா? அப்படியானால் ஆரூடக்காரர் முன்கூட்டியே அறிவித்து; அதன்படி அந்த மிட்டாதார் தன்னைக் காப்பாற்றிக் கொள்வார் என்றும் அந்த ஜாதகத்தில் இருக்க வேண்டுமல்லவா? என்ற கேள்விக்கு விளக்கம் கிடைக்காமலே போய்விடுகிறதே!
தன்னை ஜாக்கிரதைப்படுத்திக் கொண்டு, மிட்டாதார், தவறான வழிக்குச் செல்லாமலே இருந்து விடுவாரேயானால் அதுவும் அந்த ஜாதகத்தில் அப்படியே இடம் பெற்றிருக்க வேண்டும். இடம்பெறாதபட்சத்தில் ஜாதகம் பற்றிய நம்பகத் தன்மைக்கு ஆதாரமில்லாமலேதானே ஆகிவிடுகிறது.
நடப்பதும்; நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விடுவதும் - நடப்பதைத் தடுப்பதும் - தடுத்தால் நடக்காமல் இருப்பதும்;
ஜாதகப்படியேதான் என்றால்; பிராயச்சித்த வேண்டுதல்களும், ‘தோஷம்’ கழித்தல்களும் விழலுக்கிறைத்த நீராக வீணாகி விடத்தானே செய்யும்! அதற்காக யாரும் அலட்டிக்கொள்ளத் தேவையில்லையே!
அலட்டிக் கொள்வோமா; மாட்டோமா என்பதையும், ஜாதகம் தானே சொல்லும். அது சொல்வதற்கு மாறாக நிகழ்ச்சிகள் நடந்தால் பிறகேன் ஜாதக நம்பிக்கை?
