சிந்தனையும் செயலும்
கட்டுரைகள் 16 · 16 / 50
வைப்பு மருந்து நோயால் பீடிக்கப்பட்டோர் கூறும் குறிகள் - வயிற்றுவலி, மயக்கம், உணவின் மீது விருப்பமில்லாமை, மருந்து வைத்தவர் வீட்டிற்குச் சென்றால் வலி இல்லை, பசி ஏற்படுகிறது, உடம்பு பலவீனமாக இருக்கிறது, அந்த வீட்டை விட்டு வரவே முடியவில்லை, தன் வீட்டு நினைவே இல்லை என்பதாகச் சொல்கிறார்கள்.
இதோடு இன்னொரு வேடிக்கை என்னவென்றால் அந்த மருந்து; வைத்த கட்டியாகவே வயிற்றிலிருக்குமாம். எடுத்தால் வெளியில் கட்டியாக வருகிறதாம்.
எனக்குத் தெரிந்த ஒருவருக்கு மருந்து எடுப்பதைக் காணச் சென்றேன். கடுமையான பேதி மருந்தைக் கொடுத்தார், அந்த மருந்தெடுக்கும் மகா மருத்துவர். மருந்துள்ளவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டு துடித்துப்போனார். பேதி ஏற்பட்டது. மலக் கழிவு, திடலில் நடைபெற்றது. ஒவ்வொரு பேதியாகும்போதும் அந்த மகா மருத்துவர் ஒரு குச்சியால் மலத்தைக் கிண்டிப் பார்த்தார். நானும் உடனிருந்தேன். எட்டு முறைகள் பேதியானது. கடைசியில் மகா மருத்துவர் குச்சியால் மலத்தைக் கிண்டிப் பார்த்தார்.
குச்சியோடு உருண்டை ஒன்றைப் போட்டு அதை தன் கையால் எடுப்பதை நான் தெரிந்தும் தெரியாததுபோல் பார்த்துவிட்டேன். அந்த உருண்டையை கழுவி என்னிடம் முதலில் காட்டினார். கையில் வாங்கிப் பார்த்து ஒரு நொடியில் அந்த உருண்டை இன்னதென்று தெரிந்து கொண்டேன்.
சில நாட்களில் அதே நபருக்கு மீண்டும் வயிற்று வலி. அதே மகா மருத்துவரிடம் சென்றார்கள். இன்னும் கொஞ்சம் மருந்திருக்கிறது என்று மீண்டும் மருந்து எடுக்கப்பட்டது. நானும் சென்றேன். மகா மருத்துவர் மீண்டும் ஒரு மருந்து துண்டை எடுத்தார். முன் எடுத்த மருந்தின் அளவிலும் மிகச் சிறியதாக. இம்முறையும் நான் எதும் சொல்லாது திரும்பிவிட்டேன்.
ஒரு நாள் அந்த மகா மருத்துவரைக் காணச் சென்றேன். கண்டேன். நீங்கள் மருந்தெடுக்கும் விதம் பிரமாதம் என்றேன். ரொம்ப சந்தோஷம் என்றவர், இது ரொம்ப கஷ்டங்க என்றார். என்னால் சும்மா இருக்க முடியவில்லை. “என்ன கஷ்டம். மெழுகை கரித் தூளில் உருட்டி மலத்தில் போட்டு எடுப்பதற்கு?”
என்றேன், அசந்து போய் விட்டார். வயிற்றுப் பிழைப்பு சார் என்று பரிதாபமாகச்
சொன்னார். சார் இன்னொன்று உங்களுக்குத் தெரியுமா? சில பேருக்கு உண்மையிலேயே குணமாயிடுது சார்; ஆமாம் என்றேன். இனி மேலும் அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என்றேன். “செய்வினை பண்ணிட்டாள், மருந்து வெச்சவள்” என்று சொல்லி மந்திரம் பண்ண வேண்டியதுதான் என்றார்.
மந்திரம் பண்ணியும் நோய் தீரவில்லை என்றால்? பெரிய மந்திரக்காரனிடம் தள்ளிவிட வேண்டியதுதான் என்றார். என்ன செய்வது? இப்படிப்பட்டவர்களை சமுதாயம் புரிந்துகொள்ளாமல் வளர்க்கிறதே என்று திரும்பிவிட்டேன்.
எதற்கு இவ்வளவும் எழுத நேரிடுகிறது என்றால் நோயை அறியாது பேயை நம்புகிறார்களே; என்னைக்கு இவர்கள் திருந்துவார்களோ?”
மருந்துகளின் பெயராலும் மடமையிருளில் மக்கள் தள்ளப்பட்டார்கள்; ஏன் இப்போதும்கூட அந்த நம்பிக்கையில் மக்கள், கிராமப்புறங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் - அவர்களையெல்லாம் - திருத்தி, அறிவோடு வாழச் செய்வதற்கு படித்த இளைஞர்கள் முன்வர வேண்டும். பகுத்தறிவு பரப்புவதைத் தங்கள் பணியாகக் கொள்ள வேண்டும்.
18 - 7 - 2005
★★★
இராமனுக்கு முடிசூட்டு விழா நடத்த நல்ல நாள், நல்ல நேரம் எதுவென்று பார்த்துக் கணித்துக் கொடுத்தவர் சாதாரணமானவர் அல்ல. சாத்திரங்களைக் கரைத்துக் குடித்த சகலகலாவல்லவர் - வசிஷ்டர் - அவர் குறித்த நாளில் நாடாளச் செங்கோல் ஏந்த வேண்டிய இராமன்; மரவுரி தரித்து மனையாள் சீதையுடனும், இளையோன் இலக்குவனுடனும் காட்டேற நேரிட்டதே என்பதை இராமாயண இதிகாசத்தில் படித்த பிறகும், ஆரூடம், சோதிடம், நாள் நட்சத்திரம், சித்தயோகம், அமிர்தயோகம், மரணயோகம் என்று பஞ்சாங்க நம்பிக்கையில் அறிவைப் பறிகொடுத்துவிட்டு அலைகின்ற மானுடர் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த நிலையை அறிவியக்கத்துக்குக் கிடைத்துள்ள தோல்வி என்றும் - மூட நம்பிக்கையாளர்க்கு கிடைத்திடும் வெற்றி என்றும் எண்ணிக் கொண்டிருப்போர் இன்னும் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றனர்.
அத்தகைய நம்பிக்கையின் காரணமாக எத்தகைய கொடுமைகள் பல குடும்பங்களைக் குலைத்திருக்கின்றன; பலரது வாழ்க்கைக் கெடுத்திருக்கின்றன - எத்துணை ஏமாற்றத்துக்கு மக்களை ஆட்படுத்தியிருக்கின்றன - எத்தர்கள் எத்துணையோர் சட்டத்தின் பிடியில் சிக்கியிருக்கின்றனர் என்பதைச் செய்திகளாகச் செவிமடுத்தும்கூட; இன்னும் அந்த நம்பிக்கைகளுக்கு இடமளித்து நாசமாகின்றவர்கள் தொகை வளர்ந்து கொண்டேதானே போகிறது.
இதோ ஒரு செய்தி! கோவை உடையாம்பாளையத்தில் என்.ஜி.ஆர். வீதியென ஒன்று! ஆம்; அந்த வீதியின் பெயர் எனக்குப் பழைய நினைவைக் கிளறுகிற பெயர்!
என்.ஜி. இராமசாமி என்ற தொழிற்சங்கத் தலைவர் - பொதுவுடைமைப் பகுத்தறிவுவாதி - எதிரிகளால் அரசியல் பகை காரணமாக கொலையுண்டவர் - அவரது மைத்துனருக்குரிய வீட்டில்தான் 1946-47களில் சிங்காநல்லூரில் (அண்ணாசாமி வீடு) நான் குடியிருந்தேன்.
அந்த என்.ஜி.ஆர். பெயரில் உள்ள வீதியில் இரகுபதி என்பவர் ஓட்டல் நடத்தி வருபவர் - அவரது மனைவி சந்திரகலா - இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் நடந்தது; குழந்தையும் பிறந்து அதற்கு ‘விக்னேஸ்வரன்’ என்ற பெயரும் சூட்டினார்கள். நன்றாகப் போய்க் கொண்டிருந்த அவர்களின் வாழ்க்கையில் ஒரு சோதிடன் குறுக்கிட்டான்.
குழந்தையின் ஜாதகத்தை அவனிடம் கொடுத்துப் பார்க்கச் சொன்னார் இரகுபதி.
“குழந்தை விக்னேஸ்வரனால் தந்தையின் உயிருக்கு ஆபத்து; அதனால் தந்தையை விட்டு அந்தக் குழந்தையைப் பிரித்து வைக்க வேண்டும் - இப்படி ஜாதகம் சொல்லுகிறது”
என்றான் சோதிடன்.
அதன் பிறகு நடந்தது என்ன? இதோ 2005 ஜூலை 21ந்தேதி வெளிவந்த பத்திரிகை கூறுகிறது:-
“ஜோதிடர் சொன்னதைக் கேட்டு மன வருத்தம் அடைந்த ரகுபதி, அன்று முதல் அந்த ஒன்பது மாதமே நிறைந்த கைக் குழந்தை விக்னேஸ்வரனை வெறுப்புடன் பார்க்கத் தொடங்கினார். அடிக்கடி குடித்துவிட்டு வந்த ரகுபதி, மனைவியிடம் குழந்தையைத் திட்டி தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குழந்தையைக் கொலை செய்யும் நோக்கத்தில் வீட்டுக்கு
வந்தார். குழந்தையை மோட்டார் சைக்கிளில் வைத்து வெளியே அழைத்துச் செல்வதாக ரகுபதி மனைவியிடம் கேட்டார். ஆனால் மனைவி சந்திரகலா மறுத்து விட்டார். பின்னர் மனைவியிடம் இருந்து குழந்தையைப் பிடுங்கி, தான் பெற்ற குழந்தை என்றும் பார்க்காமல் கை, கால், இடுப்பில், ஓங்கி, ஓங்கி அடித்துள்ளார். பின்னர் கட்டிலில் தூக்கிப் போட்டு கட்டிலிலும் குழந்தையைத் தாக்கியதாகத் தெரிகிறது. இதனால் பச்சிளம் குழந்தை தலைசரிந்து மயக்கம் அடைந்தது.
பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலில் குழந்தையைச் சேர்த்தனர். பின்னர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அந்தக் குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப் பதிவு செய்து, தந்தை ரகுபதியை கைது செய்து சிறையில் அடைத்தார். குழந்தையை இழந்து தவித்த தாய் சந்திரகலா அழுது புலம்பினார்”
இப்படி ஒன்றா? இரண்டா? எத்தனையோ கொடுமையான நிகழ்ச்சிகள்! அறிவை இழந்து; அதன் காரணமாக விளையும் அவலங்கள்!
ஜாதகம் - சோதிடம் என்பவை உண்மையானால் “குழந்தை பிறந்த ஜாதகப்படி; அந்தக் குழந்தை ஒன்பது மாதங்கள் மட்டுமே உயிரோடு இருக்கும்; அந்த ஒன்பது மாதத்திற்குள் குழந்தையின் தகப்பனே அதைக் கொலை செய்து விடுவான்” என்றல்லவா அந்தச் சோதிடன் சொல்லியிருக்க வேண்டும். எனவே இதுபோன்ற சோதிடப் புரட்டர்களால் விளையும் விபரீதங்களைத் தடுக்க பகுத்தறிவுப் பிரச்சாரம் இன்னும் எவ்வளவு வேகமாக - விரிவாகப் பரவ வேண்டியிருக்கிறது என்பதை எண்ணிப் பார்ப்போமாக; அதற்கேற்பச் செயல்படுவோமாக!
1 - 8 - 2005
★★★
குன்றக்குடி அடிகளார் என்று உலக முழுவதும் பரவியுள்ள தமிழர்களால் அழைக்கப்பட்டவர்; சிவகங்கை மாவட்டத்தில் குன்றக்குடி ஆதீனகர்த்தா அருட்பெருந்திரு அடிகளார் தெய்வ சிகாமணி அருணாசல தேசிகர் என்ற பட்டப் பெயர்களுடன் திகழ்ந்தவர் அவர். அவர் ஆன்மிகத் துறையில் ஆழ்கடல். அக் கடலில் அறிவுத் தோணி செலுத்தி முற்போக்கு முத்துக்களையும் எடுத்து, மனித நேயம் சிறந்திடப் பூட்டி மகிழ்ந்தவர்.
