உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

சிந்தனையும் செயலும்

கட்டுரைகள் 13 · 13 / 50

என் நண்பர் ஒருவர் நல்லவர் - அன்பிற் சிறந்தவரும்கூட - நட்புக்கினியவர். அதேபோல என்னுடன் இளமை முதல் பழகிய மருத்துவ (டாக்டர்) நண்பர் ஒருவர் வெளியூரில் இருந்தார். அந்த ஊருக்கு நானும் நான் முதலில் குறிப்பிட்ட நண்பரும் சென்றிருந்தோம். மருத்துவ நண்பர் அவர் வீட்டுக்கு அழைத்திருந்தார். சென்றோம். நீண்ட நேரம் சிரித்து மகிழ்ந்து பல கதைகள் பேசினோம். மருத்துவ நண்பரிடம் சிகிச்சைக்கு வந்த சில பிரமுகர்கள் கூட்டத்தில் அமர்ந்து தங்கள் பிரச்சினைகளைக் கூறி உடற்பரிசோதனை செய்துகொண்டு மருந்து எழுதி வாங்கிக் கொண்டு போயினர்.

வந்தவர்களின் நோய் தீர்க்கும் பணியையும் எங்களுடன் உரையாடுவதையும் அந்த மருத்துவர் ஒருசேர நிகழ்த்திக் கொண்டிருந்தபோது நான் குறிப்பிட்ட நட்புக்கினியவர்; மெல்ல எழுந்து மருத்துவ நண்பரின் மேசையருகே சென்றார். மேசை மீதிருந்த மருத்துவ நண்பருக்குரிய “இதயத் துடிப்பு அறியும் கருவி” (ஸ்டெதஸ் கோப்)யைக் கையில் எடுத்தார். எடுத்ததுடன் நிற்கவில்லை என் நண்பர்.

சிகிச்சைபெற வந்து அமர்ந்திருந்த அத்தனை பேருக்கு மத்தியில் அந்தத் துடிப்பறியும் கருவியை, மருத்துவ நண்பரின் மார்பில் வைத்து, கருவியின் முனையைத் காதில் வைத்துக் கொண்டு, கை நாடியும் பிடித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கிவிட்டார்.

மருத்துவ நண்பருக்கு எப்படித்தான் அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை; “ஓய்! நாகரிகமாக நடந்து கொள்ளும்!” என்று சொன்னபடி அந்தக் கருவியைப் பிடுங்கி மேசையில் வேகமாகப் போட்டுவிட்டார்.

சிகிச்சைக்கு வந்த பிரமுகர்கள் சிரித்துவிட்டார்கள் என்றாலும்; அந்த நிகழ்ச்சியினால் வாயடைத்துப் போனார்கள்.

பிறகு என் நட்புக்கினிய நண்பரிடம் நான் சற்றுக் கோபமாக; “ஏனய்யா; எதிலும் அளவு வேண்டாமா? என்னதான் நண்பர் என்றாலும் இவ்வாறு செய்யலாமா? ஒருவர் தொழிலில் இப்படிக் குறுக்கிடுவது அழகா?” என்று கேட்டவுடன் இவர், அவர் கையைப்பிடித்துக் கொண்டு வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டுக்கொண்டு என்னோடு புறப்பட்டார்.

அதனால் நகுதற் பொருட்டுத்தான் நட்பு என்றில்லாமல் - அதுவும் எல்லை கடந்து விடுவதாயின் அதனை இடித்துரைத்து திருத்த வேண்டும் என்ற பொருளிலும் அய்யன் வள்ளுவர் “மிகுதிக்கண்” என்று குறிப்பாகக் கூறியிருப்பார் என்று நான் கருத நேரிட்டது.

நண்பர்கள் சிரித்து மகிழ்ந்து வேடிக்கை பேசி விளையாடுவதும் அளவோடு இருக்கவேண்டும்; அதில் ஒருவர் அளவு கடந்தால் மற்றொருவர் திருத்தித் தடுத்திட வேண்டும். அதுதான் உண்மையான நட்புக்கு அடையாளமாகும்.

சில நண்பர்கள், உரிமையுடன் பழகுவதாகக் கருதிக்கொண்டு அப்பாவித்தனமாக எதையாவது செய்து வீண் வெறுப்புக்கு ஆளாகிவிடுவார்கள். அதற்கும் உதாரணமாக என் நட்புக்கினியவராக இருந்தவரையே மீண்டும் நான் குறிப்பிட வேண்டியுள்ளது.

தமிழகத்து மக்களின் உள்ளத்தில் தனியிடம் பெற்ற திரைப்படத் தயாரிப்புக்கூடம் ஒன்று சென்னையில் இப்போதும் உள்ளது. நான் கதை வசனம் எழுதிய படங்கள், பாடல் எழுதிய படங்கள் அங்கே தயாரிக்கப்பட்டன. அந்தச் சமயங்களில் நான் அங்கு போவதும் திரைப்படக் கலைஞர்களுடன் உரையாடி மகிழ்வதும் உண்டு. அந்தக் கலைக்கூடத்தில் இசையரங்கம் ஒன்றும் உண்டு. இசையமைப்பாளராகப் புகழ் பெற்ற ஒருவர் அந்த அரங்கத்தை நிர்வகித்தார். ஒருநாள் என் நட்புக்கினிய நண்பருடன் அந்த இசையரங்கிற்கு சென்றிருந்தேன்.

இசையமைப்பாளரும் நானும், திரைக் கலைஞர்களும் பல செய்திகள் குறித்து உரையாடி மகிழ்ந்தவேளையில்; இசையமைப்பாளர் ஒரு பாட்டுக்கு “மெட்டு” அமைக்க ஆர்மோனியக் கட்டைகளில் தனது விரல்களைப் பதித்தார். சில நிமிடங்களில் எனது இனிய நண்பர், அவர் அருகே அமர்ந்து ‘ஆர்மோனியப் பெட்டி’யைத் தன்னருகே இழுத்து வைத்துக் கொண்டு “எனக்கு என்ன கட்டை?”

என்று ஆர்வம் மிகுந்திடக் கேட்கலானார். அது பொதுவாக இசைவாணர்களுக்கு ஆத்திர மூட்டக்கூடிய ஒரு செயல். அவர்களில் மிகப் பலர் இசையை “தெய்வமாகக்” கருதி அதற்கு மரியாதை செய்பவர்கள். இந்த நிலையில் பல கலைஞர்களும் வீற்றிருந்த அந்தக் கூடத்தில்; இசைக் கருவியான ஆர்மோனியத்தைத் தன்பக்கம் இழுத்து வைத்துக் கொண்டு, “தனக்கு என்ன கட்டை?”

என்று வேடிக்கை விளையாட்டாகக் கேட்டது எல்லோரையும் வேதனைப்படுத்திவிட்டது என்பதை அவர்கள் முகக் குறிப்பால் உணர்ந்து கொண்ட நான் “உமக்கு; என்ன கட்டை? புத்திதான் கட்டை” என்று விளையாட்டுப் போலவே சொல்ல, அனைவரும் என் பதிலைக் கேட்டு சிரித்து மகிழ்ந்து; என் நண்பரின் செயலைப் பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டார்கள்.

“தனக்கு என்ன கட்டை?” என்பதோடு விட்டிருந்தால் ஒன்றுமில்லை. இசையமைப்பாளரிடமிருந்து ஆர்மோனியப் பெட்டியை இழுத்து வைத்துக் கொண்டு அவ்வாறு கேட்டது “மிகுதிக்கண்” என்ற வேண்டாத செயலுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துவிட்டதல்லவா? எனவே “அளவு கடப்பது; வேண்டாத செயல்” எனப்படுகிறது.

1 - 7 - 2005

★★★

மூக்கு நுனிக்கு நேராக எதிரேயுள்ள சுவரில் அல்லது பலகையில் அல்லது திரைத் துணியில் ஓர் ஒளி வட்டம் அமைந்திருக்கவேண்டும். அது இருள் நடுவே முழுமதியாகவோ; அல்லது உதய காலத்து சூரியனாகவோ இருக்கலாம். அதற்கு முன்னால் கால்களை மடக்கிக் கொண்டு தரையிலோ, தொங்க விட்டுக் கொண்டு நாற்காலியிலோ அமர்ந்து கொள்ளலாம். இதில் முக்கியமாக கவனித்து பயிற்சி பெற வேண்டியது, கண் பார்வை ஒரே திக்கில் ஆடாமல், அசையாமல் செலுத்தப்பட்டு; அந்த ஒளி வட்டத்தை வைத்தகண் பெயர்க்காமல் பார்த்துக் கொண்டேயிருப்பதுதான்.

இதனை வாயை மூடிக்கொண்டு மெளனமாகவும் செய்யலாம்.

மனத்தை நிலைப்படுத்த இந்தப் பயிற்சி உதவுகிறது என்றும் இதனை தியானத்தில் ஒருவகையென்றும் கூறுகிற பயிற்சி ஆசிரியர் திரு. டி.கே.வி. தேசிகாச்சார் அவர்கள் இந்தத் தியானம் இன்னும் நேர்த்தியாக அமைந்திட; “நாராயண நமஹா!” என்று வாய் திறந்து உச்சரித்தல் நலம் என்று குறிப்பிட்ட போது; நெடில் எழுத்தில் தொடங்கும் “நாராயண” என்பது “நமஹா” என்று சொல்லி “சூரியனை” வணங்கும் நிலையை; ‘ஞ’ என்ற நெடில் எழுத்தில் தொடங்கும் “ஞாயிறு போற்றுதும்” என மாற்றி அமைத்துக் கொண்டாலும் ஒரே விளைவுதானே என்று நான் கேட்டு; பயிற்சியாளரும் அதை ஏற்றுக் கொண்டுவிட்டதால்; தியானப் பயிற்சியை மெளனமாகவும் அதைத் தொடர்ந்து “ஞாயிறு போற்றுதும்!

ஞாயிறு போற்றுதும்!” என்ற சிலப்பதிகார வரியை ஓங்கி உச்சரித்தும்தான் நாள்தோறும், பயிற்சியாளர் முன்னிலையில் இருவிதமாகக் கடைப்பிடித்து வருகிறேன்.

சில பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் அவர்கள் பேராசிரியர் அன்பழகனார் வாயிலாக என்னிடம் தொடர்பு கொண்டு; மிக முக்கியமாக இந்தத் தியானப் பயிற்சி பற்றிப் பேசினார். நாள்தோறும் ஒரு ஐந்து நிமிடமாவது கண்களை மூடிக் கொண்டு; சிந்தனையைச் சிதறவிடாமல் - கடவுளைப் பற்றிய ஒரே நினைவுடன் - இல்லையெனில் பெரியார், அண்ணா - என்றாவது ஒரே நினைவை மட்டும் நெஞ்சில் நிறுத்தி தியானத்தில் ஈடுபட்டால் மன அமைதிக்குப் பெரிதும் பயன்படும் என்று வலியுறுத்தினார்.

இந்த அறிவுரையை அப்போது நான் பின்பற்றி அந்தப் பயிற்சியை மேற்கொள்ளவில்லை. நேரமில்லாதது போல ஒரு சாக்கு - ஆனால் இப்போது நாள் தவறாமல் நடைப் பயிற்சி, யோகாப் பயிற்சியுடன், தியானப் பயிற்சியும் “ஞாயிறு போற்றுதும்” என்ற போற்றிப் பாடலுடன் மேற்கொள்கிறேன்.

சில சமயங்களில் பரபரப்புடன் பேசும்போது நாக்கு, திக்கிவிடுகிறதல்லவா - அதனைப் போக்கிக் கொள்ளக்கூட வல்லின “ற” என்ற எழுத்தும் அந்த எழுத்தொலியும் பயன்படுகிறது. ஆம்; “ற” என்ற எழுத்தொலியை நுனி நாக்கை உள்நாக்கு வரையில் மடித்து, ஒலித்தால் “றற” என்று அழுத்தம் திருத்தமான ஓசை எழும்.

இப்படிப் பலமுறை; ஒவ்வொரு முறையும் ஒரு தடவை எனத் தொடங்கி படிப்படியாக ஐந்து தடவை பயிற்சி செய்தால் நாக்குத் திக்குதல் மெல்ல மெல்ல நீங்கும் என்பது பலருடைய அனுபவம்.

எல்லாப் பயிற்சிகளையும் விட முக்கியமான பயிற்சி; “வைகறையில் துயிலெழுதல்” எனும் பயிற்சிதான். ‘அவர் காலையில் ஒன்றரை மணி வரையில் தூங்குவார்’ - ‘பத்து மணிக்குத்தான் இவருக்குப் பொழுதே விடியும்’ - என்பதெல்லாம் இன்றைய நாகரிக வாக்கியங்களாக அமைந்தொழிப்பதை அறிய முடிகிறது. என்றாவது ஒருநாள் - முதல் நாளிரவு தூக்கமின்மையால் மறுநாள் அயர்ந்து தூங்கிவிடுவது என்பது தவறல்ல; ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான்.

ஆனால் அதுவே

நாள்தோறும் வழக்கமாகி; அவர்கள் “உதயசூரியனை” வாக்குச் சாவடியில் வைக்கப்படும் வேட்பாளர் சின்னங்களில் ஒன்றாகத்தான் பார்க்க முடிகிறது என்றால் அது நிச்சயமாக உடல் நலத்துக்கு ஏற்றதல்ல.

எனவே நடைப்பயிற்சி மூலம் முக்கியமாக உடலின் எடையைக் குறைப்பது - மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசப் பைகளை முறையாக இயக்கச் செய்வது - குருதியோட்டத்தைச் சீராக்கிக் கொள்வது - அதன் அடிப்படையில் இருதயத்துக்குப் பாதுகாப்பு உருவாக்குவது - யோகாப் பயிற்சி மூலம் எலும்புகள், நரம்புகளுக்கு வலுவூட்டுவது - தியானப் பயிற்சி மூலம் மன அமைதி காண்பது; இவை போன்றவை வாழ்வுக்கு இன்றியமையாதவை என்பதை உணர்ந்து; எத்தனையோ துறைகள் பற்றிய நூல்களைப் படிக்கின்ற நாம்; உடல் நலத்துறை குறித்து விளக்கமளிக்கின்ற நூல்களையும் படிக்கின்ற ஆர்வத்தைப் பெறுதல் வேண்டும் என்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

நோயற்ற மக்கள் - வலிவுடைய மக்கள் கொண்ட ஒரு சமுதாயமே நாட்டின் பாதுகாப்பு அரணாகவும் அமைய முடியும். அதற்கு அடியெடுத்துக் கொடுக்கும் முயற்சியாகவாவது இக்கட்டுரை இருக்குமானால் இதனை எழுதியதின் பயனை அடைந்தவனாவேன். இக்கட்டுரையில் குறிப்பிடப்படாத எத்தனையோ நல்ல வழிமுறைகள் வாழ்வுக்கு வலிவும் பொலிவும் சேர்ப்பவை உள்ளன. அவற்றையும் தேடிப் பிடித்து பயன்படுத்திக் கொள்ள இஃதோர் தூண்டுதலாகட்டும்.

8 - 7 - 2005

★★★

“ஊர் சிரித்தது” என்றால்; யாரோ ஒருவர் - அல்லது யாரோ சிலர்; ஏதோ ஓர் இழிவுக்கு ஆளாகி அதனால் அந்த ஊரிலே உள்ளவர்கள், கேவலமாகப் பேசினார்கள் என்று பொருள்!

தொலைக்காட்சியில் நான் ஒரு நாடே சிரித்த காட்சியைக் கண்டேன். அந்த நாடு சிரித்தபோது இன்னொரு நாடு அழுது புலம்பிய காட்சியையும் கண்டேன். உங்களையும் உங்கள் நண்பர்களையும் குழப்புகிற பாணியில் சொல்லுவதாயின்,

ஒரு நாடு சிரித்தது,