சக்கரவர்த்தியின் திருமகன்
கட்டுரைகள் 14 · 14 / 14
“அவன் இரவில் போட்ட கர்ஜனையைக் கேட்டுக் கோபங்கொண்டு தூங்கிக்கொண்டிருந்த வாலி எழுந்து, அவனை உடனே எதிர்க்க வெளியேறினான். நானும் அவனுக்கு உதவியாகக் கூடவே சென்றேன். நிலா வெளிச்சத்தில் நாங்களிருவரும் வருவதைப் பார்த்து மாயாவியானவன் ஓடி ஒரு குகைக்குள் நுழைந்தான். வாலியும் அவனைத் துரத்திக்கொண்டு குகைக்குள் புகுந்தான். நானும் உள்ளே புகப்போனேன். வாலி என்னை வேண்டாம் என்று தடுத்துவிட்டான். தான் ஒருவனாகவே அந்தத் துஷ்டனைக் கொல்ல வேண்டும் என்று சொல்லி, என்னை அந்தக் குகையின் வாயிலில் வெளியே நிற்கச் சொன்னான், சொல்லிவிட்டு அவன் உள்ளே புகுந்து சென்றான்.
உள்ளே சென்றவன், பல நாட்களாகியும் திரும்பி வரவில்லை. அண்ணனுக்கு என்ன நேர்ந்ததோ என்று நான் கவலைப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில் குகைக்குள் அசுரர்களுடைய பெருங் கூக்குரல் கேட்டது. அதன்கூடக் குகையிலிருந்து ‘ரத்த வெள்ளம் பெருகி வந்தது’. இதைக் கண்டதும் வாலியை, மாயாவியும் பல அசுரர்களும் சூழ்ந்து கொன்று விட்டார்கள் என்று தீர்மானித்துக் கொண்டேன். அசுரர்கள் வந்து என்னையும் தாக்குவார்கள் என்று எண்ணி ஒரு பெரும் பாறாங்கல்லைக் குகை வாயிலில் வைத்து மூடி விட்டேன்.
“கிஷ்கிந்தைக்கு வருத்தத்தோடு திரும்பினேன். வாலி இறந்தான் என்று யாருக்கும் சொல்லாமலே ராஜ காரியங்களைப் பார்த்து வந்தேன். பிறகு வானரப் பிரஜைகள் நிர்ப்பந்தித்தார்கள். ‘அரசனில்லாமல் போனால் ராஜ்யம் பாழாகப் போகும்; வெகு நாளாகியும் வாலி திரும்பவில்லை; நீயே பட்டாபிஷேகம் செய்து கொண்டு அரசு புரிவாய்’ என்று வற்புறுத்தினார்கள், நானும் அதற்கு இணங்கினேன்.
‘சில காலம் கழித்து மாயாவியையும் அவனுடைய துணையாட்களாக இருந்த அசுரர்களையும் கொன்று ஒழித்து விட்டு வாலி திரும்பினான். குகை அடைபட்டிருப்பதைப் பார்த்து, “சுக்ரீவா! சுக்ரீவா!” என்று உள்ளே யிருந்து கத்திப் பார்த்தான். நான் அவ்விடமில்லையானபடியால் எனக்கு இது ஒன்றும் தெரியாது. அவன் என்மேல் மகா கோபங்கொண்டு கற்பாறையை உதைத்துத் தள்ளி விட்டுக் கிஷ்கிந்தைக்குள் பிரவேசித்தான்.
இது ஆச்சாரியார் தீட்டியுள்ள கதை!
இப்பேர்ப்பட்ட மோச குணமும், பாசமற்ற நெஞ்சங் கொண்ட சுக்ரீவனைத் தன் தோழனாக ராமன் பெறுகிறான் என்றால், ராமனின் உள்ளம் பற்றி நாம் என்ன நினைப்பது? அழியாத பாசமுள்ள தம்பியாக லட்சுமணனைப் பெற்றிருக்கிற அண்ணன் என்று பாராட்டப்படுகிற ராமன், அண்ணனுக்குத் துரோகம் செய்த துரோகி சுக்ரீவனின் துணையைக் கோருவது எவ்வகையில் பொருத்தமுடையது?-என்பதை ஆச்சாரியார்தான் விளக்க வேண்டும். அண்ணனுக்கும், அரக்கனுக்கும் போர் நடந்ததாம்.
ரத்த வெள்ளம் குகை வழியே புரண்டு வந்ததாம். அரக்கன் செத்ததாக நினைக்காமல், அண்ணன் செத்ததாக நினைத்தானாம், தன்னுயிரைக் காத்துக்கொள்ள குகையை மூடி விட்டானாம். பிரஜைகள் விரும்பினார்களாம் முடி சூட வேண்டுமென்று! அவனும் சூடிக் கொண்டானாம்! அண்ணன் திரும்பி வந்ததும் உண்மையைச் சொன்னானாம்; அவன் கேட்கவில்லையாம்! அகப்பட்டுக்கொண்ட பிறகு - சதி வெளிப்பட்ட பிறகு - தப்பித்துக் கொள்ள போலி நாடகம் ஆடியிருக்கிறான் துரோகி!
அவனுக்குத் துணைவனாகிறான் ராமன்! இங்கே ஆச்சாரியார் மழுப்புகிறார்.
“வாலியின் நடவடிக்கையிலும் பெருங்குற்றமில்லை! சுக்ரீவனின் காரியங்களிலும் பெருங் குற்றம் சொல்லுவதற்கில்லை.” (6.3.1955 - ‘கல்கி)
ஆச்சாரியாரின் தீர்ப்பு இது!- அப்படியானால், இரு சகோதரர்களுக்கும் சமாதானம் செய்து வைத்து, இருவரின் துணையையும் பெறுவதுதானே இராமன் செய்கையாக இருந்திருக்க வேண்டும்! அப்படியில்லையே; ராமனின் செயல்! ஏன்? ஏன் ஆச்சாரியாரே; ஏன்?
வாலியின் மார்பில் குத்தி நின்ற பாணத்தை நீலன் மெல்ல அகற்றினான். உடனே காயத்திலிருந்து மலையருவிபோல ரத்தம் பொங்கி, வாலியின் உயிர் உடலைவிட்டுப் பிரிந்தது. அவன் மனைவி தாரை, ‘ஐயோ!’ என அலறி அழுதாள். “அங்கதா! உன் தகப்பனைக் கடைசித் தடவையாக வணங்குவாய்!”
என்றாள். “உங்களுடைய பிரிய மகன் வணங்கி நிற்கிறானே! அவனுக்கு ஒன்றும் சொல்லமாட்டீர்களா? நான் விதவையானேன். மகனும் திக்கற்றுப் போனான்!” என்று இதயம் உடைந்த தாரை பிரலாபித்தாள்.
வாலியின் உடல் மலையெனச் சாய்ந்து கிடந்தது. இந்த நேரத்தில் சுக்ரீவனும் கலங்குகிறான். அவன் கலக்கத்தை ஆச்சாரியார் வர்ணிக்கிறார்; பாருங்கள்.
“எனக்குள் மறைந்து நின்று உள்ளே வேலை செய்து வந்த ஆசை என் புத்தியைக் கெடுத்துவிட்டபடியால் அல்லவோ நன்றாக ஆலோசியாமல், வாலி புகுந்த குகையின் வாயிலை மூடிவிட்டு அண்ணனுடைய சம்பத்தை அபகரித்துக்கொண்டு ஆனந்தமாக அனுபவித்தேன்” என்று தனக்குள் சிந்திக்கலானான்.
(27.3.1955 - ‘கல்கி’)
இதிலிருந்து விளங்குவது என்ன? சுக்ரீவன் ஆசையின் காரணமாக புத்தி தடுமாறி வாலியை ஒழித்துவிட குகையை மூடினான் என்பதுதான் உண்மையாயிருக்க வேண்டுமென்று நாம் குறிப்பிட்டது சரியாகத் தோன்றுகிறது - இல்லையா? இத்தகைய இழிகுணம் படைத்த சுக்ரீவனுக்குத்தான் துணையாக நின்றான் இராமசந்திர மூர்த்தி என்பதை எண்ணும்போது அவன்பால் எப்படித்தான் பக்தி பிறக்கிறதோ, பூஜனைப்பித்தர்களுக்கு - நாமறியோம்.
வாலி சாவுக்குப் பிறகு மழைக்காலம் ஆரம்பமாகி விட்டது. அதனால் சீதையைத் தேடும் முயற்சியை ஒத்திவைத்துவிட்டு, ராம லட்சுமணர் பக்கத்திலிருந்த ஒரு மலைக் குகையில் காலங்கழித்தார்கள். சுக்ரீவன் முதலியோர் கிஷ்கிந்தா புரத்தில் சுகமாக காலங்கழித்தார்கள். அதுவும் எப்படி? ராஜகாரியங்களை யெல்லாம் மந்திரிகளிடம் ஒப்புவித்துவிட்டு, சுக்ரீவன் அந்தப்புர போகத்தில் மூழ்கிக் கிடந்தான் என்று ஆச்சாரியாரே எழுதுகிறார், 3.4.1955ஆம் நாள் இதழில்!
மழைக்காலமும் முடிந்து விட்டது. சுக்ரீவன் சொன்னபடி சீதையைத் தேடும் முயற்சி ஆரம்பமாகவில்லை. ராமனுக்கு அதனால் கோபம் பொங்குகிறது. அந்தக் கோபத்திலே உதிரும் வார்த்தைகளை ஆச்சாரியார் பொறுக்கித் தருகிறார்; படியுங்கள்!
“உலகமெல்லாம் சவுந்தாயமும் மகிழ்ச்சியுமாக இருக்கிறது. சீதை எங்கேயோ தவித்துக்கொண்டிருக்கிறாள். நானோ இங்கே - நன்றி மறந்த வானர ராஜனுடைய தயவை எதிர்பார்த்துக்கொண்டு சும்மா கிடக்கிறேன். இந்த வானர ராஜனோ மதுபானத்தில் மூழ்கி, பெண்களோடு கூடி கிராமிய சுகத்தில் ஈடுபட்டு, எனக்குத் தந்த வாக்கை முற்றிலும் மறந்துவிட்டான். இந்த வானர ராஜன் ஒரு கயவனாகத் தோன்றுகிறான்.”
(3.4.1955 - ‘கல்கி’)
ராமனுடைய நண்பன் சுக்ரீவன் எத்தகையவன் என்பதை ராமனே விளக்குகிறான் மேற்கண்டவாறு. ராமன் கோபிப்பான் எனக்கண்ட அனுமான், சுக்ரீவனை எச்சரித்து அவனை சீதையைத் தேட அழைக்கிறான். இதற்குள் ராமனுடைய உத்தரவுப்படி லட்சுமணன் கோபாவேசமாகப் பிரவேசிக்கிறான். “உன் அண்ணனை அனுப்பிய இடத்திற்கு உன்னையும் அனுப்புவேன் - என்று சொன்னதாகச் சொல்” என்றல்லவா ராமன் லட்சுமணனிடம் கூறி அனுப்பியிருக்கிறான்!
ஆகவே லட்சுமணன் ஆயுதபாணியாக ஆக்ரோஷத்துடன் புறப்பட்டு விட்டான். லட்சுமணன் வரும் செய்தியை சுக்ரீவனிடம் வானர் கூறி நடுங்கினார்கள். “வானர ராஜனோ கள்ளும் ஸ்திரிகளுமாக அந்தப்புரத்தில் மயங்கிக் கிடந்தான். வானர் சொன்னது அவன் காதில் ஏறவில்லை” என்கிறார் ஆச்சாரியார். சுக்ரீவனின் அலட்சியம் லட்சுமணனைப் புயலாக மாற்றுகிறது வில்லின் நாணையிழுத்து ஒலி எழுப்புகிறான். ஒலி முழக்கம் கேட்டு சுக்ரீவன் நடுங்கி, தாரையை லட்சுமணனிடம் சமாதானம் பேச அனுப்புகிறான்.
தாரையின் பேச்சைக் கேட்டு லட்சுமணனும் சமாதானமடைகிறான். சமாதானம் பேசவரும் தாரையைப் பற்றி ஆச்சாரியார் கூறுவதைக் கேளுங்கள்:
“அழகிலும், உலக விஷயங்களைப் பற்றிய சாமர்த்தியத்திலும், பேச்சு நயத்திலும் அவளுக்குச் சமானம் யாருமில்லை. அவள் லட்சுமணனைச் சமாதானப்படுத்துகிறாள்.” (3.4.1955 - ‘கல்கி’)
போருக்கு வருகிறவனை சமாதானப்படுத்த வேண்டிய ஒரு பெண்ணுக்கு மேற்கூறிய திறமைகளோடு, அழகும் தேவையென்று ஆச்சாரியார் கருதுகிறார் போலும்!
அதனால் தான் தாரையின் அழகுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய நிலைமைக்கு அவர் ஆளாகிறார். சமாதானமடைந்த லட்சுமணன் சுக்ரீவனோடு அளவளாவுகிறான். தங்கள் காரியம் நடக்கவேண்டுமென்பதற்காக ஆரியர்கள் எதையும் செய்வார்கள் -எதையும் பேசுவார்கள் என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு!
சுக்ரீவன் சீதையைத் தேடாமல், சிருங்கார போகத்தில் ஆழ்ந்து கிடக்கிறான் எனக் கேள்விப்பட்ட ராமன், அவனை ஒரு நன்றிகெட்ட கயவன் என்று தூற்றுகிறான் - லட்சுமணனோ போருக்குப் புறப்படுகிறான் சுக்ரீவனோடு! சுக்ரீவன், சீதையைத் தேட புறப்பட்டதும், லட்சுமணன் என்ன பேசுகிறான் தெரியுமா, சுக்ரீவனைப் பற்றி?
“சுக்ரீவா! உன்னைப்போன்ற தீரன் ராமனைத் தவிர வேறு யாருமில்லை. ரிஷ்யமுகம் வந்து ராமனைக் கண்டு அவன் துயர்தணிக்கும் வார்த்தைகளைச் சொல்வாயாக!” என்றான். (3.4.1955 - ‘கல்கி’)
சுக்ரீவன் வந்ததும் ராமன் என்ன சொல்லுகிறான் தெரியுமா?
“உன்னைப் போன்ற நண்பன் உலகில் வேறொருவனில்லை. உன் நட்பை நான் சம்பாதித்தது என் பாக்கியம்.” (3.4.1955 - ‘கல்கி’) என்று வர்ணிக்கிறான் சுக்ரீவனைப் பற்றி! இதிலிருந்து, தங்கள் காரிய சாதனைக்காக கயவர்களின் காலை பிடிக்கவும் தயாராக இருந்தார்கள் சக்கரவர்த்தியின் திருமகன்கள் என்பது தெளிவாகிறது. அதனால்தான் சகோதரத் துரோகியும், கயவனும், நன்றி கெட்டவனுமான சுக்ரீவனிடத்திலே ராம லட்சுமணர் தோழமை பூண்டொழுகியிருக்கிறார்கள் என்பதும் புலனாகிறது.
