சக்கரவர்த்தியின் திருமகன்
கட்டுரைகள் 13 · 13 / 14
மயக்கம் -
செய்யக்கூடாததைச் செய்தல் -
காரசாரமான சொற்களால், கடவுள் அவதாரத்தை அர்ச்சிக்கிறார் ஆச்சாரியார். அதையே நாம் சொன்னால், தடை - படை எல்லாம் வருகின்றன. ‘கடைகட்டும் நேரம் - காக பட்டர் கணக்கை சரிக்கட்டும் நேரம் - கட்டுண்டோம் - பொறுத்திருப்போம்’ என்று நமக்கு நாமே ஆறுதல் கூறிக் கொள்ளும் வேளை - மிச்சமிருக்கும் சமயத்தில் ஆச்சாரியார்களுக்கு அகப்பட்ட வரையில் லாபந்தானே!
நடக்கட்டும் பிழைப்பு - எவ்வளவு நாளைக்கு என்று பார்ப்போம்;
மாரீசனைத் துரத்திச் சென்ற ராமனிடம் லட்சுமணனையும் அனுப்பிவிட்டு சீதை தனியாக இருக்கும்போது அங்கே சந்நியாசி உருவில் ராவணன் வருகிறான். லட்சுமியின் அவதாரமான சீதை அவனைத் துறவியென நம்பி உபசரிக்கிறாள். அவன் இச்சையை வெளியிடுகிறான். சீதை நடுங்கி, கோபிக்கிறாள். பிறகு என்ன ஆகிறது? - ஆச்சாரியார் எழுதுகிறார், படியுங்கள்.
“மாறு வேஷம் நீக்கிவிட்டுத் தன் நிஜ ரூபத்தைத் தரித்துக் கொண்டான். அவள் தலைமயிரை ஒரு கையில் பற்றி மற்றொரு கையால் அவளைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு வனத்துக்குள் வேகமாகச் சென்று ஆயத்தமாக இருந்த தேரில் சீதையைத் தூக்கியவாறு ஏறி ஆகாயத்தில் கிளம்பிவிட்டான்.”
(30.1.1955 - ‘கல்கி’)
அப்படிப் போகும் வழியிலே ஜடாயு என்ற கழுகு எதிர்த்துப் போர் செய்யவே, ராவணனுடைய ரதம் உடைந்து விடுகிறது. பாவம் ; அந்த ஜடாயு போர் செய்யாமல் இருந்தாலாவது, ராவணன் சீதையை ரதத்திலேயே வைத்துத் தூக்கிக்கொண்டு போயிருப்பான். அது போர் செய்து ரதம் உடைந்துவிட்ட காரணத்தால், ராவணன் சீதையைத் தன் மெய் சேர அணைத்து, இறுக்கிப்பிடித்து, பலாத்காரமாகத் தூக்கிக் கொண்டு ஆகாயத்தில் பிரயாணம் நடத்த வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுவிட்டது.
ஒரு குலமகள் - ஆச்சாரியார் சொல்கிறபடி அவதாரத் திருமகள் - அவளை ஒருவன் சேர்த்தணைத்துத் தூக்கிக்கொண்டு போகிறான். அந்த நேரத்தில் தான் போகும் பாதையை அடையாளம் காட்டுவதற்காகச் சீதை ஒரு தந்திரம் செய்கிறாளாம், அந்தத் தந்திரம் எவ்வளவு கேவலமானது என்பதை வாசகர்களே யூகித்துக்கொள்ள வேண்டும். ஆச்சாரியார் வாசகத்தை அப்படியே தருகிறேன்: படியுங்கள்.
“பல மலைகளையும் ஆறுகளையும் தாண்டிச் செல்லும் போது வழியில் ஒரு மலைமேல் யாரோ நிற்பதைக் கண்டாள் சீதை. அப்பொழுது மேலுத்தரியத்தை எடுத்துத் தன் ஆபரணங்களை அதில் முடித்துக் கீழே போட்டாள்.”
(6.2.1955 - ‘கல்கி’)
மாற்றானின் பிடியிலே சிக்கியிருக்கிறாள்; தன் கற்பைக் காத்துக்கொள்ள வேண்டுமென்று துடிக்கிறாள் என்றும் ஆச்சாரியார் கூறுகிறார். இந்த நிலையில் எந்தப் பெண்ணாவது, தனது மேலாடையை எடுத்துக் கீழே போடுவாளா? - போட்டாளாமா? - அப்படிப் போட்டால் அது எதற்கு அறிகுறி? - குலப்பெண்ணுக்கு அடையாளமா அது?
சாதாரணமாக ஒரு ஆடவன், ஒரு பெண்ணைப் பார்த்தால், அந்தப் பெண்ணையுமறியாமல் அவளுடைய கை, அவளது மேலாடையை சரியாகப் போர்த்தித் திருத்தி விடுகிறது. அத்தகைய நாண உணர்ச்சி தலைகாட்டுகிற சொந்தக் கணவனைக் காணுகிற நேரத்திலே கூட பெண்கள், தங்கள் மேலாடையைத் திருத்திக் கொள்ளத் தவறமாட்டார்கள். சீதையோ அந்நிய புருஷனின் கையிலே அகப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறாள். அந்த நேரத்திலே மேலாடையை சர்வசாதாரணமாக எடுத்து கீழே வீசுகிறாள் என்றால், அவளைப் பற்றி நாம் என்ன நினைப்பது?
ராவணன்தான் என்ன நினைத்திருப்பான் ?
“அண்ணன் செத்தால் அண்ணி கிடைப்பாள் என்று பார்க்கிறாயா?” என்று லட்சுமணனைப் பார்த்துக் கேட்கிறாள். இப்போது வேறு மனிதனின் அணைப்பிலே இருந்துகொண்டு, அவனாகவே மேலாடையைக் கீழே போடுகிறாள். இந்த இரு செயல்களும் சீதையின் நிறையை எந்த அளவுக்குக் குறைக்கின்றன என்பதை ஆஸ்திகப் பெருமக்களே சிந்தித்துப் பார்க்கட்டும். பெண்ணின் நாயகம் சீதை என்று கூறுகிற தாய்மார்களும் இந்த இரு கட்டங்களையும் ஆராய்ந்து பார்க்கட்டும்.
ஆனால் ஆச்சாரியாரோ, சீதை செய்த தவறுகள் சீதையோடு போகட்டும் என்றிராமல், அவரே பெரும் தவறு செய்கிறார். இதோ:
நம் நாட்டில் துயரப்படும் பெண்கள் அனைவரும் சீதா தேவியின் அம்சம்.
(6.2.1955 - ‘கல்கி’) என்று வர்ணிக்கிறார். துயரப்படும் பெண்கள் எல்லாம் சீதையின் அம்சமாம்! என்ன கொடுமையான வெட்கக்கேடு! என்னே கேவலமான வியாக்யானம்!!
மேலாடையைப்பற்றி கவலைப்படாத சீதையையும், மேன் மக்கள் குடிப்பிறந்த பூங்கொடிகளையும் ஒரே அம்சமென சித்தரிக்க உமக்கு மிகுந்த நெஞ்சழுத்தம் தான் இருக்கவேண்டும்!
எவ்வளவு முரண்பாடாக எழுதிக் கொட்டினாலும் - அந்தக் குப்பைகளை தலையில் வாரிப் போட்டுக்கொண்டு ஆடுவதற்கு ஆஷாடபூதிகள் திரிகிறார்கள் என்ற தைரியம் இருக்கும் வரையில் நீர் இந்நாட்டிலேயுள்ள பெண்கள் எல்லாம் சீதையின் அவதாரம் என்று மட்டுமா எழுதுவீர்; திரவுபதையின் அவதாரம் என்று கூட எழுதுவீர்!
சீதை காணாமற் போனது கண்டு ராமன் புலம்பினான். மரஞ் செடி கொடிகளைப் பார்த்து ‘மனைவியைக் கண்டீரோ?’ என மாறடித்து ஒப்பாரி வைத்தான்.
“சீதை அஞ்ஞானத்தால் உன்னைப் பார்த்து தகாத வார்த்தைகள் கூறினாள் என்றால்; நீ அதையும் பொறுத்துக் கொண்டு அங்கேயே காவல் புரிந்திருக்கக்கூடாதா?” என்று தம்பி லட்சுமணனைத் திட்டினான். இப்படியாக அழுது புலம்பி, கடைசியில் ஜடாயுவின் மூலம், சீதை ராவணன் வசம் இருப்பதை அறிந்தார்கள்.
எப்படி அவளை மீட்பது என்று யோசனை செய்து கொண்டு காட்டில் திரியும்போது, கபந்தன் என்னும் அரக்கன் அவர்களைப் பிடித்துக்கொண்டான். கபந்தனுக்கு தலை கிடையாது- வாயும், கண்ணும் வயிற்றிலேயே இருந்தது. கால்களும் கிடையாது; வனத்திலே செல்லும் மிருகங்களையும் மனிதர்களையும் கையெட்டி இழுத்து வயிற்றுக்குள் போட்டுக் கொள்வது அவன் வழக்கம். அவனை ராம லட்சுமணர் கொன்று விடுகிறார்கள். கொல்லப்பட்டதும் கபந்தன் அரக்க உருவம் மாறி, தேவ உருவில் சொர்க்கலோக வாசியாக மாறி விடுகிறான்.
இந்திரனின் சாபத்தால் இப்படி ஆகிவிட்டதாகத் தன் பூர்வீக கதையைக் கூறிவிட்டு, ராம லட்சுமணர்கள் சீதையை மீட்க வேண்டுமானால், ரிஷ்யமுக மலையில் - வாலியால் துரத்தப்பட்டு ஒளிந்திருக்கும் சுக்ரீவனின் உதவியைப் பெறவேண்டுமென்றும் தெரிவித்து, விமான மூலம் சொர்க்கம் புறப்பட்டான்.
இந்தக் கபந்தன் கதையிலேயிருந்து, தேவர்கள், ராம லட்சுமணர்களாக மட்டும் அவதாரம் செய்யவில்லை; கபந்தன் போன்ற பயங்கர அரக்கர்களாகவும் அவதரித்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது! பிறகு, ராம லட்சுமணர் சுக்ரீவனைத் தேடிப் புறப்பட்டார்கள். சுக்ரீவன் யார் தெரியுமா ? அவன் நிலைமை என்ன தெரியுமா? ராமனைப் போலவே அவனும் நாட்டையும், மனைவியையும் இழந்து பம்பா நதி தீரத்திலே உலவிக் கொண்டிருப்பவன். பரதனுக்கு நாட்டுரிமையில்லாமற் செய்ய சதிபுரிந்த ராமனும் - வாலியை ஏமாற்றி நாட்டைக் கைப்பற்றத் திட்டமிட்டு விரட்டப்பட்ட சுக்ரீவனும் துணைவரானார்கள்.
“என் மனைவியை நீ வாலியிடமிருந்து மீட்டுத் தா! நான் உன் மனைவியை ராவணனிடமிருந்து மீட்டுத்தருகிறேன்” என்று சுக்ரீவன் ராமனுக்கு உறுதி அளித்தான். சுக்ரீவன் ஏன் விரட்டப்பட்டான்? வாலிக்கும் அவனுக்கும் ஏன் பகை வளர்ந்தது? அந்தக் கதையை ஆச்சாரியரே, 6.3.1955-ஆம் தேதிய ‘கல்கி’யில் எழுதுகிறார்: படியுங்கள் - சுக்ரீவனே கதை சொல்வது போன்ற கட்டம்-
“என் அண்ணன் வாலி வானர ராஜ்ய பட்டாபிஷேகம் பெற்று, கிஷ்கிந்தையில் அரசு புரிந்து வந்தான், மகா பராக்கிரமசாலி. அவனிடம் அன்பும் பக்தியும் குறைவின்றிச் செலுத்திக்கொண்டு, நான் யுவராஜனாக இருந்து வந்தேன். வாலிக்கும் மாயாவி என்கிற அசுரனுக்கும் பழைய விரோதம். ஒரு நாள் ராத்திரி அந்த அசுரன் கிஷ்கிந்தைக்கு வந்து வாலியைப் போருக்கு அழைத்தான்.
