உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

மீசை முளைத்த வயதில்

கட்டுரைகள் 9 · 9 / 26

புகழே! நீ ஒரு மதுக்கலயம். உன்பால் வீழ்ந்த ஈக்கள் எழுந்ததேயில்லை. புகழே! நீ ஒரு நிழல்! உன்னைப் பற்றிக் கவலைப்படாதவர்களைத் தொடர்ந்து கொண்டேயிருப்பாய்.

புகழே! நீ ஒரு புதிர்! உன்னைப் பற்றி விளக்கவே என்னால் முடியாது!

●

சுரைக்காய்ப் பிஞ்சின் தலையில் மிளகாய்ப் பழத்தைச் செருகி இடையில் மல்லிகை இலைகள் சிறகாய்ப் பின்புறம் தாழை மடலை வைத்தால்; பச்சைக் கிளியே! உன்போல் படைப்பு! உன்போல் படைப்பு! வட்டத் தலையே! சிவப்பு மூக்கே!

சின்ன இறகே! நீண்ட வாலே! கன்னங் கிளியே சொன்னது பிசகா? வானை கேட்டு வாழ்த்த மறுப்பாய். புகழ்ச்சிசொல் கேட்கும் போற்றிட மாட்டாய். காரணம் அறிவேன் சின்னக் கிளியே! கூண்டில் உன்னைப் போட்டதனாலே தூண்டிற் புழுவாய்த் துடிக்கிறாய் நீயும் சிறையில் உன்னை அடைத்து மகிழ்ந்தேன் இன்று தெரிந்தேன் சிறைமிகக் கொடிது! சிறைமிகக் கொடிது! மன்னித் திடுவாய் மன்னித் திடுவாய்! பொன்மொழிப் பாவாய் மன்னித் திடுவாய்! என் சிறை முடிந்ததும் உன் சிறை உடைப்பேன்!

சிறையின் கஷ்டம் சிறையால் உணர்ந்தேன். அடிமைப் புள்ளே! அழகுக் கிள்ளாய்! அனுபவம் பெற்றேன் - அனுபவம் பெற்றேன். வந்ததும் தருவேன் விடுதலை வாழ்வு பறப்பாய், பறப்பாய், உயரப் பறப்பாய்! கட்டிய கால்கள் விடுபடும் உடனே எட்டிய மட்டும் ஏறிப் பறப்பாய்! எழில்நிறப் பெண்ணே எங்கும் பறப்பாய்! கூண்டினில் உன்னை அடைத்தேன் கிளியே! மன்னித்து விடுக! கூண்டின் கஷ்டம் புரிந்துகொண்டேன். கூண்டின் கஷ்டம் புரிந்துகொண்டதால் கூண்டுக் கிளியுனைத் திறந்துவிடுவேன்.

ஆனால் கிளியே கூண்டின் கஷ்டம் புரிந்தோர் இங்கு ஆண்டிட வந்தார் மாண்டிட எம்மைக் கூண்டினில் போட்டார் ஏனோ கிளியே? ஏனோ கிளியே? பதிலும் சொல்வாய் பச்சைக் கிளியே! உன்னை நான் அடைத்ததால் என்னை அடைத்தார் என்றே சொல்வாய். நன்று கிளியே; நீ, யாரை அடைத்ததால் நானுன்னை அடைத்தேனோ ?

●

தமிழே!

உன்னை - உளங்கவர் ஓவியமே! உற்சாகக் காவியமே! ஓடை நறுமலரே! ஒளியுமிழ்ப் புது நிலவே! அன்பே! அழகே! அமுதே! உயிரே! இன்பமே! இனிய தென்றலே! பணியே! கனியே! பசுந்தோகை மயிலே! பழரசச் சுவையே! மரகத மணியே! மாணிக்கச் சுடரே! மன்பதை விளக்கே! - என்றெல்லாம் அழைத்திடத் தோன்றுகிறது.

ஆனாலும் தமிழே! உன்னைத் “தமிழே” என்று அழைப்பதிலே உள்ள இன்பம் வேறு எந்தச் சொல்லிலும் இல்லையென்பேன்.

●

தழைத்துக் குலுங்கும் தண் மலர்ப் பொழில் ஆங்கு மழைக் கூந்தற்காரி - பேரழகி யொருத்தி! அவள் இழைக்குப் பொன் வேய்ந்த துகில் பூண்டு நிற்கின்றாள், அணைக்கும் காதலனை அழைக்கும் கண் கொண்டு - கன்னங்களில் தேன் மொண்டு! கிள்ளை அவள் பெயர். பல், முல்லை! இதழ், சாக்கரை வில்லை!

அவனோ தமிழ்மகன், இள வணிகன். பருவ மயில் ஆடுதற்கு முகில் கூட்டும் கண்ணுடையான். வளரும் மலைத் தோளுடையான், வளவன் பெயரால்!

அவன், விற்காட்டும் புருவத்தாளை - தற்காத்துத் தற்கொண்டான் பேணுகின்ற கற்புக் கருவத்தாளை - சந்திக்க வருகின்றான், பந்திக்கு முந்துகின்ற பசிகாரன் வேகத்தில்!

கனிமரங்கள் தலைநாணும்- அவள் எழில் தருவாய் நிற்கின்ற காட்சி கண்டு! வந்துவிட்டான் வளவன் என்ற சேதிதன்னை அங்கிருக்கும் சருகுகளின் சலசலப்பால் அறிந்துகொண்டாள். ‘அத்தான்’ என்பதற்குள் அணைத்துவிட்டான் பின்னிருந்து! கொத்தாக இன்பம் - குலை குலையாய்ச் சுவை மொழிகள் - காதல் அலை முழங்கும் இரு கடல்கள் - பெரு விருந்து! நீண்ட மெளனம்! ... விடியற் பறவைகளின் பண் கேட்டு, விழித்தெழுந்தார்!

“நீல்விழி நெருப்பாகச் சிவந்ததடி என் கண்ணே” என அவன் கூற, “ஆமத்தான்! அங்கென்ன வாழ்கிறது!” எனச் சொல்லி மீண்டும் தழுவுகிறாள்.

“இனி நாம் இதுபோல் ஆடிப்பாட இருபதுத் திங்கள் ஆகும் பெண்ணே - நாளை மறு நாள் ரோம் நகரம் போகின்றேன் கண்ணே!”

“கட்டழகா! கடலலையில் கட்டுமரம் போலத் தவிப்பதற்கோ பிறந்தேன்! இல்லை - இந்தப் பயணத்தைத் தவிர்ப்பதற்குத் துணிந்தேன்!”

“தடை வேண்டாம் - தணல் வேண்டாம் உன் விழியில்! புனல் கடந்து ஒளிமுத்து விற்றால் மடை திறந்த வெள்ளம் போல் பொற்காசு குவியும். தமிழர் வளத்தைத் தரணி அறியும். விடைகொடு பாவாய் - அத்துடன் விருந்தளிக்கும் உன் இதழ்க் கடையை இங்கு கொடு!”

“முத்துச் சுமையேற்றிக் கத்துக் கடல் சீறிச் செல்கையிலே குத்து விளக்கொன்றை இங்கு செத்து மடிய விட்டுச் செல்கின்றோம்... என நினைப்பீரா அத்தான் ?”

“நினைக்க மாட்டேன் நேரிழையே... உனை மறந்தன்றோ நினைப்பதற்கு!”

“களிவொழுக்கம் புகுந்து விட்டோம் - நாளை மறந்து விட்டால் நில நடுக்கம் என் வாழ்வில்! இதை உணர்வீர்!”

“மூச்சு வாங்குவதற்கும் விடுவதற்கும் நினைப்பை வைத்துக் கொள்வதில்லை. என் உயிர் மூச்சே! ஏதேதோ எண்ணாதே! நீயின்றி நானில்லை! நிலவின்றி வானில்லை!”

“விண்மீன்கள் படையெடுத்தால் ?”