உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

மீசை முளைத்த வயதில்

கட்டுரைகள் 7 · 7 / 26

ஆண் : இப்போது நீ என்னதான் சொல்கிறாய்?

பெண் : எதைச் சொன்னால் நீர் ஆசையோடு கேட்பீர்?.... “சங்கத் மொழி பேசும் உம் குழந்தைச் செல்வங்கள், ‘அப்பா எப்ப வரும் ஆத்தா?’ என்று உமது தாயாரிடம் சிணுங்கி அழுவார்களே; அதைச் சொல்லவா?

ஆண் : அய்யோ - போதும் நிறுத்து!

பெண் : தலையணையைக் கண்ணீரால் குளிப்பாட்டும் உம் மனைவியின்

நிலையைச் சொல்லவா? அதைக் கேட்பீரா?

ஆண் : வேண்டாமடி, வேண்டாம்!

பெண் : பிறகென்ன, பழைய நினைவுகளைச் சொல்லட்டுமா? மரணப்படுக்கையில் உமது முதல் மனைவி பத்மாவதி - ‘கடைசி யாகத் துடிக்கும் என் உதட்டில் ஒரு முத்தங்கள் கொடுங்களத்தான்” என்று கேட்பதற்கு முன் பெற்றுக்கொண்டாளே....

அதை....

ஆண் : அய்யோ... வேண்டாம்.... நீ போயேன்!

பெண் : உமது குடும்பத்தார் - தாய், மனைவி, சகோதரிகள்.... குழந்தைகள்... உழுவலன்பு பூண்ட நண்பர்கள்... உமது நலமே தன்னல மாய்க் கொண்டிருந்த தந்தை.....

ஆண் : சொன்னால் கேள்! போதும் நிறுத்து!

பெண் : இதெல்லாம் பிடிக்காவிட்டால் உமக்கு மிகவும் இனிப்பான சேதி சொல்லுகிறேன்; இந்த நாடு இருக்கிறதே - இது ஒரு அடிமை பூமி. இதை விடுவிக்க உண்மையான தொண்டர்களும், நேர்மையான தலைவர்களும் எத்தனை பேர் வேண்டும் தெரியுமா?

ஆண் : அய்யோ - என்னை விடேன்.

பெண் : முடியாது - இந்த முத்தங்களைப் பெற்றுக் கொள்ளும்.

ஆண் : விடு என்னை - உன் கரம் அக்கினிக் கட்டையாயிருக்கிறது! உன் முத்தம் முள்ளாகக் குத்துகிறது.

பெண் : நேற்று?

ஆண் : அதை மறந்துவிட்டேன்.

பெண் : போன வாரம்?

ஆண் : அதையும் மறந்துவிட்டேன்...

பெண் : போன மாதம்.....?

ஆண் : எல்லாவற்றையுந்தான்! தயவுசெய்து நீயும் மறந்து தொலைந்து போ!

பெண் : அய்யா கோவலரே! நாம் இருவரும் மறந்து விடலாம். ஆனால் என் வயிற்றிலே வளரும் ஓவியத்தை யார் மறப்பது! அது நம் உறவை வெளியிலே சொல்லித் தான் தீரும்! பல இரவுகள் - பல பகல்கள் நாம் பாடிய காதல் கீதத்தின் அற்புதமான அடையாளம் அடியாளின் வயிற்றில் வளருகிறது கண்ணாளரே! மறக்க முடியாது அதை! மறுக்கவும் முடியாது நீர்! உலகம் சொல்லத்தான் போகிறது அந்த உண்மையை!

எந்த வசதியும் நுழையக் கூடாதென்று தடை போட்டுள்ள சிறைச் சாலைக்குள்ளே உம்மிடம் ஒரு பெண்

மட்டும் ரகசியமாக வந்துபோன விஷயம், ஒரு நாள் அம்பலத்திற்கு வரத்தான் போகிறது! - நமக்குப் பிறக்கப் போகும் “குழந்தை” உம்மைப் பார்த்து “அப்பா அப்பா” என அழைக்கத்தான் போகிறது. அப்போது ஊரார் கேட்பர், குழந்தையின் தாய் யாரென்று! நீரும் சொல்வீர்; தனிமையென்னும் தங்கக் கொடி பெற்ற தளிர்க் கொடி; சிந்தனைச் செல்வம்; கற்பனைக் களஞ்சியம் இதுவென்று!