உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

மீசை முளைத்த வயதில்

கட்டுரைகள் 6 · 6 / 26

‘அ’ வினிலே ஆயிரத்தை அடுக்கி வைத்து, ‘க’ வினையே நா கடுக்கத்தேடி, என்ன சொன்னோம் என்பதையே மறந்து மின் மினியாய்ப் பறக்கின்றார், விண்மீன்கள் முன்னே!

ஓவியமும், காவியமும், உரைநடையும், இசையும் கூத்தும், இன்னும் பல தாரகைகளே, உம் போலத் தமிழினிலே இருக்கையிலே, அவைகட்குப் போட்டியாக அவனியிலே மின்மினிகள் பறப்பதுவும் இயற்கை தானோ?

‘வான்’ என்ற அடைமொழியால் - கோழி - வண்ணக் கலாப மயில் ஆகவில்லை. ‘மின்மினிப் பெயரால் பூச்சிகளும் விண்ணின் ஒளிப்பூக்கள் ஆகவில்லை! மனிதர்களும் இதைக்

கற்க வேண்டுமென்றே பறை சாற்று மஞ்சள் ஒளிமுத்தே! மாணிக்க மலர்க் கொத்தே!

மணி விளக்கின் சுடரே! முடிவாக ஒன்று சொல்வேன் - திகழும் உன் ஒளிப்புகழைத் திக்கெட்டும் பாடுகிறோம் ஆனால் - திடுமென ஒரு நாள் உங்களில் ஒருவர்க்கு ஒரு முழு வால்தான் முளைத்திடுமாம் - அய்யோ! பின்னர் - ‘நட்சத்திரம்’ எனப் புகழ்ந்த இப்பெரு வையம், ‘வால் நட்சத்திரம்’ என இகழும். மனிதரிலும் - புகழ் வளர்ந்த சில பெரியோர்க்கு இந்தப் பொல்லாத வியாதி உண்டு.

முகில் மாடத்து அகல் விளக்கே! முழு மதியாம் தரு நிழலில் இறைந்து கிடக்கும் மகிழ மலர்காள்! வான்சொரியும் தங்க ஒளி மழையே! பொன்பூவே! விண்மீனே!

நீ பூமி காணும் ஓவியம்.

புதுக்கற்பனை தரும் காவியம்.

●

பெண் : அன்புள்ள காதலரே!

ஆண் : யார்?

பெண் : யாரா? தெரியவில்லையா என்னை? உங்கள் திருமுகத்தைக் காண எவ்வளவு நேரமாய்க் காத்திருக்கிறேன்!

ஆண் : வாராதே என்று எத்தனை முறை சொல்வது?

பெண் : ஏன்... என்னைப் பிடிக்கவில்லையா?

ஆண் : ஆமாம்!

பெண் : உமக்கென்ன பைத்தியமா! நேற்று இரவெல்லாம் என்னை ஆரத்தழுவியபடியே கிடந்தீரே...

ஆண் : அதற்கென்ன இப்போது - நான் அழைத்தால் வா - போ!

பெண் : சரிதான். தேவைப்பட்டால் வரவேண்டிய தேவமாதுவா நான்!

ஆண் : தேவாமிர்தமாயிரேன் - இப்போது தேவையில்லை.

பெண் : அந்த அமிர்தத்தையும் தோற்கடிக்கும் என்றீர் என் அதரபானம்! கற்பனைகள் ஊறுகின்றன என்றீர் என் கன்னத்தைத் தடவியபடியே! காவிய மாளிகை எழுகின்றது எனக் கதைத்தீர் என் காந்தள் விரல்களை ஸ்பரிசித்தபடியே! கவிதை மழை கொட்டுகிறது எனப் போதை மொழியில் புகன்றீர் - கருத்துக் குவியலே! எண்ணப் புதையலே! கனியே! தேனே! வா; வா! என வாயார அழைத்து, அணைத்து, அமளியில் குலவினீர்!

வேயா மாடத்தில் ஓயா இன்பம் பெறுவோம் என்றீர்! வேணு கானமோ - வீணை நாதமோ - என்று வர்ணித்தீர். அப்படி யெல்லாம் புகழாரங்கள் பூட்டிய நீரா இன்று அதிகாரத்துடன் விரட்டுகிறீர்? காதலரே எல்லாம்.... எல்லாம் கட்டிலறைப் பேச்சுத்தானா?

ஆண் : கட்டிலறைக்கா வந்திருக்கிறாய்; கண் உதிர்ந்தவளே! நன்றாகப் பார்! இது கட்டிலறையா? காராக்கிரகத்தின் காவலறையடி!

பெண் : ஆமாம் - இந்த அறையில் என்னைத் தவிர உமக்கு இன்பமான பொருள் எது துரையே! வாரும், சினம் கொண்ட பாம்புகள் போல் பின்னிக் கொள்வோம்... ஏன் தயக்கம்?

ஆண் : பேசாதே!

பெண் : கனியே வருகிறது - சுவைத்திட மறுக்கிறீர். மலரே வருகிறது - முகர்ந்திடேன் என்கிறீர். இன்பமே வருகிறது- எட்டி நில் என்கிறீர். நீர் அதிசயமான கள்ளை - புதுமையான வண்டு - விசித்திரமான மனிதர்.