உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

மீசை முளைத்த வயதில்

கட்டுரைகள் 26 · 26 / 26

“கலையாத திலகத்தைக் காண்பீர்” என்றாள். “ஒரு நிலையில் உள்ளமில்லை; நாளை காண்போம்” - என மொழிந்தெழுந்தான். முறுமிவால் மோகத்தால் அவனைப்பற்றி, இருங்கள் எனத் தாயத்தை விழியால் சொன்னாள்.

கள்ளிப் பழத்தின் சிவப்பை வெல்லும் அவள் கனியுதட்டில் ஊறுகின்ற காதல் ரசம் பருகாமல் நின்றிருந்தான். “கண்ணா!” என்றாள். அவன் கண்ணோ அவள் மீதில்லை. கரம் பற்றிச் சாய்ந்தாள் தோள் மீது! “நாளையாகட்டும்” எனக்கூறி, கையிலுள்ள மயிலிறகை அவள் கரத்தில் தந்துவிட்டு ஓடிவிட்டான்.

மயிலிறகைப் பார்த்தபடி மன மயக்கம் கொண்ட பெண்ணாள் வீற்றிருந்தாள், அசையாமல்!

ஆயிரமாயிரம் அழகு இழைகள்! இருந்தாலும் அந்த நீலக் கண்ணின் கோலமே கோலம்! வானவில்லினும் அழகு! வைரப் பிறையினும் அழகு! அந்த அழகு மயில் கண்ணிலே அவள் கண்டாள் நலங்கிள்ளியை! அவன் இதழ் அமர்ந்தும் முகமாகத் தன் முகத்தையும் அதிலே கண்டாள்! ஈருயிரும் ஒருடலும் எனும் இலக்கணத்தைக் கற்பனையால் ஓவியந்தீட்டிக் களித்தாள், அந்த மயில் இறகின் நெற்றியிலே!

அவனோ இராச வீதி நிகழ்ச்சியினால் நெஞ்சதிர்ச்சி கொண்டுவிட்டான். உரிமைக்கு வழியில்லை!

பாண்டியத்தில்! உள்ளம் சொல்லுகின்ற நினைப்புக்குச் சித்திரம் தீட்டுவது பெருங்குற்றம்! என்ன கொடுமை! கூன் பாண்டியன் குருடாகிவிட்டான்! குலச்சிறையோ இன்னும் இருவிழிகள் பெற்றுவிட்டான் பாண்டி நாட்டு மண் மீது நெருப்புமழை! முத்தமிழ்வர் - முத்தமிழர் - அவர் முதுகிலெலும்பு ஓடியமட்டும் - மூளையெல்லாம் சிதறுமட்டும் - அடிப்பதுதான் நீதியோ, அன்புக்கு மடைகோலும் அடியார் கூட்டம் இதுதானோ ? மிக்க கொடுமை! மிக்க கொடுமை!!

இவர்கள் வளர்ந்தால் விடியாது நாடு! என்போன்ற இளைஞர்க்குக் காதல் அல்ல’ முதல் வேலை - பாண்டியத்தில் உரிமைப் போர் துவங்குவதே முதன்மைத் தொண்டு! சாலையிலே சமணர் நடத்தலுமாகாதாம்! அந்தத் தடையைச் சமண மக்கள் இன்றே குவிய வேண்டும்! அதற்குத் தலைமையாக ஒருவன் வேண்டும்! யார் அந்தத் துணிவுடையான் ? யார் அந்தத் தலைமைச் சிங்கம் ?

நலங்கிள்ளி கேள்வி கேட்டான் விண்ணோக்கி! பாண்டிநாட்டு மண்ணோக்கி!!

பீலிவளையோ பெருவிருந்து அருந்தலாம் இன்றென்று பேரழகை ஆடையிற் சரிபார்த்து, ஆவணி வீதி கடந்து, புரட்டு ஆசி கூறும் புரோகிதர் வாழ் பகுதி தாண்டி, தன் ஐயப்பசிக்கு உணவு தேடிக் காத்திருந்தாள் சோலையோரம்! அவன் மாலை நேரம் போனபின்னும் வரவில்லை. மலர்ப்பதியின் அருகிருக்கும் மண்டபத்தில் காத்திருந்த கட்டழகி

கண்ணயர்ந்தாள். காலை வந்தாள். காதல் உண்டார். பிறகே கேட்டாள், வெகுநேரம் ஆனது என்னென்று!

மனக் குழப்பம் கண்ணே - மனநித்துவிடுக! நீலமிழைத்துப் பச்சை பதித்த தங்கத் தட்டாம் மயிலிறகில் நீயும் நானும் இருப்பதுபார்!

“ஏன் அத்தான்; கொழுகொம்பில் படருவதால் கொடியென்றார் பெண்ணை யென்பீர்! தோகையென மங்கையரை அழைப்பதற்கு விளக்கமென்ன ?”

“மயில்களிலே பெண்ணுக்குத் தோகையில்லை! ஆண்மயிலுக்கு அழகூட்டும் அணிகலனே தோகை தான்! மயிலுக்கென்ன; மனிதருக்கும் தோகைதான் சிறப்பூட்டுதலால், பெண்மணியைத் தோகை என்றார்.”

“பெரும் புலமைக் கவிஞர்தான் நீங்கள்!”

“கவிதையடி கண்ணே நீ!”

“தமிழ்த்தான் நீங்கள்! என்னைத் தழுவத்தான் வேண்டும்!”

பேச்சிடையே விழித்துக்கொண்டாள்! வெறுங் கனவு. வீரன் வரவேயில்லை. விடிந்தது பொழுது! வேகமாய் நடந்தாள் அழுது.

செல்லும் வழியிலே சித்திர வீதி! ஆங்கோர் இளைஞன் - அழகு சிலையின்றி - அணிமணிகள்

எதுவுமின்றி நடக்கின்றான். அவன் கையில் மட்டும் மயில் தோகை!

“வாழ்க சமணம்” எனும் முழக்கம் நாவில்! யார் இவன் ? சமணர் வெளிக்கிளம்பலாகா தெனும் சட்டத்தை மீறுகின்ற வீரன் ? கிழவன் போனவழி போவதற்கு வருகிறானோ ? அம்மவோ! அரண்மனைக் காவலர் காணின் - அழிவுதான் இவன் முடிவு! நடுங்கினாள் பீலிவளை அவனைக் கண்டு! நெருங்கினான் அத்துறவி! விழியெல்லாம் இருள் மேவ சுருள் கத்திச் சுழல்வது போல் சுழன்று வீழ்ந்தாள்! பொத்தை வாய்ச் சமணன் பிடித்த போக்குக் கொடியைத் தொடர்ந்து ஏந்த, சக்கைகளின் செயல் அனைத்தும் எதிர்த்தொழிக்க - எழுச்சி பெற்ற பெருவீரன், நலங்கிள்ளி!

அவன் கடந்துவிட்டான், தூய காதலினால் மயக்கமுற்ற காரிகையை! எறிந்துவிட்டான் இன்ப ஓவியம் தீட்டுகின்ற தூரிகையை!

ஓடி வழிமறைத்தாள், “உயிர் எடுத்துச் செல்லாதே” யென்று!

“உரிமை எடுத்துச் செல்வதற்கு ஊராளுங்கூட்டம் - இருக்கும்வரை போராட்டம் நடக்கும்! இதில் மாறாட்டம் இல்லையென்பேன் - மனமிருந்தால் காத்திருப்பாய் - உயிரிருந்தால் ஒன்றாவோம்!”

“நலங்கிள்ளி பேசிவிட்டு முழங்கிச் சென்றான் சமணம் வாழ்க” என்று!

நெருக்கடிச் செல்லுகின்ற தோகையிலே சிந்தியது ஓர் இறகு! எடுத்தாள் எழிலரசி பீலிவளை! ஒளிகாட்டும் கண்ணிரண்டும் குளங்காட்டி மங்கியதால் மயிலிறகில் அவள் உருவம் - அவன் வடிவம் இரண்டும் கண்டாள். அதுவும் ஒன்றாய்க் கண்டாள்! நலங்கிள்ளி தனியொருவன் கொடுங் கோலை எதிர்ப்பதற்கு நடைபோடும் துணிவு கண்டு கணநேரம் காதலையும் மறந்திருந்தாள்!

●