மீசை முளைத்த வயதில்
கட்டுரைகள் 25 · 25 / 26
அவன் : “அதை; வாயின் முத்தாரம் காட்டிச் சொல்வாய்!”
●
(அவள் புன்னகை தவழ அவனை வழியனுப்பி வைக்கிறாள்)
சைவநெறி வென்றார் - சமணர் தோற்றார் எனப் பாண்டி மண்டலத்துக் கொலுமண்டபம் தீர்ப்பளிக்க, உடன் அமைச்சர் குலச்சிறை, கண்புடை பட்டு நீண்ட கழுத்தறி நிறையில் எண்ணிப்பெருங் குற்றத்து எண்ணாயிர்வர்களையும் ஏற்றிக் கழித்து நாயனார் ஆனார். இக்கொடுஞ்செயலுக்குப் பின்னர் பாண்டிய நாடு வாய் திறக்கப் பயந்து கிடந்தது. மிச்சமிருந்த சமணத் துறவிகள் வெளியிற் கிளம்ப அச்சங் கொண்டனர்.
சமணந் தழுவி, இல்லறமுந்தழுவி நிற்கும் பொதுமக்கள் மனந்திறக்க வழியில்லை. குலச்சிறையின் கொடுங்கோல், உரிமைக் குரலுக்குப் பெருந்தடை விதித்தது. அரசு எவ்வழியோ அவ்வழியே குடிகளும் ஆகிட வேண்டுமென ஆட்சி ஆணை பிறப்பித்தது.
இந்நிலையில் தமிழகம் இருக்கின்ற வேளையில் ஒரு நாள் !...
படை முகத்து வீரனவன்; படைக்கலனைப் பார்வையிலும் பால் நிலவை முகத்தினிலும் பெற்றிருக்கும் பாவை அவள்! ஆணொருவன் பெண்ணொருத்தி யென்றால் அங்கே காதலுக்குக் கதவு முடியா இருக்கும்! நலங்கிள்ளி-அந்த நல்ல தமிழ் இளைஞனுக்குப் பெற்றோர் இட்ட பெயர்! பேரழகியோ பீலிவளையென்னும் பெயர் பெற்றாள்! சந்தித்தார்... சிரித்து சிந்தித்தார்... முந்தித் தருவது யார் முத்தம் எனும் விதத்தில் வளர்ந்து விட்டார், “பந்திப் பார்ப்பனரின் வயிறு போல் பொற்கிழி வேண்டாம் - அந்திச் செவ்வானத்து எழில் காட்டும் கன்னம் தருவேன் அட்டியின்றி!
ஆனாலும் அத்தான், குலக்கணிகையர் மரபினிலே வந்தாலும் மந்தி கைமாலையாய் மாற மாட்டேன் - இஃதுறுதி” யென்று சொல்லி ‘இச்’ சென்று பேச்சை முடித்திட்டாள் சித்திரச் செந்தமிழாள் பீலிவளை!
“தேன் துளியால் என் இதழை நனைக்கின்ற திருவே! வான்வெளியில் வட்டமிடுகின்ற நிலவே!
கணிகையர் மரபென்றாய்... கண்ணீரால் ஓவியம் கன்னத்தில் தீட்டுகின்றாய்... கலங்காதே! தனிமையில் கிடந்திட்ட எனக்கு இனிமையை வழங்குகின்ற தளிரே! தளிர் மேவும் பனியே! தமிழ் முச்சே!
யாயும் ஞாயும் யாராகியரோ! எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்! யானும் நீயும் எவ்வழி அறிதும்! செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சங் கொண்டவரே நாம்! அஞ்சாதே! சாவாலும் நமைப் பிரிக்க ஆகாது!” எனச் சொல்லி இதழ் அமுதம் தந்தான். திருமயப் பெருகின்ற சுயநல நோக்கோடு!
பூக்காடு தாண்டி, சமணரைச் சாக்காட்டில் தள்ளிவிட்ட கழுமரக் கும்பல் தாண்டி, வேக்காட்டு மனத்தினனாம் குலச்சிறை கோலோச்சும் தலை நகர வீதி வந்தார் கலையழகு காண்பதற்கும், காதல் சுகம் வளர்ப்பதற்கும்!
இடையிலாப் பெண்டிர் தங்கள் நடையிலோர் நாட்டியம் காட்டி, மடையெலாங் கடந்து வந்த வெள்ளம் போல் பாய்ந்து சென்றார், பச்சை விரிக்கின்ற பாண்டிய நாட்டு வீதியிலே!
குடை நிழற் பாண்டியனை வாழ்த்திக்கொண்டு ஒரு கும்பல், படைவீரர் புடைசூழப் பவனிவரும்!
சிவசக்தி சிலையுடனே தேரொன்று சீரோங்கிச் சித்திரவீதியிலே நகர்ந்தபடி யிருக்கும்!
விழா அனைத்தும் கண்டாள். அங்கு என்னை அணைத்த சுகம் இதில் எதிலுமேயில்லை யென்றாள். அவன் மகிழ்ந்து இதழ் குவித்தான்; பிறகு “மறந்து விட்டேன்; இது வீதி” யென்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். மயக்கம் தெளியக் காதல் வெறியினிலே தடுமாறி நடக்கின்ற அவர்கள் முன்னே; மயில் தோகை பிடித்தவாறு ஒரு கிழவர் சமணத் துறவி வருகின்ற காட்சி கண்டார்.
கால்பட்டு உயிரிழக்கும் எறும்பினங்கள் - அதனாலே மயிலிறகால் கூட்டிச் சென்று அதன் பிறகு நடப்பதுதான் அன்புவழி எனக்கொண்ட சமணப்பெரியார்! பாண்டியத்தில் யார்க்குமில்லா உரத்தோடு தம் கொள்கை பரப்பதற்கு வெளிவந்த வீரர்! பல் இல்லை - ஆனாலும் சொல்லில் தள்ளவில்லை. “உடலில் காணும் நடுக்கம் உள்ளத்தில் சிறிதுமில்லை! ‘வாழ்க சமணம்!’
என்ற வார்த்தையிலே என்ன அழுத்தம்! எண்ணாயிரத்தில் சிக்காத கிண்ணாரக் கிழவன்டா” என்று வியந்துரைத்தார் வெளியூரில் இருந்து விழாக் காண வந்த பல்லோர்!
ஒரு வீரன் உறுமி வந்தான்! “ஒதிய மரமே உனக்கு உரிமையில்லை இங்கு நடக்க!” என்று கிழவர் முன் நின்றான்.
“மயில்தோகை விரித்தாற்போல் மனம்படைத்த தமிழகத்தில், நான் நடமாட உரிமையில்லை! எங்கப்பா செல்வது ?” என்றார் பெருங்கிழவர்!
“எங்கோ செல்; எமக்கென்ன ?” எனச் சொன்னான். பதிலை விரும்பாமல் ‘படபட’ வென அவர்மீது தாக்குதலைத் தொடுத்து விட்டான். ‘சமணம் வாழ்க!’ எனச் சாகும்வரை சொல்வேனென்று உரத்த குரல் பெற்றார்! இரத்த வெள்ளமாயிற்று இராச பாட்டை! மயில் தோகை சிதறிற்று... பெரியவரின் மண்டையும் அவ்வாறே!
நலங்கிள்ளி - பீலிவளை நடுக்கமுடன் கிழவரின் அருகே வந்தார்.
“வாழ்க சமணம்!” என்ற உச்சரிப்பை உதடுகளில் பொருத்திக்கொண்டு உயிர்விட்டார் நலங்கிள்ளி மடிமீது அக்கிழவர்!
“உத்தமரே! உயிர் தமிழா! உயிர் மதியா ஒளி விளக்கே!” என வாழ்த்த நலங்கிள்ளி நாவசைத்தான்; நாலு முரட்டு வீரர்களை எதிரே கண்டு மூடிக் கொண்டான் தன் வாயை! சிதறியுள்ள மயிலிறகில் ஒன்றை எடுத்து, நடக்கலுற்றான்; நங்கை மடவன்னமும் அவன் பின் தொடர்ந்தாள்.
தொலைவினிலே “வீழ்க சமணம்” என்னும் பெருங் கூச்சல் கிளம்பக் கேட்டான். அவளுங் கேட்டாள். “எனத்தான் ஒரு மாதிரி இருக்கிறீர் ?” என்று! “ஒன்றுமில்லை” என்றுரைத்து, விடை கேட்டான். அவள் வலுவில் தந்த விருந்துக்குப் பின்! “சுவைத்து அருந்தவில்லை நீங்கள் விருந்தை” யென்று காயம்படா தன் கன்னத்தைக் காட்டி நின்றாள்.
