உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

மீசை முளைத்த வயதில்

கட்டுரைகள் 17 · 17 / 26

“புலியடிக்க முறமெடுத்த தமிழச்சி! . . . பூனை எதிர்ப்பட்டதென்று நெஞ்சு நடுங்குகின்றாய் . . . வீரத் திருவிளக்கே! கலங்காதே; வா” என்றான்.

“வீரத்தை வெல்வதன்றோ சாத்திரம்” என்றாள்.

“சாத்திரத்தை வெல்வதற்கும் ஒன்றுண்டு; அதன் பேர்” அறிவு என்றான்.

“அதைப் பெறுவதெவ்வாறு ?” என முத்தமிட்டாள்.

“புலி துரத்த முறமெடுத்து வந்தாயே; அம்முறத்தால் மூடப் பதர்களைப் புடைத்தெறிந்து விட்டால், நமைப் பயமுறுத்தும் சாத்திர சகுனங்கள் எல்லாம் வெறும் பதரே - புலித்தோலே - என்பது புலனாகும்!” என்றான்.

●

“மருங்கு வண்டு சிறந்தார்ப்ப, மணிப்பூ ஆடை அதுபோர்த்துக், கருங்கயற் கண் விழித்தொல்கி நடந்தாய், வாழி காவேரி!”

கானல் வரிப் பாடல்தன்னைக் கரும்பனைய சுவையேற்றித் தருபவளின் கரத்தினிலே இருப்பதுதான் யாழோ; அன்றி இதழிடை ஒலிப்பதுதான் யாழோ என அயர்ந்திருந்தான் அழகுரும்பி. உயர்ந்து நிற்கும் மாபகத்தின் குறுக்கே சாய்த்த எழில் யாழின் இருமுனையும் இணையாய் இல்லையென அவன் கண்கள் தீர்ப்புக் கூறித் திருமகளாம் தேன்மொழியின் தேகக் கட்டை வியந்து நோக்கும். அவளே யாழ்! அவள் உருவே யாழ்! அவள் மொழியே யாழ்!

அழகுரும்பி, மதி மயக்கம் கொண்டவனாய் அவள் எதிரே அசைவற்று அமர்ந்திருந்தான். திசையெட்டும் இவள் போலத் தேன் தமிழைப் பாடுதற்கும், யாழ் நரம்பை மீட்டுதற்கும் இதுவரையில் பிறக்கவில்லை யெனப் பேசி மகிழ்ந்தது இசை அரங்கம்.

“யாழின் நரம்புகளில் எத்தனையோ உணர்ச்சிகளைக் கிளப்புகின்ற இவள் விரல்கள், இதய நரம்புகளில் பட்டுவிட்டால் இன்பக் கதைகள் கோடி கோடி கேட்கலாமே! இறைவா! நின் அருளால் இன்மொழியாள் எந்தனுக்குக் கிட்ட வேண்டும்!” எனத் துடித்தான் அழகுரும்பி.

யாழோசை நின்ற பின்னர் இந்த உலகத்தில் இருப்பதை நினைத்துக் கொண்ட மாமன்ற இசை வாணரெல்லாம் இல்லம் ஏக, வெல்லத்தை மொய்த்து விட்ட எறும்பு போல அழகுரும்பி அவள் பின்னே நடக்கலானான்.

உயிர் பெற்ற ஓவியமோ - உலகு பெற்ற பெரும் பேறோ - ஒப்பற்ற அழகினாலே உயிர் வாங்கி நடக்கின்றாளே; எனப் பெருமூச்சு விட்டுக் கொண்டான்... “பின் அழகுக்கே அந்த நிலையென்றால், முன் அழகும் முல்லைச் சிரிப்பழகும், முத்தாரம் தொடுப்பதற்குக் குவிகின்ற இதழ் அழகும் கண்டு விட்டால் என் நிலைதான் என்னாமோ ?”

எனக் கேட்டபடி தொடர்ந்து சென்றான்.

அரங்குதனை மயங்க வைத்தாள். அழகுதனைப் பழகு தமிழ் இசையோடு குழைத்துத் தந்தாள். யாழ் எடுத்தாள். யாழானாள்.

யாரானாலும் நிகரில்லையென நாதம் தந்தாள்! வேதம் தந்த கருத்தெல்லாம் அவள் விழி தந்த ஒளியினிலே கருகிப் போகும். அவள் நடந்தாள் வீடு நோக்கி!

தன் பின்னே தனியாத ஆசைக் குன்றும், தாகமுடன் தள்ளாடி வருவதை அறியாத பாவையவள்!

வீட்டுக்குள் நுழைந்து விட்டாள் - கூட்டுக்குள் சென்ற புறா - யாழ் மீட்டும் எந்தன் புறா - நாட்டுக்கு இளவரசன் எனக்கின்றி எவர் கொள்வார் என நினைத்து வாயிலிலே நின்றிருந்தான் அறிவிழந்த அழகுரும்பி.

அண்ணாந்து நின்றவனின் இதயத்தின் அடித்தளம் ஆட்டுதற்கு விண்மீது நிலாத்தட்டு தொங்கியது - அதன் நடுவே ஓர் உருவம் - அதுதான் அவள் உருவம். இளைப்பாற நிலா முற்றம் வந்தவளின் முழுத் தோற்றம் கண்டுவிட்ட முடிவேந்தன் மைந்தனுக்கு முப்பாலின் இறுதிப்பால் தலைக்கேறி விட்டதாலே தட்டி விட்டான் வீட்டுக் கதவு தன்னை! ஓடி வந்து ஒரு தோழி திறக்கலானாள் - “இளவரசன் வருகைதனை எந்தன் எழிலரசி அறியட்டும்” எனச் சொன்னான்.

அவள் ஓடி அழகியிடம், “தேன் மொழியே! தேசத்து இளவரசன் தெருக் கதவைத் தட்டிவிட்டுத் தேகமெல்லாம் வியர்வைக் குளமாக நிற்கின்றான். தீரங் காட்டும் தோள்களிலே நாணம் தொங்குவதை - வீரம் பாடும் மீசைகளில் வெட்கம் ஆடுவதை

விழியினால் உணர்ந்தேன் தோழி; விடை கொடுத்து அனுப்பவா - அழைக்கவா ?” எனக் கேட்டாள்.

“அழைத்து வா” எனச் சொல்லி அவள் அலங்கார மாடம் புகுந்தாள். அவன் வந்தான், அவளும் வந்தாள் கையில் யாழோடு!...

“தேன்மொழி” எனச் சொன்னான்; “வணக்க”மென உரைத்துவிட்டு வாய்திறக்க வழியின்றி யாழ் மீட்டிப் பாடலானாள்.

“யாழ் கேட்க வரவில்லை கண்ணே” என்றான்.

“பின் யாது கேட்க ?” என்றாள்.