கொலைக்களம்!
கட்டுரைகள் 2 · 2 / 6
உண்மையான செய்தியை வெளியிடுவது, ஆரிய அகராதிப்படி, துவேஷம்!
இந்த அகராதி இருக்கலாமா? இருக்க விடலாமா? என்பது திராவிடரைப் பார்த்து, நாம் கேட்கும் கேள்வி!
ஏ! ஆரிய ஏடே! காந்தியாரைத் தப்பித் தவறி ஒரு முஸ்லீம் கொன்றிருந்தால், இந்நேரம், இந்தியாவின் மண்ணை, இரத்த நிறமாக்கி இருப்பாயே! வங்காளக் கடலிலும்—அரபிக் கடலிலும் சவங்களை மிதக்க விட்டுப் பார்த்திருப்பாயே! அவ்வளவு வேகமாக உன் விஷமப் பிரச்சாரம் நடைபெற்றிருக்குமே!
அதை விடுத்து........‘காந்தியாரைக் கொன்ற பிறகாவது, பார்ப்பனீயத்தை நம்பாதீர்கள், திராவிடரே!’ என எச்சரிக்கை வழங்குகிறவர்கள் மீது “எறியுங்கள், சட்ட விரோத பாணத்தை” எனத் தூண்டுவது ஏன்?
வெள்ளாட்டின் விலாவை முறித்து, அதை விழுங்கிய வேங்கை—அடுத்த வேட்டைக்குத் தயாராவதற்கு முன், எதிரே வரும், மான், தன் குட்டிகளுக்கு எச்சரிக்கை செய்வது, ‘வேங்கை-மான்குட்டி துவேஷத்தைக் கிளப்புவதாகும்’ என நினைத்துப் பேசாமலிருக்க முடியுமா!
காந்தியார், உண்மைக்காகப் பாடுபட்டார். காந்தியாரைக் கொன்றவன், பார்ப்பனன் என்ற உண்மையை, நீ மறைத்தாய், ஏன்?
காந்தியார் அமைதியாகப் பாடுபட்டார். காந்தியாரின் சாம்பல் கரைவதற்கு முன்பே, நீ உன் சாணக்கிய வலையை வீசி அமைதியைக் குலைக்க எண்ணுகிறாயே, ஏன்?
“காந்தியார் பார்ப்பனனால் கொல்லப்படலாம்.... ஆனால் அதை வெளியிடுவது குற்றம்!” இதுதானே உன் முடிவு!
இது பத்திரிகை தர்மம் அல்லவே! செய்திகளை மறைக்காமல் வெளியிடுவதற்குப் பெயர்தானே, பத்திரிகை!
இனநலத்திற்குப் பாதகம் ஏற்படும்போது செய்தியில், கத்தரிக்கோல் வேலை நடத்துவது என்பதுதான் அகில இந்திய பத்திரிகாசிரியர் மாநாட்டு, இரகசியத் தீர்மானமா?
பார்ப்பனீயமே! உன் ஆதிக்கத்திற்கு அழிவுகாலம் என்ற அறிகுறி தென்பட்டதும் அண்ணல் காந்தியாரை அழித்தாய்.
அவர் அஸ்தியைக் கரைக்கும் சடங்குகளில்—வைபவங்களில், உன் கொள்கையை—உன் சாஸ்திர—சம்பிரதாயத்தை மீண்டும் நிலைநாட்டிக் கொண்டாய்!
புத்த மதத்தை ஒழிக்க, புத்தரைக் கடவுளாக்கியதுபோல் காந்தி கொள்கைகளைக் கருவறுக்க அவரையும் கடவுளாக்கக் கங்கணம் கட்டி விட்டாய்!
இப்பொழுது, உன்னுடைய ஒரேஎதிரி, திராவிடர், திராவிட கழகத்தார்.
உன் காலடியில் கிடந்த, விபீஷணர்கள்கூட, உன் கோரச் செயலுக்குப் பிறகு கண்விழித்துப் பார்த்து, உன் சூழ்ச்சிகளைச் சுக்கு நூறாக்க எண்ணிவிட்டனர்!
நீ....பழைய வெங்கண்ணா வாழ்வு வாழவேண்டுமானால்; சாணக்கிய சாம்ராஜ்யம் சிருஷ்டிக்க வேண்டுமானால்; உன் இனத்தின் மேனி மெருகு கலையாமல்—குலையாமல், உல்லாசமாய்—உழைக்காத சமுதாயமாய்—உண்பதும், உறங்குவதுமே பிறவி யெடுத்த பயன் எனக்கொண்டு வாழ்க்கையை, அமைக்கவேண்டுமானால்; திராவிடரை, திராவிட இன உணர்ச்சியை, இன முழக்கத்தைத் தீர்த்துக் கட்டியாக வேண்டும்!
அதற்குத்தான் பாஷ்யம் அய்யங்கார் பாய்ச்சலும்—இந்து பத்திரிகையின் சிந்தும்—மித்திரனின் மிரட்டலும் நடைபெறுகின்றன!
திராவிடரின் திட்டம் பார்ப்பனரை எதிர்ப்பதல்ல; ஒழிப்பதுவுமல்ல! பார்ப்பனீயத்தை எதிர்ப்பது; அழிப்பதுதான்!
இதைத் தெரிந்து கொண்டும்—தெரியாத மொழியில், தேசீயப் போர்வையில் துவேஷப் பிரச்சாரத்தைத் துவங்கி யிருக்கிறது ஆரியம்!
அஞ்சவில்லை, நாம்! ஈட்டியின் பாய்ச்சல் கண்டு இமை கொட்டியவன் கோழை என்று கூறும் பரம்பரையில் வந்தவர்கள் நாம்!
மீண்டும், ஒரு முறையல்ல, பலமுறை கூறுகிறோம்; ‘காந்தியாரையே கொன்றது பார்ப்பனீயம்! திராவிடா! இனியாவது பார்ப்பனீயத்தை நம்பாதே!’ என்று.
ஆரியப் பத்திரிகைகளின் ஆணையை அரசியலார், தலைமேற்கொண்டு திராவிடரின்மீது சீறிப் பாயலாம்!
அந்தச் சீற்றலும், பாய்ச்சலும் ஏற்படும் பொழுது சிந்தை கலங்கி, முதுகைத் திருப்புகிறவர்கள் அல்ல. திராவிடக் கழகத்தார்!
பார்ப்பனீயத்தின் கரத்திலிருந்து பாய்ந்த குண்டுகளுக்கு, மார்பைக் காட்டினார் காந்தியார்!
எங்கள் சட்டையைக் கிழித்துக்கொண்டு எங்கள் இருதயத்தையும் பிளக்கட்டும், ஆளவந்தாரின் ‘குண்டுகள்’ எனக் கூறுகிறோம், நாம்.
ஆளவந்தவரில், பிரதம அமைச்சர், திராவிடர், திராவிட இனத்தவர்! அவர் வீசும் குண்டு, திராவிடரின் மார்பில் பாயட்டும்!
‘சுட்டது திராவிடர்—ஆகவே இந்தச் சாவு, சுவை தருகிறது’ எனச் சொல்லிச் சாவோம்.
ஆரியம் காந்தியாரைக் கொன்று அவர் ‘அஸ்தி’யைக் கரைத்தது!
இதோ, நாம்! ஆரியத்தின் விரோதிகள்! நம் ‘அஸ்தி’யும், இரத்தக் கடலில் கரையட்டும்! மானத்தை இழந்த வாழ்வு இனியும் வேண்டாம்!
பக்தர் குழாம் நிறைந்திருந்தது. ஆண்டவன் சந்நிதியில்!
பயபக்தியோடு வணங்கினார்கள்! கன்னத்தில் அடித்துக்கொண்டனர்!
அர்ச்சனை செய்தனர்! அபிஷேகம் நடந்தது!
ஆனால் ஒருவராவது, “முரட்டுத்தனம் நிறைந்த ஆணின் எலும்பிலிருந்து மேன்மையான பெண்ணை ஆண்டவன் படைத்தார்” என்று பைபிலில் கூறியிருப்பதைப்போல, கரடும் முரடும் நிறைந்த ஒரு துண்டுக் கல்லைக் கடவுளாக்கிய சிற்பியைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்கவில்லை!
கும்பல் கலைந்தது; ஆனால் அந்தப் பக்தர் மட்டும் ஆடிக்கொண்டிருந்தார்.
தன்னை மறந்து, உலகை மறந்து, ஆண்டவன் ஒருவரை மட்டும் நினைத்து ஆனந்தக் கூத்தாடிக்கொண்டிருந்தார்!
அவருடைய, பால் மணம் மாறாத பச்சிளங் குழந்தை, சற்று தூரத்தில் நின்று தன் அப்பாவின் விநோதமான அந்த ஆட்டத்தை வேடிக்கையாகப் பார்த்துக்கொண்டிருந்தது!
கள்ளங்கபடமில்லாத முகம்! சிறு அளவில் திறந்து, ‘பல்லில்லாத என்னைப் பார்’ எனக் காட்டும் செவ்விதழ்கள்!
வெள்ளைக் கண்ணாடிக் குண்டில் அளந்து வட்ட மிட்டு கருப்பு மை தீட்டியதைப் போன்ற கண்கள்!
