உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கொலைக்களம்!/கட்டுரைகள் 1
கட்டுரைகள்

கொலைக்களம்!

கட்டுரைகள் 1 · 1 / 6

இலட்சக் கணக்கான வீரர்களைப் பிணங்களாக்கி விட்டு—பச்சிளங் குழந்தைகள், பருவ மங்கையர் உயிர்களைப் பதை பதைக்கக் குடித்துவிட்டு—கோடிக்கணக்கான தாய்மார்கள் கோவெனக் கதற, அந்தக் குமுறல் கண்டு குறுஞ் சிரிப்புச் சிரித்துவிட்டு, விதவைகளை அதிகமாக்கி, அவர்கள் வேதனை கண்டு விலா நோக நகைத்து........முசோலினியின் இரும்பு நெஞ்சத்தைக் கீறி ருசி பார்த்து, ஹிட்லரின் வாழ்வை முடித்து, கோயரிங்குக்கு விஷக்கோப்பை யளித்து, அவன் சதையை விருந்தாக்கிக் கொண்டு, ஹிரோஷிமாவை வெறி நாக்குகளால் சுரண்டிச் சுவைத்து, இரத்தச் சேற்றிலே........ எலும்புகளைச் சொருகி விளையாடிய யுத்தம்........

அமைதி யென்னும் திரை மறைவில் அதிக நாள் இருக்க முடியாமல், ‘இதோ, வந்தேன் வந்தேன்’ எனக் கோர கீதம் இசைக்கிறது.

மீண்டும் போரா? என உலகம் திடுக்கிடுகிறது. இந்தப் போரில் ஏற்பட்ட காயம் காய்வதற்குள்ளாகவா மீண்டும் ஒரு போர்? மண்டைப்புண் ஆறுவதற்கு முன் மற்றொரு போரா? சீரழிந்த வாழ்வு செப்பனிடப் படுவதற்குமுன் போர் முரசா?

‘ஆமாம், போர்தான்,’ என்கிறார் ட்ரூமன்! அவரது பேச்சிலே அலட்சியம் சிந்துகிறது. மக்களின் வாழ்வு மாய்க்கப் படுவதைக் கண்டு மனக்கவலைப் படாத முதலாளித்துவ மரபு அவர்! ‘உம்’ என்றால் உலகத்தையே உலுக்கி விடத்தக்க, அணுகுண்டு, தம்மிட மிருக்கிற தென்ற தருக்கு மிக்கோர் நாட்டுத் தலைவர்!

அணுகுண்டுக்குப் பதில் குண்டு எம்மிடமும் உண்டு என முரசொலிக்கிறது, ரஷ்யா!

ஆயுதச்சாலைகளை நிரப்பும் விஷயத்தில் அக்கரை செலுத்துகின்ற நாடுகள்.............போர் முகாம்களை அமைப்பது பற்றித் திட்டம் தீட்டுகின்ற நாடுகள்......... வரும் யுத்த காண்டத்தில் நடுநிலைமையா?........ நடுக்க நிலைமையா?.............என்று தீர்மானித்துக் கொள்ளாத நாடுகள்.....இதுதான் இன்றைய உலகம்!

அமெரிக்கடாங்கிகள் ரஷ்யாவுக்குச் செல்கின்றன... அதைத் தடுக்க அவசர நடவடிக்கை........என்ற செய்திகளைக் காணும் பொழுதும், அமெரிக்கா அணுகுண்டு தயாரிப்பில் அதிக மும்மரமாக ஈடுபட்டு முப்பது முதல் ஐந்நூறு அணுகுண்டுகள் வரை தயாரிக்க மூலப் பொருள்கள் இருக்கின்றன என்று கணக்கிட்டுச் சொல்லும் பொழுதும், அணுசக்தி சம்பந்தமாகச் சர்வதேசக் கட்டுப்பாடு ஏற்படுவதை, அமெரிக்காவும் பிரிட்டனும் தடுக்கின்றன என்று ரஷ்யப் பிரதிநிதி கிராமிகோ கண்டித்துப் பேசியதோடு, அமெரிக்காவின் போக்கைக் கவனித்தால் உலகத்தில் சமாதானத்தை நிலைநாட்ட முடியாது என்று குறிப்பிட்டதையும் கூர்ந்து

பார்க்கும் பொழுதும், கொரியாவில் சோவியத் மண்டலத்திலுள்ள சோவியத்—யு. எஸ். எல்லை நெடுக அகழிவெட்டி நிலையங்கள் அமைப்பதைக் கேள்விப்படும் பொழுதும், மால்டாவில் பெரிய அமெரிக்கக் கடற்படைத்தளமும், விமானத் தளமும் அமைக்க, அத்தீவை பிரிட்டன் அமெரிக்காவிடம் ஒப்படைத்து விட்டதை நியூயார்க், ‘யுனைடெட் ஸ்டேட்ஸ் நியூஸ்’ (United States News) என்ற பத்திரிகை கூறும் பொழுதும், யுத்தத்தைவிட அடிமை வாழ்வு மிக மோசம், எனத் தொழிலாளர் தோளில் நின்று கொண்டு, அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன், விடுதலை விருத்தம் பாடும் பொழுதும், ஏற்கனவே உள்ள விமான பாதுகாப்புத்தளங்களை அழித்துவிட வேண்டாமென்றும், அவைகளை நல்ல நிலைமையில் வைத்துக் கொள்ளும்படிக்கும் டேனிஷ் சர்க்கார், உத்தரவு பிறப்பித்து, இராணுவத்தினரின் ஓய்வையும் ரத்து செய்து விட்ட அபாய அறிவிப்புச் சங்கநாதம் நம் காதில் விழும் பொழுதும், போர் மிக விரைவில் வந்துகொண்டிருக்கிறது என நம்பத்தான் வேண்டும்.

இந்தப் போர் முனையில் அமெரிக்காவும், பிரிட்டனும் தோளோடு தோள் சேர்ந்து, ரஷ்யாவைத் தொலைத்துவிடக் கங்கணம் கட்டும்.

ஹிட்லரிடம் எறிந்த ஈட்டியை இரத்தம் காய்வதற்குள் ரஷ்யா கையில் எடுக்க நேரிடும்.

நாசீசத்தை ஒழிக்க அன்று சேர்ந்து நின்ற பிரிட்டன்—அமெரிக்கா—ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும், இன்று பிரிந்து நின்று அமைதிக்குச் சமாதி கட்ட மீசையை முறுக்குகின்றன.

இம்சையை ஒழிக்க உபதேசித்த இயேசுநாதரின் பக்த கோடிகள் இரத்தக் கடலில் நீச்சல் விளையாட்டு நடத்த விரும்புகிறார்கள்!

சிரமறுத்தல் வேந்தனுக்குப் பொழுது போக்கு, நமக்கெல்லாம் உயிரின் வாதை...............என்ற அளவிலே, பாதுகாப்பில் பத்திரமாக அமர்ந்துகொண்டு...............‘படையெடுப்போம், பாரினை யழிப்போம்’ என வீர உரையாற்றுகின்றார்கள் தலைவர்கள்.

சன்மார்க்க மதம்—சமரச சற்குண வழிகாட்டி—சர்வ தேச சங்கம். இத்தனையும் இருந்தும் சமர்!

வெட்கமும் வேதனையும் கலந்த நிலைமை!

இந்தச் சங்கடத்தை முளையிலேயே கிள்ளவேண்டுமானால், ஸ்டாலின், ட்ரூமன், ஆட்லி சந்திப்பு நடைபெற வேண்டும். அல்லது ட்ரூமன் ஜனாதிபதி பீடத்திலிருந்து இறக்கப்பட வேண்டும். ஜார்ஜ் மார்ஷல் அமெரிக்க ராஜாங்கத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்கின்ற யோசனைகளைப் பலர் எச்சரித்துக் கூறுகிறார்கள்.

இரத்தவெறி பிடித்த தலைவர், இந்த யோசனைகளுக்குச் செவி மடுக்கவே மாட்டார்கள்!

போர்! போர்! போர் வரத்தான் போகிறது!

எரிமலை குமுறுகிறது! இன்னும் சற்று நேரத்தில் நெருப்புக் குழம்பு வாரி வாரி இறைக்கப்படும்!

**அப்போது இந்தியாவின் நிலை என்ன?**

‘பாக்கிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்ளத் தயங்கமாட்டோம்’ என்று பண்டித நேரு கூறுவது மட்டும் நம்மைப் பரவசப்படுத்தி விடாது.

இந்துஸ்தான் ஆட்சி போகும் போக்கைப் பார்த்தால், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளை அணைத்துக்கொண்டு........பலமில்லா விட்டாலும், ரஷ்யாவைப் பரிகாச மொழிகளால் எதிர்க்கும் நிலைமை ஏற்படலாம் என எண்ண வேண்டி யிருக்கிறது!

இந்துஸ்தான் சிறு குழந்தை, அவர்கள் அகராதிப்படி! தவழும் பருவங்கூட வரவில்லை! அதிலும் பல ஹீனமான சிசு!

சிசுஹத்தி செய்துவிட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்; ஆட்சியாளர் திட்டம் திராவிடத்தையும் பாதிக்கும் என்ற கவலையோடு!

குள்ளநரிக் குணம்படைத்த ஒரு வஞ்சகப் பார்ப்பனனால் கொலை செய்யப்பட்ட காந்தியாரின் ‘அஸ்தி’ கரைப்புச் சடங்கும் இந்துமத முறைப்படி, அநேக புண்ய(!) நதிகளில் நடைபெற்றுவிட்டது.

அண்ணல் காந்தியாரின் உடல் இவ்வளவு சீக்கிரத்தில் நெருப்பில் நொறுக்கப்பட்டு, ‘அஸ்தி’ கரைக்கும் நிலைமை ஏற்படும் என யாரும் எதிர் பார்க்கவில்லை.

அந்தக் காரியத்தை ஆரியம் செய்துவிட்டு, அந்த ‘ஆனந்த சுதந்திரத்தைக்’ கொண்டாட மிட்டாய்கள் வழங்கியதோடு நிற்காமல், காந்தியாரின் கொலையையும் தன் கொள்கைக்குச் சாதகமாக்கிக்கொண்டு, ஒரு கோரமான சுடுகாட்டைத் திராவிடத்தில் உண்டாக்க ஆயத்தம் செய்கிறது.

அந்த இடுகாட்டிற்கு அஸ்திவாரக்கல் நாட்டுவது போல, மித்திரன்—இந்து போன்ற ஆரிய ஏடுகள் விஷமப் பிரசாரம் செய்ய ஆரம்பித்திருக்கின்றன.

அந்தக் கல்நாட்டு விழாவைத் தோழர் பாஷ்யம் அய்யங்கார் நடத்தி யிருக்கிறார்!

காந்தியாரைக் கொன்றவன் ஒரு பார்ப்பனன் என்ற செய்தியைப் பத்திரிகைகள் மறைத்துள்ள நேரத்தில், திராவிடர் அதை அம்பலப் படுத்துகிறார்கள் என்பதுதான் அய்யங்காரின் இருதயத்திலே விழுந்த இடி! இந்து—மித்திரன் பத்திரிகைகளுக்கு ஏற்பட்ட கிலி!

ஜவஹரைக் கொல்ல முயற்சித்தவன் யார் என்று தெரியாமல் இருக்கும்போதே—அவன் ஒரு முஸ்லீம் என்ற செய்தியைப் பிரசுரித்துப் பல இடங்களில் இந்து—முஸ்லீம் போராட்டத்தைத் தூண்டிவிட்டு, ஈரோடு போன்ற இடங்களில் இலட்சக் கணக்கான ரூபாய் பொருள் சேதத்தை விளைவித்து விட்டு- இன்று உத்தமர் காந்தியாரின் உயிரைக் குடித்தவன் ஒரு ஊதாரிப் பார்ப்பனன் என்ற செய்தி, உறுதியான செய்தி வெளியாகிற பொழுது, ஆரியமே! நீ உறுமுவது ஏன்?

ஐயோ! எங்கள் மானம் போகிறதே! ஒரு பிராம்மணன் கொலை செய்ததற்காக, எங்கள் கோத்திரத்தையே சந்தியில் இழுக்கிறீர்களே எனக் குய்யோ முறையோவென ஒப்பாரி வைக்கும் ‘இந்து’ பத்திரிகையாரே! முதலில் உமது நீலிக் கண்ணீரைத் துடையும்! உமது இன வரலாற்றின் பழைய சுவடியைச் சற்றுப் புரட்டிப் பாரும்!

இதோ பாரும்.....—எத்தனை சூரர்களின் உயிர், உம் வர்க்கத்தின், சூழ்ச்சியால் சூறையாடப்பட்டிருக்கிறது, என்பதை!........

துப்பாக்கி ஏந்தாத காலத்திலே துளசிமணி மாலையையும், தர்ப்பையையும் காட்டி, எத்தனை தோள்வலி கொண்டோரின் வாழ்வைத் துளைத்திருக்கிறது, உமது இனம்!

களத்திலே காளையெனப் போரிட்டோரெல்லாம் உம்மினத்தவரின் கமண்டலத்திற்கு முன் கதியற்ற பிணமாயினரே! அவ்வளவு ஏன்? ....

நேற்றைய ‘அற்பாயுசு’ ஆட்சியில்கூட, ஆச்சாரியார் அவர்களின் கொடுமைக் கூர் அம்புகளால் இரண்டு திராவிடச் சிங்கங்கள் குத்துண்டு மடிந்தனவே!

சேலத்திலே கண்ணையும் காலையும் இழந்தவர்—உடையார் பாளையத்தில் உயிரினுமினிய மனைவி, மழலை பேசும் மக்கள் இவர்களைத் தனியே, தவிக்க விட்டு விட்டு, தணியாத சோகத்திற்கு ஆளாக விட்டு விட்டு—அத்தான்—அத்தான் என அந்த அம்மை அழ, அப்பா—அப்பா என அவர் குழந்தை அழ, சித்திர வதைக்குள்ளான வேலாயுதம்—இவர்களெல்லாம் உம்மினத்தின் கொள்கையை எதிர்த்ததற் கல்லவா, இந்தப் பரிசு பெற்றார்கள்?

குடியேறிப் பிழைக்க வந்த உமது இனத்தின் கோரப் பற்கள் காந்தியாரையும் ருசி பார்த்துவிட்டு, அந்த இரத்த வெறி அடங்காமல் திராவிடரின் குரல் வளைக்கும் குறிவைக்கின்றனவே!

காந்தியாரைப் பார்ப்பனன் கொன்ற செய்தியை வைத்துக் கொண்டு பார்ப்பன துவேஷத்தைக் கிளப்புகிறார்கள் திராவிடர்! ஆகவே அரசியலார் அவர்கள் பக்கம் கண் திருப்ப வேண்டும் என ஆணையிடுகிறது, ஆரியம்!

முதற் பதிப்பு-52 — முன்னேற்றப் பண்ணை (அச்சுச் சான்று ‘52’ மட்டுமே)