உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
கட்டுரைகள்

கயிற்றில் தொங்கிய கணபதி

பகுதி 2 · 2 / 2

ஊருக்குழைத்த உத்தமர், தோழர் சற்குணத்திற்கு எழுதிய கடைசி கடிதத்தில் இதையும் குறிப்பிடுகிறார்.

எத்தனையோபேர் பணபலத்தினால்......குடும்பத்துக்குள்ள செல்வாக்கினால், நாட்டுக்குத் தலைவன் நான் என வருவர். நாட்டிலிருந்து வீட்டுக்கு மூட்டை கட்டுவர். அண்ணன், தம்பி, மாமன், மைத்துனன், வீடு, வாசல், இவைகளே அவர்கள் கனவாயிருக்கும். உறவினருக்கு வேலை தேடிக்கொடுத்தல்—தனக்காக உழைத்தவர்கள், தன்னை தலைவனாக்கியவர்கள், சிறு உரிமை கொண்டாடினாலும் எட்டி உதைத்தல்—இது சில உயர்

குடும்பத்து தலைவருக்குப் பிறவிக்குணமாகவே இருக்கும். ஆனால் தாழ்ந்துபோன குடும்பத்தைக்கூட கவனிக்க நேரமில்லை கணபதிக்கு!... உழைக்கச்சென்ற இடத்திலும் மக்களுக்காக உயிர்விட்டார். உயிர் பிரியும் நேரத்திலும் ‘வாழ்க வையம்’ என உற்சாகப் பண்பாடினார்.

கடிதத்தில் நம்மையெல்லாம் வேல் கொண்டு குத்தும் பகுதிதான் கீழே வருவது. ஆம்! அது நம் பிரசாரத்திலே ஒரு அங்கம்கூட!

“நமது குடும்பம் நசித்துப்போனபின், நான் எப்படி இங்கு வந்தேன் என்பதை நீ அறிவாய். அப்பம் விற்றுக்கொண்டும் இராணி வீட்டில் மங்கு கழுவிக்கொண்டும் ஆங்கிலம் படித்தேன்.”

தஞ்சை மாவட்டத்திலே...தங்கநிற நெல் விளையும் சோழ வள நாட்டினிலே...தம்பிக்கோட்டையிலே பிறந்த கணபதி, ஒரு சாண் வயிற்றுக்காக இளமையிலே மலேயாவுக்கு ஓடினார். தில்லை நடராசனுக்குத் தங்க வீடு...... திருப்பதி வெங்கடேசனுக்கு வைரக் குல்லாய்......ஏன், ஆற்றங்கரை கருங்கல் கணபதிக்குக்கூட, அதிரசமும் அக்கார வடிசலும்!...ஆனால்...தம்பிக்கோட்டை கணபதிக்கு தாங்காத பசி. மலேயாவில் வயிற்றுப் பிழைப்பு. தமிழகம் தானியக் களஞ்சியமாயிற்றே!

தங்கந் தோண்டுமிடமாயிற்றே! முத்துக் குலுங்கும் கடல்களுண்டே! கணபதி ஏன் மலேயாவுக்கு ஓடவேண்டும்? ஒரு கணபதியா? எத்தனை கணபதிகளை......ஏ! தாழ்ந்த தமிழகமே! நீ...மலேயாவுக்கும் இலங்கைக்கும் அனுப்பியிருக்கிறாய். செப்புச் சிலைகளுக்குத் தேருந்திருவிழாவும்!......செல்வச் சீமான்களுக்கு சீரும் சிறப்பும்! கணபதிகள் காலந்தள்ள, ‘இலங்கையும் மலேயாவும்!’

இது அடுக்குமா; தமிழகமே!......அன்பு மகன் செத்தான் என்று அழுகிறாயே......ஆத்திரப்படுகிறாயே......அலறித் துடிக்கிறாயே......அவன் நீதானே விரட்டி அடித்தாய். அவனுக்குச் சோறில்லை என்று சொன்னது நீதானே!......அவன் நல்ல வீட்டில் வாழக்கூடாது என்று கூறியது நீதானே!......அவன் பொன்னையும் முத்தையும் தீண்டக்கூடாது எனத் தடைபோட்டது நீதானே!......

இப்போது அழு! நன்றுக அழு! கண் இமைகள் கனத்துப்போகும் வரையில் அழு! விழிகளில் ரத்தம் வழிய ஆரம்பிக்கும் வரையில் அழு!

இதைத்தான் கணபதியின் உரத்தகுரலில், உத்வேகத்தோடு ஒலிக்கின்றது. இல்லையென்று கூற முடியுமா?

ஆங்கிலேயராட்சியிலே மலேயா சென்ற கணபதி, இங்கு “ஆடுவோமே பள்ளு பாடுவோமே” என்ற பாட்டு பழசானபிறகு, அதே ஆங்கிலேய சர்க்காரால் சவமாக சாய்க்கப்பட்டார். பிறந்த நாட்டிலே ‘சுதந்திர தேவி’யின் சங்கநாதம்! அந்த நாதம், கணபதி பிழைக்கப்போன நாட்டிலே கேட்கவில்லை. கேட்கும் அளவுக்கு ஊதப்படவில்லை. ஏன்? சங்கு ஓட்டையா? அல்லது ஊதுபவர் குரலிலே உரமில்லையா?

கணபதி எந்த வெள்ளை முதலாளியையும் சுட்டுக் கொன்றதாக வழக்கு கிடையாது. கையிலே துப்பாக்கி வைத்திருந்த ஒரே குற்றத்திற்காக இந்தக் கோர மரணம். தீர்ப்பு கேட்டு திராவிடம் திகைத்தது. ஆளவந்தார்க்கு நினைக்க நேரமில்லை. சம்பளத்தை ஆயிரமாக்கிக்கொள்வது பற்றிய பிரச்னையில் அக்கரை பிறந்ததால்! அவர்கள் மேல் குற்றமில்லை அமைச்சர்கள்.

கொலுவே இன்னும் பூர்த்தியாக அடுக்கப்படவில்லை. அங்கே தமிழனின் இருதயம் பிளக்கப்படுகிறது; இங்கே பாதாளலிங்கத்தின் குகை ஆச்சாரியாரால் திறக்கப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் காமராஜருக்கோ கனல் கக்கும் விழிகளைக் காட்டிக் கொண்டு திராவிடர் கழகத்தை திட்டித் தீர்க்கவே நாளும் நாழிகையும் போதுவதில்லை. இந்த நெருக்கடியில்(!) அந்த வீரர், கணபதியை மறந்தேபோனார். “தூக்குபோட்டுவிட்டீர்களா! அது மிகவும் தப்பான காரியம்” என இப்போது கர்ஜிக்கிறார்.

“அடிப்பியோ? உங்க அப்பன் மவனே! சிங்கண்டா” என்று அடிவாங்கியபிறகு அழுகிற நகைச்சுவைப் பகுதியாக இருக்கிறது, காமராஜரின் வீர முழக்கம். அவர் முழக்கம் முடிவதற்குள்ளேயே வீரசேனன் சுட்டு வீழ்த்தப்பட்டார் ஒரு அற்ப மிருகத்தைப்போல! சாம்பசிவம் சாவின் முனையிலே நிறுத்தப்பட்டுவிட்டார். செவிடன் காதிலே சங்கு ஊதினால் கேட்காது என்பார்கள். ஊதுபவர்களுக்கும் உதடு இல்லாவிட்டால் எவ்வளவு வேதனையான வேடிக்கையாக இருக்குமோ அப்படித்தானிருக்கிறது, மலேயா சர்க்காரின் வெறிப்போக்கும், இந்திய சர்க்காரின் வேண்டுகோள் படலமும்!

இந்நேரம் மலேயாவிலே இருக்கவேண்டிய காமராஜர், இங்கு மந்திரி நாற்காலியைத் துடைத்துக் கொண்டிருக்கிறார். நியாயமா காமராஜரே! தமிழருடைய பிணங்கள் தூக்குமேடையில் அடுக்கப்படுவதை ஜவகரும், பட்டேலுமா கண்டிக்கப் போகிறார்கள்? கண்டித்தாலும் அதில் காரசாரமிருக்குமா? அவர்கட்கு அக்கரை இருந்திருந்தால், கணபதியின் கழுத்தை இறுக்கிய கயிறு, சாம்பசிவத்தின் முன்னே தொங்கிக்கொண்டிருக்குமா? அவர்கள் கண்களிலே நெருப்புக் கிளம்பியிருந்தால், வீரசேனனை நோக்கி குண்டுகள் கிளம்பி

யிருக்குமா? இரண்டு கட்டிளங்காளைகளை மலேயா சர்க்காரின் அடக்குமுறைக்கு காணிக்கையாகத் தந்து விட்டு, அறிக்கைகள் பறக்கவிடுவது உயிரோடிருக்கும் வரையில் உதாசீனம் செய்யப்பட்டவனுக்கு, செத்தபிறகு உத்தரகிரியை வெகு சிறப்பாக நடத்துவதுபோலத்தானே!

கணபதியோ வீரசேனனோ, இனி நம் கண்ணீரால் பிழைக்கமுடியாதவர்கள். அதற்காக கல்கியார் பாணியில் ‘அவர்தம் ஆத்மா சாந்தி அடைக!’ என மங்களம் பாடிட மனம் வரவில்லை. கணபதி நமக்கு ஒரு பாடம் என்பதை மறந்துவிடக்கூடாது, காமராஜர் உட்பட! மலேயாவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி தமிழர் வாழ்வில் ஒரு சோகத் தொடர்கதை. இந்தக் கதை, ‘பிழைக்கப்போகும் அத்தியாய’த்தைத் தாண்டி, ‘தமிழன் அநியாயமாய்க் கொல்லப்படும் அத்தியாய’த்திற்கு வந்து நிற்கிறது.

அடுத்த அத்தியாயம் என்னவோ? எத்துணை பயங்கரமானதோ?

திராவிடம் தனித்திருந்தால் - தனியரசு நாடாக இருந்திருந்தால், கணபதி மலேயாவுக்கு கூலியாக சென்றிருப்பாரா? திராவிடத்தின் பிரதிநிதியாகவன்றோ அங்கு சுற்றுப்பயணம் நடத்தியிருப்பார். அந்தத் தொழிலாளர் தோழன் தூக்கிலே தொங்கும் காட்சியை திராவிடர் காணும் அவலநிலை ஏற்பட்டிருக்காதே. ஏன்... இப்போதுதான் என்ன...திராவிடம் தன்னாட்சி பெற்று விட்டால், ஒரே உத்தரவு!......மலேயாவுக்கு பிழைக்கச் சென்று, மரணவஸ்தைக்காளாகும் திராவிடத்தின் திருக்குழந்தைகள் திருப்பியழைக்கப்படுவார்கள்.

திருப்பதி வெங்கடேசனும், தில்லை நடராசனும் கூட்டு முதல் போட்டு, அங்கிருந்துவரும் அகதிகளுக்கு ஆலை அமைத்துக் கொடுப்பார். மதுரை மீனாட்சியம்மை பெண்தெய்வ

மாநாடு கூட்டி ‘நமக்கு நகைகள் தேவையில்லை’ என்ற தீர்மானத்தை நிறைவேற்றி, முத்து மரகத மாலைகளை, மாணிக்க மூக்குத்திகளை கழற்றிக்கொடுத்து, ஏழைத் தமிழர்கள் இருக்க எழில்மிகு இடங்கள் அமைத்துத் தருவாள். இதுதான் பிரிந்த திராவிடத்திலே நடக்கும் நலமிகு செயல். திராவிடம் தனித்திருந்தால், தன்மான உணர்ச்சி பூத்துக் குலுங்கும். ரத்தபாசம் திராவிடனின் நெஞ்சைவிட்டு நீங்காதிருக்கும். மன்னர் மரபில் வந்தவர்கள், மலேயாவுக்கும் இலங்கைக்கும் சென்று மண்டியிடும் அவசியமிருக்காது.

திராவிடர் தங்கள் திருநாட்டிலேயே வாழ்வர். வாழமுடியும். வாழத்தான் போகிறார்கள். கணபதியின் கொலை இந்த உறுதியை திராவிடர்க்கு அளிக்குமாக /