கயிற்றில் தொங்கிய கணபதி
பகுதி 1 · 1 / 2
பகவத்சிங்கை தூக்குமேடையிலே ஊஞ்சலாட்டி உவகைகொண்ட ஏகாதிபத்தியம்—திருப்பூர்க் குமரனை தடிகொண்டு தாக்கி தெருவெலாம் குருதியோடச்செய்து, அதை நக்கிக் குடித்து எக்காளமிட்ட ஏகாதிபத்தியம்—இதோ, இன்று மலேயா சர்க்கார் என்ற உருவிலே தன் சொர சொரப்பான ரத்த நாக்குகளால் கணபதியையும் ருசித்துப் பார்த்துவிட்டது. தூக்குமேடை எத்தனையோ மனிதர்களைத் தனக்கு உணவாக்கிக்கொண்டு உல்லாசம் பாடியபடிதான் இருக்கிறது. அதன் கோரப்பற்களுக்கிடையே சிக்கிச் சீரழிந்த மனித உருவங்கள் கணக்கிலடங்கா.
குற்றவாளிகளின் குரல்வளையை நெறிப்பது மட்டுமல்ல, நிரபராதிகளின் வாழ்வை அரை நொடியில் தீர்த்துக்கட்டி, தன் வயிற்றைப் புடைக்கவைத்துக் கொண்டிருக்கிறது தூக்குமேடை! தூக்குமேடையிலே உரைந்திருக்கும் ரத்தத்திலே, எத்தனை உத்தமர்களின் வரலாறு எழுதப்பட்டிருக்கிறது தெரியுமா? அங்கே அறுத்தெறியப்பட்ட நரம்புகள் ஒவ்வொன்றும்—ஓடித் தெறியப்பட்ட எலும்புகள் ஒவ்வொன்றும் பேச
ஆரம்பித்தால், எத்தனை நீதிபதிகளின் ‘நேர்மை’ அம்பலத்திற்கு வரும்! குற்றவாளிக் கூண்டிலே மரண தண்டனை பெற்ற நிரபராதி—அவன்மேல் அபாண்டங்களைச் சுமத்தி, அவனை அழித்த ஆனந்தத்தில் வக்கீலோடு கைகுலுக்கும் வறண்ட நெஞ்சத்தினன்—தூக்கிலே தொங்கவேண்டியவன் தோகைமயிலாளின் மடியிலே!... எதிர்க்கத் தெரியாத ஏழை சுருக்குக் கயிற்றின் அணைப்பிலே!...... இப்படியெல்லாம் பேசத்துவங்கும், அந்த நிரபராதிப் பிணங்கள்.
அவன் சீமான்.
அடுத்த வீட்டுக்காரனும் சீமான்தான்.
ஒருவன் லட்சாதிபதி.
மற்றவன் கோடீஸ்வரன்.
கோடீஸ்வரன் நினைக்கிறான், ‘லட்சாதிபதி கோடீஸ்வரனாய் வளர்ந்துவிட்டால் என்செய்வது? தன் பெருமை போய்விடுமே’ என்று! அல்லது லட்சாதிபதிக்கு கோடீஸ்வரனிடத்தில் பொறாமை. இந்த எண்ணம் வளருகிறது. முடிவு கொலையில் முடிகிறது. இருவரில் ஒருவன் தூக்குமேடைக்கு நடக்கிறான். கொலைச் செய்தி பத்திரிகையில் வந்ததும் “கொடும்பாதகா” என்று திட்டினவர்கள், கொலையாளி தூக்கில் தொங்கிவிட்டான் என்ற செய்தி கேட்டதும் சிறிது வருந்தத்தான் செய்கிறார்கள்.
ஏன்? முஸோலினி அழியமாட்டானா? அக்கிரமக்காரன்! என்றெல்லாம் ‘சாபம்’ தந்தவர்கள், அவன் கொல்லப்பட்டதும், ‘அடபாபமே!’ என்று சோகக்குரல் எழுப்பவில்லையா? குற்றவாளிகளுக்கேற்ற தண்டனைகள் நிறைவேறுகிற நேரத்திலேயே இந்த நிலை மக்களுக்கு என்றால், குற்றமற்றவன்—கொடுமையை
நினைத்தும் பாராதவன்—கொஞ்சு மொழியினன்—நல் நெஞ்சினன்; அநியாயமாகச் சாகப்போகிறான் என்று கேட்டால், அச்செய்தி காதிலே ஆயிரமாயிரம் மேகங்கள் சேர்ந்து முழக்கும் இடியொலியாகத்தானே விழும்?
‘கணபதி தூக்கிலிடப்படுவார்’ இச்செய்தி திராவிடத்தை—ஏன், உலகத்தையே எட்டிய நேரத்தில் திராவிடம் சோர்ந்து வீழ்ந்தது. அதே வேளையில் ஆறுதல் சிறிது தலைநீட்டியது, ‘சுதந்திர பூமியில்—சுதந்திர வீரர்களாய்—சுதந்திரத் தலைவர்களைப் பெற்றிருக்கிற நமக்கு ஏன் அச்சம்? நமக்கு ஏன் வீண் சஞ்சலம்? நமது சர்க்கார், நமது நாட்டு கணபதியை அநாதையாக மலேயாவில் மாளவிடாது என மனத்தைத் திடப்படுத்திக்கொண்டோம். அதுமட்டுமல்ல: காமன் வெல்த்தோடு ஏற்படும் உறவு, கணபதியைக் காப்பாற்றும் என நம்பி கண்ணீரைத் துடைத்துக்கொண்டோம்.
துடைத்த கையை எடுக்கவில்லை. தூக்குமேடை கணபதியைத் தின்று ஏப்பமிட்ட சப்தம் நமக்கு கேட்டுவிட்டது.
“அய்யோ கணபதி! அருமைத் தமிழகத்தின் அன்புச்செல்வா! எப்படியடா உன் உயிர் நீங்கிற்று! உன்னைப் பெற்ற வயிறு பற்றி எரிகிறதடா!... ஆபத்து உன்னை அணுகிய நேரத்திலும், நம் அரசாங்கம் காப்பாற்றும் என நம்பியிருந்தேனடா!... ஜவகரும், பட்டேலும், தமிழகத்தின் ஆளவந்தாரும் உன்னைக் காலில் மிதிபட்டு நசுங்கும் ஒரு எறும்பாக எண்ணி விடுவரென்று தெரியாதேடா!...”
—தமிழ்த்தாய் கதறுகிறாள் இங்கே!... அவளைப் பார்த்து தூக்குமேடை சிரிக்கிறது.
“பார்த்தாயா, தமிழ்த் தாயே!...பாராள பாரத புத்ரர் வந்தால், யாராலும் எம்மைத் தொட முடியாதென்றாயே......வெள்ளைக்காரன் வெளியேறினால் நல்ல காலம் பிறக்குமென்றாயே...இதோபார்!...உன் மகனின் சதைகளை, நான் பிய்த்துச் சாப்பிடுகிறேன். வெள்ளைக்காரன் தந்த தீனி இது! வெகு இனிப்பு! இந்நேரத்தில் வெள்ளையரின் விரோதி நேரு—வெள்ளையர் நாட்டிலே விருந்து சாப்பிடுகிறார்...நானுந்தான் இங்கு விருந்து சாப்பிடுகிறேன்”—சிரிக்கிறது தூக்குமேடை.
கைகொட்டிச் சிரிக்கிறது; கலகலவெனச் சிரிக்கிறது. பக்கத்திலே பிணம் சிரிக்கிறது.
உலகில் எத்தனையோபேர் தினம் தினம் சாகிறார்கள். எல்லாவற்றுக்குமா எல்லோரும் கவலைப்படுகிறோம்? அதுபோலவே, எத்தனையோபேர் தூக்கிலிடப்படுகிறார்கள்....ஆனால் கணபதியின் தண்டனை தமிழ் நாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. கணபதியே ஒரு பாடமாகிவிடுகிறார், தமிழ் நாட்டுக்கு! அவர் வாழ்வே தமிழர்க்கு ஒரு அரசியல் வகுப்பு. அவர் இறுதிக் கடிதம் தமிழர் பட்டாளத்துக்கு ஒரு போர்ப் பிரசங்கம்.
“மலர் மலரும்......மணம் வீசும்......கருகி மடியும்.”
பூ மலர்வதும் கருகி மடிவதும், “காயமே இது பொய்யடா” எனக் கழறுபவர் பயன்படுத்திக்கொள்ளும் உதாரணங்கள். ஆனால் மலர்ந்த பூ, மணம் வீசுகிறதே, அதைத்தான் அறிவியக்கம் சுட்டிக்காட்ட ஆசைப்படுகிறது. “மனிதன் பிறக்கிறான், சாகிறான். வந்த வழியைப் பார்த்துக்கொண்டு போவதே மனிதனின் லட்சணம்” என, வாழ்வை வெறுத்தவர் பேசுவர். மலர் மலர்வதும், கருகி உதிர்வதும்தான் அவர்கள் கண்களில் படுமே தவிர, மலர்தரும் இன்பவாசம் அவர்கள் உணர்
வைத் தொடுவதில்லை. தொட்டாலும் அதை உரைக்க மறுக்கின்றனர். மடியப்போகிறோமே என்று மலர் மணம் தராமல் இருக்கிறதா?......அப்படியிருக்கும் மலரைத்தான் மக்கள் விரும்புவரா? வயது நீண்ட வாடா மல்லிகையை வரவேற்பவர் யார்? சாகப்போகிறோமே என்பதற்காக, சமுதாயத்துக்குச் செய்ய வேண்டிய பணியைச் செய்யாமலிருப்பதா? மலர் மணம் தர மறுப்பதா?......மணம் தரும் மலராகத்தானிருந்தார் கணபதி. ‘முடிசார்ந்த மன்னரெலாம் வெந்து பிடி சாம்பலாயினர்’ என்று பாடி, முனிவர் ஆஸ்ரமம் அமைத்துக்கொள்ளவில்லை......தூக்குமேடையிலே இந்த முகாரியைப் பாடவுமில்லை, அந்த வீரர்!
“நான் மணம் தரும் மலர்...கசக்கி எறியப்படுகிறேன்” என்ற இதய ஒலியை அவர் கடிதமாக்கினார். அவர் கடிதம் ‘அந்த லோக’ ஆசைக்காரருக்கு ஒரு சவுக்கு!...
“மிகவும் உயர்ந்த நிலையில் இருந்து தாழ்ந்து போன ஒரு குடும்பத்தை உருவாக்காது உழைக்கிறேனும், என்று பலர் என்னைப் பார்த்துப் பேசியதுண்டு. அதுபற்றி நான் கவலைப்பட வில்லை.”
