தொகுதி 52 · கடிதம் 3944
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே!
2014-12-02
உடன்பிறப்பே,
தமிழகத்தில் மின் உற்பத்தி குறித்தும், புதிதாகத் துவங்கப்படும் மின் உற்பத்தித் திட்டங்கள் எப்போது உற்பத்தியைத் தொடங்கும் என்றும் தமிழக அரசின் மின் துறை அமைச்சர் ஒரு நீண்ட அறிக்கையினைக் கடந்த 29-11-2014 அன்று வெளியிட்டிருக்கிறார். ஏடுகள் அந்த அறிக்கைக்குத் தந்துள்ள தலைப்பே, “4 ஆண்டில் உற்பத்தி தொடங்கும் 10,121 கோடி ரூபாய் எண்ணூர் மின் திட்டம் - விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்பதுதான்!
தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், மின் வாரியத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கோடியாகத் தெரிவித்த நேரத்தில், மின் துறை அமைச்சர் அதற்கு நேரடியாகப் பதில் கூறாமல், கடந்த 19-11-2014 அன்று ஒழுங்கு முறை ஆணையத்தைக் கொட்டுவது போல அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அப்போதே, தொழில் துறையினரும், சமூக ஆர்வலர்கள் சிலரும், “மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திற்கு அமைச்சர் உத்தரவு போடுகிறாரா?” என்றெல்லாம் கேட்டு, தங்களின் கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
மின் உற்பத்தி குறித்தும், மின் வெட்டு குறித்தும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களும், அந்தத் துறையின் அமைச்சரும் பேரவையிலே வந்து அளித்த உறுதிமொழிகள் தான் எத்தனை? எத்தனை? ஆனால் தற்போதைய நிலை என்ன? இதுபற்றி 29-11-2014 தேதிய நாளேடு ஒன்று, “ அதிகாரப்பூர்வமாக மின்வெட்டு அறிவிக்க மின் வாரியம் தயக்கம் - திடீர் மின்தடையால் வீடு, தொழில் நிறுவனங்கள் பாதிப்பு” என்ற தலைப்பில், “தமிழகத்தில் மின் தேவை, உற்பத்தியைக் காட்டிலும், அதிகம் உள்ளது. இதனால், நிலவும் மின் பற்றாக்குறையைச்
சமாளிக்க, தொழிற்சாலைகளுக்கு 40 சதவிகிதம் மின் தடை நடைமுறைப்படுத்தப்பட்டது. குடியிருப்புகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை, சுழற்சி முறையில், சென்னையில் இரண்டு மணி நேரம், மற்ற இடங்களில் நான்கு மணி நேரம் மின் தடை செய்யப்பட்டது” என்றெல்லாம் எழுதியுள்ளது.
“தமிழகத்தில், கடும் குளிரிலும் மின்தடை செய்யப்படுவது, பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி, வல்லூர் மூன்றாவது அலகில், வணிக மின் உற்பத்தி, கடந்த மாதம் துவங்கியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை, மின் உற்பத்தி துவங்காததால் தமிழகத்திற்கு 500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவில்லை. என்.எல்.சி., சிம்ஹாத்ரி போன்ற மத்திய மின் நிலையங்களில் இருந்து தமிழகத்திற்குக் குறைந்த அளவில் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண, மத்திய அரசுக்கு தமிழக அரசின் மூலம் கடிதம் எழுத, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள்” என்றவொரு செய்தியும் ஏடுகளில் வெளிவந்துள்ளது.
இதற்கிடையே “தனியாரிடம் செய்யும் மின் கொள்முதலில் ஊழல் நடந்துள்ளது; இதுகுறித்து விசாரித்து, மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை, முதல்வர் பன்னீர்செல்வம் நீக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேட்டியளித்துள்ளார். மேலும் அவர், நெய்வேலி மற்றும் கூடங்குளம் போன்ற பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்து, மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய, யூனிட்டுக்கு 3 ரூபாய் விலை கொடுக்கும் போது, தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யும் மின்சாரத்துக்கு, யூனிட்டுக்கு 15.14 ரூபாய் விலை கொடுக்கக் காரணம் என்ன? தமிழக மின் துறை செய்யும் கொள்முதலில், பெரும் ஊழல் நடந்துள்ளது என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.
இந்தத் தகவலுக்கு மற்றுமோர் ஆதாரமாக, நடப்பு நிதியாண்டில், மின்சாரம் வாங்குவதற்கான செலவாக ரூ.27 ஆயிரத்து 147 கோடியை மின் வாரியம் மதிப்பிட்டுள்ளது. இதில் மத்திய மின் நிலையங்கள், காற்றாலை மற்றும் சூரியசக்தி மின் நிலையங்கள், வெளி மாநில மின் விற்பனை நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து வாங்கும் விலையைவிட குறிப்பிட்ட நான்கு தனியார் மின் நிலையங்களுக்கு மட்டும் அதிகபட்ச
விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் வாரியத்துக்குக் கொள்முதல் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது.
மத்திய மின் நிலையங்களான நெய்வேலி, கல்பாக்கம், வல்லூர், தேசிய அனல் மின் கழகத்தின் ராமகுண்டம் மற்றும் கூடங்குளம் அணு மின் நிலையம் ஆகியவற்றில் இருந்து சராசரியாக ஒரு யூனிட் ரூ. 2.94 மற்றும் ரூ. 3.85 என்ற விலைக்கு வாங்கத் திட்டமிட்டுள்ளது. காற்றாலை, சூரிய சக்தி, உயிரி தொழில்நுட்பம் போன்ற தனியார் மின் நிலையங்களிலிருந்து ரூ. 4.26க்கும், தனியார் மின் விற்பனை நிறுவனங்கள் மற்றும் சுயதேவை மின் உற்பத்தி தனியார் நிறுவனங்களிடமிருந்து ரூ.4.16க்கும் மின்சாரம் வாங்கப்படுகிறது. இந்த நிலையில், தனியார் மின் நிறுவனங்களான சாமல்பட்டி, மதுரை பவர் கார்ப்பரேஷன், பிள்ளை பெருமாள்நல்லூர் மின் நிறுவனம் மற்றும் ஜி.எம்.ஆர். ஆகிய நான்கு நிலையங்களில் இருந்து ஒரு யூனிட்டுக்கு அதிகபட்சமாக ரூ.15.14 என்ற விலையில் மின்சாரம் வாங்கப்படுகிறது. 4 நிறுவனங்களிடம் இருந்து மொத்தம் ரூ.1,208 கோடிக்கு வெறும் 798 மில்லியன் யூனிட் மட்டும் வாங்கப்படுகிறது. எஸ்.டி.சி.எம்.எஸ்., லேன்கோ மற்றும் பயனிர் ஆகிய நிறுவனங்களிடமிருந்து யூனிட்டுக்கு ரூ.5.14க்கு மின்சாரம் வாங்கப்படுகிறது. இந்த நிறுவனங்களில் இருந்து 2,865 மில்லியன் யூனிட் மின்சாரத்தை ரூ.1473 கோடிக்கு வாங்க மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் மொத்தம் 65 ஆயிரத்து 870 மில்லியன் யூனிட் மின்சாரம், ரூ.27 ஆயிரத்து 147 கோடியே 5 இலட்சத்துக்கு வாங்குவதாகத் தமிழக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்துக்கு மின்வாரியம் விவரங்களை அளித்துள்ளது. தமிழக மின் வாரியத்தின் மொத்த வருவாயில் சுமார் 55 சதவிகிதத்தை மின்சாரம் வாங்குவதற்கே செலவிடுவதால்தான், இழப்பு அதிகரித்து வருகிறது.
தனியார் நிறுவனங்களிலிருந்து மின்சாரம் வாங்குவதற்கு, ஒழுங்கு முறை ஆணையத்தில் மின்வாரியம் முறைப்படி அனுமதி பெற்று நியாயமான விலை நிர்ணயித்து வாங்க வேண்டும். ஆனால் ரூ.5.50க்கு மேல் தனியாரிடம் மின்சாரம் வாங்கினால் நட்டம் அதிகரிக்கும் என்று ஒழுங்கு முறை ஆணையம் எச்சரித்த நிலையிலும், இன்னும் கூறவேண்டுமேயானால் இந்த நான்கு தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து
மின்சாரத்தைக் கொள்முதல் செய்யக் கூடாது என்று ஒழுங்கு முறை ஆணையம் 30-3-2012இல் வெளியிட்ட ஆணையிலே தெரிவித்த போதும், கடந்த இரண்டாண்டுகளாகக் குறிப்பிட்ட அந்த நான்கு நிறுவனங்களிடமிருந்து எந்த அத்தியாவசியமும் இல்லாத நிலையில், அதிகபட்சமாக ரூ. 15 என்ற அளவுக்குத் தொகை கொடுத்து மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது. கடந்த 2013 ஏப்ரல் முதல் 2014 மார்ச் வரை சுமார் 22 ஆயிரத்து 90 கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கப்பட்டதில், தனியாரிடமிருந்து மட்டும் 16,280 கோடி ரூபாய்க்கு மின்சாரம் வாங்கப்பட்டுள்ளது.
மற்றவர்களிடம் எல்லாம் மின்சாரத்தைக் குறைந்த விலையில் வாங்கும் மின் வாரியம், தனிப்பட்ட இந்த நான்கு பேரிடமிருந்து மட்டும் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்குவதின் காரணம் என்ன? இது ஏற்கனவேயே 10-8-2014 அன்று “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேடு, “தமிழகத்தில் காற்றாலை மூலம் மின்சாரம் அதிக அளவில் உற்பத்தியானாலும் அதனை வாங்காமல், வெளி மாநிலங்களிலிருந்து, தனியாரிடம் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை ஜெயலலிதா அரசு வாங்குகிறது” என்று எழுதியிருந்தது. 20-8-2014 அன்று தமிழ் நாளேடு ஒன்று, “தமிழக மின்வாரிய சாயம் வெளுத்தது - அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கியும் தொடரும் மின்தடை” என்ற தலைப்பில் இது பற்றி விளக்கியிருந்தது. எனவே, இதுபற்றித் திரும்பத் திரும்ப இந்த அரசின் மீது புகார் கூறப்பட்ட போதிலும், தமிழக அரசோ, முதலமைச்சரோ, அந்தத் துறை அமைச்சரோ அதைப்பற்றிப் பதிலே அளிக்கவில்லையே; பதிலே அளிக்காமல் இருப்பதில் இருந்தே, அதிலே ஏதோ தவறு நடப்பது ஊர்ஜிதமாகிறது அல்லவா?
மின்வாரியம் முறைப்படி ஆண்டு வருவாய், செலவுத் தேவைக் கணக்கை ஒழுங்கு முறை ஆணையத்தில் சமர்ப்பித்து, பொதுமக்கள் பார்வைக்கு வைக்கவில்லை என்றும் பல குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. இது தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கே தாக்கல் செய்யப்பட்டு, மின் வாரியம், ஒழுங்கு முறை ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, வழக்கு விசாரணை டிசம்பர் 16க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் காரணமாகவும், மின் கட்டண உயர்வுக்குப் பொதுமக்களிடையே எழுந்த எதிர்ப்பின் காரணமாகவும், விரைவில் வரவிருக்கும் திருவரங்கம் இடைத்தேர்தல் காரணமாகவும் மின் கட்டண உயர்வு நடைமுறைக்கு வராமல் உள்ளது. மின் வாரியத்திற்கு நடப்பு நிதி ஆண்டின் நிதித் தேவை 39 ஆயிரத்து 92 கோடி ரூபாயாக இருக்குமென்றும், ஆனால் மின் கட்டண வசூலின்படி வருவாய் 32 ஆயிரத்து 238 கோடி ரூபாய்தான் என்றும் எனவே வருவாய்ப் பற்றாக்குறையே 6,854 கோடி ரூபாயாக இருக்குமென்றும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
மின் துறை அமைச்சர் தற்போது 29ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்த அரசு மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு அடைவதற்காக பல நடவடிக்கைகளைச் சீரிய முறையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது” என்று தெரிவித்திருக்கிறார். என்னென்ன நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்துள்ளது என்பதை விளக்கும் போது, எண்ணூர் அனல் மின் திட்ட விரிவாக்கம் (660 மெகாவாட்) பற்றிக் குறிப்பிட்டு, அந்தத் திட்டம் 42 மாதங்களுக்குப் பிறகு 2018இல் மின் உற்பத்தியைத் தொடங்கும் என்று கூறியிருக்கிறார். இந்தத் திட்டம் கழக ஆட்சியில் தொடங்கப்பட்டு, அ.தி.மு.க. ஆட்சியில் அக்கறை காட்டாமல் பல ஆண்டுகாலம் இருந்து விட்டது என்பதை அமைச்சர் தனது அறிக்கையில் மறைத்து விட்டார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகச் சட்டப்பேரவையில் 29- 3-2012 அன்று 110வது விதியின் கீழ்படித்த அறிக்கையில், எண்ணூர் அனல் மின் விரிவாக்கத் திட்டம், 2015ஆம் ஆண்டு இறுதிக்குள் தனது உற்பத்தியைத் தொடங்கும் என்று அறிவித்தார். ஜெயலலிதா 2015ஆம் ஆண்டு இந்தத் திட்டம் உற்பத்தியைத் தொடங்குமென்றார்; தற்போது அந்தத் துறை அமைச்சர் 2018ஆம் ஆண்டில் மின் உற்பத்தியைத் துவக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கையிலே தெரிவிக்கிறார் என்றால், எந்த அளவுக்கு மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு அடைவதற்கான நடவடிக்கைகளை அ.தி.மு.க. அரசு எடுத்து வருகிறது என்பது தெளிவாகிறதல்லவா?
அதுமாத்திரமல்ல; மின் துறை அமைச்சர் தனது அறிக்கையில், உடன்குடி அனல் மின் திட்டக் கட்டுமானப் பணிகளுக்கான ஆணை விரைவில் வழங்கப்படும் என்றும், அந்தத் திட்டம் 2018-2019இல் மின் உற்பத்தியைத் துவக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். 2011-2012ஆம் ஆண்டு அ.தி.மு.க. அரசு
பேரவையில் 4-8-2011 அன்று படித்த நிதிநிலை அறிக்கையில், உடன்குடி விரிவுத் திட்டம் போன்ற மின் உற்பத்தித் திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும் என்று அறிவித்தது. அதன்பிறகு 29-3-2012 அன்று ஜெயலலிதா பேரவையில் 110வது விதியின் கீழ் படித்த அறிக்கையில், -800 மெகாவாட் திறன் கொண்ட உடன்குடி விரிவாக்க அனல் மின் திட்டம் துவங்கப்படுவதற்கான முதல் நடவடிக்கையாக, சாத்தியக்கூறு திட்ட அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது, இத்திட்டம் 2015-2016 நிதியாண்டில். செயல்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார். மீண்டும் 25-4-2013 அன்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110வது விதியின் கீழ் படித்த அறிக்கையில், “660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் விரிவாக்கத் திட்டம் அமைப்பதற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளிகள் கோரிப் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளன. 2 x 660 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் சிறப்புப் பொருளாதார மையத் திட்டம் மற்றும் 2 x 660 மெகாவாட் திறன் கொண்ட உடன்குடி அனல் மின் திட்டம் ஆகியவற்றுக்கான ஒப்பந்தப்புள்ளிகளும் கோரப்பட்டுள்ளன என்று படித்தார். தற்போது 29-11-2014 அன்று மின் துறை அமைச்சர் அளித்துள்ள அறிக்கையிலே. உடன்குடி அனல் மின் திட்டம் நிறுவ பொறியியல் கொள்முதல் கட்டுமானப் பணிக்கான ஆணை விரைவில் வழங்கப்படும்: 2018-2019ஆம் ஆண்டில் மின் உற்பத்தியைத் துவக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது'” என்று கூறுகிறார் என்றால் இதிலே உண்மைதான் என்ன?
மின்வாரியத்தில் பணியாற்றும் தலைமைப் பொறியாளர் (திட்டங்கள்); விரைவில் நடைபெறவுள்ள பேரவைக் கூட்டத்தையொட்டி மின் திட்டங்கள் பற்றிய குறிப்புகளைத் தயாரித்து அனுப்பியிருக்கிறார். அதில் இந்த உடன்குடி அனல் மின் திட்டம் பற்றிக் கூறும்போது, “தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளிகள் 19-7-2013 அன்றும், விலைப் புள்ளிகள் 18-10-2014 அன்றும் திறக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டு வருகின்றன என்றும், உடன்குடி விரிவாக்க மின் திட்டம் பற்றி கூறும்போது, இத்திட்டத்திற்கான முன் சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கான குறிப்பு விதிமுறைகளை இறுதி செய்ய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தை விரைவில் அணுக உள்ளது. இந்தத் திட்டத்திற்கான ஆணை 4-9-2014 அன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் கொள்கை
அளவிலான அனுமதி பெற கோரிக்கைக் கடிதம் 15-9-2014 அன்று அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டம் 2019-2020இல் இயக்கத்திற்கு வரும் என்றெல்லாம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுபோலவேதான், 25-4-2013 அன்று ஜெயலலிதா, பேரவையில் படித்த 110வது விதியின் கீழான அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில், 7,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,000 மெகாவாட் மின் திறன் கொண்ட சில்லஹல்லா நீரேற்று புனல் மின் திட்டம் உருவாக்கப்படும்” என்றார். உடனே கை தட்டி, அவரது கட்சியினர் எல்லாம் வரவேற்றனர். ஜெயலலிதா படித்து 18 மாதங்கள் ஓடிவிட்டன. மின்வாரியத் தலைமைப் பொறியாளர் கொடுத்துள்ள அறிக்கையில், “இத்திட்டத்திற்கான கொள்கை ரீதியிலான ஒப்புதல் தமிழக அரசின் அரசாணை எண். 87, நாள் 11-9-2014இல் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருக்கிறார் என்றால், எப்படிப்பட்ட ஏமாற்று நாடகங்கள் மின் உற்பத்தியைப் பொறுத்து இந்த ஆட்சியில் அரங்கேற்றப்படுகின்றன என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா? இந்த வேதனைகளை எல்லாம் எண்ணும்போது, நான் திரைக்கதை, உரையாடல் தீட்டி, அருமை நண்பர் எம்.ஜி.ஆர். நடித்த மலைக்கள்ளன்” திரைப்படத்தில்,
“எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே; இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே; சொந்த நாட்டிலே! நம் நாட்டிலே! சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார். சமயம் பார்த்து பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்! பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி பாமர மக்களை வலையினில் மாட்டி எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! என்ற பாடலைத்தான் நினைவுபடுத்திக் கொள்ளத் தோன்றுகிறது! அன்புள்ள,
மு.க.
02-12-2014
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 52 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 52 PDF ↗