தொகுதி 52 · கடிதம் 3918
“தாமதமாகும் நீதி; தடுக்கப்படும் நீதியா?”
2014-09-09
உடன்பிறப்பே,
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு.ஆர்.எம்.லோதா மற்றும் நீதிபதிகள் குரியன் ஜோசப், ரொகின்டன் பாலி நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு 5-9-2014 அன்று பொதுவான ஒரு தீர்ப்பினை முக்கியமானதொரு வழக்கில் அறிவித்து, அந்தச் செய்தி அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்துள்ளது. குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படும் காலத்தில் பாதியை, சம்பந்தப்பட்டவர் சிறையிலேயே விசாரணைக் கைதியாகக் கழித்திருந்தால், அவரை விடுதலை செய்ய வேண்டுமென்று நாடு முழுவதும் உள்ள மாவட்ட நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மரண தண்டனை விதிக்கப்படும் தன்மைக்குரிய குற்றச் சாட்டுகளுக்கு ஆளாகியிருக்கும் விசாரணைக் கைதிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. நீதியரசர் லோதா அவர்கள் விரைவில் உச்ச நீதிமன்றத்திலிருந்து ஓய்வு பெறவிருக்கும் நேரத்தில் இந்த முக்கியமானதொரு தீர்ப்பினை வெளியிட்டுள்ளார். மாவட்ட நீதிமன்றங்கள் அவற்றின் வரம்புக்கு உட்பட்ட சிறைகளுக்கு வாரம் ஒருமுறை சென்று ஆய்வு நடத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். குற்ற வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் ஒரு கைதி எவ்வளவு காலத்துக்குச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார் என்பதை ஆராய்ந்து, சம்பந்தப்பட்டவர் ஒரு வேளை தண்டனைக் காலத்தில் பாதிக்கும் மேற்பட்ட காலத்தை விசாரணைக் கைதியாகச் சிறையிலேயே கழித்திருந்தால், அவரை அடையாளம் கண்டு, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 436-ஏ பிரிவின்படி, உடனடியாக விடுதலை செய்யலாம் என்றும், இந்த ஆய்வை மேற்கொள்ள இரண்டு மாதங்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது என்றும், வரும் அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் இந்த ஆய்வை மாவட்ட
நீதிபதிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், தங்கள் வரம்புக்கு உட்பட்ட மாவட்டத்தில் செஷன்ஸ் நீதிபதிகள் உள்ளிட்ட நீதிபதிகள் சிறைகளுக்குச் சென்று ஆய்வு செய்து தண்டனைக் காலத்தில் பாதியைச் சிறையிலேயே கழித்த விசாரணைக் கைதிகள் யார் என்பதைக் கண்டறிய வேண்டுமென்றும், அந்த விசாரணைக் கைதிகளை விடுதலை செய்யும் உத்தரவை மாவட்ட நீதிபதிகள் பிறப்பிக்க வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்ற அமர்வு, அப்போது இந்தத் தீர்ப்பின்படி எத்தனை விசாரணைக் கைதிகளை மாவட்ட நீதிமன்றங்கள் விடுதலை செய்தன என்பது பற்றிய அறிக்கையை மாநிலங்களிலே உள்ள உயர் நீதிமன்றங்களின் தலைமைப் பதிவாளர்கள் கண்டறிந்து, உச்ச நீதிமன்றத் தலைமைப் பதிவாளருக்கு அறிக்கையாக அனுப்பிவைக்க வேண்டுமாம்.
இந்தியா முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் 3 இலட்சத்து 81 ஆயிரம் பேர் கைதிகளாக அடைக்கப்பட்டிருப்பதில், விசாரணைக் கைதிகளாக மட்டும் 2 இலட்சத்து 54 ஆயிரம் பேர் விசாரணைக் கைதிகள் ஆவார்கள். அதாவது 66.6 சதவிகிதம் பேர் சிறைச்சாலைகளில் விசாரணைக் கைதிகளாக உள்ளனர். தமிழகத்தில் 9 மத்திய சிறைச்சாலைகளும், 5 சிறப்பு கிளைச் சிறைச்சாலைகளும், 9 மாவட்ட சிறைச்சாலைகளும், 95 கிளைச் சிறைச் சாலைகளும், 3 பெண்கள் சிறப்புச் சிறைச்சாலைகளும் உள்ளன. இதில் சென்னை புழல் சிறையிலே மட்டும் விசாரணைக் கைதிகளாக 2,223 ஆண்களும், 120 பெண்களும் இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் எடுத்துக்கொண்டால் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசாரணைக் கைதிகள் சிறைச்சாலைகளிலே இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விசாரணைக் கைதிகளில் ஏராளமான பேர், அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாகக் கிடைக்கும் தண்டனைக் காலத்தைவிட, அதிகக் காலம் சிறையிலே இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட விசாரணைக் கைதிகள், தாங்கள் செய்த குற்றத்துக்காக அதிகபட்சமாக எவ்வளவு காலம் சிறைத் தண்டனைக் கிடைக்குமோ, அந்தத் தண்டனைக் காலத்திலே பாதி நாட்களை அவர்கள் சிறையிலே கழித்திருந்தால், அவர்களைச்
சொந்த ஜாமீனிலோ அல்லது உத்தரவாதத் தொகை இன்றியோ விடுதலை செய்யலாமென்று குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 436-ஏ பிரிவு தெரிவிக்கிறது. சிறைகளிலே இருக்கும் கைதிகளின் உரிமைகளுக்காகச் சட்டரீதியாகப் போராடிவரும் காஷ்மீர் சட்ட உதவிக் குழு என்ற அமைப்பின் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான திரு. பீம்சிங் அவர்கள் தான் 2005ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திலே பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவிலே, பாகிஸ்தானைச் சேர்ந்த பல கைதிகள் பத்தாண்டுகளுக்கும் மேலாக விசாரணை இல்லாமல் சிறைகளிலே அடைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார். அந்த மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணைக் கைதிகள் குறித்த வழக்குகளை ஓர் ஆண்டு காலத்திற்குள் விரைந்து விசாரித்து முடிக்கவேண்டுமென்று 2008ஆம் ஆண்டிலேயே உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கிலே தான தற்போது உச்ச நீதிமன்றம் மேலே நான் தெரிவித்த தீர்ப்பினை வழங்கியிருக்கிறது. இந்தத் தீர்ப்பின் பயனாக இந்தியா முழுவதும் பல்வேறு சிறைச்சாலைகளிலே இருக்கும் பலர் விடுதலை பெறுகின்ற நல்வாய்ப்பு கிடைக்கும். இந்தியாவில் சுமார் 3 கோடி கிரிமினல் வழக்குகள் நிலுவையிலே இருக்கின்றன. ஆனால், இவற்றை விசாரிக்க 16 ஆயிரம் நீதிபதிகள் மட்டுமே உள்ளனர் என்றால், இப்படியொரு தீர்ப்பு வராத நிலையில், இந்த வழக்குகள் எந்தக் காலத்தில் விசாரித்து முடிவது, இன்னும் எத்தனை ஆண்டுக் காலத்திற்கு விசாரணைக் கைதிகள் சிறையிலே இருப்பது என்பதற்கெல்லாம் விடை அளிப்பது போல உச்ச நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு அமைந்துள்ளது என்று சொன்னால் மிகையல்ல. எனவே இந்தத் தீர்ப்பினை வரவேற்பதோடு, இந்தத் தீர்ப்புக்குக் காரணமான நீதியரசர்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விசாரணைக் கைதிகள் விடுதலை செய்யப் பட்டுவிட்டால், சிறைச்சாலைகளில் பெருமளவுக்குக் கூட்டம் குறைந்து, சிறை நிர்வாகத்திலே பணியாற்றுபவர்களுக்கும் வேலைப்பளு எளிதாகி, அவர்கள் நிர்வாகத்தைத் திறம்பட நடத்திட உதவியாக அமையும்.
“A Classic Case of Judicial Delay” - என்ற தலைப்பில் 7-9- 2014 தேதிய “இந்து” நாளேட்டில் ஒரு வழக்கு பற்றிய விவரம்
வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாளேடுகள் சிலவற்றிலும் இந்தச் செய்தி வந்துள்ளது. அதாவது, கோவையில் உள்ள சார்பு நீதிமன்றத்தில், கலைவாணி, பரிமளம் ஆகியோருக்கும் - பாலகிருஷ்ணன், பிரதீப்குமார் ஆகியோருக்கும் இடையே சிவில் வழக்கு ஒன்று நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சார்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, கோவை மாவட்ட நீதிமன்றத்தில் “அப்பீல்” செய்யப்பட்டது. அந்த “அப்பீல்” வழக்கை விசாரிப்பதற்கான ஆவணங்கள் சார்பு நீதிமன்றத்திலிருந்து மாவட்ட நீதிமன்றத்துக்கு வரவில்லை. இந்த வழக்கில் “ஆவணங்களுக்காக காத்திருக்கிறோம்” (“Await Records”) என்ற காரணம் கூறப்பட்டு, 89 முறை இந்த வழக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதில் ஓரிரு முறை மட்டும் “நீதிபதி இடமாற்றம்” என்ற காரணம் கூறப்பட்டது. இந்தத் தள்ளிவைப்புகளுக்கான ஒரே காரணம், மாவட்ட நீதிமன்றப் புத்தகத்திலே பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், 5 ஆண்டுகள் 4 மாத காலம் வழக்கு விசாரணை காலதாமதமாகியுள்ளது. இந்த நிலையில்தான், இந்த வழக்கை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட வேண்டுமென்ற கோரிக்கை கலைவாணி, பரிமளம் ஆகியோரால் உயர் நீதிமன்றத்திலே வைக்கப்பட்டு, அந்த வழக்கு நீதிபதி விமலா முன்னிலையிலே விசாரணைக்காக வந்துள்ளது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி விமலா அவர்கள் அளித்த தீர்ப்பில், “வழக்கு தொடரப்பட்ட சார்பு நீதிமன்றமும், அப்பீலை விசாரித்த மாவட்ட நீதிமன்றமும் ஒரே வளாகத்தில்தான் உள்ளன. இருந்தாலுங்கூட, ஆவணங்களுக்காகக் காத்திருப்பதாக வழக்கு 89 முறை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கு விசாரணையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிவில் வழக்கை விசாரித்த கோவை சார்பு நீதிமன்றம், அப்பீல் வழக்கை விசாரிக்கும் மாவட்ட நீதிமன்றத்துக்கு உடனடியாக வழக்கு ஆவணங்களை அனுப்ப வேண்டும். மாவட்ட நீதிமன்றம் அந்த வழக்கை ஒரு மாதத்துக்குள் முடிக்க வேண்டும்” என்றெல்லாம் கூறியிருப்பதோடு மேலும் சில சீர்திருத்தங்களை நீதித் துறையிலே செய்ய வேண்டுமென்றும் தனது தீர்ப்பிலே தெரிவித்திருக்கிறார்.
வழக்குகள் நீதிமன்றத்தாலேயே எந்த அளவுக்குக் கால தாமதம் செய்யப்படுகின்றன என்பதற்கான நல்ல உதாரணமாக இந்த வழக்கு நடந்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு
பற்றி “இந்து” ஆங்கில நாளேடு எழுதும்போது, “She asked whether
the court was justified in not rendering timely justice and waiting for records for years together in an era of information and communication technology” என்று தெரிவித்திருப்பது நீதிமன்றங்களில் சில வழக்குகள் எந்த அளவுக்கு காலதாமதத்திற்கு ஆளாகின்றன என்பதற்கான நல்ல விளக்கமாகும்.
உச்ச நீதிமன்றம் சில வாரங்களுக்கு முன் அளித்த வேறொரு தீர்ப்பில், குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களை அமைச்சர்களாக நியமிக்க வேண்டாமென்று பிரதமர் மற்றும் அனைத்து மாநில முதல் அமைச்சர்களுக்கும் தெரிவித்தது. அப்போது முதல் அமைச்சர்களே குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களாக இருந்தால் என்ற கேள்வியும் எழத்தான் செய்தது. மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான விசாரணையைத் துரிதப்படுத்தவும், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நாளில் இருந்து ஒரு ஆண்டுக்குள் வழக்கை முடிவுக்குக் கொண்டுவரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து மத்திய சட்ட அமைச்சகம் கடந்த வாரம் டெல்லியிலே ஆலோசனை நடத்தியது. அதன் பின் அனைத்து மாநில முதல் அமைச்சர்கள் மற்றும் அனைத்து மாநிலத் தலைமை நீதிபதிகளுக்கு மத்திய சட்ட அமைச்சர், திரு. ரவிசங்கர் பிரசாத் கடிதம் ஒன்றை எழுதினார். அதிலே, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான வழக்குகளைத் துரிதமாக விசாரித்து முடிவுக்குக் கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறும், கீழ்க் கோர்ட்டுகளில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைகளைக் கண்காணிக்குமாறும் தெரிவித்திருக்கிறார்.
இவ்வாறு கடிதம் எழுதிய மத்திய சட்ட அமைச்சர் அவர்கள்தான், கடந்த சில நாட்களுக்கு முன்பு சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவின் மீதான வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்றுத் தீர்ப்பு கூறவிருக்கும் இந்த நேரத்தில் சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சரைச் சந்தித்து உரையாடினார் என்ற செய்தி ஏடுகளில் வெளிவந்தது. இவர் தான் ஏற்கனவே முதலமைச்சர் ஜெயலலிதா மீதான வழக்கில், ஜெயலலிதாவுக்காக வாதாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும்,
முதல் அமைச்சரும் மத்திய சட்ட அமைச்சரும் சந்தித்து உரையாடியதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர் என்னிடம் கேட்டபோது, இதற்காக மத்திய அரசைக் குறை கூறுவது முறையுமல்ல, நியாயமுமல்ல; மோடி தலைமையிலே பணியாற்றுகின்ற சட்ட அமைச்சர் எந்தவிதமான இழுக்கும் மத்திய அரசுக்கு ஏற்படாமல் நடந்து கொள்வார் என்று நான் நம்புகிறேன் என்றுதான் நான் பதிலளித்தேன்.
நீதிமன்றங்களில் எந்த அளவுக்குக் காலதாமதம் சாதாரண காரணங்களுக்காக ஆண்டுக் கணக்கில் நடைபெறுகின்றன என்பதற்கும், விசாரணை என்ற பெயரால் ஆண்டுக்கணக்கிலே சிறையிலே வாடிக் கொண்டிருப்பதற்கு ஒரு முடிவு காணவும், நீதியரசர்கள் சிலர் பெரிதும் முயன்று வருகிற இதே காலகட்டத்தில்தான், உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கிலே நான்கு மாத காலத்திலே வழக்கினை விசாரித்து முடிக்க வேண்டுமென்று தீர்ப்பளித்ததற்குப் பிறகும், அந்த வழக்கினை அவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரித்து முடிக்காமல் ஏதோ ஒரு காரணத்தைக் கூறி, மேலும் மூன்று மாதங்கள் உச்ச நீதிமன்றத்திடமே கோரிப் பெறுவதும், அந்த மூன்று மாதங்களிலும் விசாரணையை முடிக்காமல், மேலும் இரண்டு மாதங்கள் அவகாசம் கேட்பதும் நடைபெறுகின்றன என்றால், அப்படியெல்லாம் வளைந்து கொடுத்து, வாய்தா கொடுக்கின்ற நிலைமை, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சாதாரணமானவர்களாக இருந்தாலும், அவர்களுக்குக் கிடைக்குமா என்பதுதான் கேள்விக்குறி! உச்ச நீதிமன்றம் தற்போது அளித்திருக்கும் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகம் முழுவதிலுமிருந்து சுமார் 2,500 பேர் ஒரே நாளில் விடுதலை பெற்றிருக்கிறார்கள். ஏற்றத்தாழ்வுக்கு இடம் அளிக்காமல், அனைவருக்கும் பொதுவாக, விசாரணைக் கைதிகளுக்கெல்லாம் விடிவு காலம் ஏற்படுகின்ற வகையில் “தாமதமாகும் நீதி; தடுக்கப்படும் நீதி” என்ற பழமொழியை நன்குணர்ந்து, அமைந்த தீர்ப்பு இது என்பதைச் சுட்டிக்காட்டி, அந்தத் தீர்ப்பினைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன்.
அன்புள்ள, மு.க. 9-9-2014
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 52 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 52 PDF ↗