தொகுதி 52 · கடிதம் 3917
கழகப் பொறுப்புக்கு போட்டியிட்டு வெற்றி பெறுகிறவர்களும், வெற்றிவாய்ப்பை இழப்பவர்களும் என்றைக்கும் என் உடன்பிறப்புகள்தான்!
2014-09-05
உடன்பிறப்பே,
நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் 14வது அமைப்புத் தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது. 17-9- 1949இல் கழகம் தொடங்கப்பட்ட போது நிறுவப்பட்ட சட்டதிட்டக் குழு தயாரித்த நகல் சட்ட திட்டம் - முறைப்படி கழகப் பொதுக் குழுவில் ஏற்கப்பட்டு, 1951 ஆம் ஆண்டு டிசம்பரில் சென்னையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதல் மாநில மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதற்குப் பிறகு பல முறை சட்டதிட்டத் திருத்தக் குழுக்கள் அவ்வப்போது ஏற்பட்ட தேவைகளுக்கேற்ப கொண்டு வந்த திருத்தங்கள் முறைப்படி பொதுக் குழுவிலே வைத்து விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. கிளைக்கழகம், பேரூர்க் கழகம், ஒன்றியக் கழகம், நகரக் கழகம், மாவட்டக் கழகம், தலைமைக் கழகம் என்ற வரிசைப்படி இதுவரை கழகத்தில் 13 அமைப்புத் தேர்தல்கள் நடைபெற்று, தற்போது 14வது அமைப்புத் தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. தலைமைக் கழகத் தேர்தல் இதுவரை எவ்வெப்போது நடைபெற்றன என்று பார்த்தால், 1949இல் முதல் தேர்தலும், 4-4-1955இல் 2வது தேர்தலும், 25-9-1960இல் 3வது தேர்தலும், 27-7-1969இல் 4வது தேர்தலும், 7-7-1974 இல் 5வது தேர்தலும், 18-6-1978இல் 6வது தேர்தலும், 26-5-1983இல் 7வது தோர்தலும், 2-2-1988இல் 8வது தேர்தலும், 2-6-1992இல் 9வது தேர்தலும், 27-7-1997இல் 10வது தேர்தலும், 8-4-2000இல் 11வது தேர்தலும், 2-6-2003இல் 12வது தேர்தலும், 27-12-2008இல் 13வது தேர்தலும் நடைபெற்றுள்ளன.
கழகத்தின் இந்த 14வது அமைப்புத் தேர்தலில் கழக உறுப்பினர்களின் எண்ணிக்கை 84 இலட்சத்து 36 ஆயிரத்து 744. 1997இல் பத்தாவது கழக அமைப்புத் தேர்தலின் போது 62 இலட்சம் உறுப்பினர்களாக இருந்து, பதினோறாவது தேர்தலில் 2000ஆம் ஆண்டு 73 இலட்சமாகப் பெருகி, இந்த பதினான்காவது தேர்தலில் சுமார் 85 இலட்சம் உறுப்பினர்களாக ஆகியுள்ளது. ஏற்கனவே கிளைக் கழகங்களின் மேல் அமைப்பாக ஒன்றியக் கழகங்கள் செயல்பட்டு வந்தன. தற்போது இந்த அமைப்புகளுக் கிடையில் புதிய அமைப்பாக 12,514 ஊராட்சிக் கழகங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.
13வது அமைப்புத் தேர்தலுக்கும், தற்போது நடைபெறும் 1 4வது அமைப்புத் தேர்தலுக்கும் இடையே சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக 13வது தேர்தலில் மதுரை, கோவை மாநகர் உட்பட கழக மாவட்டங்களாக 36 இருந்தன. அந்த மாவட்டங்கள் தற்போது நிர்வாக வசதிக்காக 65 கழக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அது போல ஏற்கனவே 392 ஒன்றியக் கழகங்கள் இருந்ததற்கு மாறாக தற்போது 578 ஒன்றியக் கழகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் நகரக் கழகங்கள் 129 - பகுதிக் கழகங்கள் 97 - பேரூராட்சிகள் 538 - இவை தவிர வார்டுக் கிளை என்று எடுத்துக் கொண்டால், கழகத்தில் 1 லட்சத்து 12 ஆயிரத்து 247 வார்டுகள் உள்ளன. அதில் மாநகராட்சி வார்டுகள் 820 - பேரூராட்சி வார்டுகள் 8,397 - நகர வார்டுகள் 3,735 - 12,514 ஊராட்சிகளில் உள்ள 99,295 ஊராட்சி வார்டுகள் உள்ளன. இவற்றில் ஊராட்சி வார்டுகள், நகர வார்டுகள், பேரூராட்சி வார்டுகள் ஆகியவற்றுக்கான தேர்தல்கள் முடிந்துவிட்டன. மாநகராட்சி வார்டுகளில் தேர்தல்கள் நடந்து கொண்டு வருகின்றன. அது தவிர தற்போது ஒன்றிய, நகரங்களுக்கான தேர்தல்களும் நடைபெற்று வருகின்றன.
புதிதாக அமையவிருக்கும் மாவட்டக் கழக எல்லைகளுக்குள் அடங்கக்கூடிய ஒன்றிய மற்றும் நகரக் கழகங்கள் எவையெவை என்பது அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே 65 மாவட்டங்களிலும் எந்தெந்த சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம் பெறும் என்ற விவரம் கடந்த 16-6-2014 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது போலவே எந்தெந்த மாவட்டங்களில், எந்தெந்த ஒன்றியங்கள்,
நகரங்கள் இடம் பெறும் என்ற விவரமும் ஏடுகள் வாயிலாக அறிவிக்கப்பட்டுவிட்டன.
கழகத்தில் கடந்த 13வது பொதுத் தேர்தல் வரை, கிளைக் கழக அமைப்பில் உள்ளவர்கள் அளிக்கும் பெயர்களை வைத்தே உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கப்பட்டுவந்தது. ஆனால் இந்த 14வது கழகத் தேர்தலின் போது, உறுப் பினர் படிவத்தில் உறுப்பினர் சேர்க்கும்போதே, பெயர் மற்றும் விவரங்களை அடுத்து, கட்டாயமாக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப் பட்ட வாக்காளர் அடையாள அட்டை எண் குறிக்கப்படுவதோடு, அந்த வாக்காளர் அட்டையின் “ஜெராக்ஸ்” நகல் ஒன்றையும் இணைத்தாக வேண்டும். அவ்வாறு வாக்காளர் அடையாள அட்டை நகல் இணைத்தவர்களுக்கு மட்டுமே உறுப்பினர் உரிமைச் சீட்டு இந்த முறை வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை இணைக்கும்போது கூட, பழைய வாக்காளர் அடையாள அட்டையின் நகலை இணைத்திருந்தால், அவர்களுக்கு உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கப்படவில்லை. அரசு தேர்தல் ஆணையத்தால் புதிதாகத் தரப்படும் அடையாள அட்டை நகலைக் கொடுத்தால் மட்டுமே, அவர்களுக்கு உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
14வது தேர்தலுக்காகத் தரப்பட்ட உறுப்பினர் உரிமைச் சீட்டு தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக நவீன முறையில் “ஸ்மார்ட் கார்டு” முறையில், உறுப்பினர் உரிமைச் சீட்டில் பெயர், வயது, தந்தை/கணவர் பெயர், கிளை, ஊராட்சி, ஒன்றியம்/நகரம்/ பகுதி, மாவட்டம் மற்றும் அவரது உறுப்பினர் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகிய விவரங்கள் குறிக்கப்பட்டு, தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோரின் கையொப்பங் களோடு, அனைத்து உறுப்பினர்களுக்கும் நேரடியாகத் தலைமைக் கழகப் பிரதிநிதிகளால் வழங்கப்பட்டது. இந்தத் தேர்தலுக்கான இந்தப் புதிய உரிமைச் சீட்டுகள் 29-10-2012 அன்று எனக்கும், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கும் வழங்கப்பட்டு, மாவட்டங்களில் 1-11-2012 முதல் 5-4-2013 வரை முறையாக வழங்கப்பட்டன. ஊராட்சிக் கழகத்திற்கு உட்பட்ட வார்டுக் கிளை, வட்டக் கிளைக்கழகத் தேர்தல்கள் 15-4-2013 அன்று தொடங்கி 31-12-2013 வரை நடைபெற்று ஊராட்சிக் கழகங்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டன.
ஊராட்சிக் கழகத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நான்கு கட்டங்களாகவும், பேரூர்க் கழகத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நான்கு கட்டங்களாகவும் செய்யப்பட்டுள்ளன. அந்த வரிசையில் தற்போது ஒன்றிய, நகரக் கழகத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, அதற்கான
அறிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
பொதுத் தேர்தலில் தலைமைத் தேர்தல் ஆணையம் வழங்கும் வாக்காளர் பட்டியல் போலவே, வார்டு உட்கிளைக் கழகத் தேர்தலின் போது, உறுப்பினர் உரிமைச் சீட்டில் உள்ள அனைத்து விபரங்களும் அடங்கிய கழக வாக்காளர் பட்டியல் அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையிலேதான் உட்கிளைக் கழகத் தேர்தல்கள் நடைபெற்றன.
தலைமைக் கழகத்திலிருந்து செல்கின்ற ஆணையாளர்கள், தாங்கள் தலைமைக் கழகத்தின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகள் என்பதை உணர்ந்து கடமையாற்றிடுவதோடு, நிர்வாகப் பொறுப்புகளுக்குப் போட்டியிடுகின்ற இரு தரப்பினருமே கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படை உண்மையையும் நினைவிலே கொள்ள வேண்டும். இந்த முறை ஐந்தாண்டு காலத்திற்கு கழகத்திற்காக உழைக்கின்ற பொறுப்பை ஏற்றுக் கொள்ள விரும்பிப் போட்டியிடுகிறார்கள். இதிலே பெரும்பான்மை உறுப்பினர்களிடம் வாக்குகளைப் பெறுகிறவர்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
நான் ஏன் இதை அடிக்கோடிட்டுச் சொல்கிறேன் என்றால், இந்த அமைப்புத் தேர்தலில் எந்த இடத்திலும் சட்டதிட்டங்களுக்கு மாறாகச் சிறு தவறுகள் கூட நடைபெற்று விடக்கூடாது என்பதிலே அனைவரும் மிகுந்த எச்சரிக்கையோடு இருந்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்பதற்காகத்தான்.
5-8-2014 அன்று தலைமைக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட முக்கிய அறிவிப்பில், வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய யாராவது விரும்பி, அதனைத் தலைமைக் கழகப் பிரதிநிதிகளிடம் கொடுக்க முடியாத நிலை ஏற்படுமேயானால், அவர்கள் நேரடியாகத் தலைமைக் கழகத்திற்கே வந்து, வேட்பு மனுக்களைப் பெற்று, பூர்த்தி செய்து தாக்கல் செய்யலாம் என்று
தெரிவிக்கப்பட்டதன் நோக்கத்தைக் கழகத் தோழர்கள் புரிந்து
கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன்.
தலைமைக் கழகத்திற்கும் எனக்கும், பொதுச் செயலாளர் பேராசிரியருக்கும், பொருளாளர் தளபதிக்கும் இந்தத் தேர்தல் குறித்து சில புகார்க் கடிதங்கள் வரத்தான் செய்கின்றன. மிகப் பெரியதொரு ஜனநாயக இயக்கத்தில் பல இலட்சக்கணக்கானவர்கள் கலந்து கொள்ளும் தேர்தலில், போட்டிகள் இருப்பது இயற்கைதான். அதுவும் திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற மக்கள் இயக்கத்தில் ஒரே பொறுப்புக்குப் பலர் வர விரும்புவதும், அதன் காரணமாகப் போட்டி கடுமையாக இருப்பதும் புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றுதான். நாம் மேற்கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மீறி எங்கேயாவது சிறு தவறுகள் நடந்தால்கூட, அவற்றைப் பற்றி விசாரித்துக் களைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டதற்கு முன்னுதாரணங்கள் உண்டு. தற்போதுகூட புகார்கள் வந்தால் அவற்றின் உண்மைத்தன்மை பற்றி அறிவதற்காக அன்றாடம் தலைமைக் கழகத்தில் இரண்டு அமைப்புச் செயலாளர்கள் விசாரிப் பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனநாயக முறைப்படி, கட்சியின் சட்ட திட்டங்களைப் பின்பற்றி நடைபெறும் இந்தக் கட்சித் தேர்தலில் கழகத்தின் தலைமை எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் ஆதரவாக ஒரு தலைப்பட்சமாக நிச்சயம் நடந்து கொள்ளாது. போட்டியிடுபவர்கள் அனைவரும் கட்சி உறுப்பினர்கள். அதிலே ஜனநாயக ரீதியாக அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுகிறவர்களுக்குத்தான் தலைமையின் இசைவு கிட்டும். வெற்றி வாய்ப்பினை இழந்தவர் களும் கழகத் தோழர்கள்தான். அவர்கள் அடுத்த முறை நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற, கழகத் தோழர்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெறத் தொடர்ந்து அயராமல் பாடுபட வேண்டுமே தவிர, கழகத்தில் குறுக்கு வழி எதுவும் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும். என்னைப் போலவே, கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டுக்கு அதிமுக்கியத்துவம் அளிப்பவர் என்பதையும், பொருளாளர் தளபதி ஸ்டாலின் முறைகேடுகள் எந்த வடிவத்தில் நடைபெற்றாலும் சிறிதும் பொறுத்துக் கொள்ளாதவர் என்பதையும், அவர் அமைப்புத் தேர்தலில் அனுதினமும் அக்கறை காட்டி விரைவாகவும்,
முறையாகவும் தேர்தல்கள் நடைபெற வேண்டும் என்பதிலே கவனம் செலுத்தி வருகிறார் என்பதையும் கழகத்தினர் அறிவர். எனவே நடைபெறும் இந்த உள்கட்சி அமைப்புத் தேர்தலை நேர்மையாகவும், நடுநிலையோடும் நடத்தி, கழகம் மேலும் வலிவும் பொலிவும் பெற்றிட கழக உடன்பிறப்புகள் அனைவரும் தேவையான ஒத்துழைப்பினை நல்கிட வேண்டுமென்று மிகுந்த அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கழகம் வெற்றி வாய்ப்பினை இழந்து விட்டது. எதனால் வெற்றியை இழந்தது என்பது வேறு. ஆனால் இந்த அளவுக்குத் தோல்வியைக் கண்ட பிறகும், கழகத்தின் உள்கட்சித் தேர்தலில் பொறுப்புக்கு வர இத்தனை. பேர் அணி அணியாக முன் வருவதும், போட்டியிடுவதும் மகிழ்ச்சிக்கும், பெருமிதத்திற்கும் உரிய ஒன்று. இந்த அமைப்புத் தேர்தலில் போட்டியிடுகின்ற இரு தரப்பினருமே கழக உடன்பிறப்புகள் தான். வெற்றி பெறுகிற வரும் என் உடன்பிறப்புதான் - வெற்றி வாய்ப்பினை இழப்பவரும் என் உடன்பிறப்புதான்! வெற்றி பெற்றவருக்காக நான் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்ற அதே நேரத்தில் வெற்றி வாய்ப்பினை இழந்தவர்களுக்காக ஆறுதல் தருபவனும் நான்தான். எனவே போட்டியிடுபவர்கள் கழகத் தோழர்களின் பெரும்பான்மை ஆதரவு இருந்தால் வெற்றி பெறலாம், இல்லாவிட்டால் இந்த முறை வெற்றி வாய்ப்பினை நழுவ விட்டாலும் அடுத்த முறை வெற்றி பெறுவதற்கேற்ப மேலும் பன்மடங்கு ஆர்வத்துடன் பாடுபடுவோம் என்று சிந்தித்துச் செயல்பட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
“திராவிட முன்னேற்றக் கழகம் ஓர் அரசியல் கட்சி மட்டுமல்ல; இது ஒரு சமுதாயச் சீர்திருத்த இயக்கம். இதில் ஈடுபட்டிருக்கின்ற அத்தனை பேரும், யார் யார் எந்தெந்த இடத்தில் இருப்பது என்பதல்ல; யார் யார் எந்தெந்த நேரத்தில் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வது என்பதும் முக்கியமல்ல; ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை ஏற்றிருப்பது இந்த இயக்கத்திலே அமைந்திருக்கின்ற போர்ப் பாசறை போன்றதாகும். இதிலே பகைவர்கள் உள்ளே புக நினைத்தால், அவர்கள் எங்கள் நெருக்கத்தின் இடையில் சிக்கிக் கூழாகிப் போவார்கள். திராவிட முன்னேற்றக் கழகம், ஒவ்வொருவரும்
ஒவ்வொரு இடத்திலிருந்து பணியாற்ற வேண்டுமென்பதற்கு ஏற்பட்டிருக்கிற ஓர அமைப்பே தவிர, வேறு ஏற்றத் தாழ்வுகள், மனமாச்சர்யங்கள் எங்களுக்குள் இருக்கிறதென்று மாற்றார்கள் கருதினால், நாங்கள் வளர்ந்த வரலாற்றை அவர்கள் தெரிந்து கொண்டவர்கள் அல்லர் என்றுதான் சொல்ல வேண்டும். நாங்கள் ஒரு தாயின் வயிற்றில் பிறக்காததற்குக் காரணம், ஒரு தாயின் வயிறு இத்தனை பிள்ளைகளையும் தாங்காது என்பதுதான்!”
- என்று 26-9-1960 அன்று சென்னை கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆற்றிய உருக்கமிகு உரையினை உடன்பிறப்புகள் அனைவரும் நினைவிலே நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன்.
அன்புள்ள, மு.க. 05-09-2014
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 52 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 52 PDF ↗