உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 51

தொகுதி 51 · கடிதம் 3905

பொய்க்குளி பேச்சுக்கு மறுப்பு!

2014-07-18

உடன்பிறப்பே,

15-7-2014 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் சமூக நலத்துறை பற்றிய மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கழகத்தின் சார்பில் டாக்டர் புஷ்பலீலா ஆல்பன் பேசும்போது, அந்தத் துறையிலே தி.மு.கழக ஆட்சியில் என்னென்ன சாதனைகள் செய்யப்பட்டன என்பதைப் பட்டியலிடும்போது, சுனாமி பேரழிவால் பெற்றோரை இழந்து தவித்த சிறுவர்களுக்கும், வளரிளம் பெண்களுக்கும் 5 லட்சம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட்டது என்றெல்லாம் கூறியிருக்கிறார். அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா குறுக்கிட்டு, சுனாமி ஏற்பட்டபோது அவர் தமிழ்நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பலமுறை பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலவிதமான உதவிகளைச் செய்து காயப்பட்டவர்களை மருத்துவமனைகளில் சென்று பார்த்து பலருக்குப் பலவிதமான உதவிகளை வழங்கியதாகவும், அப்போது நான் சேப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன் என்றும், ஆனால் சென்னையிலே இருந்து கொண்டே சேப்பாக்கம் கூடச் செல்லவில்லை என்றும், பாதிக்கப்பட்ட தொகுதி மக்களைக் கூடப் பார்க்கவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். அதுபற்றி விளக்கமளிக்க கழக உறுப்பினர்கள் முற்பட்டபோது, பேரவைத் தலைவர் முதலமைச்சர் பேசிய பிறகு வேறு யாரும் பேச முடியாது என்றும், அதற்கு அனுமதிக்க முடியாது என்றும் கூறியதால், கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரையில் சுனாமி பாதிப்பு ஏற்பட்ட போது நான் உடல் நலத்தோடு வீட்டிலே இருந்து கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்காமல் இருந்தேனா? சுனாமி விபத்து ஏற்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தேனா இல்லையா? அது முதலமைச்சருக்கு தெரியாதா? ஏடுகளில் எல்லாம் நான் மருத்துவமனையிலே இருந்த

செய்தி வந்ததே! முதலமைச்சர் அதை அப்படியே மறைத்துவிட்டு, நான் சென்னையிலே வீட்டிலே இருந்துகொண்டே சுனாமி பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்கச் செல்லவில்லை என்று உண்மைக்கு மாறாக குற்றஞ்சாட்டியிருக்கிறாரா இல்லையா? தமிழகத்தில் சுனாமி விபத்து 26-12-2004 அன்று காலை ஏற்பட்டது. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே எனக்கு விலாப்புறத்தில் கடுமையான வலி ஏற்பட்டு, முதலில் வீட்டிலேயே சிகிச்சை செய்து கொண்டு நலம் ஏற்படாததால், 26ஆம் தேதியன்று அப்பல்லோ மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டேன். இந்தத் தகவலை இப்போது நான் தெரிவிக்கவில்லை. கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்களே அறிக்கை மூலமாக அப்போதே ஏடுகளுக்குத் தெரிவித்து பத்திரிகைகளிலும் அந்தச் செய்தி வந்திருக்கிறது. நான் மருத்துவமனையிலே இருந்தபோதிலும், உடனடியாகப் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்ல முடியாவிட்டாலும், சென்னையில் மு.க. ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, டி.ஆர். பாலு போன்றவர்களை பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறச் செய்தேன். காலை 10 மணி அளவிலேயே மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறனை தொலைபேசியில் டெல்லிக்குத் தொடர்பு கொண்டு, பிரதமரைச் சந்தித்து, பாதிக்கப்பட்ட மக்களைக் காப்பாற்ற ராணுவத்தை ஈடுபடுத்தும்படி கேட்டுக் கொண்டேன். மாவட்டங்களில் உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும்படி 26ஆம் தேதியன்றே மருத்துவமனையிலே இருந்தவாறு அறிக்கை விடுத்தேன். நான் மருத்துவமனையிலே இருந்தபோது, என்னைப் பற்றிய தவறான வதந்தி ஒன்று பரவி ஏராளமான தொலைபேசிகள் வீட்டிற்கு வந்ததால், அந்தச் செய்தியை மறுத்து தொலைக்காட்சி மூலம் பேட்டி கொடுத்தேன். சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கே திருமதி சோனியா காந்தியும், பிரணாப் முகர்ஜியும் வந்து என் உடல் நிலை விசாரித்தபோது, சுனாமி நிவாரண நிதிக்காக கழகத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதிக்கான காசோலையை வழங்கினேன். மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சிவராஜ் பாட்டீல், அம்பிகா சோனி, ஆளுநராக இருந்த சுர்ஜித் சிங் பர்னாலா, தமிழர் தலைவர் கி. வீரமணி, ஜி.கே.வாசன், வைகோ, ஆர். நல்லகண்ணு, திருநாவுக்கரசர், சி.பி. ராதாகிருஷ்ணன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கவிப்பேரரசு வைரமுத்து, நீதியரசர் ரெத்தின வேல்பாண்டியன், பேராசிரியர் காதர் மொய்தீன், எஸ்.ஆர்.

பாலசுப்ரமணியம், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்து என் உடல் நிலையை விசாரித்தனர்.

7-1-2005 அன்று சுனாமி பேரழிவு குறித்து ஆய்வு நடத்த வருகை தந்த பிரதமர் மன்மோகன் சிங் என் உடல் நலம் விசாரிப்பதற்காக என் இல்லத்திற்கு வந்தபோது, சுனாமி நிவாரண நிதிக்காக தி.மு.க. அறக்கட்டளையின் சார்பில் 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை அளித்தேன். மேலும் நான் திரைக்கதை வசனம் எழுதிய “மண்ணின் மைந்தன்” படத்திற்காக வந்த ஊதியம் 11 இலட்சம் ரூபாய் - “கண்ணம்மா” படத்தின் மூலம் வந்த ஊதியம் 10 இலட்சம் ரூபாய் ஆக மொத்தம் 21 இலட்சம் ரூபாயை 10-1-2005 அன்று மு.க. ஸ்டாலின் மூலம் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கொடுக்கச் செய்தேன்.

உடல் நலம் பெற்று 11-1-2005 அன்றுதான் அண்ணா அறிவாலயம் சென்று கழகப் பணிகளை மேற்கொண்டேன். ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா நான் பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்கச் செல்லவில்லை என்று 9 ஆண்டுகளுக்குப் பிறகு என்னைக் குறை கூறுகிறார்.

உண்மையில் சுனாமி ஏற்பட்டபோது அந்தத் தகவலை முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கூற முடியாத அளவுக்கு அவர் தூங்கிக் கொண்டிருந்தார் என்றும், காலை 10 மணி அளவில்தான் அந்தச் செய்தியே அவருக்குத் தெரிவிக்கப்பட்டது என்றும் அப்போதே செய்தி வந்ததா இல்லையா?

அரசு இயந்திரம் சுனாமி நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் எப்படி செயல்பட்டது? 2-1-2005 தேதிய ஜூ.வி. “அவசரத்துக்கு அசையாத அரசு இயந்திரம்” என்று தலைப்பிட்டு கட்டுரை தீட்டியிருந்தது. குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் “மீட்புப் பணிகளில் மெத்தனம்” என்ற தலைப்பிலே எழுதியிருந்தது. 1-1-2005 தேதிய நக்கீரன் இதழும் பக்கம் பக்கமாக அரசு செயலற்று இருந்ததைப் படம்பிடித்துக் காட்டியிருந்தது. 29-12-2004 தேதிய “இந்து” “A POOR RELIEF EFFORT” என்ற தலைப்பில் தலையங்கமே தீட்டியது.

பொதுவாக பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க நானா

தயங்குபவன்? எம்.ஜி.ஆர். ஆட்சியில் இருந்தபோதே, ஒரு பெரும் புயல் தஞ்சைத் தரணியையே வெள்ளக் காடாக்கியது. அப்போது

சிறையிலே இருந்த நான் வெளியே வந்த அடுத்த கணமே, வீட்டிற்குச் சென்று ஓய்வெடுக்காமல், சிறைச்சாலையிலிருந்து புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் வழங்கினேன்.

திருச்சியில் ஒரு திருமண மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டு, 54 பேர் தீயில் வெந்து மடிந்த போது, முதலமைச்சராக இல்லாத நிலையிலும் நான் அங்கே சென்று நேரில் ஆறுதல் வழங்கினேன்.

2004ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் கும்பகோணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 94 குழந்தைகள் தீக்கு இரையாகி கருகிய போது, அங்கும் நேரில் சென்று ஆறுதல் கூறியவன் நான்.

31-1-2007 அன்று நாகப்பட்டினத்தில் நடைபெற்ற மிகப்பெரிய விழா நிகழ்ச்சியில் அருள்மிகு மாதா அமிர்தானந்தமயி மடத்தின் சார்பில் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்குக் கட்டப்பட்ட வீடுகளையெல்லாம் திறந்து வைத்தேன்.

என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய உடல்நிலை நன்றாக இருந்தால், சுனாமியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்க உடனடியாகச் சென்றிருப்பேன். இன்னும் சொல்லப் போனால், புழல் ஏரியில் விபத்து ஏற்படப் போகிறது என்ற செய்தி அதிகாலை 5 மணிக்கு காவல் துறை அதிகாரி மூலமாக எனக்கு வந்ததும், அந்த அதிகாலை நேரத்திலேயே தலைமைச் செயலகத்திற்குச் சென்றேன். கதவு திறக்கப்படாமல் இருந்ததால், சாவி வருகின்ற வரை வெளியே காத்திருந்தேன். பின்னர் அதிகாரிகளுடன் 6 மணிக்கு புழல் ஏரிக்கே சென்றேன். எனவே சென்னையிலே இருந்து கொண்டே நான் செல்லவில்லை என்று முதலமைச்சர் பதவியிலே இருப்பவர் உண்மைக்கு மாறாகக் குற்றம் கூறுவது சரியல்ல. நான் அந்த நேரத்தில் மருத்துவமனையிலே இருந்தது ஏடுகளில் எல்லாம் செய்தி வந்து, சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி போன்றவர்கள் எல்லாம் வந்து பார்த்து சென்றிருக்கின்ற நிலையில், பேரவையில் முதல்வர் என்மீது சாட்டிய குற்றச்சாட்டு சரியல்ல என்பதற்காகத்தான் இவ்வளவு விவரங்களையும் எடுத்துக் காட்டினேன்.

ஏன், முதலமைச்சர் ஜெயலலிதாகூட கடந்த மே மாதம் ராஜீவ் காந்தி நினைவு நாளான 21ஆம் தேதியன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பயங்கரவாத ஒழிப்பு உறுதிமொழி

ஏற்கும் நிகழ்ச்சியிலே கலந்து கொள்ளாமல் நிகழ்ச்சியையே ரத்து செய்தார். காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி சென்னை காமராஜர் சாலையிலே உள்ள காந்தி சிலைக்கு ஆளுநரும், முதல்வரும் மாலை அணிவிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா கடைசி வரையில் அங்கே வரவே இல்லை. கடைசியில் பல் வலி என்றார்கள். எனவே உடல் நலம் பாதிப்பது என்பது இயற்கை நியதி. அதை மறைத்துக் குற்றம் கூறுவது சரியல்ல.

ஏன் ஒருமுறை சென்னையிலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழையும், வெள்ளமும் பெருகி மக்கள் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தபோது, ஜெயலலிதா ஐதராபாத்தில் இருந்தார். அதுபற்றி சில ஏடுகள் அவர் அங்கே யாகம் ஒன்றை நடத்திக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியிட்டன.

அந்தச் சமயத்தில் இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் கே.ஆர். நாராயணன் மறைந்து, அவருக்காக எல்லோரும் அனுதாபச் செய்தி வெளியிட்டபோது, ஜெயலலிதா அனுதாபச் செய்திகூட வெளியிடவில்லை.

2005ஆம் ஆண்டு டிசம்பரில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது பெரு மழை பெய்து வெள்ளம் பாதித்தபோது, 4-12-2005 ஞாயிறு அன்று பகல் 12.30 மணி அளவில் நான் புறப்பட்டு, கோட்டூர்புரம், அடையாறு, சைதாப்பேட்டை பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு பகுதிகளைப் பார்வையிட்டு, மக்களுக்கு ஆறுதல் கூறினேன். அந்தச் செய்தியைக் கேட்ட பிறகுதான், முதலமைச்சர் ஜெயலலிதா பிற்பகல் 3.15 மணிக்கு போயஸ் தோட்டத்திலிருந்து வெள்ளப் பகுதிகளையே பார்க்கப் புறப்பட்டார்.

இவ்வாறு போட்டா போட்டிக்கு திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால் முதலமைச்சர் பொறுப்பிலே இருப்பவர், சட்டமன்றத்திலே பேசும்போது உண்மைக்கு மாறான தகவலை, சென்னையிலே இருந்து கொண்டே நான் சுனாமியினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்க்கவில்லை என்றெல்லாம் குற்றம் சாட்டுவது சரியல்ல. உண்மைக்கு மாறான அந்தக் குற்றச்சாட்டினை மறுத்து உண்மையைச் சொல்வதற்கு கழக

உறுப்பினர்கள் முற்பட்டபோது, அதற்கும் பேரவைத் தலைவர்

அனுமதி கொடுக்கவில்லை என்றால், அது சட்டமன்ற மரபுப்படி

சரியானதுதானா? பொதுவாக முதலமைச்சர் பேசிவிட்டால்,

அதன் பிறகு மீறி யாரும் பேசக் கூடாது என்றால், நடைபெறுவது ஜனநாயகம்தானா?

அன்புள்ள,

மு.க.

18-07-2014

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 51 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 51 PDF ↗