உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 51

தொகுதி 51 · கடிதம் 3904

கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படாதீர்!

2014-07-17

உடன்பிறப்பே,

தமிழகச் சட்டப்பேரவை 10ஆம் தேதி தொடங்கிக் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. எனது உடல் நலம் குறித்து, அங்கே நான் அமர்வதற்கு இந்த ஆட்சியினர் முறையான இடவசதி செய்து தராத காரணத்தால், நான் சட்டப்பேரவைக்குச் செல்வதில்லை என்றாலும், அங்கே நடைபெறும் நடைமுறைகளை ஏடுகள் வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் கவனித்து வருகிறேன். ஆனால் அந்த நடைமுறைகள் வழக்கம் போலவேதான் உள்ளன. வழக்கம் போலவே என்றால், அனைத்துத் துறைகளுக்கான அறிவிப்புகளையும் முதலமைச்சரே 110வது விதியின் கீழ் படித்தல்; வெளிநடப்புகள் அல்லது வெளியேற்றங்கள்; எதிர்க் கட்சியினருக்கு வாய்ப்பு தராமை; ஆளுங்கட்சி பற்றியோ, முதலமைச்சர் பற்றியோ யாராவது எதிர்க்கட்சியினர் பேச முற்பட்டால், உடனே குறிப்பிட்ட சில அமைச்சர்கள் குறுக்கிட்டு அவர்களைப் பேச விடாமல் செய்தல்; அமைச்சர்கள் தங்கள் துறை சம்பந்தப்பட்ட மானியங்களுக்குப் பதில் அளிக்கும்போது முதலமைச்சருக்குப் பாராட்டுப் புராணம் படித்தல்; அத்துடன் என்னை எந்த அளவுக்குக் கடுமையாக விமர்சனம் செய்து தாக்கிப் பேசிட முடியுமோ அந்த அளவுக்குப் பேசுதல் என்ற இந்த நடைமுறைகள் அப்படியேதான் தொடருகின்றன.

தொழில் அமைச்சர் பேரவையில் முதலில் எங்கள் மீது தெரிவித்த குற்றச்சாட்டு, தி.மு.க. தலைவரும், உறுப்பினர் ஸ்டாலினும் தமிழகத்திலிருந்து முதலீட்டாளர்கள் கர்நாடகாவிற்கு சென்று விட்டதாக ஒரு தவறான கருத்தை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள். எந்தெந்த தொழிற்சாலைகள் என்று விவரத்தைக் கூறவில்லை என்பதாகும். ஆனால் அதே அமைச்சர் அளித்த

பதிலில், “கர்நாடக முதல்வரும், அதிகாரிகளும் கோவையில் நடத்திய ஒருகூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரிடமும் விருப்ப வெளிப்பாட்டு விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொண்டதன்பேரில் சிலர் அதனைக் கொடுத்துள்ளார்கள்” என்று அவரே தெரிவித்திருப்பதிலிருந்தே, நான் குறிப்பிட்டவாறே கோவையில் அப்படி ஒரு கூட்டம் நடைபெற்றதும், கர்நாடகா முதலமைச்சர் அங்கே வந்து தமிழ்நாட்டுத் தொழில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்ததும் உண்மை என்பது தெளிவாகிறதா அல்லவா? மேலும் அந்த அமைச்சர் தன் பேச்சில், “குறைந்த விலைக்கு நிலம் தருகிறோம், வரிச்சலுகையும் தருகிறோம் என்று சொல்லி, ஆந்திர மாநிலத்திற்கு அழைக்கிறார்கள். அதுபோல ஆந்திர முதல்வர் இந்த வழியாகச் சென்னைக்கு வந்து செல்லும் போதெல்லாம் நம் தொழிலதிபர்களை அழைத்துக் குறைந்த விலைக்கு நிலம் தருகிறோம் என்று பேசுவார்” என்று கூறியிருப்பதில் இருந்தே, தமிழகத்தின் நிலைமை என்ன என்று தெரிகிறதே? இவர்கள் ஆளுகின்ற ஒரு மாநிலத்திற்கு வேறொரு மாநில முதல் அமைச்சர் வந்து கூட்டம் போட்டுத் தொழில் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள் என்றால், அதற்காக இவர்கள் வெட்கப்பட வேண்டுமே தவிர, எங்கள் மீது பாய்ந்து விழுந்து என்ன பயன்?

தொழில் அமைச்சர் பேரவையில் கூறியிருக்கின்ற குற்றச்சாட்டு, உண்மையில் அவர் கூறுவது அல்ல. கோவையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏப்ரல் 1ஆம் தேதியன்று முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதுதான். முதல் அமைச்சர் அவ்வாறு பேசியதற்கு 3-4-2014 அன்றே “முரசொலி”யில் விரிவாகப் பதில் எழுதிவிட்டேன். இருந்தாலும் துறையின் அமைச்சர் பேரவையில் அதே கருத்தைப் பேசியிருக்கிறார்.

இந்தியாவில் எத்தனையோ மாநிலங்கள் இருக்க, கர்நாடக மாநில முதலமைச்சர் தமிழகத்திலே உள்ள ஒரு நகரில், தமிழகத்திலே உள்ள தொழில் அதிபர்களையெல்லாம் அழைத்துக் கர்நாடகாவில் வந்து தொழில் தொடங்குங்கள் என்று அழைக்கிறார் என்றால், அதற்கு என்ன அர்த்தம் என்பதைச் சாதாரண ஒரு தொழில் அதிபர் கூடப் புரிந்து கொள்ள முடியும்.

கர்நாடக முதலமைச்சர் கோவையில் கூட்டம் போட்டுத் தமிழக தொழில் முதலீட்டாளர்களை அழைக்கிறார் என்று

நாங்களாகச் சொல்லி விடவில்லை. “தினமலர்” நாளேடு தி.மு.கழக இதழ் அல்ல! தி.மு.க.வைக் கடுமையாக விமர்சிக்கின்ற ஏடுதான். அந்த இதழில் ஜனவரி 22ஆம் தேதி ஒரு செய்தி வந்தது. அதன் தலைப்பே, “தள்ளி விடும் தமிழகம்; கவர்ந்திழுக்கும் கர்நாடகம் - கை நழுவிய 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு” என்பதாகும். அந்தச் செய்தியில், “கொங்கு மண்டலத் தொழிலதிபர்களின், 12 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் கர்நாடகாவிற்குச் செல்ல உள்ளன. தமிழகத்தில் மோசமாகி வரும் முதலீட்டுச் சூழல்தான் இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்தும், வேறு மாநிலங்களுக்குத் தொழில்கள் இடம்பெயர வாய்ப்பு உள்ளது. தமிழக - கர்நாடகா எல்லையில் உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டத்தில், 1,400 ஏக்கரில் தொழில் மண்டலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முதலீட்டாளர்களை இழுக்கும் வகையில், கோவையில், கடந்த 20ம் தேதி சாம்ராஜ் நகர் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டில் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா “கர்நாடகாவில் தொழில் துவங்க வாருங்கள், அனைத்து வசதிகளையும் செய்து தருவோம்” என்று தமிழக தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாட்டின் விளைவாக, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளில் தொழில் நடத்தும் ஏறத்தாழ 200 தொழில் அதிபர்கள், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு, சாம்ராஜ் நகரில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளனர்” என்றெல்லாம் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியைத்தான் நாங்கள் குறிப்பிட்டோம். முதலமைச்சரும், துறை அமைச்சரும் “தினமலர்” நாளிதழ் செய்திக்குத்தான் மறுப்பு தெரிவிக்க வேண்டுமே தவிர, எங்கள் மீது கோபிப்பதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?

இந்த மாநாட்டிற்குப் பிறகு, கர்நாடகா தொழில் வர்த்தக சபை கூட்டமைப்பின் உதவி செயலாளர். விஜயகுமார் என்பவர் “கோவையில் நடத்தப்பட்ட மாநாடு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. ஒரே நாளில், 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான அளவுக்கு சாம்ராஜ் நகர் தொழில் மண்டலத்தில் முதலீடு செய்ய முன்வந்திருப்பது பெரிதும் மகிழ்ச்சியை அளித்துள்ளது” என்று கூறி, அதுவும் நாளேட்டில் அப்போதே வெளிவந்தது.

குறிப்பாக, “திருப்பூரைச் சேர்ந்த ஏற்றுமதி நிறுவனம் ஒன்று, 2000 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளது. கோவையைச் சேர்ந்த பெண் தொழிலதிபர் ஒருவர், அந்தத் தொழில் மண்டலத்தில், 1000 கோடி ரூபாய் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்” என்று செய்தி வந்ததா? இல்லையா? இதுபற்றி அமைச்சர் அப்போது ஏன் பதில் கூறவில்லை? அப்போது விட்டுவிட்டு இப்போது சட்டப்பேரவையில் வந்து எந்தெந்த தொழிற் சாலை, எவ்வளவு முதலீடு என்று சண்டப் பிரசண்டம் செய்தால் என்ன அர்த்தம்?

தமிழகத்திலிருந்து இவ்வாறு தொழில் முதலீடுகள் வெளி மாநிலங்களுக்குச் செல்ல என்ன காரணம் என்பது பற்றியும் பலரிடம் பேட்டி கண்டு “தினமலர்” நாளேடு 24-1-2014 அன்று அரைப் பக்க அளவிற்குச் செய்தி வெளியிட்டது. அந்தச் செய்திக் கட்டுரையின் தலைப்பைப் பார்த்தாலே நிலைமையைப் புரிந்துகொள்ள முடியும். என்ன தலைப்பு தெரியுமா? “தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் லஞ்சம், மின்வெட்டு, நில மதிப்பு - மேற்கு மாவட்ட முதலீடுகள் கர்நாடகா செல்லும் மர்மம் இதுதான்!” - இப்படியெல்லாம் நாளேடுகளில் வருகின்ற செய்திகளைப் பார்த்து உண்மையைப் புரிந்து கொள்ளாமல் எதிர்க்கட்சிகள் மீது கோபப்படுவது நல்லதா?

“தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் லஞ்சம்” என்றே தலைப்பு செய்தி வெளியிட்டு, எத்தனை நாட்களாகிறது? தமிழக அரசு அதற்குப் பதிலளித்திருக்க வேண்டாமா?

முதலமைச்சர் ஜெயலலிதா கோவையில் பேசும்போது, அவருடைய மூன்றாண்டு கால ஆட்சியில் 33 இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் 31,706 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். இவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்ட 33 நிறுவனங்களில், இதுவரை எத்தனை நிறுவனங்கள் தமிழகத்தில் தொழிலைத் தொடங்கியிருக்கின்றன என்ற விவரத்தைத் தெரிவிக்க முடியுமா? புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல நிறுவனங்களுடன் போடலாம். உண்மையில் தொழில் தொடங்கினால்தானே பயனளிக்கும்.

முதலமைச்சர் பேசிய தேர்தல் கூட்டத்தில் 31,706 கோடி ரூபாய்க்கு 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொண்டதில்,

10,660 கோடி ரூபாய் முதலீடுகள்தான் கிடைக்கப் பெற்றதாக அவரே தெரிவித்திருக்கிறார். ஆனால் தொழில் துறை அமைச்சர் சட்டப்பேரவையில், கடந்த மூன்றாண்டுகளில் 68 திட்டங்களில் தமிழகத்தில் ஈர்த்த மொத்த முதலீடு 46,602.72 கோடி ரூபாய் என்று கூறுகிறார் என்றால் முதலமைச்சர் கூறியது உண்மையா? அமைச்சர் சட்டப்பேரவையில் கூறியது உண்மையா?

இன்னும் கூற வேண்டுமேயானால், கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே முதலமைச்சர் ஜெயலலிதா இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றியெல்லாம் விரிவாகப் பேசி, அதற்கு அப்போதே நான் பதிலளித்துவிட்டேன். இப்போது அமைச்சர் அதையேதான் திரும்பப் பேசியிருக்கிறார்.

முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் பேரவையில் படித்த பதிலிலேயே, “கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமும், அரசாணைகள் மூலமும் 54 தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்வதாகச் சொல்லப்பட்ட தொகை 66,664 கோடி ரூபாய் ஆகும். இதில் 15,982 கோடி ரூபாய்க்கான 12 தொழில்கள் தொடங்கப்படவே இல்லை” என்று கூறினார்.

இதிலிருந்து கழக ஆட்சியில் 50,682 கோடி ரூபாய்க்கான 42 தொழில்கள் தொடங்கப்பட்டதாக ஜெயலலிதாவே பேரவையில் ஒப்புக் கொண்டிருக்கிறார் அல்லவா? அதுவே தி.மு.கழக ஆட்சியில் தொழில் வளர்ச்சி ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லையா?

அ.தி.மு.க. ஆட்சியில் 2011ஆம் ஆண்டு மே மாதம் முதல் இன்று வரை 1 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 17 இந்திய மற்றும் பன்னாட்டுப் பெரும் நிறுவனங்களுடன் 26,625 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்றும், அதில் 10,660 கோடி ரூபாய் முதலீடுகள் கிடைக்கப்பெற்று, 10,022 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் தெரிவித்திருக்கிறார். புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது 26,625 கோடி ரூபாய்க்கு! ஆனால் முதலீடுகள் கிடைக்கப் பெற்றது வெறும் 10,660 கோடி ரூபாய்க்குத்தான்! வெறும் நாற்பது சதவிகிதம்தான்! 1 லட்சத்து 46 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு

கிடைக்கத்தக்க வகையில் ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகவும்,

10,022 பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கத் தக்க அளவிற்குத்தான் முதலீடுகள் கிடைக்கப்பெற்றதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதாவே பேரவையில் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றால், நேற்றையதினம் தொழிலமைச்சர் சட்டப்பேரவையில் கிட்டத்தட்ட 1,62,667 பேருக்கு வேலை வாய்ப்பைப் புரட்சித் தலைவி அம்மா உருவாக்கியிருக்கிறார் என்று கூறியது உண்மைக்கு மாறான தகவல்தானே? பேரவையில் உண்மைக்கு மாறான தகவலைக் கூறலாமா? இதுதான் தொழில் வளர்ச்சிக்கான அடையாளமா?

4-2-2014 தேதிய நாளிதழ் ஒன்றுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், அன்றைய மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் “மத்திய அரசின் தொழில் துறை சார்பில் ஒரு பிரமாண்டமான தொழில் வளர்ச்சித் திட்டம் தமிழகத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான முதலீட்டில் 90 சதவிகிதம் வரை மத்திய அரசு கடனாக வழங்கும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு ஆர்வம் காட்டவில்லை” என்று தொடங்கித் தமிழக அரசு எவ்வாறு தொழில் வளர்ச்சியில் அக்கறை இல்லாமல் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டியிருந்தாரே; முதலமைச்சர் ஜெயலலிதா அதற்கென்ன பதில் கூறப்போகிறார் என்று நான் அப்போதே கேட்டிருந்தேனே; முதலமைச்சரோ, துறையின் இந்த அமைச்சரோ ஏதாவது பதில் கூறினார்களா?

தி.மு.கழக ஆட்சியில் தொழிற்சாலைகளில் பணியாற்றிய பெண்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 93 ஆயிரம் ஆகும். ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்ற பெண்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 78 ஆயிரம். வேலைவாய்ப்பினை இழந்த பெண்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 15 ஆயிரம் ஆகும். இதுதான் தொழில் வளர்ச்சிக்கான அடையாளமா?

சிமெண்ட் விலை பற்றியும் பேசிய அமைச்சர் என்னுடைய ஆட்சியிலேதான் விலை உயர்ந்தது என்று நீண்ட நேரம் பேசியிருக்கிறார். ஆனால் அப்போது விலை உயர்ந்தபோது கழக அரசு எவ்வாறு நடவடிக்கை எடுத்தது, இப்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றுதான் நான் கேட்டிருந்தேன். கழக ஆட்சியில் சிமெண்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் அதிபர்களை எல்லாம் அழைத்துப் பேசினோம். விலையைக் குறைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டோம். அவர்களும்

அதனையேற்று சிமெண்ட் விலையை மூட்டை ஒன்றுக்கு ரூபாய் 20 குறைக்க ஒப்புக் கொண்டார்கள். அப்போதே அது செய்தியாக வெளிவந்தது. மேலும் சிமெண்டைக் கொள்முதல் செய்து, ஒரு மூட்டை சிமெண்ட் சலுகை விலையில் ரூ. 200/- வீதம் விற்பனை செய்ய அரசு ஆணை பிறப்பித்தோம். 2007-2008ஆம் ஆண்டில்,

31-3-2008 வரை 48,496 மெட்ரிக் டன் சிமெண்டும் - 2008-2009ஆம் ஆண்டில் 5 லட்சத்து 63 ஆயிரத்து 955 மெட்ரிக் டன் சிமெண்டும் - 2009-2010 ஆம் ஆண்டில் 9 லட்சத்து 79 ஆயிரத்து 330 மெட்ரிக் டன் சிமெண்டும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக மக்களுக்குக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. இவ்வாறு அரசே தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட்டு விலை குறைத்து விற்க நடவடிக்கை எடுத்ததால், வெளிச் சந்தையிலும் சிமெண்ட் விலை கணிசமாகக் குறைந்தது. ஆனால் கடந்த மூன்றாண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியினர் ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா? எந்த சிமெண்ட் உற்பத்தி நிறுவனத்தையாவது அழைத்து விலையைக் குறைக்கப் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்களா? தற்போது சிமெண்ட் விலை உயர்ந்திருப்பது பற்றி 19-6-2014 அன்று வெளியான “இந்து” இதழில் வந்துள்ள செய்திப்படி மே 31ஆம் தேதி ஒரு மூட்டை சிமெண்ட் 285 ரூபாய் என்பது, 17-6-2014 அன்று 350 ரூபாயாக உயர்ந்துள்ளது. “இந்து” மாத்திரமல்ல; 21-6-2014 தேதிய “தினமலர்” செய்திப்படி, கடந்த வாரம் ஒரு மூட்டை சிமெண்ட் 310 ரூபாய் என்பது, இந்த வாரத்தில் 340 ரூபாய் என்ற அளவுக்கு உயர்ந்திருக்கிறதாம். கருணாநிதி ஆட்சியில்தான் சிமெண்ட் விலை உயர்ந்தது என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பேசினாரே, அவர் இந்த நாளேடுகளில் வந்துள்ள செய்திக்கு என்ன பதில் கூறப்போகிறாராம்?

சிமெண்ட் உற்பத்தி பற்றியும் தொழில் அமைச்சர் பேரவையிலே பேசியிருக்கிறார். தமிழக அரசு இரண்டு சிமெண்ட் தொழிற்சாலைகளை ஆலங்குளத்திலும், அரியலூரிலும் நடத்தி வருகிறது. ஆலங்குளம் சிமெண்ட் தொழிற்சாலையில், 2010-2011ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சியில் உற்பத்தி 2 இலட்சத்து 3 ஆயிரத்து 40 டன்கள். அ.தி.மு.க. ஆட்சியில், 2011-2012ஆம் ஆண்டில் அங்கே சிமெண்ட் உற்பத்தி 1 இலட்சத்து 34 ஆயிரத்து 640 டன்கள். 68 ஆயிரத்து 400 டன்கள் குறைவு. அதுபோலவே

அரியலூர் சிமெண்ட் அரசு சிமெண்ட் தொழிற்சாலையில் கழக ஆட்சியில் உற்பத்தி 4 இலட்சத்து 90 ஆயிரத்து 35 டன்கள். அ.தி.மு.க. ஆட்சியில் உற்பத்தி 3 இலட்சத்து 88 ஆயிரத்து 55 டன்கள். கழக ஆட்சியை விட 1 இலட்சத்து ஓராயிரத்து 980 டன்கள் குறைவு. இதுதான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகியிருப்பதற்கான அடையாளமா? தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி பற்றி சுப்பிரமணியம் சுவாமி அவர்களே அண்மையில் கூறும்போது, “தொழில் வளம், பொருளாதார வளர்ச்சி எதுவுமே இல்லை. இங்கிருக்கும் தொழில் அதிபர்களை, கர்நாடக முதல்வர் சித்தராமையா, தங்கள் மாநிலத்துக்குக் கவர்ந்து போயிருப்பதாக அறிந்தேன். தமிழகத்தில் இருந்து 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கான தொழில் முதலீடுகள், கர்நாடகத்துக்குச் சென்ற முதலீட்டை, இங்கேயே தக்கவைக்க, தமிழக அரசு எந்த முயற்சியும் எடுக்காதது ஏன்? கடுமையான மின் பற்றாக்குறையும், அரசு அதிகாரிகளின் ஒத்துழையாமையும் எல்லா நிலைகளிலும் இருப்பதால், வெளி மாநிலங்களில் இருந்து யாரும் தமிழகத்தில், முதலீடு செய்ய முன்வரவில்லை. தகவல் தொழில்நுட்பத் துறையில், தமிழகம், நாட்டிலேயே முதன்மையான மாநிலமாக வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலை மாறியிருக்கிறது. அதற்குக் காரணம், மாநில அரசு நிர்வாகம் சரியில்லாததே” என்று தெரிவித்திருக்கிறார் என்றால், முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களே, எங்கள் மீது கோபப்பட்டு என்ன பயன்? இந்த விவரங்களையெல்லாம் திரட்டி நான் அறிக்கை வெளியிடுவது தவறா? பேரவையில் இருக்கிறோம் என்ற பாதுகாப்பில் அமைச்சர் என் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வக்கில்லாமல், என்னை “அறிக்கை நாயகர்” என்று பேரவையிலே கிண்டல் செய்வதா? இது போலத் தொடர்ந்து பேரவையை நடத்தச் செய்து, முதலமைச்சர் அவர்களே, தமிழகச் சட்டமன்றத்தின் மாண்பினைக் குலைக்கக் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படாதீர்! அன்புள்ள, மு.க. 17-7-2014

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 51 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 51 PDF ↗