உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 51

தொகுதி 51 · கடிதம் 3893

பெரியார் கூறிய கட்டுப்பாடு காத்திட; அண்ணா வழியில் வாரீர்!

2014-06-29

உடன்பிறப்பே,

திராவிட முன்னேற்றக் கழகத்தில் சிறுபுகை மூட்டம் என்றாலும் அதைப் பெரிதாக்கி ஏதோ மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டுவிட்டதைப் போலவும், அதில் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகிவிட்டது போலவும் தமிழகத்திலே உள்ள சில நாளேடுகளும், வார இதழ்களும் செய்தி வெளியிடுகின்றன. அதே நேரத்தில், மாற்றார் முகாமில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டாலும், அதனை ஒன்றுமில்லை, சாதாரண புகைதான் என்பது போல அதே இதழ்கள் எழுதுகின்றன. அதற்கு உதாரணம்தான் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு. கழகம் தோற்று விட்டது என்றதும், அதுபற்றி எப்படியெல்லாம் செய்தி வெளியிட்டார்கள்? அதே நேரத்தில் பெங்களூரு சொத்துக்குவிப்பு வழக்கு; தீர்ப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதே, அந்தச் செய்தியை அப்படியே மறைத்து விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள்.

22-6-2014 தேதிய “குமுதம் ரிப்போர்ட்டர்” இதழ், “கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் பலரும் முன்வைத்த பிரதானமான கோரிக்கை, கட்சியில் குறுநில மன்னர்களாகத் திகழும் ஒரு சில சீனியர் மாவட்டச் செயலாளர்களின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுங்கள் என்பதுதான். கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் 3 தொகுதிகளில் தோல்வியைத் தழுவியதற்கே அ.தி.மு.க. அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. அதே ஸ்டைல் நடவடிக்கைகளைத்தான் தி.மு.க. தொண்டர்களும் இப்போது விரும்புகிறார்கள்” என்றெல்லாம் எழுதியதோடு, “பதவியிழக்கும்

18 மா.செ.க்கள்?” என்ற தலைப்பில் 18 மாவட்டக் கழகச்

செயலாளர்களின் பெயரையும் வெளியிட்டிருந்தது. இது ஒரு

உதாரணம்தான்.

இதே விதமாகத்தான் தொடர்ந்து எழுதிவந்தார்கள். “கலைஞருக்கு ஒரு பகிரங்க கடிதம்” என்ற தலைப்பில் “சைரன்” என்ற இதழில் “பேனாவைக் கீழே வைத்து சாட்டையைக் கையில் எடுங்கள் தலைவர்?” என்று யாரோ ஒரு அன்புத் தொண்டன் எழுதுவதைப் போல நீண்ட கட்டுரை ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது. 28-5-2014 தேதிய ஜூ.வி. இதழ் அட்டையிலேயே “எல்லா மாவட்டச் செயலாளர்களையும் எடு” என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரை.

இந்தக் கட்டுரைகள் எல்லாம் கழகத்தின் மீது அக்கறையோடு எழுதப்பட்டவை அல்ல; தி.மு. கழகத்தில் ஏதாவது நிகழாதா? அப்படி நிகழ்ந்தால் திராவிட இயக்கம் என்பதையே பூண்டற்றுப் போகச் செய்துவிடலாமே; என்ற நப்பாசைதான். தி.மு. கழகம் ஆயிரம் காலத்துப் பயிர்! இதனை அழிக்க எத்தனையோ கொம்பர்கள் எல்லாம் முயன்று பார்த்து தோல்வியைத்தான் தழுவினார்கள். தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைப் போல தி.மு. கழகம் பல முறை தோல்வியைத் தழுவியிருக்கிறது. ஆனால் அதற்குப் பிறகு வீறுகொண்டு எழுந்து நின்றிருக்கிறது. கழகத்தின் சார்பில் ஒரேயொரு இடத்தில் ஆசைத்தம்பி வெற்றி பெற்றதில்லையா? அதற்குப் பிறகு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு. கழக அணி 38 இடங்களில் வெற்றிபெற்றதில்லையா? எனவே தேர்தல் தோல்விகள், வெற்றிகள் என்பதெல்லாம் பகல் இரவு போலத்தான்! மாறி மாறி வரத்தான் செய்யும்! தற்போது மத்தியில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க. தோல்வியைக் கண்டதில்லையா? தமிழகத்திலே அ.தி.மு.க. தோல்வியைத் தழுவியதில்லையா? ஜெயலலிதாவே சட்டப் பேரவைத் தேர்தலில் தோற்றதில்லையா? அந்தக் கட்சி பெண்ணாகரத்தில் இடைத் தேர்தலில் “டெபாசிட்” தொகையை இழக்கவில்லையா? இந்த வெற்றி தோல்விகள் என்பதே இயக்கத்தின் ஆயுளை நிர்ணயிக்கக்கூடிய ஒன்றல்ல!

ஆனாலும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுக்குப்பிறகு, ஒரு சில இடங்களில் கழகத்தினர் சரியாகப் பணியாற்றவில்லை;

மாவட்டக் கழகச் செயலாளர்கள் தவறு செய்தார்கள்; கழக முன்னணியினரே தவறு செய்தார்கள்; அ.தி.மு.க.வினரிடம் பணம் பெற்று பணியிலே ஈடுபடாமல் இருந்தார்கள் என்பதையெல்லாம் கேள்விப்பட்டுக் கழகத்தின் சார்பில் ஆறு பேர் கொண்ட குழு ஒன்றினை, கழகத்தின் உயர் நிலை செயல்திட்டக் குழுவின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி அமைத்தோம். அந்தக் குழு கலந்தாலோசித்து, அளித்த அறிக்கைப்படி தற்போது கழகத்தின் சார்பில் 34 மாவட்டக் கழகச் செயலாளர்கள் இருப்பதற்கு மாறாக, மாவட்டங்களைப் பிரித்து 65 மாவட்டங்கள் என்றாக்கி, ஒவ்வொரு மாவட்டத்தின் கீழ் எந்தெந்த சட்டமன்றத் தொகுதிகள் அடங்கும் என்ற விவரங்களையெல்லாம் வெளியிட்டோம்.

நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பக்கம்பக்கமாக எழுதிய இதழ்கள், கழகம் எடுத்த இந்த நடவடிக்கை பற்றி ஏதாவது பாராட்டினார்களா என்றால் இல்லை, இல்லவே இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களும் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களும் தேர்தலில் கழகத்தின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை தர வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டு, அவர்களும் அவ்வாறே தலைமைக் கழகத்திற்கு அளித்தார்கள். அந்த அறிக்கைகளையெல்லாம் தொகுத்து, வேட்பாளர்களும், பொறுப்பாளர்களும் யார் யார் மீது புகார் கொடுத்துள்ளார்கள், அவர்களில் யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதைப் பற்றி ஆய்வு செய்வதற்காக, தலைமைக் கழகத்தினால் இரண்டு பேர் நியமிக்கப்பட்டு, அவர்கள் இருவரும் இரண்டு மூன்று நாள்கள் தலைமைக் கழகத்திலே இரவு பகலாகத் தங்கி, யார் யார் மீது எப்படிப்பட்ட புகார்கள் வேட்பாளர்களாலும், பொறுப்பாளர்களாலும் தரப்பட்டிருக்கின்றன என்பதையும், அவர்களில் யார் யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் பரிந்துரை செய்தார்கள்.

அந்தப் பரிந்துரைகள் அடிப்படையில்தான், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்பு, கழகம் தன்னிச்சையாக முடிவெடுத்து விடாமல், அவர்களை உடனடியாக கட்சி உறுப்பினர் பொறுப்பிலிருந்தே விடுவித்து விடாமல், அவர்கள் வகித்த பொறுப்புகளிலே இருந்து மட்டும்,

அதுவும் தற்காலிகமாக விலக்கிவைக்கப்பட்டு, அதே நேரத்தில் அவர்கள் ஒரு வாரக் காலத்திற்குள் தங்கள் மீதான புகார்களுக்கான விளக்கத்தை அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டு, அதற்கான தலைமைக் கழக அறிவிப்பும் கடந்த 21-6-2014 அன்று வெளியிடப்பட்டது.

அந்த அறிவிப்புக்குப் பிறகு, நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களில், ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் எல்லாம், தங்கள் விளக்கங்களைத் தலைமைக் கழகத்திற்கும், அதன் நகல் ஒன்றினை எனக்கும் அளித்துள்ளார்கள். தலைமைக் கழகம், அவர்களைத் தற்காலிகமாக விலக்கி வைத்து, ஏன் முழுவதுமாக நீக்கக்கூடாது என்பதற்கான விளக்கத்தை அளிக்கும்படி கேட்டுக்கொண்ட நிலையில், அவர்கள் தந்த விளக்கங்கள் சிலவற்றை நான் புரட்டிப்பார்த்தேன். நேற்றையதினம் மாலையில் விளக்கம் கேட்கப்பட்ட ஒரு ஒன்றியச் செயலாளர், தங்கள் தொகுதியிலிருந்து சுமார் 100 பேர்களுடன் என்னைச் சந்தித்து, தான் அளித்த விளக்கத்தின் நகல் ஒன்றினைக் கொடுத்தார். அந்த விளக்கத்திலே, தான் ஐந்தாம் வகுப்பு வரைதான் படித்திருப்பதாகவும், ஆனால் அவருடைய மகன் பி.ஈ., படித்திருப்பதாகவும், எனவே அவருடைய மகனை நாடாளுமன்றத் தேர்தலில் நிறுத்த முயற்சித்ததாகவும், அதனால் அந்தத் தொகுதியிலே இடம்கிடைத்து போட்டியிட்டவருக்கு தன்னிடம் வருத்தம் என்றும், அதன் காரணமாகவே தன் மீது புகார் கூறி அறிக்கை கொடுத்திருப்பதாகவும் அதிலே எந்தவிதமான உண்மையும் இல்லை என்று தெரிவித்ததோடு, கழகத்திற்காக அவர் ஆற்றிய பணிகள் பற்றிய விவரங்களையெல்லாம் புகைப்பட நகல்களோடு என்னிடம் காட்டினார். தான் தேர்தல் நேரத்தில் ஆற்றிய பணிகளையொட்டி, ஆளுங்கட்சி சார்பில் தன் மீது நான்கு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதற்கான சான்றுகளையும் என்னிடம் எடுத்துக்காட்டினார்.

நான் அவரிடம், தேர்தலுக்குப் பிறகு உங்கள் தொகுதியிலே இருந்து சுமார் 100 பேர் நேரில் வந்து உம்மீது புகார் கொடுத்தார்களே என்று கேட்டபோது, அவர்கள் எல்லாம் அங்கே போட்டியிட்ட வேட்பாளர் பணம் கொடுத்து அழைத்து வந்தவர்கள் என்ற விவரத்தையும் கூறினார்.

நான் அவரிடம் இந்த விவரங்களையெல்லாம் அறிந்து கொள்வதற்காகத் தான் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது; வேட்பாளர்களும், பொறுப்பாளர்களும் தந்த அறிக்கை மீது எடுக்கப்பட்டது தற்காலிக நடவடிக்கைதான். அவர்களின் புகார்களையும், அதற்கு நீங்கள் தற்போது தரும் விளக்கங்களையும் நன்றாகப் படித்து, அவற்றிலே என்ன உண்மை என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு தான் கழகம் இறுதி முடிவெடுக்கும் என்று நான் கூறிய பிறகு, அந்த ஒன்றியச் செயலாளரும், அவருடன் வந்தவர்களும் மன ஆறுதலோடு திரும்பினார்கள்.

இது ஒரு உதாரணம்! இன்னொரு மாவட்டத்திலிருந்து; விளக்கம் கேட்டவர்கள் எல்லாம் இரண்டு மூன்று பேர் ஒன்றாகச் சேர்ந்து தலைமைக் கழகத்திலே விளக்க அறிக்கையினைக் கொடுத்து விட்டு, என்னிடம் ஒரு நகலை நேரில் கொடுக்க முடியாததால், என் வீட்டில் அதனைக் கொடுத்துவிட்டு, எப்படியாவது தங்களைக் காப்பாற்ற வேண்டுமென்று தலைவரிடம் கூறுங்கள் என்று சொல்லிச் சென்றிருக்கிறார்கள். தற்காலிக நடவடிக்கைக்கு ஆளாகி உள்ளவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் விளக்கமளித்துள்ளார்கள். அந்த விளக்கங்களில் எல்லாம், அவர்கள் கடந்த காலத்தில் ஆற்றிய கழகப் பணிகள், ஏற்றுக் கொண்ட இன்னல்கள், தற்போது அவர்கள் மீது சாட்டப்பட்டுள்ள புகார்கள் எந்த வகையிலே அமைந்தவை என்பதையெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

கழகம் 33 பேர் மீது நடவடிக்கை எடுத்துவிட்டது, இனிமேல் கழகம் அவ்வளவுதான், அந்த 33 பேரில் ஓரிருவர் கழகத் தலைமையையும், கழகப் பொருளாளரையும் கடுமையாகச் சாடி அறிக்கைகள் கொடுக்கத் தொடங்கி விட்டார்கள், இனி கழகம் இல்லை, நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களையெல்லாம் தேடிச் சென்று அவர்களிடம் பேட்டி கண்டு, அதிலே ஏதாவது ஓரிரு வார்த்தைகள் கழகத் தலைமையைக் குற்றஞ்சாட்டி இருக்காதா, அதை ஊதிப் பெரிதுபடுத்தலாமா, அதற்கு எப்படி தலைப்புப் போடலாம் என்றெல்லாம் துடியாய்த் துடிக்கின்ற அந்த இதழாளர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றம். கழகம் அனைத்து இடங்களிலும் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றுவிட்டது, கழகம் இனி அவ்வளவுதான், எழவே எழாது என்றெல்லாம்

தற்காலிக நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் நினைத்திருந்தால், இத்தனை பேரோடு வந்து விளக்கம் தந்திருப்பார்களா? எங்கள் மீது தவறில்லை, புகார் தவறாகக் கூறப்பட்டுள்ளது, கழகத்திலே தொடர்ந்து பணியாற்ற அனுமதி அளியுங்கள் என்று கீழே விழுந்து கதறுகிறார்கள் என்றால் இதுதான் திராவிட முன்னேற்றக் கழகம். இதையா அழித்துவிடப் பார்க்கிறார்கள்? விளக்கம் அளிக்க வந்த ஒன்றியச் செயலாளரும், அவருடன் வந்தவர்களும் கதறி அழுதார்களே, அவர்கள் எல்லாம் கழகத்தினால் என்ன பயன் கண்டார்கள்? சட்டப்பேரவை உறுப்பினராகத் தவிக்கிறார்களா? நாடாளுமன்ற உறுப்பினராகலாம் என்று கனவு காண்கிறார்களா? தோற்றுப்போன கழகம்தானே, இதிலே நீடிக்க விரும்புகிறார்களே, அதற்காகப் பல மைல் தூரம் ஓடிவந்து விளக்கம் அளிக்கிறார்களே, அவர்கள் என் கால்களில் விழுந்து கழகத்திலிருந்து நீக்கி விடாதீர்கள் என்று கெஞ்சுகிறார்களே; என் அருமை உடன்பிறப்புகளே, அவர்கள் அல்லவா கழகத்தின் ரத்த நாளங்கள். கழகம் உண்மையைப் புரிந்து கொள்ளாமல், தீர விசாரிக்காமல் எந்த ஒரு தொண்டர் மீதும் நடவடிக்கை எடுத்து விடாது! அதே நேரத்தில் புகார்கள் உண்மையாக இருக்குமானால், ஏதோ ஒன்றை எதிர்பார்த்து ஓரிருவர் தவறு செய்திருப்பார்களேயானால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமலும் இருந்து விடாது. வீண் புகார்களை உண்மையென நம்பி நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது.

அது மாத்திரமல்ல; கழகத்திலே நடு மட்டத்திலே இருப்பவர்கள் மாத்திரமல்ல; மேல்நிலையிலே உள்ளவர்கள், கழகத்தின் மூத்த முன்னோடிகள் என்பவர்களே, தங்களையும் அறியாமல் இந்தத் தேர்தலில் சில தவறான செயல்களிலே ஈடுபட்டார்கள் என்பதையும் நான் நன்றாகவே அறிவேன். அவர்கள் மீது நடவடிக்கை கிடையாதா? நாங்கள்தான் தவறு செய்தோமா? என்ற எண்ணம் கூட ஒருசிலருக்கு எழலாம். உங்கள் எண்ணத்திலே வருவது, என் கவனத்திற்கு வராதா என்ன?

மேலும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தங்கள் மாவட்டத்தில் குழு ஒன்றைச் சேர்த்துக்கொண்டு, அந்தக் குழுவின் சார்பில் கூட்டங்களை நடத்துவதும், அதிலே தங்கள் புகைப்படங்களைப் பெரிதாகப் போட்டுக் கொள்வதோடு,

பொறுப்பிலே உள்ள மற்றவர்களின் புகைப்படங்களைப் புறக்கணிப்பதுமான செயல்களில் ஈடுபட்டுவருவதும் என் கவனத்திற்கு வராமல் இல்லை. அவர்களுக்கு அ.தி.மு.க. எதிரியாக, எதிர்க்கட்சியாகத் தெரிவதைவிட, நம்மவர்கள்தான் மிக நெருங்கிய எதிரிகளாகத் தெரிகிறார்கள். இப்படிப்பட்ட செயல்களும் கடந்த தேர்தலில் நாம் தோற்க ஒரு காரணம் என்பதை அவர்கள் எப்போதுதான் புரிந்துகொள்ளப் போகிறார்களோ? நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிகளும், சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளும் மட்டுமே கழகத்தின் வரலாறு அல்ல. தி. மு. கழகம் போன்ற மாபெரும் இயக்கத்தில் தேர்தல் வெற்றி கண்டு வெறி கொண்டு அலையவும் மாட்டோம்; அதே நேரத்தில் தோல்வி

கண்டு துவண்டுவிடவும் மாட்டோம்.

தற்காலிகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் தவறே செய்யாதவர்கள், தேர்தலில் சிறப்பாகப் பணியாற்றினார்கள் என்றெல்லாம் நான் நம்பத் தயாராக இல்லை. வேட்பாளர்களும், பொறுப்பாளர்களும் அளித்த அறிக்கையில் குறிப்பிட்டுப் புகார்கள் கூறப்படாததால் அவர்கள் இப்போது நடவடிக்கைக்கு ஆளாகாமல் இருந்திருக்கலாம். ஆனால் உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் என்பதைப் போல தவறு செய்தவர்கள், தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும். அதற்கான நாட்கள் தள்ளிப் போகலாம், அவ்வளவுதான்.

உயர்நிலை செயல் திட்டக் குழு நடைபெற்றபோது, அதிலே பேசிய ஒரு உறுப்பினர், “தலைவர் அவர்களே, நீங்கள் நிச்சயமாக யார் மீதும் நடவடிக்கை எடுக்கமாட்டீர்கள்; ஏனென்றால் உங்கள் மனம் மிகவும் இளகியது; யார் மீதும் நடவடிக்கை எடுக்க உங்களுக்கு மனம் வராது” என்று கூறினார். நான் அப்போது எதுவும் கூறவில்லை. பேரறிஞர் அண்ணா ஒரு முறை கூறினார், நான்கை ஐந்தாக ஆக்க வேண்டும், ஐந்தை ஆறாக ஆக்க வேண்டும், மாறாக ஆறை ஐந்தாக ஆக்கி விடக்கூடாது என்றார். நானும் அதையே நினைத்துக் கொண்டிருப்பது உண்மைதான். ஒருசில கட்சிகளில் ஒருவர் நினைத்தால் இருக்கலாம், அவர் நினைக்கவில்லையென்றால் கட்டம் கட்டி விடுவார்கள் என்ற நிலையிலே நான் இல்லைதான். ஆனாலும் தவறு அளவுக்கு

மீறுமேயானால், நடவடிக்கை எடுக்கப்பட்டே தீர வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அண்ணா கூறியது இது. பெரியார் கூறியதோ, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பதில் கட்டுப்பாடுதான் இயக்கத்திற்கு மிகவும் முக்கியமானது என்றார். எனவே நமது இயக்கத்திற்குக் கட்டுப்பாடு மிக மிக முக்கியம். அதைக்காப்பதற்கு, உடன்பிறப்பே நீங்கள் ஒவ்வொருவரும் துணை நிற்க வேண்டும் என்பதே என்னுடைய இந்த மடலின் வேண்டுகோள்.

அன்புள்ள, மு.க. 29-6-2014

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 51 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 51 PDF ↗