உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 51

தொகுதி 51 · கடிதம் 3892

நெல் கொள்முதல் விலையை ரூ.2000 என உயர்த்துக!

2014-06-28

உடன்பிறப்பே,

நேற்றைய தினம் “சூட்சமத்தைப் புரிந்து கொள்வாய்” என்ற தலைப்பில் நான் வெளியிட்ட “துண்டறிக்கை” போன்ற கடிதத்தில் மறைமுகமாகத் தெரிவித்த உண்மைகளை நீ புரிந்து கொண்டிருப்பாய் என்று நம்புகிறேன். தேர்தலில் கழகத்தினர் சிலர் அவசரப்பட்டுச் செய்த தவறு மீது தி.மு. கழகம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தொடர்ந்து எழுதினார்கள்; மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஒரு சிலரைக் குறுநில மன்னர்கள் என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள். கழகம் அவர்கள்மீது நடவடிக்கையே எடுக்காது என்றார்கள். அவர்களின் எண்ணத்திற்கு மாறாக, கழகம் நடவடிக்கை எடுத்தவுடன், அய்யோ இவர்கள் மீது நடவடிக்கையா? இவர்கள் எல்லாம் எப்படிப்பட்ட தியாகிகள்? என்று எழுதுவதோடு, நடவடிக்கை எடுக்கப்பட்ட ஒன்றியச் செயலாளர்களை நேரில் சந்தித்து, அவர்களிடம் பேட்டிகண்டு பக்கம்பக்கமாக வெளியிடுகிறார்கள். நேற்று நான் எழுதியவாறு அவர்களின் நோக்கமெல்லாம் எப்படியாவது நம்முடைய திராவிட இயக்கத்தை இல்லாமல் செய்துவிட முடியாதா என்ற ஏக்கம்தான்! அதைப் புரிந்துகொண்டு நீ செயல்பட வேண்டுமென்பதற்காகத்தான் நேற்றையதினம் நான் விளக்கியிருந்தேன்.

அந்தக் கடிதத்தைத் தொடர்ந்து டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள விவசாயிகளின் முக்கிய கோரிக்கை ஒன்றைப் பற்றி இன்றையதினம் குறிப்பிட விரும்புகிறேன். இந்த ஆண்டு “கரீப்” பருவத்தில் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையைக் குவிண்டாலுக்கு 50 ரூபாய் உயர்த்தி ரூ. 1,360 ஆக நிர்ணயிப்பது என்றும்; முதல் தர நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு

55 ரூபாய் உயர்த்தி ரூ. 1,400 ஆக நிர்ணயிப்பது என்றும் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு மே திங்களில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு - தொடர்ந்து பயிர்கள் பொய்த்துப் போனது, கடும் வறட்சி, போதிய கடனுதவி அளிக்காதது, பயிர்க் காப்பீட்டில் முறைகேடுகள், வறட்சி நிவாரணத்தில் பாரபட்சம், கோமாரி நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகள் என வரிசையாகப் பிரச்சினைகள் தமிழகத்திலே உள்ள விவசாயிகள்மீது பாய்ந்து, பட்ட காலிலேயே படும் என்பதைப் போல அவர்கள் தொடர்ந்து படுகின்ற துயரங்களுக்கு அளவே இல்லாமல் போகிறது. ஆளும் அ.தி.மு.க.வினரோ விவசாயிகளிடம் அலட்சியத்தோடும், பாராமுகத்தோடும், நடந்து

கொள்கிறார்கள்.

தமிழகத்தில் சுமார் 22 இலட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நெல் சாகுபடி செய்யப்படும் காவிரி டெல்டா மாவட்டங்கள் என்று பார்த்தால், திருவாரூர், நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் முழுமையாகவும், திருச்சி, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்கள் பகுதியாகவும் நெல் சாகுபடி செய்யப்படுகின்றது. இந்த டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த விவசாயத் தொழிலாளர்கள், தற்போது தங்களுடைய வாழ்வாதாரத்திற்காகப் பல இலட்சக்கணக்கானவர்கள் செங்கல்சூளை, திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள், கட்டிடக் கட்டுமானப் பணிகள் என வேறு தொழில்களிலே ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள். இதனால் டெல்டா மாவட்டங்களில் விவசாயப் பணிகளைச் செய்வதற்கான தொழிலாளர்கள் கிடைப்பதில்லை.

வயலை உழவு செய்யும் டிராக்டர், நடவு செய்ய மற்றும் அறுவடை செய்யப் பயன்படும் இயந்திரங்களுக்குக் கூடுதல் வாடகை கேட்கிறார்கள். கேட்டால் டீசல் விலை ஏற்றம் என்கிறார்கள். இடுபொருள்களான விதை நெல், உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகளின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து உள்ளது. விவசாயம் செய்வதற்கான செலவுகளும், வேளாண் இடுபொருள்களின் விலையும் மிகவும் அதிகமாகிவிட்ட இந்த நிலையில் தான் நெல்லுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும், ஏக்கமும்

விவசாயிகள் மத்தியிலே ஏற்பட்டுள்ளது.

2006-2007இல் தி.மு.கழகம் ஆட்சிக்கு ஐந்தாவது முறையாக வந்தபோது சன்ன ரக நெல் குவிண்டால் 650 ரூபாய் என்றும், சாதாரணரக நெல் 620 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டது, அது படிப்படியாக உயர்ந்து 2009-2010 ஆம் ஆண்டில் சன்னரக நெல் விலையை 1,100 ரூபாய் என்றும், சாதாரணரக நெல் விலையை 1,050 ரூபாய் என்றும் உயர்த்தியிருந்தோம்.

கடந்த ஆண்டு நெல் கொள்முதல் விலை, மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையோடு தமிழக அரசின் மானியம் முறையே ரூ. 70, ரூ. 50 சேர்த்து, சன்னரக நெல்லுக்குக் குவிண்டாலுக்கு ரூ. 1,415 மற்றும் பொதுரக நெல்லுக்கு ரூ.1,360 என்று விலை நிர்ணயித்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அறிவித்தது. இந்த நிலை குறித்து அப்போது தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆறுபாதி கல்யாணம் செய்தியாளர்களிடம் கூறும் போது, “குறைந்தபட்சம் குவிண்டாலுக்கு ரூ. 2,000 கொள்முதல் விலையைத் தமிழக அரசு வழங்க வேண்டும்” என்று சொன்னார்.

நெல் பயிரிடும் விவசாயிகள் மற்றும் கரும்பு விவசாயிகளின் சிரமங்களை உணர்ந்து தி.மு.கழகப் பொதுக் குழுவிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றாக, “இன்றைய விலைவாசி உயர்வு, இடுபொருள்கள் விலை உயர்வு மற்றும் வேளாண்மைச் செலவினங்கள் ஆகியவற்றிற்கு ஏற்ப, நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2,000 ரூபாய் வழங்கிட வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அதனையேற்று விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகக் கூடிய வகையில், உற்பத்திச் செலவைவிடச் சற்றுக் கூடுதலாகக் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு 2,000 ரூபாய் என்று நிர்ணயித்து வழங்கிட இந்த அரசு முன்வர வேண்டுமென்று; தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

தஞ்சையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் மாநிலப் பொதுச் செயலாளர், சண்முகம், துரைமாணிக்கம் ஆகியோர் நேற்றையதினம் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், “மத்திய அரசு நெல் குவிண்டாலுக்கு 50 ரூபாய் உயர்த்தித் தருவதாக அறிவித்துள்ளது. இது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே நெல் குவிண்டாலுக்கு 2,000 ரூபாய்

வழங்க வேண்டும்” என்று தெரிவித்திருப்பதோடு, இதற்காகத் தஞ்சை, திருவாரூர், நாகையில் ஜூலை 5ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் யார் சொன்னால் என்ன? யார் கேட்டால் என்ன? என்ற ரீதியில், எவர் என்ன சொன்னாலும் ஏற்க மாட்டேன் என்று விவசாய சங்கத் தலைவர்கள் சொன்னதையும் கேட்காமல், எதிர்க்கட்சிகள் கூறுவதையும் கேட்காமல், தன்னிச்சையாக விலையைச் சன்ன ரக நெல்லுக்குக் குவிண்டாலுக்கு ரூ. 1,415 என்றும், பொதுரக நெல்லுக்கு ரூ. 1,360 என்றும் விலை நிர்ணயித்தார்கள். தற்போது மத்திய அரசு நெல் விலையைக் குவிண்டாலுக்கு 1,360 என்று உயர்த்திய நிலையில் தமிழக அரசு மேலும் எவ்வளவு ரூபாயை உயர்த்தப் போகிறது? முத்தரப்புக் கூட்டம் நடத்தி அங்கே யோசனை பெற்று விவசாயப் பெருமக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் குவிண்டாலுக்கு இரண்டாயிரம் ரூபாய் என்று உயர்த்தப் போகிறதா? அல்லது தன்னிச்சையாகவே உயர்த்தப் போகிறதா? அப்படி உயர்த்தினால் எந்த அளவுக்கு உயர்த்தப் போகிறார்கள் என்பதைப் பற்றியெல்லாம் தமிழக அரசு தகுந்த முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். இந்த உண்மைகளையெல்லாம் உடன்பிறப்பே, விவசாயப் பெருங்குடி மக்களுக்கு எடுத்துச் சொல்வதோடு, அவர்களின் கோரிக்கைக்குத் தி.மு. கழகம் என்றைக்கும் துணைநிற்கும் என்பதையும் நீ தெரிவித்திடுவாய் என்று நம்புகிறேன். அன்புள்ள, மு.க. 28-6-2014

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 51 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 51 PDF ↗