தொகுதி 51 · கடிதம் 3887
தாமதமாகும் நீதி; தடுக்கப்படும் நீதியாகி விடும்!
2014-06-08
உடன்பிறப்பே,
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது பற்றி விரிவாக நான் வெளியிட்ட கருத்துகள் அனைத்தும் ஒரு நூலாகவே ஆங்கிலத்திலும், தமிழிலும் வெளியாகியுள்ளது. பொதுவாக நான் நீதிமன்றங்கள் பற்றியோ, அங்கே நீதிபதிகளால் வெளியிடப்படும் தீர்ப்புகள் பற்றியோ விமர்சித்துப் பழக்கப்பட்டவனல்ல. ஆனால் ஜெயலலிதா தரப்பினர் நீதிமன்றங்களை எந்த அளவுக்கு மதிக்கிறார்கள், எவ்வாறெல்லாம் தங்களுடைய சுயநல நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள சட்ட விதிமுறைகளை முற்றிலுமாய் வளைத்து, நெளித்து பயன்படுத்திக் கொள்ள முனைகிறார்கள் என்பதை நான் மட்டுமல்ல; இந்த நாடே பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், 18- 11-2003 அன்று அதாவது 11 ஆண்டுகளுக்கு முன்பு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.என். வரியவா அவர்களும், எச்.கே. சீமா அவர்களும் அளித்த தீர்ப்பிலேயே, “குற்றம் சாற்றப்பட்டவர்களுடன் எந்த அளவிற்கு அரசுத் தரப்பினர் இணைந்து செயல்பட்டிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அரசு வழக்கறிஞர் குற்றவாளிகளோடு இணைந்து செயல்படுவது தெளிவாகத் தெரிகிறது. அதன் காரணமாகப் பொதுவாக நீதி கிடைக்காது என்ற ஒரு நம்பத்தகுந்த ஐயம் மக்கள் மனதிலே எழுந்துள்ளது. நீதி திசை திரும்பிச் செல்வது நிச்சயமாகத் தெரிகின்றது. இவ்வழக்கைத் தினமும் எடுத்து விசாரிக்க வேண்டும்” என்று கண்டிப்புடன் தெரிவித்த பிறகும்; இந்த வழக்கு விசாரணை முடியவில்லை என்றால், எந்த அளவிற்குக்
குற்றம் சாற்றப்பட்டவர்கள், தாங்கள் தப்பித்துக் கொள்வதற்காக வழக்கு விசாரணையை எல்லையே இல்லாமல் இழுத்தடித்துத் தாமதப்படுத்திடும் முயற்சியிலே ஈடுபட்டு, அதிலே பெருமளவுக்குத் தாங்கள் திட்டமிட்டபடி சாதித்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறதல்லவா?
தற்போது இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா அவர்கள் விரைவிலே விசாரணையை முடித்து, தீர்ப்பினைத் தர வேண்டுமென்ற அக்கறையோடும், சட்ட நெறிகளைக் காப்பாற்ற வேண்டுமென்ற கடமை உணர்வோடும் செயல்படுகிறார் என்ற போதிலும், தீர்ப்பு வெளிவராமல், முடிவே இன்றித் தள்ளிவைக்க என்னென்ன முயற்சிகள் செய்யப்படுகின்றன தெரியுமா?
இந்த வழக்கில் எப்படியெல்லாம் வாய்தாவுக்கு மேல் வரிசை வரிசையாக வாய்தாக்கள் வாங்கித் தப்பிக்கிறார்கள் என்பது பற்றி நான் ஏற்கனவே விளக்கிய நிலையில், தீர்ப்பினைத் தள்ளிப் போடத் தற்போது, இறுதிக்கட்டமாக, என்னென்ன முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள் என்ற ஒரு விவரத்தைக் கூறுவதற்காகத்தான் இந்தக் கடிதம்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் “லெக்ஸ் பிராபாட்டீஸ் டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம்” போன்றவை இணைக்கப்பட்டு, அவை குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் சொத்து என்று ஆவணங்களின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு 15 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறுகிறது. இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்த இந்த நிறுவனம், வழக்கு முடிவடைந்து தீர்ப்பு வெளிவரவிருக்கும் இந்த முக்கியமான தருணத்தில், திடீரென்று கடந்த மார்ச் திங்களில், வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென்றும், அது தொடர்பாகத் தாக்கல் செய்துள்ள மனுவின் மீது முடிவு காணும்வரை, ஜெயலலிதா மீதான மூல வழக்கை விசாரிக்காமல் தடைவிதிக்க வேண்டும் என்றும் ஒரு மனுவினைப் பெங்களூர் நீதிமன்றத்தில் கோரிக்கையாக வைக்கிறார்கள். அதாவது இவர்களின் கோரிக்கை
தங்கள் சொத்தினை விடுவிக்க வேண்டுமென்பது மாத்திரமல்ல;
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டுமென்பதுதான்!
இந்தக் கோரிக்கையின் மீது தீர்ப்பளித்த குன்ஹா, சொத்துக் குவிப்பு வழக்கில் கம்பெனிகள் இணைக்கப்பட்டுள்ளதை விடுவிக்கக் கோரித் தாக்கல் செய்த கோரிக்கையை ஏற்று விசாரிக்க ஒப்புக் கொள்வதாகவும், அதே நேரத்தில் மூல வழக்கினை நடத்தத் தடைகோரும் கோரிக்கையைத் தள்ளுபடி செய்வதாகவும் கூறிவிட்டார்.
தனி நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பை எதிர்த்து லெக்ஸ் பிராபர்ட்டீஸ் கம்பெனி சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டு, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணா அவர்கள்,
“சொத்துக் குவிப்பு வழக்கை விரைந்து முடிக்கவேண்டும் என்பதற்காகத்தான் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி பெங்களூரில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. வழக்கு விசாரணையினைத் தினமும் நடத்தவேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்தில் பல மனுக்கள் போடப்படுகின்றன. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து லெக்ஸ் கம்பெனியை விடுவிக்கவேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையதல்ல. ஆகவே மனுவைத் தள்ளுபடி செய்கிறேன். மேலும் நீதிமன்ற நேரத்தை வீணாக்கும் வகையில் செயல்பட்டதற்காக தனி நீதிமன்றம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்திருந்தது. அது குறைவானது என்பதால் 10 மடங்கு உயர்த்தி ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கிறேன். அபராதத் தொகையை வரும் 15 நாட்களில் செலுத்த வேண்டும்”.
இவ்வாறு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணா அவர்கள் தீர்ப்பளித்தார். (இதிலே இன்னும் வேடிக்கை என்னவென்றால், இதே லெக்ஸ் பிராப்பர்டீஸ் நிறுவனத்தினர் ஏற்கனவே ஒரு முறை தங்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று கோரிக்கைவைத்து, அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பது தான்.)
பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், கர்நாடகா உயர் நீதி மன்றம் ஆகியவை நிராகரித்த பிறகும், லெக்ஸ் பிராப்பர்டீஸ் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதனை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செளகான், செல்லமேஷ்வர், இக்பால் ஆகியோர், சொத்துக் குவிப்பு விசாரணைக்குத் தடை விதிக்குமாறு லெக்ஸ் பிராப்பர்டீஸ் நிறுவனம் முன் வைத்த கோரிக்கையை நிராகரிப்பதாக 8-5-2014 அன்று தெரிவித்தனர். மேலும் வழக்கு விசாரணையைத் தடுத்திடும் வகையில் செயல்படுவதாக அந்த நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்கை மேலும் இழுத்தடிக்க ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் பி.குமார் மனு ஒன்றைத் தாக்கல் செய்து வாதிடும்போது, “சொத்துக் குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள கம்பெனிகளை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்துள்ள மனுவை முதலில் விசாரணை நடத்த முன்னுரிமை கொடுப்பதுடன், மூல வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்துக் கம்பெனிகள் தொடர்பாக வழக்கைப் பெங்களூர் தனி நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கடந்த ஏப்ரல் 2ம் தேதி வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக வைத்து முதலில் கம்பெனிகள் தொடர்பான மனுவை விசாரணை நடத்த வேண்டும். சொத்துக் குவிப்பு வழக்கில் கம்பெனிகள் யாருக்குச் சொந்தம் என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே, எங்கள் கட்சிக்காரர் மீது சுமத்தியுள்ள குற்றங்களை நாங்கள் இல்லை என்று நிரூபிக்க முடியும்” என்றார்.
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து கம்பெனிகளை விடுவிக்கக் கோரும் இந்த மனுவின் மீது நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா 7-5-2014 அன்று வழங்கிய தீர்ப்பில், “அந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த மனு மீதான விசாரணை முடியும்வரை மூல வழக்கின்மீது விசாரணை நடத்தாமல் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்க முடியாது. ஒரேநேரத்தில் இரு வழக்குகளும் நடைபெறும். மூல வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்கு முன், கம்பெனிகள் தொடர்பான மனு மீது தீர்ப்பு வழங்கப்படும்” என்று தெளிவுபடுத்தினார்.
இதையும் மீறி, லெக்ஸ் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கியதை எதிர்த்து, அந்த நிறுவனத்தின் இயக்குனர் சிவக்குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்து, அந்த வழக்கு முடியும்வரை, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குக்குத் தடை விதிக்க வேண்டும் என்றார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ். சவுகான், சிக்ரி ஆகியோர் 13-5-2014 அன்று தடை விதிக்க முடியாது என்று கூறி, விசாரணையை 26-5-2014ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர். ஆனால் 26-5-2014 அன்று அதே உச்ச நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு ஜூன் 6ஆம் தேதி வரை தடை விதித்தும், ஜெயலலிதா மனு மீது தமிழக ஊழல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டிலே உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு எப்படிப்பட்ட பதிலைத் தாக்கல் செய்யும் என்று நமக்குத் தெரியாதா என்ன? ஆனால் ஊழல் தடுப்புப் பிரிவு உச்ச நீதிமன்றம் தெரிவித்த 6-6-2014ஆம் தேதிக்குள்; பதிலையே தாக்கல் செய்யாமல், மேலும் கால அவகாசம் தங்களுக்கு வேண்டுமென்று 6-6-2014 அன்று உச்ச நீதிமன்றத்திலே வந்து தெரிவித்திருக்கிறார்கள்.
இதற்கிடையே உச்ச நீதிமன்றம் விதித்த இந்த இடைக்காலத் தடையை ரத்துசெய்ய வேண்டுமென்று கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு, அதுபற்றி 6-6-2014 அன்று வாதாடிய கழகத்தின் மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரம், அரசு வழக்கறிஞரின் வாதத்தைக் கேட்காமல், சொத்துக் குவிப்பு வழக்குக்கு இடைக்காலத் தடை விதித்தது தவறு என்று வாதாடினார். ஆனால் ஜெயலலிதா அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையோ சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை மேலும் நான்கு வார காலத்திற்கு ஒத்தி வைக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்கள். நீதிபதிகள் வழக்கு விசாரணையை நான்கு வார காலத்திற்கு ஒத்திவைக்க முடியாது என்று கூறி, ஜெயலலிதா தரப்பினர் வரும் வெள்ளிக்கிழமைக்குள் பேராசிரியர் சார்பாகத் தாக்கல் செய்த மனுவுக்கு 13ஆம் தேதி
பதிலளிக்க வேண்டுமென்று தெரிவித்ததோடு, வரும் 16ஆம் தேதி வரை மீண்டும் பெங்களூரில் நடைபெறும் சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையை ஒத்திவைத்திருக்கிறார்கள். இதனைப் பார்க்கும் போது, “கங்கையிலே முளைத்தாலும் பேய்ச் சுரைக்காய் நல்ல சுரைக்காய் ஆகாது” என்ற பழமொழி நினைவுக்கு வந்தால், அதற்கு நான் பொறுப்பல்ல!
எப்படியோ சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை மேலும் பத்து நாட்களுக்கு உச்சநீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பெங்களூருவில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்களுடைய இறுதி வாதத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்கலாம் என்று நீதிபதி கூறிய பிறகும், அவ்வாறு இறுதி வாதத்தை வைக்காமல் காலம் கடத்துவதிலே ஈடுபட்டு வந்ததாலும், 26-5-2014 அன்றும் இறுதி வாதத்தைத் தொடங்க முன்வராத காரணத்தினாலும், நீதிபதி தனது கண்டனத்தைத் தெரிவித்ததோடு, பிற்பகல் 3 மணிக்கு இறுதி வாதத்தைத் தொடங்கலாம் என்றும், அதுவரையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி ஆகியோர் கூண்டில் நிற்க வேண்டுமென்றும் உத்தரவிட்ட சம்பவமும் நடைபெற்றது.
இந்த வழக்கு பற்றி ஆங்கில நாளேடு “டைம்ஸ் ஆப் இந்தியா” 26-5-2014 அன்று வெளியிட்ட செய்தியில், “ஜெயலலிதாவின் அதிகார வளர்ச்சியைச் சொத்துக் குவிப்பு வழக்கு பாதிக்கும்” என்ற தலைப்பில் ஒரு நீண்ட கட்டுரையே தீட்டியிருந்தது.
“நெருங்குகிறது தீர்ப்பு நாள்” என்ற தலைப்பில் 4-6-2014 தேதியிட்ட “இந்தியா டுடே” தமிழ் வார இதழ் எழுதிய கட்டுரையில் எப்படியும் இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்ப்பு வெளியாகி விடலாம் என்று தெரிகிறது” என்று எழுதியுள்ளது.
இதற்கிடையே 29-5-2014 அன்று பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பினர் தாக்கல் செய்த மற்றொரு மனுவில், விசாரணை அதிகாரியாக இருந்த திரு. நல்லம நாயுடுவின் பரிந்துரைப்படி சொத்துக்களை முடக்கியது தவறு என்று தெரிவித்தார்கள். இந்த மனு மீது 4-6-2014 அன்று தீர்ப்பு வழங்கிய குன்ஹா அவர்கள், “நல்லம நாயுடுவுக்கு சொத்துக்களை முடக்கும் அதிகாரம் இல்லை என்று குற்றவாளிகள் தரப்பில்
எடுத்துவைக்கும் வாதம் ஏற்புடையதல்ல; மேலும் கடந்த 1999 முதல் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்களைத் தாக்கல் செய்துள்ள குற்றவாளிகளுக்கு, வழக்கு தொடர்ந்த 17 ஆண்டுகளுக்குப் பின் தான் விசாரணை அதிகாரிக்கு சொத்துக்களை முடக்கும் அதிகாரம் இல்லை என்பது நினைவுக்கு வந்ததா? இது இவ்வழக்கை இழுத்தடிக்கும் முயற்சி என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று கூறிக் குற்றவாளிகள் மற்றும் கம்பெனிகள் சார்பில் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை எப்படியெல்லாம் இழுத்தடிக்கப்படுகிறது என்பதற்கு இவைகள் எல்லாம் நல்ல விளக்கங்களாக அமையுமென்று கருதுகிறேன். Justice delayed, is Justice denied என்பது முதுமொழி. தாமதமாகும் நீதி, தடுக்கப்படும் நீதியாகிவிடும் அல்லவா?
அன்புள்ள, மு.க. 8-6-2014
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 51 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 51 PDF ↗