உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 51

தொகுதி 51 · கடிதம் 3886

அந்த நாள்; என்றுதான் வருமோ?

2014-06-07

உடன்பிறப்பே,

இன்று 7-6-2014!

இப்போது என்னுடைய நினைவு பத்தாண்டுகளுக்குப் பின் நோக்கிப் பயணம் செய்து 2004ஆம் ஆண்டில் இதே ஜூன் 7ஆம் தேதியில் நிற்கிறது! ஆம்; 7-6-2004 அன்றுதான் டெல்லியில் நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய இந்தியக் குடியரசுத் தலைவர், டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள், “தமிழ் செம்மொழியெனப் பிரகடனப்படுத்தப்படும்” (Tamil will be declared as a Classical Language) என்று அறிவித்தார். அந்த அறிவிப்பு, உண்மையான தமிழ் அறிஞர்களையும், தமிழ் ஆர்வலர்களையும், உலகெங்கிலும் வாழும் தமிழர்களையும் மகிழ்ச்சிக் கடலிலே ஆழ்த்தியது.

இதனைத் தொடர்ந்து அதே 2004ஆம் ஆண்டு, ஆகஸ்ட் திங்கள் 21, 22 ஆகிய நாள்களில் சேலம் மாநகரில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகச் சிறப்பு மாநாட்டில் அமைதியாகக் கழகப் பணியாற்றும் செயல் வீரர்களில் ஒருவரான பேராசிரியர் மு.பி. பாலசுப்பிரமணியம் முன்மொழிந்திட, திருவில்லிப்புத்துர் தம்பி ச. அமுதன் வழிமொழிந்திட ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அந்தத் தீர்மானம்,

“கடந்த ஒரு நூற்றாண்டாகத் தமிழறிஞர்கள் பலரும், தமிழ்மொழி உயர்தனிச் செம்மொழியேயென்று தக்க சான்றுகள் தந்து, வலியுறுத்தி வந்தாலும், தமிழ்மொழியின் அந்தச் சிறப்புத் தகுதியை மத்திய அரசு ஏற்கவேண்டும் என்பதைக் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதே, பிரதமர் வாஜ்பய் அவர்களுக்குக் கடித வாயிலாகவும், நேரிலும் பலமுறை வலியுறுத்தி வந்ததுடன், தி.மு.க. நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையிலும் அதனை இடம்பெறச் செய்து, தமிழ்மொழியைச் செம்மொழியென அறிவிக்க வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தியதற்கிணங்க,

மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, அதனை ஏற்றுக் குடியரசுத் தலைவர் உரையில் அறிவித்திருப்பதை இம்மாநாடு வரவேற்பதுடன், விரைவில் அதற்குரிய அரசாணை வெளியிடவும் கேட்டுக்கொள்கிறது.”

இதுதான் அந்தத் தீர்மானம். இதனைத் தொடர்ந்து திருமதி சோனியா காந்தி அவர்களின் வழிகாட்டுதலிலும், டாக்டர் மன்மோகன்சிங் அவர்களின் தலைமையிலும் இயங்கி வந்த மத்தியிலிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, 12.10.2004 அன்று, தமிழைச் செம்மொழியெனப் பிரகடனம் செய்து அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிக்கை வெளியானதும், நான் எவ்வளவு குதூகலம் கொண்டிருப்பேன் - எனது உள்ளம் எந்த அளவுக்கு மகிழ்ச்சியால் துள்ளியிருக்கும் - எனது மனத்தில் எவ்வளவு பெருமிதம் முளைத்திருக்கும்; என்பதையெல்லாம் உடன்பிறப்பே, என்னை முழுதும் அறிந்த நீ நிச்சயம் உணர்வாய். தந்தை பெரியார் அவர்கள் என்னைத் தட்டிக்கொடுத்துப் பாராட்டியபோதெல்லாம் - அறிஞர் அண்ணா அவர்கள் என்னை அரவணைத்து உச்சிமுகர்ந்து அன்புமழை பொழிந்த போதெல்லாம்; அடைந்த மகிழ்ச்சிக்கு ஈடான மகிழ்ச்சி அப்போது என்னுள் குடிகொண்டிருந்தது.

அந்த நேரத்தில் சோனியா காந்தி அம்மையார் எனக்கு எழுதிய ஒரு கடிதத்தையும் நினைவூட்டுவது சரியாக இருக்குமென்று கருதுகிறேன். அந்தக் கடிதம்:-

November 8, 2005

Dear Thiru Karunanidhiji, I have received your letter of 28th October.

I am glad that all the formalities for declaring Tamil as a Classical Language have now been completed. This is an achievement for all the

constituents of the UPA Government, but particular credit goes to you and your Party.

With Regards,

Yours sincerely,

Sonia Gandhi.

தமிழைச் செம்மொழியென அறிவிக்க வேண்டுமென்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலே அல்ல; அதற்கு முன்பிருந்தே அந்த வேண்டுகோள் மத்திய அரசுக்குப் பல முறை அனுப்பப்பட்டுள்ளது. ஆட்சியிலே இருந்தாலும், எதிர்க்கட்சியாகச் செயல்பட்டாலும் திராவிட முன்னேற்றக் கழகம், தான் ஏற்றுக்கொண்ட இலட்சியங்களுக்காக என்றென்றும் தளராமல் குரல் கொடுத்துக் கொண்டேயிருக்கும் என்பதற்குக் கழக வரலாற்றில் எண்ணற்ற சான்றாவணங்கள் இருக்கின்றன. தமிழைச் செம்மொழியாகப் பிரகடனப்படுத்திட வேண்டுமென்பது கழகத்தின் இலட்சியம். அந்த இலட்சியத்தை நிறைவேற்றிட, ஆட்சியில் இருந்தபோது மேற்கொண்ட முயற்சிகளின் தொடர்ச்சியாக, எதிர்க்கட்சியாக இருந்தபோதும் கழகம் தொய்வில்லாத நடவடிக்கைகளை மேற்கொண்டது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்கிற முறையில் நான், பிரதமர் வாஜ்பய் அவர்களுக்குத் தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டிய அவசியம் குறித்து, 22.4.2003 அன்றே ஒரு கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தில்:

“தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமென்பது எனது இதயபூர்வமான கோரிக்கை. கடந்த பல ஆண்டுகளாக நான் வலியுறுத்தி வரும் இந்தக் கோரிக்கையை மீண்டும் உங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். தமிழ்மொழி எப்போது தோன்றியது என்பதை இதுவரை எந்த அறிஞரும் கண்டுபிடிக்கவில்லை. கல்தோன்றி மண் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய மிக மூத்த மொழி தமிழ்மொழி என்று அறிஞர்கள் பலர் கூறியுள்ளனர். இதுவே தமிழின் தொன்மையைப் பறைசாற்றுகிறது. அத்தகைய பெருமை வாய்ந்த தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை நான் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறேன். தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாகப் பலமுறை நான் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன். இந்நிலையில், தங்கள் தலைமையில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, நீண்ட எதிர்பார்ப்புடன் கூடிய இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் என்று நம்புகிறேன்” என்று மீண்டும் மத்திய அரசுக்கு நினைவூட்டி, வலியுறுத்தினேன்.

அதே 2003ஆம் ஆண்டில், தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளின் மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களை நேரில் சந்தித்து, தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தி மனு கொடுத்தனர். இந்த வேண்டுகோள்கள் எல்லாம் சேர்ந்து தான் 2004ஆம் ஆண்டு மத்திய அரசால் அறிவிப்பாக வெளிவந்தது. இவ்வாறு அரும்பாடுபட்டுக் கொண்டு வந்த இந்த செம்மொழி அறிவிப்பினைத் தொடர்ந்து, அப்போது மத்திய அரசில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த நண்பர் அர்ஜுன் சிங் அவர்களிடம் நான் வைத்த கோரிக்கையை அவர் அன்போடு ஏற்று, அதன் விளைவாகச் செம்மொழி மத்திய அலுவலகத்தையே மைசூரிலிருந்து தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து சேர்த்தோம். இதற்கான ஆணையும், செம்மொழி நிறுவனத்திற்கான சட்ட விதிமுறைகளுக்கான மத்திய அரசின் ஒப்புதலும் வருவதற்குத் தாமதமானபோது என்னுடைய செயலாளர்களில் ஒருவரான தம்பி கே. ராஜமாணிக்கம், ஐ.ஏ.எஸ்., அவர்களை டெல்லிக்கே அனுப்பி, அப்போது மத்திய அமைச்சராக இருந்த தம்பி டி.ஆர். பாலுவுடன் அர்ஜுன் சிங் அவர்களை நேரில் சந்திக்க வைத்து, அன்று ஒரே நாளில் மத்திய அமைச்சரே முன்னின்று மத்திய அரசின் அனுமதிகளையும், ஆணைகளையும் பெற்றுக் கொடுத்து உதவியதும் என்னுடைய நினைவிலே இருக்கிறது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத் தொடக்க விழா 30.6.2008 அன்று நடைபெற்றபோது ஆண்டுதோறும் செம்மொழித் தமிழ் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் அறிஞருக்கு 10 இலட்சம் ரூபாய் பொற்கிழி விருது வழங்கிட ஒரு கோடி ரூபாய் நிதி என் சார்பில் வழங்கப்படும் என அறிவித்து, அதன்படி செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் “கலைஞர் கருணாநிதி செம்மொழி அறக்கட்டளை” தொடங்கிட 21.7.2008 அன்று ஒரு கோடி ரூபாய் என்னுடைய சொந்த நிதியிலிருந்து வழங்கினேன்.

சென்னை தலைமைச் செயலகத்தில், சட்டமன்ற வளாகம் இருந்த இடத்தில் பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நூலகம் ஒன்றினை நிறுவி, பழம்பெரும் தமிழ் நூல்களையும், அரிய ஓலைச் சுவடிகளையும் அங்கே கொண்டு வந்து சேர்த்தோம்.

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் முக்கியமானதொரு அரசு வளாகத்தில் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கே முதலமைச்சராக இருந்த நான் நேரில் சென்று, தமிழறிஞர்களை எல்லாம் அழைத்து அடிக்கடி கூட்டங்களை நடத்தி, செம்மொழியை எப்படியெல்லாம் மேலும் வளர்ச்சியுறச் செய்யலாம் என்பதற்கான திட்டங்களையெல்லாம் வகுத்தேன். செம்மொழி மத்திய நிறுவனத்திற்குப் புதிய அலுவலகம் கட்டுவதற்கான இடத்தை ஒதுக்கி, நிதியை ஒதுக்கி அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் கழக ஆட்சியிலே செய்யப்பட்டன. இவ்வளவு அரும்பாடுபட்டுக் கொண்டுவந்த அந்தச் செம்மொழி நிறுவனமும், செம்மொழி அறிவிப்பும், கழக ஆட்சி 2011ஆம் ஆண்டு மாறிய பிறகு என்ன கதியில் இருக்கின்றன?

“செம்மொழி”யைக் கொண்டு வர முழுமுதல் காரணமாக இருந்தவன் நான் என்ற காரணத்தால், இந்த அ.தி.மு.க. ஆட்சிக்கு, குறிப்பாக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு “செம்மொழி” என்றாலே ஒரு ஒவ்வாமை (அலர்ஜி). அதைப் பற்றி நினைப்பது கூடப் பாவம் என்று கருதுகிறார்கள். தலைமைச் செயலகத்தில் இயங்கி வந்த பாவேந்தர் செம்மொழித் தமிழாய்வு நிறுவன நூலகத்தை பதவியேற்பதற்கு முன்பாகவே தூக்கி வெளியே எறிந்தார்கள். தற்போது அந்த நூலகம் எங்கே இயங்குகிறது என்றே தெரியவில்லை. அதுபோலவே செம்மொழி அலுவலகம் என்ன ஆனது, இயங்குகிறதா இல்லையா என்ற விவரமும் தெரியவில்லை. எனக்கு “சன் தொலைக்காட்சி” நிறுவனத்திலிருந்து கிடைத்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயைச் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்திற்கு அளித்து, அதிலிருந்து கிடைக்கும் நிதியிலிருந்து தமிழ் மொழி ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் பத்து இலட்ச ரூபாயில் விருது அளிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டவாறு, அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து முறையாக வழங்கப்படவே இல்லை.

செம்மொழி மத்திய நிறுவனத்திற்காகக் கட்டப்பட வேண்டிய கட்டிடப் பணிகளும் விரைவுபடுத்தப்படாமல் அப்படியே கிடக்கின்றது. சில நாட்களுக்கு முன்பு இந்த நிறுவனத்திற்கு துணைத் தலைவரான டாக்டர் அவ்வை நடராஜன், மத்திய மனித வள மேம்பாட்டுத் துறைக்கு எழுதிய கடிதத்தில், செம்மொழி நிறுவனத்திலிருந்து அனுபவம் வாய்ந்த தமிழறிஞர்களை

வெளியேற்றி விட்டு, புதியதாக மீண்டும் தேர்வு செய்ய நடவடிக்கை எடுத்திருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்திருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் அவ்வை நடராஜன் துணைத் தலைவராக மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட போதிலும், அவருக்கு அதற்கான அதிகாரம் அளிக்கப்படாமல், இயக்குநருக்கே முழு அதிகாரமும் அளிக்கப்பட்டுள்ளதாம். தற்போது சென்னை ஐ.ஐ.டி. இயக்குநராக இருப்பவர்தான், செம்மொழி நிறுவனத்தின் இயக்குநராகவும் பொறுப்பு வகிக்கிறார். இதுபற்றியெல்லாம் தமிழக அ.தி.மு.க. அரசு நமக்கென்ன என்ற அலட்சியமான பாணியில் அக்கறையற்ற நிலையிலே செயல்படுகிறது. கடந்த மூன்றாண்டு காலத்தில் முதல் அமைச்சரோ, யாராவது அமைச்சர்களோ இந்தச் செம்மொழி நிறுவன அலுவலகத்திற்கு ஒரு முறையாவது சென்றிருப்பார்களா, நிறுவனத்தின் நடவடிக்கைகள் பற்றி ஏதாவது கூட்டம் நடத்திப் பேசியிருப்பார்களா என்பதே சந்தேகம்தான்!

இந்தியாவில் தற்போது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆட்சி மொழியாகத் தமிழ் இருக்கிறது. இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. சிங்கப்பூரிலும், மலேசியாவிலும் ஆட்சி மொழிகளில் ஒன்றாகத் தமிழ் இடம்பெற்றுள்ளது. தென்னாப்பிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அரசில், செம்மொழிக்கு அங்கீகாரம் இருக்கிறதா?

செம்மொழி என்றால், அது தமிழறிஞர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் மட்டும் உரிமையுடையதல்ல. தமிழ் மொழியின் பால் அக்கறை கொண்டவர்கள் அனைவருக்கும் அதிலே பொறுப்பு உண்டு. தமிழ் செம்மொழியாக ஆக்கப்பட்டதால் தமிழகத்திற்கு என்னென்ன பயன்கள் ஏற்படும் என்றால்;

அனைத்து இந்தியப் பல்கலைக்கழகங்களிலும் தமிழ்த் துறை, தனித் துறைகளாக உருவாகும். இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழு தமிழைச் செம்மொழியாக ஏற்றால், உலகப் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் அதை ஏற்கும். தமிழ் மொழிக்கும், தமிழர்க்கும் உலக அளவில் தன் மதிப்பு உயரும். பன்னாட்டு மொழிக் கலைக் களஞ்சியங்களில் தமிழ் இலக்கியங்கள் இடம் பெறும். பல்கலைக்கழகங்களில் தமிழ் மொழிக்குத் தனி இருக்கை நிறுவப் பெறும். சமஸ்கிருதத்திற்கு இந்திய அரசு நேரடியாக 40

கோடி ரூபாயும், அரசு சார்பு நிறுவனங்கள் மூலமாக 100 கோடி ரூபாயும் ஒதுக்கி அந்த மொழியின் வளர்ச்சிக்கு உதவி வருவது போல, தமிழ் மொழி வளர்ச்சிக்கும் உதவி கிடைக்க வாய்ப்பு ஏற்படும். இந்திய மொழிகளில் மட்டுமல்லாது ஆங்கிலம், பிரெஞ்சு போன்ற மொழிகளில் தமிழ் இலக்கியங்களும், நவீன படைப்புகளும் மொழிபெயர்க்கப்பட்டு உலகெங்கும் பரவும்.

இந்த நன்மைகளைக் கருதியாவது அ.தி.மு.க. அரசு செயல்படுகிறதா என்றால், “இல்லை” என்பது தான் வேதனை. செம்மொழியினால் வரக்கூடிய நன்மைகளை எண்ணிப் பாராமல், செம்மொழி என்ற அறிவிப்பு வெளிவரக் காரணமாக இருந்தவன் நான் என்பதால், செம்மொழி என்றாலே ஒவ்வாமையைக் காட்டுகின்ற இந்த அரசு தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டாமா என்று தமிழர்கள் அனைவரும், தமிழ் உணர்வு உள்ளவர்கள் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டாமா என்பதை, செம்மொழி அறிவிப்பினை நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் அறிவித்த அந்த நாளை; இன்று நான் நினைவுபடுத்துகின்றேன். அன்புள்ள, மு.க. 7-6-2014

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 51 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 51 PDF ↗