தொகுதி 51 · கடிதம் 3877
எச்சரிக்கை தேவை; வெற்றி நமதே!
2014-04-23
உடன்பிறப்பே,
நாளை தமிழகத்திலே நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. கடந்த இரண்டு மூன்று மாதங்களாக ஒவ்வொரு நாளும் நீர் பாய்ச்சி, இமையசைக்காமல் காப்பாற்றி, களைகளை நீக்கி, உரமிட்டு பயிர் வளர்த்து, நீ உழைத்த உழைப்புக்கான அறுவடையைக் காணக்கூடிய நாள்! நேற்று மாலையோடு ஒலிபெருக்கி வாயிலாகப் பிரச்சாரம் செய்வது முடிந்துவிட்டது. நமது கழகத்தின் சார்பில் நானும், பொதுச் செயலாளர் பேராசிரியரும் வயதையும் உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் எங்களால் முடிந்த அளவுக்குக் காரிலும், வேனிலும் பயணம் செய்து பிரச்சாரம் செய்திருக்கிறோம். இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் 90 வயதைக் கடந்தும் ஈடுபட்ட அரசியல் தலைவர்கள் இந்தியாவிலேயே நானும், பேராசிரியரும், கேரளத்தில் அச்சுதானந்தமும்தான் என்று பத்திரிகைகளே சுட்டிக்காட்டியிருந்தன.
கழகப் பொருளாளர் தம்பி ஸ்டாலின் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. தமிழகம் முழுவதிலும் ஒரு தொகுதி பாக்கியில்லாமல், வேனிலேயே பயணம் செய்து பிரச்சாரம் செய்திருக்கிறார். இந்தத் தேர்தலில் அவருடைய பிரச்சாரம் பற்றிப் பாராட்டி எழுதாத ஏடுகளே இல்லை. கழக ஆட்சியின் போது தமிழக மக்களுக்காக ஆற்றிய பணிகள், சாதனைகள் பற்றியும்; அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாக அலங்கோலங்கள், அவலங்கள் பற்றியும், ஒவ்வொரு கூட்டத்திலும் திரண்டு வந்த மக்களிடையே எளிதில் புரியும் வண்ணம் கழகப் பொருளாளர் தம்பி ஸ்டாலின் விளக்கிச் சொன்னதை நீயே நேரிலும் கண்டிருக்கிறாய்; கேட்டிருக்கிறாய். முதலமைச்சர் ஜெயலலிதாவின் கேள்விகளுக்கெல்லாம் அவ்வப்போது ஆணித்தரமாகவும், ஆதாரங்களுடனும் பதிலளித்திருக்கிறார்.
அடுத்து கழகத்தின் முன்னணித் தலைவர்கள், கலையுலகத்தினர், கழகச் சொற்பொழிவாளர்கள், பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்கள், துணைப் பொதுச் செயலாளர்களான சகோதரி சற்குணப் பாண்டியன், வி.பி. துரைசாமி மற்றும் கவிஞர் கனிமொழி, ரகுமான்கான், திருச்சி சிவா, பேராயர் எஸ்றா சற்குணம், வாகை சந்திரசேகர், குஷ்பூ சுந்தர், கம்பம் செல்வேந்திரன், பேராசிரியர் சபாபதி மோகன், நூர்ஜகான் பேகம், சங்கரி நாராயணன், புலவர் இந்திர குமாரி, புதுக்கோட்டை விஜயா, தஞ்சை கூத்தரசன், வி.பி. ராஜன், நெல்லிக்குப்பம் புகழேந்தி, திண்டுக்கல் லியோனி, குமரிமுத்து, வாசு விக்ரம், இனிகோ இருதயராஜ், மனுஷ்யபுத்திரன் மற்றும் தோழமைக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் எல்லாம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்கள். முக்கியமாகத் திராவிடர் கழகத்தின் தலைவர், தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் ஒருநாள் கூடப் பாக்கியில்லாமல், தேர்தல் பயணத்தில் ஈடுபட்டு, கழகக் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை அறிவியல்பூர்வமாக விளக்கிப் பேசியிருக்கிறார். துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் என்னுடன் சுற்றுப்பயணத்தில் உடன் வந்தார். அவர்களுக்கெல்லாம் கழகத்தின் தலைவர் என்ற முறையில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நமக்கு எதிரானப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர், முதலமைச்சர் ஜெயலலிதாதான்! அலுங்காமல், குலுங்காமல், கெலிகாப்டரிலேயே அத்தனை ஊர்களுக்கும் பயணம் செய்து, அழைத்து வரப்பட்டவர்கள் பசியோடும், தாகத்தோடும் வெயிலின் கொடுமையில் இயற்கை உபாதைகளுக்குக்கூட வெளியே செல்ல முடியாமல் அடைத்து வைக்கப்பட்ட நிலையில், அவர்களிடையே எழுதிக் கொடுக்கப்பட்ட உரையை வரி விடாமல் படித்து, இடையிடையே “செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா” என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டு, ஒவ்வொரு கூட்டத்திலும் தன்னால் முடிந்த அளவுக்குப் பொய்களை வாரி இறைத்திருக்கிறார்.
நேற்றையதினம் சென்னையில் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்குத் தான் மூடு விழா நடத்தவில்லை என்றும், மக்கள் நலத் திட்டமாக இருந்தால் அதனை நிறைவேற்ற அ.தி.மு.க.
அரசு தயங்காது என்றும் ஒரு மிகப் பெரிய பொய்யை இறக்குமதி செய்திருக்கிறார். அதுபற்றி நேற்றைய தினம் நடைபெற்ற அண்ணா நகர் கூட்டத்தில் நான் விரிவாகவே பதிலளித்திருக்கிறேன். ஜெயலலிதா கூறிய அந்தப் பொய்த் தொகுப்பின் முதல் கருத்தாக, “மதுரவாயல் - சென்னை துறைமுக உயர்மட்டச் சாலைத் திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. அந்தத் திட்டத்தை நாங்கள் முழுமையாக எதிர்க்கவில்லை” என்று பேசியிருக்கிறார். அவருடைய கட்சிப் பத்திரிகையிலேயே வெளிவந்துள்ளது. இல்லை என்று மறுக்க முடியாது. ஆனால் மதுரவாயல் - சென்னை துறைமுக உயர்மட்டச் சாலைத் திட்டம் யாரால் தடுத்து நிறுத்தப்பட்டது, அதை எதிர்த்து அந்தத் திட்டத்தைச் செயல்படுத்திய ஒப்பந்ததாரர் நீதிமன்றத்திற்குச் சென்று 600 கோடி ரூபாய்க்கு மேல் தனக்கு இழப்பீடு தரவேண்டுமென்று வழக்கு தொடுத்தது, மத்திய அரசே மூத்த அதிகாரிகளை அனுப்பி தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுத்தது, அதையும் மீறி தமிழக அரசு, குறிப்பாக ஜெயலலிதா அந்தத் திட்டத்தைத் தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் பிரதமரே வந்து அடிக்கல் நாட்டினார் என்பதற்காகவே அந்தத் திட்டத்தை இயங்க விடாமல் தடுத்தார் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவார்கள்.
இறுதியாகச் சென்னை உயர்நீதிமன்றம் அந்தத் திட்டத்தைத் தொடரலாம் என்று அனுமதித்த பிறகும்கூட, ஜெயலலிதா அரசு, சமச்சீர் கல்வித் திட்ட வழக்கில் நடந்து கொண்டதைப் போலவே உச்சநீதிமன்றம் வரை சென்றது என்பதும் நினைவிலே கொள்ளத்தக்கது. அதையெல்லாம் அப்படியே மறைத்து விட்டு, சென்னையிலே ஜெயலலிதா பிரச்சாரம் செய்தபோது, மதுரவாயல் உயர் மட்டச் சாலைத் திட்டத்தை தாங்கள் முழுமையாக எதிர்க்கவில்லை என்று பேசியபோது, அதைக் கேட்ட மக்கள் எப்படியெல்லாம் சிரித்திருப்பார்கள்! நம்முடைய முதல் அமைச்சரைப் போல இந்த அளவுக்குப் பொய் சொல்வதற்கு யாரால் முடியும்; பொய்ச் சொல்வதில் அவரோடு போட்டியிடுவதற்கு யாராலும் இயலாது என்றுதானே எண்ணியிருப்பார்கள்!
இப்படித்தான் ஜெயலலிதா பிரச்சாரத்தை மார்ச் திங்களில் தொடங்கிய போதே, இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டினைத் தான்தான் கொடுத்ததாக ஒரு இமாலயப் பொய்யைக் கூறி, முஸ்லீம் பெருமக்கள் எல்லாம் உடனடியாகக்
கலைஞர் ஆட்சியில் அது கிடைத்தது என்று அறிக்கை மேல் அறிக்கை விடுத்தார்கள். பிறகு கரசேவையைத் தான் ஆதரிக்கவில்லை என்றும், அதற்காக ஆட்களை அனுப்பி வைக்கவில்லை என்றும் அடுத்த பொய்யைச் சொன்னார். அதற்கும் விளக்கமாகப் பா.ஜ.க. சார்பில் ஜெயலலிதா ஆட்களைக் கரசேவைக்கு அனுப்பி வைத்ததற்கு நன்றி கூறி அளித்த பேட்டி நாளேடுகளில் வெளிவந்ததை எடுத்துக்காட்டியிருந்தேன். டெல்லியில் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில் கரசேவையை ஆதரித்து ஜெயலலிதா பேசியதையும் எடுத்துக்காட்டியிருந்தேன். அதற்குப் பிறகு தொடர்ச்சியாக இலங்கைப் பிரச்சினை, காவிரிப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை, மீனவர் பிரச்சினை என்று எந்தெந்தப் பிரச்சினைகளில் எல்லாம் ஜெயலலிதா இரட்டை வேடம் போட்டு, நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருந்தாரோ, அவற்றைப் பற்றி தலைகீழாக மாற்றி ஒவ்வொரு பொய்யாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறார். அதற்கான விளக்கங்களை அவ்வப்போது நானும் விரிவாகத் தெரிவித்திருக்கிறேன்.
நேற்றைய தினம் மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த அ.தி.மு.க. அரசு தயங்கவில்லை என்றும், மக்கள் விரோதத் திட்டமாக இருந்தால் அதனை முடக்கி வைக்கவும் தயங்க மாட்டோம் என்றும் ஜெயலலிதா பேசியிருக்கிறார். இவர் ஆட்சிப் பொறுப்பேற்றதும் ஓமந்தூரார் வளாகத்தில் கழக ஆட்சியில் கட்டப்பட்டு, முறையாகச் செயல்பட்டு வந்த தலைமைச் செயலகத்தையும், சட்டமன்றத்தையும் முடக்கிவைத்தாரே, அது மக்கள் விரோதத் திட்டமா? ஜெயலலிதா பதில் கூறத் தயாரா? சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டேன் என்று சொன்னாரே, அது மக்கள் விரோதத் திட்டமா? பேரறிஞர் அண்ணா அவர்களின் நூற்றாண்டு நிறைவினையொட்டி, வேறு எங்குமில்லாத அளவுக்கு நூலகம் ஒன்றினைக் கட்டி, சிறப்பாக அனைவரும் பயன்பெற்று பாராட்டுகின்ற வகையிலே நடைபெற்றுக் கொண்டிருந்ததே, ஆராய்ச்சி மாணவர்கள் எல்லாம் அதனைப் பயன்படுத்திக்கொண்டு வந்தார்களே, அந்த நூலகத்தையே மருத்துவமனையாக மாற்றப்போகிறேன் என்று அறிவித்தது யார்? ஜெயலலிதா தானே? பிறகு நீதிமன்றத்தின் உத்தரவால், அந்த நூலகம் தொடரலாம் என்று ஆணை வந்த போதிலும், அந்த நூலகத்தைப் பராமரிப்பின்றி விட்டிருக்கிறார்களே,
அது தன்னலத் திட்டமா? இன்றையதினம்கூட அந்த நூலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் தங்களுக்கு ஊதியம் முறைப்படி வழங்கப்படவில்லை என்று அறிக்கை கொடுத்திருக்கிறார்களே? தமிழர்களின் நூற்றாண்டுக் கனவான தமிழ் மொழிக்குச் செம்மொழி தகுதி வேண்டுமென்று கேட்டு, மத்திய அரசிடம் அதற்கு ஒப்புதல் பெற்று, அதற்கான செம்மொழி தமிழாய்வு நிறுவன அலுவலகத்தையும் தமிழகத்திற்குக் கொண்டு வந்தோமே, அது தன்னலத் திட்டமா? சென்னையில், தலைமைச் செயலகத்தில், பாவேந்தர் ஆய்வு நூலகம் ஒன்றினைச் சிறப்பாகக் கழக ஆட்சியில் அமைத்து நடைபெற்று வந்ததே, அது தன்னலத் திட்டமா? மெட்ரோ ரெயில் திட்டம், எந்த அளவிற்கு வேகமாக நடைபெற்று வந்தது, தற்போது ஆமை வேகத்தில் நடக்கிறதே, இது மக்கள் நலத் திட்டம் இல்லையா? சென்னையின் இதயம் போன்ற நடுப்பகுதியில் கழக ஆட்சியில் தனியாரிடமிருந்து அரசு இடத்தைத் திரும்பப்பெற்று செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்டு, அதில் சென்னை வாழ் மக்கள் அன்றாடம் நூற்றுக்கணக்கில் பார்த்து மகிழ்ந்தார்களே, அது தன்னலத் திட்டமா? ஏன்? சென்னை - திருப்பதி அகல சாலைத் திட்டம் உட்பட 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அடிப்படைக் கட்டமைப்பு வசதிக்கான நெடுஞ்சாலைத் திட்டங்கள் எல்லாம் முடக்கப்பட்டதே, அவைகள் எல்லாம் மக்கள் நலத் திட்டங்கள் இல்லையா? அவைகளையெல்லாம் ஏன் ஜெயலலிதா முடக்கி வைத்தார்? சாதாரண ஏழையெளிய மக்கள் நலப் பணியாளர்கள் என்ன பாவம் செய்தார்கள்? கழக ஆட்சியிலே அவர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்களை ஜெயலலிதா அரசு விரட்டி விரட்டி அடிக்கிறதே, அது தன்னலத் திட்டமா? அந்த மக்கள் நலப் பணியாளர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா? அவர்களைப் பணியிலிருந்து நீக்கியதால் தற்கொலை செய்துகொண்டு இறந்தவர்கள் எத்தனை பேர்? அவர்களின் குடும்பங்கள் எல்லாம் இன்றைக்கு நடுத் தெருவில் நிற்கிறார்களே? அந்தத் திட்டம் தன்னலத் திட்டமா? ஏன் தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று தமிழர்களின், ஆராய்ச்சியாளர்களின் கனவை நினைவாக்கினோம்: அ.தி.மு.க. ஆட்சியில் அது மாற்றப்படவில்லையா? அது தன்னலத் திட்டமா? அமைப்புச் சாரா தொழிலாளர் நல வாரியங்கள் அமைத்தோமே,
சிறப்பாகச் செயல்பட்டதே, அது மக்கள் நலத் திட்டம் இல்லையா? எது மக்கள் நலத் திட்டம் இல்லை?
மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கக் கூடியதும், கருணாநிதி குடும்பத்தின் அட்சயப் பாத்திரம்தான் சேது சமுத்திரத் திட்டம் என்று ஜெயலலிதா வாய்க் கூசாமல் பேசியிருக்கிறார்!
சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தித் தமிழகம் முழுவதும் 23.7.1967 அன்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து எழுச்சி நாள் கூட்டங்கள் நடத்தினாரே, அது தன்னலத் திட்டமா?
சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்க விழாவைத் தடுக்க வேண்டும் என்பதற்காகச் சிலர் நீதிமன்றத்தின் மூலமாகத் தடை பெற முயன்றபோது, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களின் அமர்வு, “தேசிய நலனுக்காகக் கொண்டு வரப்படும் சேது சமுத்திரத் திட்டத்தைத் தடை செய்யும் நோக்கத்தோடு மனுதாரர் நீதிமன்றத்துக்கு விரைந்து வந்து வழக்கு தொடுத்துள்ளார். சேது சமுத்திரத் திட்டம் நாட்டிற்கு நல்ல பலனைக் கொடுக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். ஏனென்றால் தற்போது கப்பல்கள் இலங்கை நாட்டைச் சுற்றி வங்காள விரிகுடா கடலுக்கு வரவேண்டியுள்ளது. பாக்ஜலசந்தியிலே குறுக்காகக் கப்பல் கால்வாய் அமைத்தால் பெருமளவு பணமும், நேரமும் சேமிக்கப்பட ஏதுவாகும். இந்தக் கால்வாய் திட்டம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே விழாவுக்குத் தடை கிடையாது”.
- என்று கூறித் தீர்ப்பளித்தாரே, அதற்கும் ஜெயலலிதா உள்நோக்கம் கற்பிக்க முயலுகிறாரா?
2001 அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும், 2004ஆம் ஆண்டு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும், இதே ஜெயலலிதா சேது சமுத்திரத் திட்டத்தால் நம் நாடு மட்டும் அல்ல; தென் கிழக்கு ஆசிய நாடுகளும் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயன் அடையும். வாணிபமும் தொழிலும் பெருகும். இத்திட்டத்தின் தேவையை, முக்கியத்துவத்தை
உணர்ந்து முன்னுரிமை கொடுத்து ஒரு காலக்கெடுவுக்குள் நிறைவேற்றும்படி மைய அரசை விடாது தொடர்ந்து வலியுறுத்தும் என்றெல்லாம் குறிப்பிட்டாரே, அப்படியென்றால் ஜெயலலிதா குடும்பத்தின் அட்சயப் பாத்திரமாகச் சேது சமுத்திரம் திட்டம் அப்போது இருந்ததா? தற்போது அந்த வருவாய் இல்லை என்பதால் எதிர்க்கிறாரா? அதுதான் உண்மைக் காரணமா?
சேது சமுத்திரத் திட்டத்தை வரவேற்று, தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சித் தலைவர்கள் அறிக்கைகளையெல்லாம் கொடுத்தார்களே; பெருந்தலைவர் காமராஜர் அவர்களால், அருமை நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களால், இந்தத் திட்டம் வலியுறுத்தப்பட்டதே, அவர்கள் எல்லாம் தன்னலத்திற்காக இந்தத் திட்டம் வேண்டுமென்று சொன்னார்கள் என்று ஜெயலலிதா கூறுகிறாரா? அவர்கள் எல்லாம் சேது சமுத்திரத் திட்டத்தைத் தங்கள் குடும்பத்திற்கான அட்சயப் பாத்திரம் என்று தான் கருதினார்களா?
மீனவர்கள் பிரச்சினையில் தனக்குத்தான் அக்கறை என்றும், மற்றவர்களுக்கு அக்கறையில்லை என்றும் ஜெயலலிதா பேசியிருக்கிறார். “மத்திய அரசின் சார்பில், இரண்டு நாடுகளின் மீனவர் பிரதிநிதிகளைச் சந்திக்கவைக்க நாள் குறிப்பிட வேண்டுமென்று தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாகவும், தமிழக அரசிடமிருந்து பதில் வரவில்லை” என்றும் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களே ஜெயலலிதாவைப் பற்றியும், மீனவர் பிரச்சினையிலே அவருக்கு உள்ள அக்கறை குறித்தும் தெரிவித்தாரே, அது உண்மையா? இல்லையா? அதுதான் மீனவர்கள்பால் ஜெயலலிதா காட்டிய அக்கறையா?
16-3-2013 அன்றே பிரதமர் கடிதம் எழுதியிருக்கிறார். ஏன் அதற்குப் பதில் எழுதவில்லை? ஆறு மாதங்கள் கழித்து 20-9-2013 அன்றுதான் தமிழக முதல் அமைச்சர் இருநாட்டு மீனவர்களின் பிரதிநிதிகள் சந்திப்பதற்கான தமிழக அரசின் ஒப்புதலைத் தெரிவித்துப் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருப்பதாக, பிரதமரே 9-11-2013 தேதிய கடிதத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார். உண்மையிலேயே தமிழக மீனவர்களின் துன்பங்களில் ஜெயலலிதாவுக்கு அக்கறை இருக்குமானால், பிரதமரின்
கடிதத்திற்கு ஆறு மாதங்கள் தாமதம் செய்திருப்பாரா? மீனவர்கள் சிறை பிடிக்கும்போதெல்லாம் பிரதமருக்கு ஒரு கடிதத்தை எழுதி விட்டு, அதை அவசர அவசரமாக ஏடுகளிலே விளம்பரப்படுத்திக் கொண்டால், இந்திய மீனவர்களைப் பாதுகாப்பதாக அர்த்தம்
ஆகிவிடுமா?
சென்னையைச் சுற்றி இரண்டு நாட்கள் ஜெயலலிதா வலம் வந்தாரே; எதைப் பார்த்தார்? முக்கிய சாலைகளின் வழியாகவே சென்றதால்,
அவர் சிலவற்றைக் கண்டிருக்க முடியாது. போரூரில் 34.72 கோடி ரூபாய்ச் செலவில் மேம்பாலம் கட்டுவதற்குக் கழக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகளும் தொடங்கி நடந்து வந்தனவே; அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, அந்தப் பணிகள் ஏன் முடக்கி வைக்கப்பட்டது?
49.55 கோடி ரூபாய்ச் செலவில் மூலக்கடை பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி - அண்ணா நகர் இரண்டாவது நிழல் சாலை - திருமங்கலம் முகப்பேர் சாலை - உள்வட்டச் சாலை சந்திப்பில் 60.23 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணி - 69.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வடபழனியில் உள் வட்டச் சாலை - என்.எஸ்.கே. சாலை சந்திப்பில் மேம்பாலப் பணி - 117 கோடி ரூபாய்ச் செலவில் பெரியார் ஈ.வெ.ரா. சாலையில் நெல்சன் மாணிக்கம் சாலைச் சந்திப்பு மற்றும் அண்ணா வளைவில் மேம்பாலம் மற்றும் கீழ்ப்பாலம் அமைக்கும் பணி - 80.68 கோடி ரூபாய்ச் செலவில் வியாசர்பாடி ரெயில்வே மேம்பாலப் பணி - 1081.40 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை வெளிவட்டச் சாலைப் பணிகள் என்று கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட பணிகள் எல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் அப்படி அப்படியே நிற்கிறதே, இவைகள் எல்லாம் மக்கள் நலப் பணிகளா? அல்லது தன்னலப் பணிகளா?
இதே சென்னை மாநகரை எடுத்துக்கொண்டால் என்ன நிலைமை? குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவது தடுக்கப்படவில்லையே? தினந்தோறும் குப்பைகளை அகற்றுவதற்குப் பதிலாக 821 குப்பைத் தொகுப்பு மையங்களை உருவாக்கி, குப்பை மறைத்து வைக்கப்படுகிறதே; இது சுகாதாரச்
சீர்கேட்டிற்கும், கொசு உற்பத்திக்கும் புதிய புதிய நோய்கள் உருவாவதற்கும் முக்கிய காரணமாக உள்ளதே; கொசுத் தொல்லை - குண்டும் குழியுமான சாலைகள் - எரியாத தெரு விளக்குகள் - தூர்வாரப்படாத மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் - சீர் செய்யப்படாத பாதாளச் சாக்கடைகள் - எங்கெங்கும் மண்டிக் கிடக்கின்றனவே; இதுபற்றியெல்லாம் அ.தி.மு.க அரசோ, சென்னை மாநகராட்சியோ ஏதாவது கவலைப்படுகிறதா? ஜெயலலிதாதான் கவலைப்படுகிறாரா?
வாக்களிக்கும் மக்களைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எந்தவிதமான முயற்சியும் மேற்கொள்ளாமல், சட்டமன்றத்திலும், வெளியிலும் ஜனநாயகத்திற்கு விரோதமான நடவடிக்கைகளையே தொடர்ந்து ஊக்குவித்து வரும் ஜெயலலிதா, பொதுநலம், தன்னலம் பற்றியெல்லாம் பேசுவதற்கோ, சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொத்துக்களைக் குவித்து, வாய்தா வாங்கியே காலத்தையும் நீதியையும் தள்ளிவைத்துவரும் ஜெயலலிதா ஊழல் பற்றி உபன்னியாசம் செய்வதற்கோ எந்தவிதமான நியாயமும் இல்லை என்பதைத் தமிழக வாக்காளப் பெருமக்கள் நன்றாகவே புரிந்துகொண்டு, இந்த அரசுக்கு நல்ல படிப்பினையைத் தரத்
தயாராகிவிட்டார்கள்.
அதனால்தான் நான் கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் ஒரு வாக்கு; ஒவ்வொருவராலும் ஒரு வாக்கு என்பதைப் பற்றி விரிவாகக் கூறியிருந்தேன். எனவே கழகத் தோழர்கள் அனைவரும் அந்த அடிப்படை இலக்கணத்தை மனதிலே கொண்டு, தங்களால் குறைந்தபட்சம் ஒரு வாக்கு, அதற்கு மேல் எத்தனை வாக்குகளை வேண்டுமானாலும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அளித்திடவும், நமது வேட்பாளர்கள் அனைவரும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிடவும் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
எதிர்க்கட்சிகள் இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றுவிட வேண்டும் என்று எந்தக் காரியத்தையும் செய்திட துடித்துக் கொண்டிருப்பதால், நமது கூட்டணியின்
வேட்பாளர்களுக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள முகவர்கள் (ஏஜெண்டுகள்) கண்ணும் கருத்துமாகவும் மிகுந்த எச்சரிக்கையோடும் செயல்பட வேண்டும். வாக்குப் பதிவு முடிந்த பிறகு, மின்னணு வாக்குப் பதிவு பெட்டிகள் உரிய இடத்திற்கு எடுத்துச் செல்லப்படும் போதும், அவை வாக்கு எண்ணிக்கை மையங்களில் பத்திரப்படுத்தி வைக்கப்படும்போதும், மிகவும் விழிப்பாக இருந்திட வேண்டும். கடிதம் நீண்டு கொண்டே போகிறது. வேன் பிரச்சாரத்திற்குச் செல்ல வேண்டும் என்பதற்காக மாவட்டச் செயலாளர்களும், வேட்பாளர்களும் நேரமாகி விட்டது என்று காத்திருக்கிறார்கள். கவனம், கவனம்! கடந்த சில நாட்களாகச் சுறுசுறுப்பாகப் பணியாற்றி விட்டு, கடைசி இரண்டு நாட்களில் ஏமாந்துவிடக் கூடாது. எச்சரிக்கை தேவை; வெற்றி நமதே! அன்புள்ள, மு.க. 23-4-2014
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 51 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 51 PDF ↗