தொகுதி 51 · கடிதம் 3876
நீதியே! நீ இன்னும் இருக்கின்றாயா?
2014-04-20
உடன்பிறப்பே,
உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் வருமான வரித் துறை வழக்கை விசாரிக்க நான்கு மாத கால அவகாசம் வேண்டுமென்று கோரித் தாக்கல் செய்த மனு ஒரு வாரத்திற்குள்ளாகவே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒரு சில வழக்குகள் ஆண்டுக்கணக்கில் கால தாமதமாகிக் கொண்டிருக்கின்றன. நீதிமன்றங்களில் இப்படிப்பட்ட முரண்பாடுகள் ஏன்?
அதைத்தான் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய “நீதி தேவன் மயக்கம்” என்ற நாடகத்தை எடுத்துக்காட்டி விரிவாகப் பேசியிருந்தேன். உதாரணமாக, பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு எத்தனை ஆண்டுகளாக நடைபெறு கிறது? எத்தனை வாய்தாக்கள் பெறப்பட்டிருக்கின்றன? வருமான வரித்துறை சார்பில் தாக்கல் செய்த வழக்கு எத்தனை ஆண்டுகளாக விசாரணையில் உள்ளது?
வருமான வரித் துறை சம்பந்தமாக நான்கு வழக்குகள் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின்மீது தொடுக்கப்பட்டுள்ளன. சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் என். சசிகலா மற்றும் டி.வி. தினகரன் ஆகிய இருவரையும் பங்குதாரர்களாகக் கொண்டு 6-2-1989 அன்று பதிவு செய்யப்பட்டது. பின்னர் 4-5-1990 அன்று அந்த நிறுவனம் ஜெ. ஜெயலலிதா மற்றும் என். சசிகலா ஆகிய இருவரையும் பங்குதாரர்களாகக் கொண்டு மாற்றி அமைக்கப்பட்டது. அந்த சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் என்ன செய்து கொண்டிருந்தது தெரியுமா?
அனைத்து வகைக் கார்கள் சம்பந்தமான வணிகத்தையும், வாகனங்கள் மற்றும் பொருள்கள் சம்பந்தமான வணிகத்தையும் மேற்கொள்வதற்காக என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. பாவம்; நம்முடைய முதலமைச்சர் ஜெயலலிதா எப்படியெல்லாம்
சிரமப்பட்டு, கார் விற்பனை போன்ற வணிகத்தை நடத்தி, அந்த நிறுவனத்திற்கு வருவாயைத் தேடியிருக்கிறார்! ஆனால் அந்த நிறுவனத்தின் சார்பில் திரட்டப்பட்ட வருவாய்க்கு, வேண்டுமென்றே திட்டமிட்டு வருவாய் வரிக் கணக்குத் தாக்கல் செய்யவில்லை (Willful and deliberate failure to file returns) என்பதற்காகத்தான் இந்த வழக்கு.
இரண்டு வழக்குகள் 1991-92 மற்றும் 1992-93 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்கு சம்பந்தமானவை. மேலும் இரண்டு வழக்குகள் 1993-94 ஆம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு சம்பந்தப்பட்டவை. இந்த வழக்குகளுக்கு அடிப்படையான புகார் அறிக்கைகள் சென்னை வருமான வரித் துறை ஆணையரின் அனுமதி பெற்று 21-8-1997 அன்று சென்னை கூடுதல் முதன்மை மாநகர மாஜிஸ்திரேட்டிடம் தாக்கல் செய்யப்பட்டன. ஜெயலலிதாவும், சசிகலாவும் தங்களை இந்த வழக்குகளிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று கோரி மனுக்களைத் தாக்கல் செய்துவிட்டு, அதனை நடத்தாமல் காலம் கடத்தியதைத் தொடர்ந்து, வருமான வரித் துறை, உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தை அணுகியது. 4-9- 2006 அன்று உச்சநீதிமன்றம்; நான்கு வாரக் காலத்திற்குள் விசாரணை நீதிமன்றத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் தங்களை விடுவிக்க வேண்டுமென்று தொடுத்த வழக்கை முடிவு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டது. அவ்வாறே முதன்மை மாநகர மாஜிஸ்திரேட் அவர்கள் விசாரித்து ஜெயலலிதாவின் மனுவினைத் தள்ளுபடி செய்தார். அதாவது 1997ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஒன்பதாண்டுகளுக்குப் பிறகு தங்களை அந்த வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டுமென்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள். இடையில் அந்த ஒன்பதாண்டு காலம் என்ன நடந்தது? ஒன்றும் நடக்கவில்லை. அவ்வளவுதான்!
எழும்பூர் மாஜிஸ்திரேட், ஜெயலலிதா தரப்பினரின் விடுவிப்பு மனுவினைத் தள்ளுபடி செய்ததால், சென்னை உயர்நீதிமன்றத்தில் அதனை எதிர்த்து ஜெயலலிதா தரப்பினர் மேல் முறையீடு செய்துகொண்டனர். அந்த மேல் முறைமீட்டு மனுவும் 2-12-2006 அன்று உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த ஆணையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பினர் மேல் முறையீடு செய்து கொண்டார்கள். அந்த மேல் முறையீட்டினை விசாரித்த உச்சநீதிமன்றம், “சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவில் குறுக்கிடுவதற்கு எந்தவிதமான அடிப்படையான காரணமும் இல்லை; மேல் முறையீட்டினை ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவுக்கு அந்த வழக்கில் எந்த விதமான நியாயமும் இல்லை” என்று தெரிவித்ததோடு, விசாரணை நீதிமன்றம் இந்த வழக்கினை நான்கு மாத காலத்திற்குள் விசாரணை செய்து முடிக்குமாறு 30- 1-2014 அன்று தீர்ப்பளித்தது.
உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது 2-12-2006. அதை எதிர்த்து ஜெயலலிதா உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்து கொண்டு, அந்த மனு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. வழக்கு தாக்கல் செய்யப்பட்டது 1997ஆம் ஆண்டு. மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அது 2006ஆம் ஆண்டு அதாவது 9 ஆண்டுகளுக்குப் பிறகு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் 2006ஆம் ஆண்டு செய்துகொண்ட அப்பீலை, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 30-1- 2014இல் தள்ளுபடி செய்ததோடு, நான்கே மாதங்களில் விசாரணையை நடத்தி முடிக்குமாறு ஆணை பிறப்பித்திருக்கிறது.
உச்சநீதிமன்றம் அளித்த இந்தத் தீர்ப்பில், “குற்றச்சாட்டுகளை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு குற்றம்சாட்டிய வருமான வரித் துறையின் மீதா அல்லது குற்றம்சாட்டப்பட்ட ஜெயலலிதா மற்றும் சசிகலா மீதா என்பதுதான் தீர்மானிக்கப்பட வேண்டிய முக்கிய அம்சமாகும். இந்த வழக்கைப் பொறுத்தவரையில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு, உள்நோக்கம் இருந்திருப்பதை யூகிக்க முடிகிறது என்பதால், குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தான் தாங்கள் எவ்வித அய்யப்பாட்டிற்கும் இடமின்றி நிரபராதிகள் என்பதை நிரூபிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். எனவே குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் எத்தகைய சூழலில் தாங்கள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்” (The question is on whom the burden lies, either on the prosecution or the assessee, under Section 278E to prove whether the assessee has or has not committed willful default in filing the returns. Court in a prosecution of offence, like Section 276CC
has to presume the existence of mens rea and it is for the accused to prove the contrary and that too beyond reasonable doubt. Resultantly, the appellants have to prove the circumstances which prevented them from filing the returns as per Section 139(1) of in response to notices under Sections 142 and 148 of the Act) என்று குறிப்பிட்டிருப்பதில் இருந்து, இந்த வழக்கில் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க வேண்டிய கடப்பாடு ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும்தான் உள்ளது என்பதை மனதிலே கொள்ளவேண்டும்.
உச்சநீதிமன்றம் இப்படியெல்லாம் எழுதி, நான்கே மாதங்களில் இந்த வழக்கினை விசாரித்து முடிக்க வேண்டுமென்று தீர்ப்பளித்த அந்த வழக்கில்தான்; தற்போது அதே உச்சநீதிமன்றம் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்ய வேண்டியிருப்பதால் மேலும் 3 மாதங்களுக்கு விசாரணையைத் தள்ளி வைத்ததுடன், விசாரணை நீதிமன்றம் குறிப்பிடும் நாளில் ஜெயலலிதாவும், சசிகலாவும் தவறாமல் ஆஜராக வேண்டுமென்றும் ஆணை பிறப்பித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரப் பணிகள் இன்னும் நான்கு நாட்களுக்குத்தான் இருக்கின்றன. ஆனால் உச்ச நீதிமன்றம் மூன்று மாத காலம் அவகாசம் கொடுத்துள்ளது. இதைப் பற்றி யார் கேள்வி கேட்க முடியும்?
இதோ மேலும் ஒரு நிகழ்வு. ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் 1993-94ஆம் ஆண்டுக்கான தங்களது வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாதது பற்றிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் 24.2.2006 அன்று நீதிபதிகள் பி.என். அகர்வால், ஏ.கே. மாத்தூர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் வக்கீல் ஆறு வாரம் அவகாசம் வேண்டுமென்றார்.
அப்போது நீதிபதிகள் கூறியது என்ன தெரியுமா?
“நீதி பரிபாலன முறையையே நீங்கள் கேலிக் கூத்தாக்கி வருகிறீர்கள். இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த நீதிமன்ற நடவடிக்கைகளை இழுத்துச்செல்ல முடியும்? குற்றவியல் நடைமுறைச் சட்டம் 313வது பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜராகி கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி மற்றவர்களுக்கெல்லாம் முன்மாதிரியாக நீங்கள் இருக்கவேண்டும். இந்த விஷயத்தில் என்ன பதில் மனுவை உங்களால் தாக்கல்
செய்ய முடியும்? (ஜெயலலிதாவின் வழக்கறிஞரைப் பார்த்து) உங்கள் கட்சிக்காரர் நீதிமன்றத்தில் ஆஜராகி கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டுமென்று நாங்கள் இன்றைக்கே ஆணை பிறப்பிக்க விரும்புகிறோம்.”
Hindu dated 25-2-2006 Court pulls up Jayalalithaa
“You (Jayalalithaa) are making a mockery of the Judicial Process. How long you can drag the proceedings? You must set an example to others by presenting yourself in the court for questioning under section 313 cr. P.C. What counter affidavit you can file in this matter. We want to pass an order today itself directing your client to be present in the Court.*
இதோ மற்றொரு வழக்கு! கடந்த 1995ஆம் ஆண்டு ஜெ.ஜெ. டி.வி.க்கு டிரான்ஸ்பாண்டர் என்ற கருவியை வாங்குவதில் முறைகேடு நடந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஜெ.ஜெ. டி.வி. நிறுவனத்துடன் சம்பந்தப்பட்ட சூப்பர் டூப்பர் நிறுவனம் மீதான வழக்கு உட்பட 5 வழக்குகளை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தாக்கல் செய்தார்கள். இந்த வழக்கில் சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். அரசுத் தரப்பு சாட்சி விசாரணை பல ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்து விட்டது. அதைத் தொடர்ந்து குற்ற விசாரணை முறைச் சட்டத்தின் 313ஆம் பிரிவின்படி, சாட்சியங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட கேள்விகளைக் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் மாஜிஸ்திரேட் கேட்க வேண்டும். அதற்கு அவர்கள் அளிக்கும் பதிலை மாஜிஸ்திரேட் பதிவு செய்யவேண்டும். இதற்காக வழக்கை மாஜிஸ்திரேட் ஏப்ரல் 28ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார். அன்று சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் ஆஜராக வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார். அதே நாளில்தான் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான வருமான வரி வழக்கும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அன்றைக்காவது வருவார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!
இந்த நிகழ்வுகளையெல்லாம் மனதிலே கொண்டுதான் காஞ்சிபுரத்தில் 17-4-2014 அன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், “நாங்கள் வந்தால்தான் நீங்கள் வழக்கை நடத்தவேண்டும்; வராவிட்டால் ஒத்திவைக்க வேண்டும்; இல்லாவிட்டால் வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்று
சொல்கிற அளவுக்கு, நடப்பது ஜெயலலிதா ராஜ்யமா? அல்லது நீதியின் ராஜ்யமா?” என்ற முக்கியமான வினாவினை எழுப்பியிருந்தேன்.
எப்படிப்பட்டவர் நம்முடைய முதலமைச்சராக வாய்த்திருக்கிறார் என்று ஒருக்கணம் எண்ணிப் பாருங்கள்!
கொடைக்கானல் பிளசண்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் 2000ஆம் ஆண்டில் சிறப்பு நீதிமன்றத்தில் ஓராண்டு கடுங்காவல் தண்டனை பெற்றவர்!
ஆந்திர மாநிலத்தில் தனக்குச் சொந்தமான திராட்சைத் தோட்டத்திலிருந்து 1987 முதல் 1993 வரை திராட்சை விவசாயம் செய்யாமலேயே, 60 இலட்சம் ரூபாய் வருமானம் வந்ததாக உண்மைக்கு மாறான தகவலைத் தந்தவர்!
(இதிலே ஒரு சில வழக்குகளில் ஜெயலலிதா மேல் முறையீடு செய்துகொண்டு அங்கே தண்டனையிலிருந்து தப்பித்துக் கொண்டிருக்கிறார் என்ற போதிலும், விசாரணை நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற நிகழ்ச்சிகளை மட்டுமே இங்கே தொகுத்துள்ளேன்.)
1991-92 மற்றும் 1992-93 ஆண்டுகளுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாமல், வாய்தாவுக்கு மேல் வாய்தா ஆண்டுக்கணக்கில் வாங்கி வருபவர்!
கோப்பிலே கையெழுத்துப் போட்டுவிட்டு, பிறகு அந்தக் கையெழுத்து தன்னுடையது இல்லை என்று நீதிமன்றத்திலேயே சொன்னவர்!
2001ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் செய்யக் கூடாது என்று தெரிந்துகொண்டே, மக்களின் அனுதாபத்தைச் சம்பாதிப்பதற்காகப்
போட்டியிட்டவர்! தண்டனை பெற்ற காரணத்தால், தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பது தெரிந்தே, தேர்தலில் போட்டியிட்டவர்! தண்டனை பெற்ற ஒருவர் முதலமைச்சராகப் பதவியேற்கக் கூடாது என்பதை மீறி, முதலமைச்சராக ஒருசில மாதங்கள்
அதிகாரம் செலுத்தி, பின்னர் உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பதவி பறிக்கப்பட்டவர்!
முதலமைச்சராகத் தனது பிறந்த நாளைக் கொண்டாடிய போது, பரிசாகப் பெற்ற 2 கோடியே 15 இலட்சம் ரூபாயை தனது சொந்தக் கணக்கில் வரவு வைத்துக் கொண்டவர்!
அரசுக்குச் சொந்தமான “டான்சி” நிலத்தைக் குறைந்த விலையில் வாங்கிக்கொண்ட வழக்கில், தனி நீதிமன்றத்தில் மூன்றாண்டு கடுங்காவல் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டவர்!
டான்சிக்குச் சொந்தமான மற்றொரு இடத்தைச் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வாங்கியதற்காகத் தொடுக்கப்பட்ட வழக்கில் இரண்டாண்டு கடுங்காவல் தண்டனையும் ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டவர்!
டான்சி வழக்கில் 25-11-2003 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் குறைந்தபட்ச நடத்தை மற்றும் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதைக் குற்றவியல் சட்டம் வலியுறுத்துகிறது. இத்தகைய நிலையில் உயர் பதவியில் இருப்பவர்கள் அந்தச் சட்டத்தில் ஒளிந்துகொள்ளாமல் உயர்ந்தபட்ச நாணயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் நடத்தை நெறிமுறைகளை மதித்து நடக்க வேண்டுமே தவிர, குற்ற வழக்குகளில் உள்ள நெளிவு சுளிவுகளில் ஒளிந்து தப்பித்துக் கொள்ளக் கூடாது. உயர் பதவியில் இருப்பவர்கள் அரசின் சொத்தைப் பயன்படுத்தி தங்கள் செல்வங்களை அதிகரிப்பது அல்லது அரசுக்கு உரியதைத் தங்களுக்குரியதாக மாற்றிக் கொள்வது என்கிற போக்கு அதிகரித்து வருகிறது. அத்தகைய போக்கை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம்” என்ற சான்றிதழை உச்சநீதிமன்றத்திடமிருந்து பெற்றவர்தான் நம்முடைய முதலமைச்சர்!
ஏன்; மாதம் ஒரு ரூபாய் மட்டுமே ஊதியமாகப் பெற்று ஆட்சி நடத்துவதாகக் கூறிக் கொண்டு, ஐந்தாண்டு காலத்தில் தற்போதைய மதிப்புப்படி ஐந்தாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைக் குவித்து, பெங்களூர் நீதிமன்றத்தில் ஆண்டுக் கணக்கிலே வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே;
வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி வழக்கினை ஒத்திப்போட்டுக் கொண்டு வருகிறாரே, அந்தச் சிறப்புக்குரியவர்தான் நம்முடைய முதலமைச்சர்!
அவர்தான் நாற்பது இடங்களிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை நிறுத்தி, வேறு எந்தத் தோழமைக் கட்சிகளுக்கும் ஒரு இடம் கூடக் கொடுக்காமல், அத்தனைத் தொகுதிகளிலும் போட்டியிட்டு, “ஹெலிகாப்டரில்” பறந்து சென்று, சிரமம் இல்லாமல் வாக்குகளைக் கேட்டு வருகிறார்.
நானோ இந்த 90 வயதில், அதிலும் நான் பயணம் செய்ய வசதியற்ற ஒரு வேனில், தூக்கித் தூக்கிப் போடுகின்ற நிலையில் சாலை வழியாக, பல நூறு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து வந்து மக்களைச் சந்திக்கிறேன். வேன் ஒவ்வொரு பள்ளத்திலும் விழும்போது, நான் முதுகிலே செய்து கொண்ட அறுவை சிகிச்சை காரணமாக வலியினால் அவஸ்தைப்படுகிறேன். மக்கள் வெள்ளத்தில் நான் செல்கின்ற வேன் உள்ளே செல்ல முடியாமல் தவிக்கிறது. ஒவ்வொரு கூட்டத்தில், மக்கள் தருகின்ற உற்சாகத்தில் ஒரு மணி நேரம் பேசிவிட்டு, தங்குமிடத்திற்குச் சென்றால் உடம்பு முழுவதும் வலி! இரவு முழுவதும் தூக்கமில்லை. என்னுடன் பயணம் செய்த இரண்டு மருத்துவர்களிடம் கேட்டால், எந்த அளவிற்கு நான் சிரமப்படுகிறேன் என்பதைக் கூறுவார்கள். ஒரு நாள் ஓய்வு எடுக்கலாம், ஒரு கூட்டத்தையாவது ரத்து செய்யக்கூடாதா என்றால், உடனே நூறு பேர் வந்து விடுகிறார்கள். என்னால் முடிந்தவரை உழைக்கிறேன்; உழைக்கிறேன்! முடிவினை நல்ல விதமாக நீ எடுப்பாய் என்பதை நானறிவேன். எனினும் தமிழக வாக்காளர்களை அணுகி, அவர்களையும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கச் செய்திடப் பாடுபடுவாய் என்று நம்புகிறேன். அன்புள்ள, மு.க. 20-4-2017
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 51 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 51 PDF ↗