உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 51

தொகுதி 51 · கடிதம் 3874

கங்கையே சூதகமானால் எங்கே போய் மூழ்குவது?

2014-04-10

உடன்பிறப்பே,

ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை முதலில் தமிழகத்தில் நடைபெற்றபோது, ஆளுங்கட்சியாக அ.தி.மு.க. இருந்தது. விசாரணை முறையாக நடக்கத் தவறியது கண்டு, அந்த வழக்கினை வேறு மாநிலத்திற்கு மாற்றக்கோரி கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் தொடுத்த வழக்கில் 2003ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதியன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.என்.வரியவா, எச்.கே. சேமா ஆகியோர் கொண்ட பெஞ்ச் அவ்வழக்கின் விசாரணையை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டது.

அந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறும்போது, “It does appear that the new public prosecutor is hand in glove with the accused thereby creating a reasonable apprehension of likelihood of failure of justice in the minds of the public at large. There is strong indication that the process of justice is being subverted.” (புதிய அரசு வழக்கறிஞர் குற்றவாளிகளோடு (ஜெயலலிதா குழுவினரோடு) இணைந்து செயல்படுவது நன்றாகத் தெரிகிறது. அதன் காரணமாகப் பொதுவாக நீதி கிடைக்காது என்ற ஒரு நம்பத்தகுந்த ஐயம் மக்கள் மனதிலே எழுந்துள்ளது. நீதி திசை திரும்பிச் செல்வது நிச்சயமாகத் தெரிகின்றது. 313வது விதிப்படி நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும்போது, ஜெயலலிதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல் இருக்க தாக்கல் செய்த தவறான மனுவிற்கு அரசு வழக்கறிஞர் எதிர்ப்பே தெரிவிக்காமல் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது வருந்தத்தக்கது. (The conduct of the

Public Prosecutor in not opposing such a frivolous application has to be deprecated).

ஜெயலலிதா நேரில் ஆஜராகாமல் இருக்க விசாரணை நீதிமன்றம் அனுமதி கொடுத்ததற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்களுடைய கடுமையான எதிர்ப்பை இந்தத் தீர்ப்பிலே தெரிவித்திருப்பதோடு, “நீங்கள் எவ்வளவு பெரியவராக இருந்த போதிலும், உங்களைவிடச் சட்டம் பெரியது. நேரில் ஆஜராகாமல் இருக்க விதிவிலக்கு கொடுக்கக் கூடிய அளவிற்கு அவரது மனுவிலே காரணங்கள் கூறப்படவில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், நீதியின் பாதையிலே குறுக்கிட்ட செயல்தான் நடைபெற்றுள்ளது”. (The Judges took serious exception to the trial court dispensing with the personal appearance of Ms. Jayalalithaa and said “be you ever so high, the law is above you. The grounds cited by her in the application were not all mitigating circumstances to have granted dispensation of personal appearance. To say the least, that was a ploy adopted to circumvent the due process of law.)

நீதிபதிகள் மேலும் கூறுகிறார்கள். “In our view, the petitioner has raised many justifiable and reasonable apprehensions of miscarriage of justice and likelihood of bias, which would require our interference” அதாவது “எங்களுடைய கருத்தின்படி; மனுதாரர் (பேராசிரியர்) நியாயப்பூர்வமான, அர்த்தம் பொதிந்த சந்தேகங்களை எழுப்பி, அதாவது நீதி திசை திரும்பியும், பாரபட்சமாகவும் செல்வதால் எங்களுடைய குறுக்கீடு அவசியம் தேவை என்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகளே தெரிவித்திருக்கிறார்கள். மேலும் உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்ட இத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கியமான குறிப்புகள் வருமாறு:- தி.மு.க. தொடர்ந்துள்ள வழக்கில் போதுமான முதல் நிலை ஆதாரங்கள் இருப்பதாகவே நீதிமன்றம் கருதுகின்றபடியால் இவ்வழக்கைத் தமிழ்நாட்டில் நடத்தினால் நியாயம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. எனவே இவ்வழக்கு மாற்றப்பட வேண்டிய வழக்கேயாகும்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, கர்நாடக அரசோடு கலந்து பேசி, இந்த வழக்கிற்காக ஒரு சிறப்பு நீதிமன்றத்தை ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஆறு வார காலத்திற்குள் பெங்களூரில் அமைக்கவேண்டும்.

குற்றவியல் வழக்குகளில் பயிற்சி பெற்ற முதுநிலை வழக்கறிஞர் ஒருவரை இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமிப்பதுடன், அவருக்கு இளநிலை வழக்கறிஞர் ஒருவரும் அமார்த்தப்பட வேண்டும்.

தலைமை நீதிபதியினால் நியமிக்கப்படும் அரசு வழக்கறிஞர் ஏற்கனவே பிறழ் சாட்சியம் அளித்த - பல்டி அடித்த அரசுத் தரப்பு சாட்சிகளை (Hostile) மீண்டும் அழைத்து மறு விசாரணை செய்வதுடன், வேண்டுமென்றே மாற்றிச் சாட்சியமளித்த அந்தச் சாட்சிகள் மீது குற்றவியல் நடவடிக்கைகளைத் தனியே எடுக்கவும் அறிவுறுத்தப்படுகின்றது.

சாட்சிகளுக்கு மிரட்டுதல் இருப்பதாகக் கருதும் பட்சத்தில், அவர்களுக்குக் கர்நாடக அரசு போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

குற்றவாளிகள் அனைவரும் கேள்வி எழுப்பப் படும்போது நீதிமன்றத்தில் தவறாது ஆஜராவதுடன், இவ்வழக்கைத் தினமும் (Daily Basis) எடுத்து விசாரிக்க வேண்டும்.

வழக்குத் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் தமிழ்நாடு அரசு உடனடியாகச் சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றம் இந்த வழக்கினை விரைவாக விசாரிக்க வேண்டுமென்றும், அன்றாடம் விசாரிக்க வேண்டுமென்றும் ஆணை பிறப்பித்து அது வெளிவந்தது 18-11-2003. அப்போது தமிழகத்தில் நடைபெற்றது அ.தி.மு.க. ஆட்சி. இந்த உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று, சென்னை தனி நீதிமன்றம், வழக்கை பெங்களூருக்கு மாற்றம் செய்வதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவை எப்போது பிறப்பித்தது தெரியுமா?

| 10-9-2004. அதாவது பத்து மாதங்களுக்குப் பிறகு தான் அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிற து.

அதற்குப் பிறகு தற்போது 10 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் வழக்கு முடிந்தபாடில்லை. காரணம், இடையிடையே பல்வேறு சாக்குபோக்குகளைக் காரணமாகக் காட்டி, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்திட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, வாய்தா பெற்றதுதானே தவிர வேறல்ல. அவர்கள் நியாயமானவர்கள் என்றால் வரம்பு கடந்து வாய்தா கோரி இழுத்தடிக்க வேண்டிய அவசியம் என்ன? மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம் ஏற்படும்!

பெங்களூருக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்ட போதே, இந்த வழக்கு முடியும் கட்டத்தில்தான் இருந்தது. ஒருசில மாதங்களில் தீர்ப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் வாய்தா வாங்கும் திறமை காரணமாகப் பத்தாண்டு காலமாக இந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

அரசு வழக்கறிஞர், குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வாதாட வேண்டியவர். ஆனால் தற்போது அரசு வழக்கறிஞராக உள்ள பவானிசிங், அவ்வாறு வாதாடாமல் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடுகிறார் என்று தி.மு.க. சார்பில் கூறப்பட்டது. கர்நாடக மாநில அரசும், அந்தக் குற்றச்சாட்டினை ஏற்றுக்கொண்டு அரசு வழக்கறிஞர் பதவியிலிருந்து பவானிசிங்கை நீக்கி உத்தரவிட்டது. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா தரப்பினர் உச்சநீதிமன்றம் வரை சென்று, தங்களுக்கு எதிராக வாதாட வேண்டிய அரசு வழக்கறிஞராக பவானிசிங் நீடிக்க வேண்டுமென்றும், நீதிபதியாக ஓய்வு பெற்று செல்கிற நீதிபதி பாலகிருஷ்ணா அவர்களே இந்த வழக்கினைத் தொடர்ந்து விசாரிக்க வேண்டுமென்றும் வாதாடினார்கள். இந்த விசித்திரத்தைக் கண்டு சட்ட நெறிமுறைகளில் நம்பிக்கை கொண்டோர் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தனர். அப்போது ஓய்வு பெற்ற நீதிபதி பாலகிருஷ்ணா தொடர்ந்து இந்த வழக்கினை விசாரிக்க முன்வராத நிலையில், தற்போது இந்த வழக்கினை நேர்மையான நீதிபதி மைக்கேல் டி. குன்கா விசாரித்து வருகிறார்.

என்றபோதிலும், அரசு வழக்கறிஞரான பவானிசிங் அவர்களை கர்நாடக மாநில அரசே மாற்றிய நிலையில், உச்ச நீதிமன்றம்

அதுவும், தற்போது தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் அதே நீதிபதி, திரு. சவுஹான் அவர்கள் இந்த வழக்கினைப் பவானிசிங் அவர்களே தொடர்ந்து அரசு சார்பில் நடத்தலாம் என்று முடிவு செய்தார்.

குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதா தரப்பினருக்கு ஆதரவாகவும், அரசு தொடுத்துள்ள வழக்குக்குப் பாதகமாகவும் பவானிசிங், எந்தெந்த வகையில் நடந்து கொள்கிறார் என்பதற்கான பல சான்றுகளும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட போதிலும், இறுதியில் ஜெயலலிதா தரப்பினரின் கோரிக்கை ஏற்கப்பட்டு அவரே அரசாங்க வழக்கறிஞராக நீடிக்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுப் பவானிசிங்கே நீடித்து வருகிறார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு யார் அரசாங்க வழக்கறிஞராகத் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்று குற்றம் சாட்டப்பட்டோர் சார்பில் கேட்கப்பட்டதோ, அதே அரசாங்க வழக்கறிஞர் பவானிசிங் தற்போது தனக்கு உடல் நலம் சரியில்லை என்றும், தன்னால் வாதாட இயலவில்லை என்றும், வழக்கினை ஒத்திவைக்க வேண்டுமென்றும் கோருகிறார் என்றால், அதிலே பொதிந்துள்ள உண்மையை அனைவராலும் புரிந்துகொள்ள முடிகிறதா? இல்லையா?

27-1-2014 அன்று நடைபெற்ற விசாரணையின்போது, வழக்கிலே குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு நேரில் ஆஜராகாமல் இருப்பதற்காக விலக்களிக்க வேண்டுமென்று கோரி, அவர்களுடைய வழக்கறிஞர்கள் நீதிபதியின் முன்னால் மனுக்கள் தாக்கல் செய்திருக்கிறார்கள். அதில் ஜெயலலிதா, தமிழக முதல்வராக இருப்பதால் அரசுப் பணி இருப்பதாகவும், சசிகலாவுக்கு கண் வலி இருப்பதாகவும், சுதாகரனுக்கு மூட்டு வலி இருப்பதாகவும், இளவரசிக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும், அதனால் நீதிமன்றத்திற்கு வர இயலவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதற்குக் கழக வழக்கறிஞர், தாமரைச்செல்வன் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இதற்கு ஆட்சேபணை தெரிவிக்க வேண்டிய எதிர் தரப்பு வழக்கறிஞர், அதாவது அரசு வழக்கறிஞர் எந்த விதமான ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஆட்சேபணை தெரிவிக்காத காரணத்தால், நீதிபதி அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். அப்போதுகூட நீதிபதி, “நீதிமன்றத்தில்

மருத்துவச் சான்றிதழ்கள் இணைக்கப்படவில்லை. இருப்பினும் இந்த முறை மட்டும் இம்மனுக்களை ஏற்றுக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

அடுத்து ஜெயலலிதாவின் வழக்கறிஞர், தங்கள் கட்சிக்காரர்களின் வீடுகளில் சோதனை செய்தபோது கைப்பற்றப்பட்ட பொருள்களில் வழக்குக்குத் தொடர் பில்லாதவற்றைத் திரும்பக் கொடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு ஒரு மனுவினைப் புதிதாக தாக்கல் செய்தார். வழக்கு முடிவடையும் கட்டத்தில் இருக்கிறபோது, இவ்வளவு நாட்களும் சும்மா இருந்துவிட்டுத் திடீரென்று இப்படியொரு கோரிக்கையைக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வைக்க வேண்டிய அவசியம் என்ன? வழக்கினைத் தாமதம் செய்வதுதான் நோக்கமா?

அந்த மனு மீதான ஆட்சேபணையைத் தாக்கல் செய்யும்படி அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி கேட்டபோது, ஆட்சேபணை மனுவைத் தாக்கல் செய்ய இரண்டு வாரம் கால அவகாசம் வேண்டுமென்று அரசு வழக்கறிஞர் பவானிசிங் கேட்டார். கைப்பற்றப்பட்ட பொருள்களைத் திரும்ப கொடுக்க வேண்டுமா, வேண்டாமா என்பதற்கு ஆட்சேபணையைத் தெரிவிக்குமாறு நீதிபதி அரசு வழக்கறிஞரைக் கேட்டால், அதற்கு அரசு வழக்கறிஞர் இரண்டு வார காலம் அவகாசம் வேண்டும், 2 வாரத்திற்கு வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டார். (ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி, வழக்கு விசாரணையை ஒத்திவைக்க எடுக்கப்படும் முயற்சி தெரிகிறதல்லவா?) எதற்காக அவ்வளவு கால அவகாசம்? அதுவும் அரசு வழக்கறிஞரே கேட்கிறார்! யாரோடு கலந்தாலோசனை செய்ய அவ்வளவு கால அவகாசம் தேவைப்படுகிறது அவருக்கு?

அதை ஏற்றுக் கொள்ளாத நீதிபதி, வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ ஜனவரி 31ஆம் தேதிக்குள் ஆட்சேபணை மனுவினைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். அப்போதும் அரசு வழக்கறிஞர் தமிழக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்பதால் ஒரு வார கால அவகாசமாவது வேண்டுமென்று கேட்ட போது, நீதிபதி அதனை ஏற்காமல் நிராகரித்து விட்டார்.

அரசு தரப்பு வழக்கறிஞர் இவ்வாறு கால அவகாசம் கேட்டபோது, அதிருப்தி தெரிவித்த நீதிபதி, “இது குற்றவியல் நீதிமன்றமா அல்லது ஒத்திவைப்பு நீதிமன்றமா?” என்று முக்கியமான கேள்வி ஒன்றை எழுப்பியிருக்கிறார். மேலும் நீதிபதி அவர்கள், “இந்த வழக்கு விசாரணை கடந்த பதினைந்து ஆண்டுகளாக நடந்து வருகிறது. விசாரணை நடந்த நாட்களைக் காட்டிலும், ஒத்தி வைக்கப்பட்ட நாட்கள் தான் அதிகம் இருந்துள்ளது. தனி நீதிமன்றம் மற்றும் தனி நீதிபதி நியமனம் செய்ததின் நோக்கம், விசாரணை தினமும் நடந்து விரைவில் முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான். அந்த நோக்கம் முழுமையாக நிறைவேறவில்லை. இனியாவது வழக்கு தடை இல்லாமல் நடக்க வேண்டும்” என்றெல்லாம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஜனவரி 20ஆம் தேதியன்று. விசாரணை நடந்தபோது, சென்னையிலிருந்து பெங்களூர் கொண்டு வரப்பட்ட அசையும் சொத்துக்கள் தொடர்பான அத்தனை விவரங்களையும், பரிசுப் பொருள்களின் பட்டியலையும் தங்களுக்கு வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்து, நீதிபதி அப்போது அதனைத் தள்ளுபடி செய்தார்.

மேலும் நீதிபதி அவர்கள், இந்த வழக்கை விரைந்து முடிக்க வசதியாக, வழக்கறிஞர்களின் இறுதி வாதம் பிப்ரவரி மாதம் 3ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும், உச்சநீதிமன்ற உத்தரவின்படி தினமும் விசாரணை நடக்கும் என்றும், முதலில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்த பின், குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்ய வேண்டும் என்றும், இறுதிக் கட்ட வாதம் தொடங்குவதை எந்த நிலையிலும் காலம் கடத்த முடியாது என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் திட்டமிட்டு, வழக்கு தாமதப்படுத்தப்பட்ட இந்த நிலையிலும் இந்த வழக்கினை மேலும் தொடர்ந்து தாமதப்படுத்த பல்வேறு தந்திரங்களும் உத்திகளும் கையாளப்படுகின்றன. அதிலே ஒன்றுதான் அரசு வழக்கறிஞரே சில நாட்களுக்கு முன் ஒரு மனுவினைத் தாக்கல் செய்தார். அதாவது சென்னையில் உள்ள பாஸ்கரன் என்பவரிடம் கொடுக்கப்பட்ட ஜெயலலிதாவுக்குச் சொந்தமான 1,116 கிலோ வெள்ளிப் பொருள்களை, பெங்களூர் நீதிமன்றத்துக்குக்

கொண்டுவர வேண்டுமென்று ஒரு மனுவினை அரசு வழக்கறிஞர் நீதிபதியிடம் தாக்கல் செய்தார். வழக்கு முடிகின்ற நேரத்தில், அரசு வழக்கறிஞர் இவ்வாறு ஒரு மனுவினைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? வழக்கினைத் தாமதப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்தோடு அந்த மனு, அரசு வழக்கறிஞரால் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், பேராசிரியர் சார்பில் ஒரு மனு மூலமாக அந்தப் பாஸ்கரன் ஏற்கனவே இறந்து விட்டார் என்ற விவரம் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவினைத் தள்ளுபடி செய்துதான், சிறப்பு நீதிபதி 28- 2-2014 அன்று தீர்ப்பு அளித்திருக்கிறார். அந்தத் தீர்ப்பில்தான்,

“இந்த வழக்கு கடந்த 9 ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூரில் நடந்து வருகிறது. நீதிபதி பி.ஏ.மல்லிகார் ஜுனையா, இந்த வழக்கினை விசாரித்த போது, குற்றவியல் நடைமுறைச் சட்டம், 313இன் கீழ், குற்றஞ் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராகி, வாக்குமூலம் கொடுத்துவிட்டனர். நீதிபதி பாலகிருஷ்ணா இந்த வழக்கினை விசாரித்தபோது, சாட்சிகள் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது. அரசு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர்களும் வாதத்தை முடித்துவிட்டனர். இந்த வழக்கு தொடர்பாக அனைத்து விவகாரங்களும் முடிந்துள்ளதாக நீதிபதி பாலகிருஷ்ணா 14-8-2013 அன்றே குறிப்பிட்டிருந்தார். தற்போது வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக அரசுத்தரப்பில் ஜெயலலிதா தரப்புக்குச் சொந்தமான இந்த வெள்ளிப் பொருள்களை பாஸ்கரனிடமிருந்து பெற்றுக் கொண்டு வந்து நீதி மன்றத்தில் ஒப்படைப்பது குறித்து எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

வழக்கில் மூன்றாவது நபர் (கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர்) சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்று, சென்னையில் இருந்த தங்க, வெள்ளி ஆபரணங்கள் பெங்களூருக்கு கொண்டு வரப்பட்ட நேரத்தில், பாஸ்கரனிடமிருந்து இந்த வெள்ளிப் பொருள்களைக் கொண்டு வர வேண்டுமென்று அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஏன் மனு தாக்கல் செய்யவில்லை?

அரசு வழக்கறிஞரான, பவானிசிங் கடந்த 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து பணியாற்றி வருகிறார். அந்தக்

காலகட்டங்களில் இது போன்ற மனு எதையும் அவர் தாக்கல் செய்யவில்லை.

இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டு மூன்று நாட்கள் வாதம் செய்ததாகச் சொல்லும் பவானி சிங்கிற்கு, முதல் குற்றவாளியின் வெள்ளிப் பொருள்கள் சென்னையில் இருப்பது தெரியவில்லையா? வழக்கில் இறுதி வாதத்திற்காக ஆவணங்களைப் படித்தபோதுதான் வெள்ளிப் பொருள்கள் குறித்த விவரம் அவருக்குத் தெரிந்ததாகச் சொல்வது உண்மையாகவும், நம்பும் வகையிலும் இல்லை. மேலும் வெள்ளிப் பொருள்களை வாங்கிச் சென்ற பாஸ்கரன் உயிருடன் இல்லை என்பது தெரிந்தும், அவரிடம் பொருள்களைக் கேட்கச் சொல்வதும், அவர் இறந்து விட்ட தகவல் நீதிமன்றத்தில் மரணச் சான்றிதழுடன் உறுதி செய்யப்பட்ட போதும், அரசு வழக்கறிஞர் அதனை ஏற்காமல், தனது கருத்தில் உறுதியாக இருந்து, தொடர்ந்து மனுவை வலியுறுத்துவதும் சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல.

இதனைப் பார்க்கும்போது, வழக்கைக் கால தாமதம் செய்யும் நோக்கத்தில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் நடந்து கொண்டார் என்றே கருதத் தோன்றுகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளி வீட்டில் இருந்த வெள்ளிப் பொருள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு அதன் விலை மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரம் வழக்கு ஆவணங்களில் உள்ளது. வழக்கு விசாரணை முடியும் நிலையில், வெள்ளிப் பொருள்களைக் கொண்டுவர கால நேரத்தை வீணாக்க வேண்டிய அவசியமில்லை. அந்த வாதமும் சரியானதல்ல. எனவே வெள்ளிப் பொருள்களைக் கொண்டுவர வேண்டுமென்ற அரசு வழக்கறிஞரின் மனுவில் எவ்வித முகாந்திரமும் இல்லை. இது தேவையற்ற மனு என்று கருதித் தள்ளுபடி செய்கிறேன்” என்று அரசு வழக்கறிஞர், பவானிசிங் அவர்களின் மனு பற்றி சிறப்பு நீதிபதி அவர்கள் தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறார் என்றால், இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் எவ்வாறெல்லாம் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு அனுசரணையாக நடந்து கொண்டு வருகிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேறு உதாரணம் வேண்டுமா?

இந்த வழக்கறிஞர் பவானிசிங் அவர்கள். இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நீடிக்க வேண்டுமென்றுதான்,

குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதா தரப்பினர் உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடுத்ததின் உண்மையான பொருளும் உள் நோக்கமும் இப்போதாவது புரிகிறதா இல்லையா? சொத்துக் குவிப்பு வழக்கினைப் பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கு இரண்டு வழக்கறிஞர்கள் - ஒருவர் அரசு சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு, அரசு தொடுத்த வழக்கினைப் புறக்கணித்து, தான் ஆற்றிட வேண்டிய கடமையிலிருந்து தவறி, குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதா தரப்பினருக்கு ஆதரவாக வாதாடும் அரசு வழக்கறிஞர் பவானிசிங்; மற்றொருவர் ஜெயலலிதாவிடம் சம்பளம் பெற்றுக் கொண்டு, அவருக்கு ஆதரவாக வாதாடும் அவருடைய சொந்த வழக்கறிஞர் பி. குமார். நீதிமன்ற வரலாற்றில் இதுவரை கண்டும் கேட்டுமிராத இந்த வெட்கக்கேடான உண்மையைத் தமிழ்நாட்டு நாளேடுகள் மறைக்க முயன்றாலும், மக்களுக்குத் தெரியாமல் போய்விடுமா?

நீதிபதி ஜான் மைக்கேல் டி. குன்கா 7-3-2014 அன்று இறுதி வாதம் தொடங்குமென்று அறிவித்தார். ஆனால் அன்றையதினம் அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகவே இல்லை. வழக்கு 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 10ஆம் தேதியன்றும் அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஆஜராகவில்லை. இதை அடுத்து வழக்கு 14-3-2014 அன்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி இறுதி வாதத்தைத் தொடங்க உத்தரவிட்டார். அன்றைய தினம் பவானி சிங் நீதிமன்றத்தில் ஆஜராகி, உடல் நிலை சரியில்லை என்று காரணம் கூறி, வழக்கு விசாரணையைத் தாமதப்படுத்த அவர் மேற்கொண்டு வரும் முயற்சியின் தொடர்ச்சியாகப் பத்து நாட்கள் அவகாசம் கேட்டுக்கொண்டதோடு, அதற்கான மருத்துவச் சான்றிதழ்களையும் சமர்ப்பித்தார். நீதிபதி அந்தச் சான்றிதழ்களைப் பார்த்து அதிருப்தி அடைந்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராகியும் வாதிடாத அரசு வழக்கறிஞர் பவானி சிங் அவரது ஒரு நாள் ஊதியமான 65 ஆயிரம் ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டுமென்று உத்தரவிட்டார். 15ஆம் தேதியன்றும் பவானி சிங் நீதிமன்றத்தில் எந்தவித அறிவிப்புமின்றியும், காரணத்தைத் தெரிவிக்காமலும் ஆஜராகவில்லை. அவரது உதவியாளர் முருகேஷ் அரசு வழக்கறிஞர் வராதது பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்றார். எனவே அரசு வழக்கறிஞரின் அன்றைய நாள் சம்பளமான 65 ஆயிரம் ரூபாயையும் அபராதமாகச் செலுத்த நீதிபதி உத்தரவிட்டார்.

ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அரசு வழக்கறிஞரின் வாதம் முடிந்த பிறகுதான் தங்கள் வாதத்தைத் தொடங்க முடியுமென்று கூறிவிட்டார்கள். அதற்குப் பிறகு நீதிபதி அவர்கள் அரசு வழக்கறிஞர் 21-3-2014 அன்று வாதத்தைத் தொடங்க வேண்டுமென்று கண்டிப்பாக உத்தரவிட்டார்.

இதற்கிடையே அரசு வழக்கறிஞர் பவானிசிங், நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததற்காகச் சிறப்பு நீதிமன்றம் விதித்த அபராதத்தை ரத்து செய்ய வேண்டுமென்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவைக் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயணராவ் தள்ளுபடி செய்ததால், 21- 3-2014 அன்று பவானிசிங் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி தனது இறுதி வாதத்தைத் தொடங்கி, இந்த வழக்கில் சாட்சியம் அளித்தோர் என்னவெல்லாம் கூறினார்கள் என்பதையெல்லாம் நீதிமன்றத்தில் தொடர்ந்து கூறி வருகிறார். பல கோடி ரூபாய்க்கு ஜெயலலிதா சொத்துக் குவித்தது பற்றி, சாட்சிகள் எல்லாம் என்ன கூறியிருக்கிறார்கள் என்பது தற்போதுதான் உலகத்திற்குத் தெரிய வந்து கொண்டிருக்கிறது.

அந்த சாட்சிகள், தங்கள் சாட்சியங்களில் இந்தச் சொத்துக் குவிப்பு வழக்கு பற்றிய உண்மைகளைக் கூறினார்கள் என்பதை நானும் என்னுடைய தேர்தல் சுற்றுப்பயணங்களில் எடுத்துக்கூறி, அதை ஒருசில நாளேடுகளும் வெளியிடத் தொடங்கியதுதான் தாமதம்! தவறு செய்தவர்களால் தாங்கிக் கொள்ள முடியுமா? இந்த வழக்கு விசாரணையை மேலும் தள்ளிவைக்க வாய்தா வாங்கிட என்னவெலலாம் செய்யலாம் என்று படாதபாடுபட்டுப் பல்வேறு

வழிகளிலும் முனைகிறார்கள்.

அதில் ஒன்றுதான், ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாடுவதற்காக அரசினால் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர், கடமை தவறி நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி, கர்நாடக அரசே அவரை விலக்கிய நிலையில், ஜெயலலிதா தரப்பினர் உச்ச நீதிமன்றம் வரை அதே அரசு வழக்கறிஞரான பவானிசிங் அவர்களே நீடிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து, உச்ச நீதிமன்ற நீதிபதி சவுஹான் அவர்கள்தான் அப்போதும் பவானிசிங் தொடரலாம் என்று உத்தரவிட்டார். அந்த அரசு வழக்கறிஞர், சிறப்பு நீதிமன்றத்தில், தொடர்ந்து ஆஜராகாத காரணத்தால், சிறப்பு நீதிபதி அபராதம் விதித்தார்.

அதனை எதிர்த்துப் பவானிசிங் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, அங்கேயும் அவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த வழக்கைத் தற்போது அதே பவானிசிங் உச்ச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். அதற்குப் பின்னால் நடந்திருக்கக் கூடிய மர்மங்களையெல்லாம், நீங்கள்தானே யூகித்துக்கொள்ள வேண்டும்.

இந்த வழக்கில், தனக்கு எதிராக வாதாடுவதற்காக அரசால் நியமிக்கப்பட்ட குறிப்பிட்ட வழக்கறிஞரே நீடிக்க வேண்டுமென்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் விரும்புவதற்குக் காரணம் என்ன?

அந்தக் குறிப்பிட்ட வழக்கறிஞர், உச்ச நீதிமன்றம்வரை சென்று, இந்த வழக்கினை மேலும் மூன்று வாரங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டுமென்று கோரிக்கை வைப்பதின் காரணம் என்ன?

உண்மையிலேயே பவானிசிங்கிற்கு உடல் நலம் சரியில்லை என்றால், அந்தப் பதவியிலிருந்து விலகிக்கொள்ள வேண்டியதுதானே? அல்லது அவருடைய உதவியாளரைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டியதுதானே? உடல் நலம் அவருக்குச் சரியான பிறகு, மீண்டும் அவரே வந்து விசாரணையைத் தொடரலாம் அல்லவா?

உச்சநீதிமன்றம் 2003ஆம் ஆண்டு விரைவிலே முடிக்கப்பட வேண்டுமென்றும், நாள்தோறும் விசாரணை நடத்தப்பட வேண்டுமென்றும் உத்தரவிட்ட பிறகும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கே புறம்பாகத் தற்போது உச்சநீதிமன்றமே மூன்று வாரக் காலத்திற்கு வழக்கினை நிறுத்திவைக்க வேண்டிய அவசியம் என்ன?

அந்த மூன்று வார காலம் என்பது தற்போது முக்கியமான கட்டம். அந்த மூன்று வார காலத்திற்குள், நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் இந்த வழக்கு நடைபெற்று, தீர்ப்பு கூறப்படுமானால், குற்றம் சாற்றப்பட்டவர்களை அது பாதிக்கக் கூடும் என்று நினைத்தோ என்னவோ, இப்படி ஒரு “வழக்கு ஒத்திவைப்பு” நடைபெற்றுள்ளதோ என்று நடுநிலையாளர்கள் சந்தேகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதல்லவா? அதன் ரகசியம்தான் என்ன?

வழக்கறிஞர் ஒருவருக்கு உடல் நலம் இல்லை என்பதற்காக, வழக்கு விசாரணையே மூன்று வாரகாலத்திற்கு ஒத்தி

வைக்கப்படலாம் என்றால், இனி நாட்டிலே உள்ள அத்தனை வழக்கறிஞர்களும், வாய்தா வாங்குவதற்காக, ஆளுக்கு ஒரு மருத்துவச் சான்றிதழைப் பெற்று, மூன்று வாரம் என்றும், மூன்று மாதம் என்றும், வழக்கினை விசாரிக்கத் தடை கோருவார்களானால் அதன் விளைவு எங்கே போய் முடியும்?

உச்ச நீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பினை வழங்கியவர் பி.எஸ். சவுகான் மற்றும் ஜே. செல்லமேஸ்வர் ஆகியோர் அடங்கிய அமர்வாகும். இதில் பி.எஸ். சவுகான் அவர்கள் இன்னும் சில நாட்களில் ஓய்வு பெறவிருக்கிறார் என்ற உண்மையையும் மறந்து விட முடியாது. இவரேதான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்த வழக்கில் பவானிசிங் அரசு வழக்கறிஞராக நீடிக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்தவரும் ஆகும். பவானிசிங்கின் முக்கிய கோரிக்கை அபராதத் தொகையைப் பற்றியதுதான்; ஆனால் உச்ச நீதிமன்ற நீதிபதி, மூன்று வாரக் காலத்திற்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையையே ரத்து செய்கிறார் என்றால் உச்ச நீதிமன்றம் எந்த அளவிற்குப் பெருந்தன்மையோடு(?) நடந்து கொண்டிருக்கிறது என்பது தெரிகிறதா? அதனால் தான் நான் சேலம் கூட்டத்தில் பேசும்போது, “நீதியே நீ இன்னும் இருக்கின்றாயா? அல்லது நீயும் அந்தக் கொலைக்களத்திலே உயிர் விட்டாயா?” என்று பூம்புகார் திரைப்படத்தில் கொடுமுடி கோகிலம், கே.பி. சுந்தராம்பாள் பாடியதை நினைவூட்டினேன்.

எனவே சொத்துக் குவிப்பு வழக்கு எப்படியெல்லாம், வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கப்பட்டு நீதிமன்ற வரலாறு காணாத வகையில் இழுத்தடிக்கப்பட்டு எத்தனை ஆண்டுக் காலமாக நடைபெறுகிறது? சுமார் 65 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கு என்று வழக்கு தொடுத்த போதிலும், அந்தச் சொத்துக்களின் மதிப்பு 5000 கோடி ரூபாய் அளவுக்குத் தற்போது பெருகியிருக்கிறது. குறிப்பாகச் சொன்னால். இந்த வழக்கில் நீதியை நெரிக்கவும், வளைக்கவும் எப்படியெல்லாம் காரியங்கள் திட்டமிட்டு நடைபெற்று வருகின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம். இந்த வழக்கில் நேர்மைக்கும் நியாயத்திற்கும் ஆதரவாக அரசு சார்பில் வாதாட வேண்டிய அரசாங்க வழக்கறிஞர் எப்படியெல்லாம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்கிறார் என்பதை அகில

இந்தியாவிலும் உள்ள வழக்கறிஞர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வழக்கில் மொத்த சாட்சிகள் 259 பேர்; அதில் 209 சாட்சிகள் கொடுத்துள்ள சாட்சியங்களைப் பவானிசிங் படித்து முடித்து விட்டார். இன்னும் 50 பேர் சாட்சியங்களைத்தான் படிக்க வேண்டும். ஒரு நாள் வேலைதான் மீதம் இருக்கும். இந்த நிலையில்தான் உச்ச நீதிமன்றம் வழக்கினை மூன்று வாரங்களுக்குத் தடை விதித்துள்ளது. பவானி சிங் அவர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த அபராதம் இரண்டு நாள்களுக்கு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய். அந்தத் தொகையைச் செலுத்தாமல் இருக்க, பவானிசிங் செலவழித்திருப்பது எவ்வளவு தெரியுமா? உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் ஒரு வழக்கில் ஆஜராகக் குறைந்த பட்சம் பத்து இலட்சம் ரூபாய் வாங்குகிறார்கள். பவானி சிங்குக்காக உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய நாகேந்திர ராய் அவர்கள் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவர் என்பதால் அவருக்கு பத்து இலட்ச ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கும். அதைத் தவிர உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இரண்டு இலட்சம் ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும். எனவே ஒரு இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயைப் பாதுகாக்க, யாராவது 12 இலட்சம் ரூபாயைச் செலவழிப்பார்களா? அதிலும் பவானிசிங் அவர்களின் நிதி நிலையைப் பார்த்தால் அவர் அரசு வழக்கறிஞர் என்ற அளவில் 12 இலட்சம் ரூபாயைக் கட்டக்கூடிய அளவிற்கு வசதி படைத்தவராகத் தெரியவில்லை. எனவே அவரைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி, அவருக்காக உச்சநீதிமன்றத்தில் யாரோ பணம் செலவழித்து, மூத்த வழக்கறிஞரை நியமித்து வாதாடியிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறதா? இல்லையா? அவ்வாறு பின்பலமாக இருந்தவர்களுக்கு என்ன இலாபம்? அரசு வழக்கறிஞர் பவானிசிங் நீடித்தால், அவருடைய வாதம் தங்களுக்குப் பயன்படும் என்று நினைப்பவர்கள் யார்? அப்படி நினைப்பவர்களுக்கு, இந்த விசாரணையில் மேலும் ஒரு வாய்தா மூன்று வாரங்களுக்கு கிடைப்பதன் காரணமாக, நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்பாகத் தீர்ப்பு வராமல் செய்யலாம். அப்படித் தீர்ப்பு சொல்லப்பட்டு விடுமானால், தேர்தல் முடிவினைப் பாதிக்குமோ என்று அஞ்சுகிறார்கள் என்றால், அவர்கள் மடியிலே கனம் இருப்பதாகத்தானே பொருள்! வழக்கை

மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பதன் காரணமாக, தேர்தலுக்கு முன்பாகத் தீர்ப்பு வருவதை ஒத்திவைக்க விரும்புகிறார்கள் என்பதுதானே பொருள்! இந்தக் கருத்தினை நான் மட்டும் கூறவில்லை. பொருளாதாரம் மற்றும் சட்ட நிபுணரான டாக்டர் கே. ஸ்ரீதர் கூறும்போது, “பொதுவாகக் குற்றவாளிகள் தரப்பில்தான் வாய்தா கேட்பார்கள், ஆனால் இதில் அரசுத் தரப்பில் வாய்தா கேட்பது என்பது சரியான நடைமுறை அல்ல! பவானிசிங் தனது சொந்த செலவில் உச்ச நீதிமன்றத்தை நாடவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது” என்று கூறியிருக்கிறார். அதுபோலவே மூத்த வழக்கறிஞர், சுரேஷ் நாயக் கூறும்போது, “இவ்வழக்கில் அரசுத்தரப்பில் வாதம் செய்பவர் (பவானிசிங்) எப்படிச் செயல்படுகிறார் என்பதை சட்ட நிபுணர்கள் பார்த்து வருகிறார்கள். கடந்த 17 ஆண்டுகளாகச் சட்டத் துறைக்குச் சவால் விடும் வகையில் நடந்துவரும் இவ்வழக்கின் போக்கைக் கவனிக்காத சட்ட நிபுணர்கள், அரசியல்வாதிகள் இல்லை. பவானி சிங் அவர்களுக்கு தனி நீதிமன்றம் அபராதம் விதித்து எடுத்துள்ள நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றம்வரை செல்ல வேண்டிய அவசியமில்லை. மேலும் குறைந்த அபராதத்தை ரத்து செய்வதற்காகப் பல லட்சம் செலவிடும் நிலையில் அவர் இல்லை. அவரை ஏதோ சில அரசியல் சக்திகள் தங்கள் சுயநலத்திற்குப் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது” என்று மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான திரு. சுரேஷ் நாயக் கூறியிருக்கிறார்.

எப்படியோ, மூன்று வாரக் காலத்திற்கு வழக்கினை நடத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தடை பெற்றிருக்கிறார்கள். அந்தத் தடையைப் பெறக் காரணம், அரசு வழக்கறிஞரின் உடல் நிலையோ, அவருக்கு விதிக்கப்பட்ட அபராதமோ அல்ல என்பது மக்களுக்கு நன்றாகப் புரிந்துவிட்டது. என்ன காரணம் என்பதும் மக்களுக்குத் தெளிவாகிவிட்டது. இப்படியெல்லாம் செய்து, வழக்கைத் திசை மாற்ற நினைப்பவர்கள் யார், எதற்காக அவர்கள் அப்படி செய்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளும் நிலையில்தான் தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் இருக்கிறார்கள். அவர்கள் நன்றாகவே சிந்திப்பார்கள், நன்றாகவே முடிவெடுப்பார்கள்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் விரைவில் ஓய்வு பெறப் போகிறார்; சொத்துக் குவிப்பு வழக்கினை மூன்று வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ள சவுஹான் அவர்களும் விரைவில் ஓய்வு பெறப்போகிறார். தலைமை நீதிபதியாக வரப்போகிற நீதியரசர் திரு. லோதா அவர்கள் கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதியன்று ஒரு சிறப்பான தீர்ப்பினை வெளியிட்டார். அந்தத் தீர்ப்பில், “பதவியில் இருக்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளில், அவை தொடரப்பட்ட, ஓர் ஆண்டுக்குள் வழக்கு விசாரணையை நீதிமன்றங்கள் முடித்து விட வேண்டும். நீதிமன்றங்கள் அவ்வாறு ஓர் ஆண்டுக்குள் விசாரணையை முடிக்க முடியாவிட்டால், அதற்கான காரணம் குறித்து அந்தந்த நீதிமன்றங்களுக்குரிய உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் விளக்கம் அளிக்க வேண்டும். எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், அந்த வழக்குகள் தினமும் விசாரிக்கப்பட வேண்டும். இதுபோன்ற வழக்குகள் பல ஆண்டுகளுக்கு நிலுவையில் இருப்பதால், கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பலரும் தொடர்ந்து நாடாளுமன்றத்திலும், சட்டப்பேரவைகளிலும் உறுப்பினர்களாகப் பதவியில் நீடித்து வருகின்றனர்” என்று தீர்ப்பு அளித்ததையும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ்த் தொடுக்கப்பட்ட வழக்குகளின் விசாரணைக்குத் தடை விதிக்கக்கூடாது என்ற அம்சம், அந்த சட்டத்திலே இடம்பெற்றிருப்பதையும், தற்போது அதற்கு எதிர்மறையாக 3 வாரங்களுக்கு உச்சநீதிமன்றமே விசாரணைக்குத் தடை விதித்திருப்பதையும் பார்க்கும்போது, பசும்பொன் தேவர் திருமகன் அடிக்கடி சொல்கின்ற ஒரு சொற்றொடர்தான் ஞாபகத்திற்கு வருகிறது! “மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்; கங்கையே சூதகமானால் எங்கே போய் மூழ்குவது? இப்படியெல்லாம் செய்வதால் தீர்ப்புகளைத் தள்ளிப்போகச் செய்யலாமே தவிர; தீர்ப்புகளை மாற்றித் தப்பிக்க நிச்சயமாக முடியாது. நியாயமான, நேர்மையான தீர்ப்பு விரைவில் வந்தே தீரும்! அப்போது உண்மை ஊருக்கும், உலகத்திற்கும் புரியும்! அன்புள்ள, மு.க. 10-4-2014

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 51 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 51 PDF ↗