உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 51

தொகுதி 51 · கடிதம் 3873

ஒவ்வொருவரும் ஒரு வாக்கு; ஒவ்வொருவராலும் ஒரு வாக்கு!

2014-04-05

உடன்பிறப்பே,

ஏப்ரல் 5ஆம் தேதி கோவையில் தொடங்கி, 21ஆம் தேதி சென்னைவரை என்னுடைய தேர்தல் சுற்றுப் பயணம் வரையறுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. என்னுடைய உடல் நலம் இந்தச் சுற்றுப் பயணத்தைத் தாங்குமா, அன்றாடம் நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர், வேனிலேயே அமர்ந்து பயணம் செய்ய முடியுமா என்றெல்லாம் என்னை நாள்தோறும் சந்திக்கும் உடன்பிறப்புகள் கவலையோடு கேட்கிறார்கள். உடல் நலத்தைப் பற்றி நான் என்றைக்கு அக்கறை கொண்டேன்? நான் சுற்றுப்பயணம் தொடங்குவதற்கு முன்பே நம்முடைய பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் தனது பிரச்சாரத்தைத் தொடங்கிக் கடந்த இரண்டு மூன்று நாட்களாகச் சென்னை, திருப்பெரும்புதூர், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார்.

பொருளாளர், தம்பி ஸ்டாலினைப் பற்றியோ கேட்கவே வேண்டியதில்லை. இதற்குள் 20 தொகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துவிட்டார். அவரது உழைப்பைப் பற்றியும், அவர் வாக்காளர்களைச் சந்தித்து பேசுவது பற்றியும் நேரிலும், தொலைபேசியிலும் பல நண்பர்கள் என்னிடம் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் ஒரு சிலர், “நீங்கள் அந்தக் காலத்திலே உணர்ச்சியோடும், எழுச்சியோடும் பேசுவீர்களே, நாள்தோறும் பகல் என்றும், இரவு என்றும் பாராமல் ஓயாது உழைப்பீர்களே, இரவெல்லாம் தூங்காமல் கழக உடன்பிறப்புகளுடன் தொடர்புகொண்டு ஆங்காங்குள்ள நிலைமைகளை அறிந்து ஊக்கமளித்து அறிவுரை வழங்குவீர்களே, அதைப் போலவே இருக்கிறது” என்றெல்லாம் என்னிடம் கூறும்போது, என்னுடைய பழைய கால நினைவுகள் என் உள்ளத்தில் நிழலாடத்தான் செய்கின்றன. முதன்மைச் செயலாளர்

ஆற்காடு வீராசாமியும் என்னுடன் வருவதாகக் கூறினார். அவரது உடல் நிலை கருதி வேண்டாமென்று கூறியுள்ளேன். துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் என்னுடன் சுற்றுப்பயணத்தில் வருகிறார். மற்ற துணைச் செயலாளர்களான சகோதரி சற்குணப் பாண்டியன், வி.பி. துரைசாமி மற்றும் தலைமைக் கழகத்தில் உள்ள முன்னணிப் பேச்சாளர்களான மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, அ. ரகுமான்கான், திருச்சி சிவா, பேராயர் எஸ்றா சற்குணம், வாகை சந்திரசேகர், குஷ்பூ சுந்தர், கம்பம் செல்வேந்திரன், பேராசிரியர் சபாபதி மோகன், நூர்ஜகான் பேகம், சங்கரி நாராயணன், புலவர் இந்திர குமாரி, புதுக்கோட்டை விஜயா, தஞ்சை கூத்தரசன், வி.பி. ராஜன், நெல்லிக்குப்பம் புகழேந்தி, திண்டுக்கல் லியோனி, குமரிமுத்து, வாசு விக்ரம், இனிகோ இருதயராஜ் போன்றவர்கள் கலந்துகொள்ளும் பிரச்சார நிகழ்ச்சிகளும் முரசொலியில் வந்துள்ளன. மகளிர் அணியைச் சேர்ந்த வசந்தி ஸ்டான்லி, விஜயா தாயன்பன் போன்றவர்கள் நேரில் என்னைச் சந்தித்து, நாங்களும் தேர்தல் சுற்றுப் பயணத்தில் கலந்துகொள்ள வேண்டாமா என்று உரிமையோடு கேட்டுப் பிரச்சார நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யச் சொல்லியிருக்கிறார்கள்.

தோழமைக் கட்சிகளின் தலைவர்களும், முன்னணியினரும் இடைவெளியின்றித் தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாகத் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் இளவல் கி. வீரமணி அவர்கள் ஒரு மாத காலத்திற்குச் சுற்றுப்பயணத் திட்டம் வகுத்துக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதுபோலவே பேராசிரியர் சுப. வீரபாண்டியன், பேராசிரியர் காதர் மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா போன்றவர்களின் நிகழ்ச்சிகளும் ஏற்பாடாகியுள்ளன.

தொல். திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் தங்கள் தொகுதிகளிலே வாக்குகளைக் கேட்கின்ற நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு, மற்றத் தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்துவருகின்றனர். பிரபல எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் நமக்கு ஆதரவாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார். மேலும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், சமூக இயக்கங்களைச் சார்ந்தவர்களும், குறிப்பாக மாற்றுத் திறனாளிகள் - திருநங்கையர் - சிறுபான்மையினர் - ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள்

- வழக்கறிஞர்கள் - நெசவாளர்கள், விவசாயிகள், மீனவர்கள்,

மாணவர்கள், தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள், மக்கள் நலப் பணியாளர்கள் என்று அனைத்துத் தரப்பினரும் தங்களால் இயன்ற அளவிற்கு ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் வெற்றிக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

நம்முடைய தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் எடுத்து வைக்கப்படும் ஆணித்தரமான விளக்கங்களையும், செய்திகளையும் தொலைக்காட்சி வாயிலாக நீ கண்டிருப்பாய்! இதற்கிடையே அ.தி.மு.க.விற்காக - ஒரே ஒரு தலைவி மட்டும் - பாவம் மிகவும் சிரமப்பட்டு - பக்கம் பக்கமாக எழுதிக் கொடுக்கப்பட்ட பேச்சைத் தூக்கிக் கொண்டு “ஹெலிகாப்டரில்” பறந்து சென்று, மேடையில் அலுப்பு சலுப்பின்றி ஏறி, வேறு யாரையும் பேச விடாமல், வேட்பாளரைக்கூட வாக்குக் கேட்கவோ, உட்காரவோகூட அனுமதிக்காமல், கடும்வெயிலில் குடி தண்ணீர்கூடக் கொடுக்கப்படாமல், அழைத்து வரப்பட்ட அப்பாவிப் பொதுமக்களை உட்கார வைத்து, அவர்களிடம் செய்வீர்களா, நீங்கள் செய்வீர்களா என்று திரும்பத் திரும்பக் கேள்விகளைக் கேட்டு, அவர்களும் எந்தவிதமான பதிலும் சொல்லாமல், அழைத்து வரப்பட்டபோது கொடுக்கப்பட்ட வாக்குறுதி காப்பாற்றப்படுமா? எப்போது அனுப்புவார்கள் என்ற ஏக்கத்தோடு அமர்ந்திருக்கின்ற நிலையைக் கண்டிருப்பீர்கள். மேடையிலே பேசிய பேச்சையே திரும்பத் திரும்ப 24 மணி நேரமும் ஒளிபரப்ப ஒரு தொலைக்காட்சி! அது தவிரப் பேச்சை சி.டி.யாகத் தயாரித்து ஒவ்வொரு தொகுதிக்கும் அனுப்புவதற்கான ஏற்பாடு என்று இதுதான் அங்கே நடக்கிறது!

முதலமைச்சர் ஜெயலலிதா பேசுகின்ற அந்தக் கூட்டங்களில் எல்லாம் வசை புராணம்தான்! மத்திய காங்கிரஸ் அரசைப் பற்றித் துரோகம், துரோகம் என்று ஒரு நீண்ட பட்டியல்! அதற்குத் தி.மு.கழகம் துணை போனதாகக் குற்றம் சுமத்தி அதற்காகப் பாதி நேரம்! தான் செய்யாததை எல்லாம் செய்ததாகவும், தி.மு. கழகத்தின் சாதனைகளையெல்லாம் தான்தான் நிறைவேற்றியதாகவும், பொய் மூட்டைகளை ஆங்காங்கே அவிழ்த்துவிடுவதற்குப் பாதி நேரம்! இதற்குத்தான் முதலமைச்சர் நேரத்தைச் செலவிடுகிறாரே தவிர, கடந்த மூன்றாண்டு காலத்தில், அவருடைய ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களுக்காக என்ன செய்தோம், நாள்தோறும் பேரவையிலே 110வது விதியின் அறிக்கைகளைப் படித்தோமே,

வேறு எந்த அமைச்சரையும் படிக்க அனுமதிக்காமல், தானே படித்து, அதனை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லாம் பாராட்டிப் பத்திரிகைகளில் இடம்பெறச் செய்து விளம்பரம் தேடிக் கொண்டோமே, அந்த அறிவிப்புகள் எல்லாம் என்ன ஆயிற்று? வண்டலூரில் பேருந்து நிலையம் வரும் என்று சொன்னோமே, முதியோருக்கு இலவசப் பேருந்து பயண அட்டை வழங்குவோம் என்று சொன்னோமே, “மோனோ?” ரெயில் வரப்போகிறது என்று ஆட்சிக்கு வந்ததிலிருந்து சொல்லிக் கொண்டிருக்கிறோமே, ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்குவோம் என்று சொன்னோமே, விலைவாசியைக் குறைப்போம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னோமே, மின்வெட்டே இல்லாத மாநிலமாக, மின்மிகை மாநிலமாகத் தமிழகத்தை ஆக்குவோம் என்று பலமுறை சொன்னோமே, 5.6 இலட்சம் பேருக்குப் புதிதாக வேலைவாய்ப்பினை உருவாக்கப் போவதாகச் சொன்னோமே, இருபதாயிரம் தொழிற்சாலைகள் உருவாக்கிடப் போவதாக அறிவித்தோமே, அவற்றையெல்லாம் செய்தோமா? ஏன் செய்யவில்லை என்றெல்லாம் அந்த கூட்டங்களிலே சொல்ல வேண்டியதுதானே?

கடந்த மூன்றாண்டு காலத்தில், அதற்கு முன்பிருந்த தி.மு. கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சாதனைத் திட்டங்களையெல்லாம் முட்டுக்கட்டை போட்டு, மூடு விழா நடத்திக் கொண்டிருப்பதைப் பற்றி மக்களிடம் சொல்ல வேண்டியதுதானே? மாநிலத்தின் மேம்பாட்டுக்காக மத்திய அரசிடம் திட்டங்களைக் கேட்டுப் பெற்றுச் செயலாக்கம் செய்யும் காலமெல்லாம் மாறி, மத்திய அரசே முன்வந்து தமிழகத்திற்கு வழங்கிய அடிப்படை கட்டமைப்பு வசதி அளிக்கும் திட்டங்களுக்கெல்லாம், தடை போட்டதற்கான காரணம் என்ன? என்பதைப் பற்றிப் பொதுமக்களுக்கு விளக்கம் அளிப்பதுதானே? சேதுத் திட்டத்தை ஏற்கனவே தேவை என்று அறிவித்தோம், தற்போது அதை வேண்டாமென்று உச்ச நீதிமன்றத்திலேயே கோரிக்கை வைக்கிறோம், என்ன காரணம் தெரியுமா என்று சொல்ல வேண்டியதுதானே? அதையெல்லாம் மக்களிடம் விளக்காமல், மத்திய அரசு இன்னின்ன ஊழல்களைச் செய்தது, அதிலே ஊழல், இதிலே ஊழல் என்று முதலமைச்சர் ஜெயலலிதா புழுதிவாரித் தூற்றுவதற்காகப் பட்டியலிட்டால், உடனடியாக அம்மையார் என்னென்ன ஊழல் செய்தார் என்று எதிர்க்கட்சிகள் பட்டியலிடத்தானே செய்வார்கள்?

இதற்கெல்லாம் பதிலளிக்காமல் முதலமைச்சர் ஜெயலலிதா குற்றச்சாட்டுகளை எடுத்துவைத்ததற்கெல்லாம் நான் ஒவ்வொரு நாளும் “உடன்பிறப்பு” மடலின் மூலம் விளக்கமாகப் பதில் அளித்திருப்பதை நீ கண்டிருப்பாய்! முதல் அமைச்சர் கேட்ட எந்தக் கேள்விக்கும், நான் விளக்கம் அளித்திடத் தவறவில்லை. ஆனால் மாறாக நாம் கேட்ட கேள்விக்குத் தான் முதலமைச்சர் ஜெயலலிதா எந்த விளக்கமும் அளிக்கவில்லை. குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு நாம் இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்று முதல் பொய் சொன்னார். அதற்கு அடுத்த நாளே, எந்தத் தேதியில் அவர்களுக்கு 3.5 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்கித் தி.மு.கழக ஆட்சியில் ஆணை பிறப்பிக்கப்பட்டது என்ற விவரத்தையும், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் எல்லாம் தெரிவித்த மறுப்பையும் எடுத்துக்காட்டியிருந்தேன். அதன்பிறகு அந்தப் பொய்யை விட்டுவிட்டு, கரசேவைக்கு தான் ஆள் அனுப்பவில்லை என்று அடுத்த பொய்யைச் சொன்னார். அதற்கும் நான் விரிவாகப் பத்திரிகைகளில் வந்த செய்திகளையெல்லாம் எடுத்துக் காட்டினேன். உடனே அதை விட்டுவிட்டு வேறொன்றைப் பேச ஆரம்பித்து விட்டார். கோவையில் சென்று தொழில் முதலீடுகள் தமிழகத்தை விட்டு வேறு மாநிலங்களுக்குச் செல்லவில்லை என்றும், நானும், ஸ்டாலினும் பொய் சொல்வதாகவும் ஒரு பெரிய பொய்யை அவிழ்த்துவிட்டார். அதற்கும் நான் விரிவாகப் பதிலளித்திருக்கிறேன். நீ படித்திருப்பாய்.

எப்படியோ அவர்கள் பாணியில் பிரச்சாரம் செய்யட்டும். நாம் நம்முடைய வழியில் நமது பயணத்தைத் தொடருவோம். கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு விட்டது. அ.தி.மு.க.வும் தனது தேர்தல் அறிக்கையைத் தயாரித்து வெளியிட்டுள்ளது. இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அந்த அறிக்கைகளைப் படித்துப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம். சுருக்கமாகக் கூற வேண்டுமேயானால், தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் குறிப்பிட்டதைப் போல தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை “இசை”; அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை “வசை”.

என்னுடைய சுற்றுப்பயணத்தை நான் தொடங்குவதற்கு முன்பு நான் உன்னிடம் சிலவற்றைக் கூற விரும்புகிறேன். ஏனென்றால் தமிழ்நாட்டிலே இப்போது வெளிவருகின்ற

பத்திரிகைகளில் பெரும்பாலானவை அரசு தருகின்ற முழு பக்க விளம்பரங்களுக்காகவும், ஆளுங்கட்சியினர் அவிழ்த்து விட்டுள்ள அடாவடி அரசியலாலும், அவர்கள் மீது கொண்டுள்ள அச்சத்தினாலும், நம்மீது கல்லைத் தூக்கிப் போடுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. குறிப்பாகக் கழகத்திலே ஏதாவது ஒரு சிறு சம்பவம் எங்கேயாவது தோன்றினால் போதும், உடனே அதற்கு முக்கியத்துவம் கொடுத்து, “பேனைப் பெருமாள் ஆக்கி” என்பார்களே, அதைப்போல ஒன்றை நூறாக்கி, அந்தச் செய்திக்கு கண்ணும் காதும் வைத்து வெளியிடுகிறார்கள். ஏன் இப்படி முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதைச் சற்று எண்ணிப் பார்க்க வேண்டும். திராவிட இயக்கத்தின் இனம், மொழி போன்ற தனிச்சிறப்பு வாய்ந்த அடையாளங்களில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை; நம்பிக்கை இல்லாதது மட்டுமல்லாமல், ஒருவகை ஒவ்வாமையே அவர்களிடம் இருக்கிறது. அந்தத் தொகுதியிலே வேட்பாளரை எதிர்த்து இப்படி நடக்கிறது, இந்தத் தொகுதியிலே வேட்பாளரை எதிர்த்து இவர்கள் எல்லாம் பணியாற்றவில்லை என்பது போன்ற செய்திகளுக்குத்தான் முக்கியத்துவம் தருகிறார்கள். அவர்களுடைய எண்ணம் எல்லாம், எப்படியாவது உற்சாகத்தோடு பணியாற்றுகின்ற நம்முடைய ஆர்வத்தைக் குறைத்திட வேண்டும் என்பதுதான். ஆனால் நாம் அவர்களை நினைத்துக் கவலைப்படுவதைவிட, அந்தச் செய்திக்குக்கூட நாம் ஏன் இடம்கொடுக்க வேண்டும்? நம்மை நாமே சரியாகத் தயார்படுத்திக்கொண்டு விட்டால், மற்றவர்களால் நம்மிடையே எவ்வாறு பூசலை ஏற்படுத்திட முடியும்! நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன், எழுதியிருக்கிறேன். “நீர் இடித்து நீர் விலகாது” - தொகுதியிலே வாய்ப்பு கேட்கும்போது எல்லோரும் கேட்பார்கள். ஆனால் ஒருவருக்கு வாய்ப்பு தரப்பட்டு விட்டது, மற்றவருக்கு அடுத்த முறை பரிசீலிக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டவுடன், அனைவரும் சேர்ந்து போட்டியிடுகின்ற வேட்பாளருக்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறோம். ஏனென்றால் அங்கே போட்டியிடுவது யாரோ ஒரு வேட்பாளர் அல்ல. தி.மு. கழகம் போட்டியிடுகிறது, கழகத்தைத் தோற்றுவித்த நம்மையெல்லாம் நாள்தோறும் இயக்கிக் கொண்டிருக்கின்ற மாபெரும் சக்தியான பேரறிஞர் அண்ணாதான் அங்கே வேட்பாளர். அந்த எண்ணத்தோடு கழகத் தோழர்கள் பாடுபட வேண்டுமென்று பணிவன்போடு வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

தஞ்சை நகர்மன்ற முன்னாள் தலைவரும், கழக சட்டதிட்டத் திருத்தக்குழு உறுப்பினருமான தம்பி சி. இறைவன் நேற்றையதினம் எனக்கொரு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் கழக உறுப்பினர்களாகத் தற்போது 80 இலட்சம் பேர் இருக்கிறார்கள், அவர்கள் எல்லாம் மக்களவைத் தேர்தலில் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் இந்தத் தேர்தலில் தவறாமல் நமது அணியினருக்கு வாக்களிக்க வேண்டும். அதே நேரத்தில் கழக உறுப்பினர்கள் 80 இலட்சம் பேரும், ஒவ்வொருவரும் கழக உறுப்பினர் அல்லாத மற்றொருவரைத் தன்னுடன் அழைத்துச்சென்று, நமது அணியின் வேட்பாளருக்கு வாக்கு அளிக்கச் செய்யவேண்டும். ஒவ்வொருவரும் அந்தப் பணியினை முறையாகவும், சரியாகவும் செய்வார்களானால், மேலும் 80 லட்சம் வாக்குகள் நமக்குக் கிடைக்கும். இரண்டையும் சேர்த்தால் தி.மு.கழகத்தின் சார்பில் மட்டுமே தமிழகத்தில் மொத்தம் நமது அணிக்கு ஒரு கோடியே அறுபது இலட்சம் வாக்குகளை மிகச் சுலபமாகப் பெற்று விடலாம். நமது அணிக்கு இந்த வாக்குகள் கிடைக்குமேயானால் மிகப் பெரும் வெற்றி உறுதி என்றெல்லாம் எழுதியிருக்கிறார்.

உடன்பிறப்பே, இறைவன் எழுதியுள்ள கணக்கு சரியான கணக்காகவே எனக்குத் தோன்றுகிறது. எனவே கழக உறுப்பினராக உள்ள ஒவ்வொருவருக்கும், என்னுடைய அன்பான வேண்டுகோள் இதுதான்; நீங்கள் ஒவ்வொருவரும் கழக உறுப்பினர் அல்லாத மேலும் ஒருவரை அணுகி, அவரையும் நம்முடைய அணிக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்யும் பணியிலே ஈடுபட வேண்டும். “நமது அண்ணன் எழுதி விட்டார், எனவே ஒருவரைச் சேர்த்தால் போதும்” என்று எண்ணிடாமல், குறைந்தபட்சம் ஒரு வாக்கு, அதற்கு மேல் நீங்கள் எத்தனை வாக்குகளை வேண்டுமானாலும் சேர்க்கலாம். தவறாமல், கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் ஒரு வாக்கு; ஒவ்வொருவராலும் ஒரு வாக்கு என்பதை மறவாமல் இன்று முதல் பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். வெற்றி நமதே! உன்னுடைய இனிய முகம் காண இன்றே புறப்படுகிறேன்.

அன்புள்ள, மு.க. 5-4-2014

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 51 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 51 PDF ↗