தொகுதி 50 · கடிதம் 3854
மனிதநேயத் தீர்ப்பு!
2014-01-23
உடன்பிறப்பே,
உச்சநீதிமன்றம் நேற்றையதினம் (21-1-2014) மனித நேயம் நிறைந்த, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பினை வழங்கியுள்ளது. சந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 7 பேருக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும், மேலும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனைகளை எதிர்த்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள். உச்சநீதிமன்றம், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஏ.சைமன், எம்.பிலவேந்திரன், ஜே.ஞானப்பிரகாஷ், மீசை மாதையன் ஆகியோருக்கு, தண்டனையை தூக்குத் தண்டனையாக அதிகரித்து தீர்ப்புக் கூறியது. இந்த நான்கு பேரும் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார்கள். அது காலதாமதத்தோடு நிராகரிக்கப்பட்டது. கருணை மனு மீதான முடிவை கால தாமதமாக எடுத்ததால், தண்டனையைக் குறைக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் “ரிட்” மனுவும், வழக்கை மீண்டும் விசாரிக்கக் கேட்டு, மறு சீராய்வு மனுவும் தாக்கல் செய்தார்கள். இதில் உச்சநீதிமன்றம் சீராய்வு மனுவினைத் தள்ளுபடி செய்தது. ஒரு வழக்கை விசாரித்து தீர்ப்புச் சொன்ன பிறகு, மீண்டும் அந்த வழக்கை விசாரிப்பது முறையானதல்ல, முன் உதாரணமும் அல்ல என்று தலைமை நீதிபதி சதாசிவம் அப்போது தெரிவித்தார்.
இதற்கிடையே தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரும் தாக்கல் செய்த “ரிட்” மனு மீதான தீர்ப்புதான் உச்சநீதிமன்றத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோர் இந்தத் தீர்ப்பினைக் கூறியுள்ளார்கள்.
நாடு முழுவதும், குடியரசுத் தலைவரால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னரும், தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படாமல் 15 தூக்குத் தண்டனைக் கைதிகள் உள்ளார்கள். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 14 கைதிகளின் கருணை மனுக்கள் குடியரசுத் தலைவரின் பரிசீலனையிலே உள்ளன. தற்போது கூறப்பட்டுள்ள தீர்ப்பின் மூலமாக, கருணை மனு தாமதம் என்ற காரணத்தைக்கூறி, இதுபோன்ற மற்ற கைதிகளின் தண்டனையும் குறைக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் இடம் பெறும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் மூவரையும் விடுவிக்க வேண்டுமென்று தி.மு.கழகம் உட்பட பலர் கோரி வருகின்றனர். 25-7-2013 அன்று “இந்து” நாளிதழில் வந்த செய்தியில், “A large section of India’s voters - constituting the dominant view - is in favour of abolishing the death penalty, as per the CSDS survey” என்று கூறப்பட்டிருந்தது. அதாவது இந்திய வாக்காளர்களில் பெரும்பாலோரின் கருத்து மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்பதாகும் என்று ஒரு ஆய்விலே கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கருத்தினை நான் எடுத்துக்காட்டி, தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவரையும் விடுவிக்க வேண்டுமென்று “முரசொலி” மூலம் கேட்டுக் கொண்டிருந்தேன்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எஸ். பிட்டாவைக் கொலை செய்வதற்காக, 1993ஆம் ஆண்டு டெல்லியில் கார் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் பிட்டா உயிர் தப்பிய போதிலும், ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலை நடத்திய, தேவேந்தர்பால் சிங் புல்லார் என்பவர், ஜெர்மனி நாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டார். 1995ஆம் ஆண்டு, புல்லார் ஜெர்மனியில் இருந்து நாடு கடத்தப்பட்ட பிறகு, 2001ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றம், புல்லாருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. டெல்லி செஷன்ஸ் நீதிமன்றம் 2002ஆம் ஆண்டு அந்தத் தண்டனையை உறுதி செய்தது. இதற்கிடையே புல்லாருக்கு மனநிலை பாதிக்கப்பட்டது. கருணை அடிப்படையில் தன்னை விடுதலை செய்ய வேண்டுமென்று புல்லார், 2003ஆம் ஆண்டு குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு அனுப்பிட, 2011ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவராக இருந்த பிரதிபா பாட்டீல் அதனை நிராகரித்தார்.
கருணை மனுவின் மீது முடிவெடுக்கக் கால தாமதமானதால், தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைக் குறைக்க வேண்டுமென புல்லார், உச்சநீதிமன்றத்தில் 2011 செப்டம்பரில் மனு தாக்கல் செய்து, கடந்த 12-4-2013 அன்று அந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து பஞ்சாப் மாநிலம் முழுவதிலும் ஒரு அதிர்ச்சி ஏற்பட்டது. மனநிலை பாதிக்கப்பட்ட புல்லாருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கக்கூடாதென சில மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை எழுப்பின. பஞ்சாப் மாநில ஆளுங் கட்சியான சிரோன்மணி அகாலி தளம் சார்பில் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டது. அந்த மாநில முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் அவர்களும், அவர் மகனும் துணை முதலமைச்சருமான சுக்பிர் சிங் அவர்களும் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களையும், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அவர்களையும் நேரில் சந்தித்து, புல்லாருக்குக் கருணை காட்டும்படி வலியுறுத்தினர். இந்தப் பிரச்சினை காரணமாக பஞ்சாபில் கொந்தளிப்பான நிலை நிலவுவதாகவும், புல்லாருக்குக் கருணை காட்டுமாறும், அதன் மூலம் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட உதவிடுமாறும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டே அவர்களிடம் செய்தியாளர்கள் இதைப்பற்றிக் கேட்டபோது, - “பஞ்சாப் முதல் அமைச்சரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்” என்று கூறினார். அதனைக் குறிப்பிட்டுக்காட்டி, “பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற முதலமைச்சர் முதல் அந்த மாநில மக்கள் அனைவரும் ஒருமனதாகக் குரல் கொடுக்கிறார்கள். ஆனால் தமிழகத்திலே என்ன நிலைமை?” என்று நான் வேதனையை வெளிப்படுத்தியிருந்தேன்.
அதுமாத்திரமல்ல; 29-8-2011 அன்று நான் விடுத்த அறிக்கையில், “மனித உரிமைக்கும், மனிதாபிமானத்திற்கும் எதிரான தூக்குத் தண்டனை தேவையில்லை என்றும், அதனை எல்லா நாடுகளும் ரத்து செய்து விடலாமென்றும் கருத்துத் தெரிவிக்காதோர் யாரும் இல்லை. உயர்ந்தபட்சத் தண்டனையான தூக்குத் தண்டனைக்குப் பதிலாக - கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு கைதி - எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் அந்தக் குற்றத்தை எண்ணியெண்ணி தனக்குத்தானே வருந்துவதை விட தூக்குத் தண்டனையால் பெரிய பயன் ஒன்றும் விளைந்துவிடப் போவதில்லை என்பதால்; ஆயுள் தண்டனையாக மாற்றி அமைத்திட வேண்டும். கொலைக் குற்றத்தில் ஒரு மனிதன் ஈடுபட்டிருப்பானேயானால், அவன் அதற்காக ஆயுள் முழுவதும் வருந்தி வாடுவதுதான்; தூக்குத் தண்டனையை விடக் கடுமையானது என்பது மட்டுமல்ல - அந்த மனிதன் திருந்தி வாழ்வதற்கான வாய்ப்பினை வழங்கி, வழிவகுத்திடக் கூடியதுமாகும். மத்தியப் பேரரசுக்கு நாம் எழுதிய மனமுருக்கும் கடிதங்களும் - பிரதமர் மற்றும் இந்தியத் தலைவர்கள் அனைவரிடமும் நேரில் எடுத்துவைத்த கோரிக்கைகளும் யாரும் அறியாதது அல்ல.
தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்போவதாகக் கூறப்படும் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகிய மூவரின் உயிர்களைக் காத்தருள வேண்டுமென்றும் - இளந்தலைவர் ராஜீவ் காந்தியே இருந்தால்கூட; இந்தச் சூழலில் உண்மைத் தமிழர்களின் குரலுக்கு மதிப்பளித்து, “மறப்போம்; மன்னிப்போம்” எனும் அண்ணாவின் பொன்மொழிக்கேற்ப இந்த மூவரின் உயிரையும் அந்த மாமனிதர் காப்பாற்றியிருப்பார் என்பதை எண்ணி - மரண தண்டனையை மாற்றியமைத்து; அவர்கள் உள்ளபடியே குற்றம் புரிந்திருந்தால்; அதற்காக மனம் வருந்தும் நிலையில் அவர்கள் இருபதாண்டு காலத்திற்குமேல் சிறையில் இருந்ததையே ஆயுள் தண்டனையைவிட அதிகமானதெனக் கருதி - தூக்குத் தண்டனையை ரத்து செய்தால் - இந்த மனித நேயச் செயலை மனமாரப் புகழ்ந்து மகிழக் கூடிய இனமாக தமிழினம் இருக்கும் என்று எடுத்துக் கூறி இந்த மூவரையும் மரணத்தின் பிடியிலிருந்து காப்பாற்ற வேண்டுமென்று; தூக்கு மேடையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள்; அதன் பிறகு எத்தகைய தூய வாழ்வினை மேற்கொண்டு அதனைத் தொடருகிறார்கள் என்பதை அறிந்தவன் என்ற முறையிலும், அவர்களின் விடுதலைக்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவன் என்ற அடிப்படையிலும்; மத்திய, மாநில அரசுகளை மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தேன்.
அதன்பின்னர், இதே பிரச்சினைக்காக நான் விடுத்த அறிக்கை ஒன்றில், “இந்த மூவரையும் விடுவிப்பதற்கான தீர்மானத்தை பேரவையில் நிறைவேற்றியபோது ஜெயலலிதா தனது உரையில், அரசியல் அமைப்புச் சட்ட விதி 161இன் கீழ் மாநில முதலமைச்சருக்கு இதில் அதிகாரம் இல்லை என்றும், மாநில கவர்னருக்கும் அதிகாரம் இல்லை என்றும் சொல்லியிருக்கிறார். இன்றுவரை ஜெயலலிதா அதே கருத்தைத்தான், அதாவது இதிலே மாநில முதல் அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்பதைத்தான் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார். ஆனால் தமிழகச் சட்டப்பேரவையில் 30-8-2011 அன்று அவர் 110வது விதியின்கீழ் படித்த அறிக்கையில், “கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையின் முடிவினை ஏற்று மேதகு ஆளுநர் அவர்கள் 21-4-2000 அன்று ஒப்புதல் அளித்தார்” என்று சொல்லியிருக்கிறார். அதே முறையில்தான் இந்த மூன்று பேரின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டுமென்ற அக்கறையுடன் தமிழக அரசும், ஜெயலலிதாவும் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் பரிந்துரைக்கு அனுப்ப வேண்டுமென்று நானும், தமிழகத்திலே உள்ள வேறு சில கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.
அதைப்போலவே, வீரப்பனின் நண்பர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நால்வருக்கும் கருணை காட்டி, தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அமைத்திட வேண்டுமென்றும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம்.
ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகிய நான்கு பேர் மீது வழக்கு விசாரணை நடத்திய மைசூர் தடா நீதிமன்றம் ஆயுள் தண்டனைதான் அவர்களுக்கு விதித்தது. ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்த காரணத்தால்தான், உச்சநீதிமன்றம் இந்த நான்கு பேருக்கும் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை, தூக்குத் தண்டனையாக மாற்றி 2004ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. தீர்ப்பளித்து ஒன்பதாண்டு காலமாக இந்தத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. இதற்கிடையே அவர்கள் நான்கு பேரும் இந்தியக் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார்கள். அந்தக் கருணை மனுவினை இந்தியக் குடியரசுத் தலைவர் நீண்டகால நிலுவைக்குப் பிறகு, கடந்த 11-2-2013 அன்று நிராகரித்துவிட்டார்.
அந்த நான்கு பேரின் சார்பாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தண்டனையை நிறைவேற்றத் தடை விதிக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் 16-2-2013 அன்று மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். மேலும் அந்த மனுவில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றி அமைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் சார்பில் வழக்கறிஞர்கள் காலின் கன்சால்வஸ், சமிக் நாராயண் ஆகியோர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி திரு. அல்டமாஸ் கபீர் அவர்களின் இல்லத்திற்கே சென்று இந்த மனுவினைத் தாக்கல் செய்து, உடனடியாக அதன்மீது விசாரணை வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். உச்சநீதிமன்றம் இந்த நால்வர் மீதான முடிவையும் தள்ளி வைத்துள்ளது.
2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மன்றம் தூக்குத்தண்டனைக்கு எதிரான ஒரு தீர்மானத்தை முன்வைத்த போது, அதை 104 நாடுகள் ஆதரித்துக் கையெழுத்திட்டன; இந்தியா உட்பட 39 நாடுகள் தான் அதை எதிர்த்து வாக்களித்தன; ஐ.நா. தீர்மானத்தையொட்டி உலகின் 90 சதவிகித நாடுகள் தூக்குத் தண்டனையை ரத்து செய்து விட்டன. அந்தப் பெரும்பான்மையுடன் இந்தியாவும் இணைய வேண்டாமா?
“குற்றவாளிகள் தப்பித்தாலும், நிரபராதிகள் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதை பொறுப்பிலே உள்ளவர்கள் மனதிலே கொண்டு இந்த நால்வரின் தூக்குத் தண்டனையையும், மற்றும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையையும் புல்லாரின் தண்டனையை மறு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும்போது; இணைத்துப் பரிசீலித்து, தண்டனையை மாற்றி அமைத்திட வேண்டும் என்றும், பொதுவாக தூக்குத் தண்டனையையே அறவே ரத்து செய்ய வேண்டுமென்றும் மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி அதற்கு வழிகாண மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன்' என்று விளக்கமாகத் தெரிவித்திருந்தேன்.
இவ்வாறு நான் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்ததற்கு, மத்திய, மாநில அரசுகளிடமிருந்து எந்தவிதமான பதிலும் கிடைக்காத நிலையில், உச்சநீதிமன்றம் என்னைப் போன்றவர்களின் உள்ளக் கிடக்கையை ஏற்கும் வகையில் இந்த வரலாற்றுப் புகழ் மிக்கத் தீர்ப்பினை அளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பினால் பயன்பெறுவோருக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் என் மகிழ்ச்சியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்வதோடு, இந்தத் தீர்ப்பினை அளித்த உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களுக்கும், அவரோடு இணைந்து உதவி புரிந்த நீதிபதி அவர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புள்ள,
மு.க.
23-01-2014
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 50 PDF ↗