உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 50

தொகுதி 50 · கடிதம் 3853

இடஒதுக்கீட்டில் நீதிமன்றத்தின் மீது பழி சுமத்துவதா?

2014-01-20

உடன்பிறப்பே,

சென்னை - அண்ணா சாலையில் தி.மு. கழக ஆட்சியில் ஓமந்தூரார் பெயரில் வளாகம் அமைத்து, சட்டப்பேரவைக்காகவும், தலைமைச் செயலகத்துக்காகவும் கட்டப்பட்ட கட்டடத்தின் நோக்கத்தையும், பெயரையும் மாற்றி, பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையினைத் தொடங்கப்போவதாக ஜெயலலிதா அறிவித்து, அந்த மருத்துவமனையிலே பணிபுரிவதற்காகச் சுமார் 100 உயர் அலுவலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிக்கை ஒன்று 27-12-2013 அன்று மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தினால் விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.

அந்தப் பணி நியமனங்கள் ஒப்பந்த அடிப்படையில் செய்யப்படும் என்றும், இட ஒதுக்கீடு அறவே கிடையாது என்றும் அந்த விளம்பரத்திலே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் தமிழகத்திலே உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் அது பற்றி கண்டன அறிக்கைகள் விடுத்திருந்தன. ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா 12-1-2014 அன்று இதுபற்றி ஒரு பதில் அறிக்கை கொடநாட்டிலிருந்து விடுத்திருந்தார். அதிலேகூட மற்றவர்களுக்குப் பதில் சொல்வதைத் தவிர்த்து விட்டு, என்னைப்பற்றி மட்டும் அநாகரிகமான முறையில் விமர்சனம் செய்து அவருக்கே உரிய பண்பாடற்ற பாணியில் வசைபாடியிருந்தார். இருந்த போதிலும், முதலமைச்சர் ஆயிற்றே என்பதற்காக, அவருடைய பதில் அறிக்கைக்கு மதிப்பளித்து 13-1-2014 அன்று சென்னைப் பெரியார் திடலில், தமிழர் தலைவர், கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நான் விரிவாகப் பதிலளித்திருந்தேன்.

உச்சநீதிமன்றம் 18-7-2013 அன்று அளித்த தீர்ப்பின்படி தான் இட ஒதுக்கீட்டினைப் பின்பற்றவில்லை என்றும், தற்போதுள்ள மத்திய அரசு, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் நிச்சயமாக உரிய திருத்தங்களைக் கொண்டுவராது என்றும் ஜெயலலிதா சொல்லியிருந்தார்.

உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தது - 18-7-2013 அன்றுதான்; உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெளியானவுடன் நாடாளுமன்றத்திலே இதுபற்றி மிகப் பெரிய விவாதமே (13-8-2013) அன்று நடைபெற்றிருக்கிறது. அப்போது, “மத்திய அரசின் சார்பில் உடனடியாக இந்தத் தீர்ப்பினை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படும்” என்று சட்டத் துறை அமைச்சர் திரு. கபில்சிபல் அவர்கள் அவையிலே உறுதி அளித்ததோடு, “தேவைப்பட்டால் அரசியல் சட்டத்திருத்தமே கொண்டுவரப்படும்” என்றும் கூறியிருக்கிறார். அப்படிக் கூறியதை அடுத்து, உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவினையும் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்தார்கள். ஆனால் ஜெயலலிதா மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை என்று குறைபட்டிருக்கிறார்.

மேலும் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதி மன்றத் தீர்ப்பிற்கு மாறாகவே மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் அனுப்பிய கடிதத்தில் வருங்காலத்தில் செய்யப்படும் நியமனங்களில் இட ஒதுக்கீட்டினைப் பின்பற்ற வேண்டும் என்றே தெரிவித்திருந்தார்கள்.

இதிலிருந்து மத்திய அரசு உச்சநீதிமன்றத் தீர்ப்பினையொட்டி இட ஒதுக்கீட்டில் கை வைத்து விடவில்லை என்பதும், ஜெயலலிதாதான் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை, தனக்குக் கவசமாக வைத்துக்கொண்டு, சமூக நீதிக் கொள்கைக்கு எதிராகச் செயல்பட்டிருக்கிறார் என்பதையும் குறிப்பிட்டு, ஜெயலலிதாவிடம் சில கேள்விகளையும் கேட்டிருந்தேன். அதாவது, 22-11-1993 அன்று உச்ச நீதி மன்றத்தில் ஜெயலலிதா அரசின் சார்பாக 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மாட்டோம், 50 சதவிகிதத்தையே அமல்படுத்துகிறோம் என்று உறுதிமொழி கொடுக்கப்பட்டதா இல்லையா?

இடஒதுக்கீட்டில் சாதி அடிப்படை கூடாது என்றும், பொருளாதார அளவுகோலே வேண்டும் என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டிற்கு ஜெயலலிதா பேட்டி கொடுத்தது உண்டா இல்லையா?

அந்தப் பேட்டியில், “பிற்படுத்தப்பட்ட வகுப்புகளிலும் சிலர், நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் இட ஒதுக்கீட்டுச் சலுகையைப் பெறுவது என்பது இட ஒதுக்கீட்டுக் கொள்கையையே கேலிக் கூத்தாக்கிவிடும். எனவே பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்குச் சலுகைகள் கிடைக்குமாறு செய்ய வேண்டும். அப்போதுதான் அதைச் சமூக நீதி என்று கூறலாம். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவிகிதம் என மத்திய அரசு முடிவெடுத்துள்ள நிலையில் முன்னேறிய வகுப்பினரில் கூட பொருளாதாரரீதியாக நலிந்த பிரிவினருக்கு 5 அல்லது 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு செய்வது தவறில்லை” என்று ஜெயலலிதா சமூக நீதியின் அடிப்படையையே தகர்த்திடும் வகையில் கூறியது உண்டா? இல்லையா?

என்றெல்லாம் பெரியார் திடல் கூட்டத்திலே நான் கேட்டிருந்தேன். இதில் எந்தக் கேள்விக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா இதுவரை பதில் கூறவில்லை. பதில் கூறுவதற்கு வழி இருந்தால் அல்லவா பதில் கூறுவார்? அதனால்தான், பதில் கூறாமல் ஆத்திரப்பட்டு என் மீது பாய்ந்து பிறாண்டுகிறார்.

இதற்கிடையே மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த மறுஆய்வு மனுமீது 16-1-2014 அன்று விசாரணை நடைபெற்றபோது, அதை விசாரித்து உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “It is for the Centre to take a decision whether there should be reservation in super-speciality Posts” (உயர் சிறப்புப் பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டுமா என்பது குறித்து மத்திய அரசே முடிவு செய்து கொள்ளலாம்) என்று தெரிவித்திருக்கிறார்கள். இந்த விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல்களான எல். நாகேஸ்வர் ராவ் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர், “Indira Sawhney Judgment did not restrain the Government from providing Reservation in Super-Speciality Faculty Posts” (இந்திரா சஹானி வழக்கில் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உயர் சிறப்புப் பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு அரசை தடை செய்யவில்லை) என்று வாதிட்டிருக்கிறார்கள். மத்திய அரசுப் பணிகளில், பிற்படுத்தப்பட்டோர்க்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டினை ஏற்றுக் கொண்டு அளித்த இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பிலிருந்து உச்சநீதிமன்றம் மேற்கோள்காட்டி, “In certain services in respect of certain posts, application of rule of reservation may not be advisable in regard to various technical posts, including posts in super-speciality medicine, engineering and other scientific and technical posts” (மருத்துவம், பொறியியல், விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பம் தொடர்பான உயர் சிறப்புப் பதவிகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று பரிந்துரைத்திட இயலாது) என்று கடந்த ஆண்டு சுட்டிக்காட்டியிருந்தது என்பதையும் இது தீர்ப்புரை (VERDICT) அல்ல - கருத்துரையே (OBSERVATION) என்பதையும் கவனத்திலே கொள்ள வேண்டும்.

இந்தச் செய்தியை வெளியிட்டுள்ள 17ஆம் தேதிய “டைம்ஸ் ஆப் இந்தியா”, “This will open the window for the Government to provide Reservation as a criteria for appointment to AIIMS Faculty Positions” (அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனத்தின் உயர் சிறப்புப் பதவிகளுக்கு நியமனம் செய்யும்போது இட ஒதுக்கீட்டை அடிப்படையாகக் கொண்டு நியமனம் செய்வதற்கான பலகணி அரசுக்கு திறந்துவிடப்பட்டிருக்கிறது) என்றே எழுதியுள்ளது.

உயர் சிறப்புப் பதவிகளில் நியமனம் செய்யும் போது, இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பதற்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான் காரணம் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஆனால் உச்சநீதிமன்றம் இடஒதுக்கீட்டினைப் பின்பற்றுவது என்பது மத்திய அரசின் முடிவாகும் என்று திட்டவட்டமாகத் தனது தீர்ப்பில் தெரிவித்துவிட்டது. இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்பதைப் பரிந்துரைத்திட இயலாது என்று கூறியதோடு, மத்திய அரசிடம்தான் “பந்து” தற்போது உள்ளது என்றும் தெளிவாக உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. மேலும் மத்திய அரசின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ள கருத்திலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு இத்தகைய உயர் பதவிகளில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதைத் தடைசெய்யவில்லை என்றே கூறிவிட்டார்கள். எனவே, தமிழகத்தில் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு காரணமாகத்தான், இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று ஜெயலலிதா கூறியிருக்கும் காரணம், மக்களை ஏமாற்றுவதற்கும், சமூகநீதியைக் குழி தோண்டிப் புதைப்பதற்குமான ஒன்றே தவிர வேறல்ல.

உச்சநீதிமன்றம் 18-7-2013 அன்று தீர்ப்பளித்த பிறகு, ஜூலை 31ஆம் தேதி புதுவை ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் 114 மருத்துவ அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளி வந்தபோது, உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டி இட ஒதுக்கீடு கிடையாது என்று மத்திய அரசு கூறவில்லை. இட ஒதுக்கீட்டின்படி பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனத்திலேயே இட ஒதுக்கீடு தொடர்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் இட ஒதுக்கீட்டைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தும்படி, மத்திய சுகாதாரத்துறை கூறியதன் அடிப்படையில், 148 உதவி மருத்துவப் பேராசிரியர் பணி இடங்கள் இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடித்துத்தான் நிரப்பப்பட்டுள்ளன. எனவே உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும், மத்திய அரசின் நிறுவனங்களில், இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் தமிழக அரசு அதனை அமல்படுத்தாது, உச்ச நீதி மன்றத் தீர்ப்பின் மீதும், மத்திய அரசின் மீதும் பழிபோடுவது என்பது எத்தகைய மோசடி வித்தை என்பதை இங்குள்ள தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் ஜெயலலிதா 12-1-2014 தேதிய அவருடைய அறிக்கையில், “நடைமுறையில் உள்ள விதியினையும், முன்மாதிரியையும் கருத்தில் கொண்டே ஓமந்தூரார் உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதைத் திரு. கருணாநிதிக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். நடைமுறையில் உள்ள விதியினையும், முன்மாதிரியையும் கருத்தில் கொண்டுதான் இட ஒதுக்கீடு இல்லாமல் தற்போது பணிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதாக ஜெயலலிதா கூறுகிறார். ஆனால் 31-3-2013 அன்று தமிழக அரசின் மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தின் சார்பில் வெளியிட்ட அறிவிக்கையில் “The Rule of Reservation is applicable as per the Rules in force” அதாவது “தற்போது விதிகளில் உள்ள இட ஒதுக்கீடு பொருந்தும்” என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது 27-12-2013 அன்று அதே தமிழக அரசின் மருத்துவப் பணிகள் தேர்வு வாரியத்தின் சார்பில் வெளியிட்ட அறிவிக்கையில், “There is no Reservation for these posts” அதாவது இந்தப் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது - என்று மாற்றப்பட்டுள்ளது. ஆனால் முதலமைச்சர் ஜெயலலிதா தனது அறிக்கையில் நடைமுறையில் உள்ள விதியினையும், முன்மாதிரியையும் கருத்தில் கொண்டுதான் அறிவிக்கை வெளியிடப்பட்டதாக அப்பட்டமாகப் பொய் சொல்லியிருக்கிறார்.

அடுத்துத் தற்போது தேர்ந்தெடுக்கப்படும் பல்வேறு மருத்துவர்களுக்கான மாதாந்திர ஊதியம் இரண்டரை இலட்சம் ரூபாய் என்றும், ஒன்றரை இலட்சம் ரூபாய் என்றும், ஒரு இலட்சம் ரூபாய் என்றும் உயர் அளவில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறதே என்று நான் கேட்டதற்கு, பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணிபுரிய இருப்பதால், இந்த அளவிற்கு ஊதியம் என்று ஜெயலலிதா அவருக்கே உரிய மேல் தட்டுப் பாணியில் பதில் சொல்லியிருந்தார். ஆனால் கடந்த மார்ச் மாதம் 31-3-2013 அன்று அரசு சார்பில் வெளியிட்ட அறிவிக்கையில் மருத்துவர்களுக்கு எவ்வளவு மாதாந்திர ஊதியம் என்று கூறியிருந்தார்கள் தெரியுமா? Scale of Pay: Rs. 15,600 - 39,100 + Grade Pay 5,400/- என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கில் ஊதியம் என்பது இலட்சக் கணக்கில் உயர்த்தப்பட்டது ஏன்? எதற்காக? எப்படி? இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டினை நடுநிலையாளர்கள் புரிந்து கொண்டால் போதும்!

இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராகச் செயல்படும் ஜெயலலிதா அரசைக் கண்டித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவர் அணி சார்பில், ஜனவரி 21 அன்று மாநில மாணவர் அணிச் செயலாளர், தம்பி கடலூர் இள. புகழேந்தி தலைமையில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி ஜெ. அன்பழகன், எம்.எல்.ஏ., மாணவர் அணியின் துணைச் செயலாளர்கள் தம்பிகள் கோவி.செழியன், எம்.எல்.ஏ., குத்தாலம் க.அன்பழகன், கோவை கணேஷ்குமார், பூவை சி. ஜெரால்டு, மதுரை க.மகிழன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாணவர் அணியும் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீடு என்பது திராவிட இயக்கங்களின் மூலாதாரக் கொள்கை என்பதை மனதிலே கொண்டு 21ஆம் தேதி நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக ஆக்கிட வேண்டும். இந்த ஆட்சியினர் இனியாவது மனம் திருந்தி அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவர் தேர்வில், இட ஒதுக்கீடு கொள்கை கடைப்பிடிக்கப்படும் என்ற அறிவிப்பினைச் செய்ய முன்வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அதற்குப் பதிலாக நாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று பிடிவாதம் காட்டுவார்களேயானால், அதன் விளைவுகளை அவர்கள் சந்திக்கத்தான் வேண்டியிருக்கும்!

அன்புள்ள,

மு.க.

20-1-2014

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 50 PDF ↗