தொகுதி 50 · கடிதம் 3849
திருச்சி என்றாலே, திருப்புமுனை மாநாடுதானே? (3)
2014-01-12
உடன்பிறப்பே,
1949ஆம் ஆண்டு செப்டம்பர் 17இல் கழகம் பிறந்த பிறகு, அதற்கும் 1951ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி முதல் மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றதற்கும் இடையில் இரண்டாண்டு காலத்தில் மட்டும் 12 கழக மாநாடுகள் நடைபெற்றன. மாவட்ட மாநாடுகள் என்ற வகையில் பார்த்தாலும் கூட, தி.மு. கழகத்தின் முதல் மாநாடு, திருச்சி மாவட்ட தி.மு.கழக மாநாடு 1950ஆம் ஆண்டு இதே ஜனவரி முதல் நாள் அன்று திருச்சியிலேதான் நடைபெற்றது. எனவே தி.மு. கழகத்தின் முதல் மாநாட்டினை, கழகம் மூன்று மாதக் குழந்தையாகத் தவழ்ந்து கொண்டிருந்தபோதே, நடத்திய பெருமையும் திருச்சிக்குத்தான் உண்டு. தற்போது கழகம் 64 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், பத்தாவது மாநில மாநாட்டை நடத்துகின்ற பட்டொளி வீசிடும் பெருமையும் திருச்சிக்கே கிடைத்துள்ளது. மேலும் திருச்சியில் நடைபெற்ற அந்த முதல் மாநாட்டில் பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய “சந்திரமோகன்” நாடகம் நடைபெற்றது. அண்ணா அவர்களே அதில் நடித்தார் என்பது சரித்திரம்.
1951ஆம் ஆண்டு சென்னையில் முதல் மாநில மாநாட்டை அண்ணா முன்னின்று நடத்திய போது, மாநாட்டை நடத்துவதற்கு செலவுக்குப் பணம் திரட்ட வேண்டிய பெரும் பணி அண்ணா அவர்களுக்கும், எங்களுக்கும் ஏற்பட்டது. அப்போது ஒவ்வொரு நாளும் அண்ணா அவர்கள் சென்னையிலே தோழர்களோடு அமர்ந்து மாநாட்டுப் பந்தல் வேலைகளை அவரே நேரடியாகக் கவனித்துக் கொண்டிருக்கிறபோது, சி.வி.எம். அண்ணாமலை அவர்கள் என்னை அழைத்துக் கொண்டு செங்கற்பட்டு
மாவட்டத்தில் கூட்டங்களுக்குத் தேதி தந்து, ஒவ்வொரு கூட்டத்திலும் இருநூறு ரூபாய் மாநாட்டு நிதியாக அன்றைக்கு வாங்கித் தருவார். ஒரு நாளைக்கு ஏழு கூட்டம், எட்டு கூட்டம் இருக்கும். கூட்ட முடிவில் மொத்தமாகக் கிடைப்பது ஆயிரத்து அறுநூறு அல்லது ஆயிரத்து எண்ணூறு ரூபாய் என்ற அளவில் நிதி திரளும். விடியற்காலை இரண்டு அல்லது மூன்று மணிக்குத்தான் இரவு சாப்பாடு போடுவார். நானும், சி.வி.எம். அவர்களும் அந்தக் கூட்டங்களையெல்லாம் முடித்து விட்டு ஆயிரம் ரூபாய், இரண்டாயிரம் ரூபாய் பணத்தோடு நேராக எஸ்.ஐ.ஏ.ஏ. திடலுக்குத்தான் வருவோம். அங்கே மாநாட்டுக்காகக் குவிக்கப்பட்டிருந்த மணலிலே அண்ணா அமர்ந்திருப்பார். தோழர்கள் சுற்றிலும் அமர்ந்திருப்பார்கள்; நாவலர், பேராசிரியர், ஈ.வி.கே. சம்பத், நாஞ்சிலார் என்று இவர்கள் எல்லாம் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். அண்ணாவிடம் பெருமையோடு பணத்தைக் கொடுப்போம். அண்ணா பணத்தை வாங்கிக் கொண்டு; “எங்கே உணவருந்தினீர்கள்?” என்று கேட்பார். “உத்திர மேரூரில் அண்ணா” என்று சொல்வேன். “என்ன சாப்பாடு?” என்று கேட்டு விட்டு, நான் பதில் கூறுவதற்குள் அண்ணாவே, “அண்ணாமலைக்கு வேண்டியதையெல்லாம் உன் பெயரைச் சொல்லி தயாரித்து வைக்கச் சொல்லியிருப்பாரே?” என்று வேடிக்கையாகச் சொல்வார்.
1950ஆம் ஆண்டு ஜனவரியில் திருச்சியில் முதல் மாநாட்டினை நடத்திய தி.மு. கழகம், அதே ஜனவரி 21 ஆம் தேதி சென்னையில் மாவட்ட முதல் மாநாட்டினையும், 29ஆம் தேதி கோவையில் அந்த மாவட்ட முதல் மாநாட்டினையும் நடத்தியது. 1950ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதியன்று தி.மு. கழக மகளிர் மாநாடு ஒன்று சென்னையில் மூவலூர் மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் தலைமையில் நடைபெற்றது. அதே ஆண்டு சூன் 10ஆம் தேதியன்று மதுரை மாவட்ட முதல் மாநாடும், ஆகஸ்ட் 26, 27 ஆகிய நாட்களில் நெல்லை மாவட்ட முதல் மாநாடும், நவம்பர் 8ஆம் தேதியன்று சென்னை மாவட்ட திராவிட மாணவர் முன்னேற்றக் கழக மாநாடும், டிசம்பர் 23, 24 ஆகிய நாட்களில் செங்கை மாவட்ட முதல் மாநாடும், டிசம்பர் 29, 30 ஆகிய நாட்களில் குமரி மாவட்ட முதல் மாநாடும், 1951ஆம் ஆண்டு
மார்ச் 3, 4 ஆகிய நாட்களில் தஞ்சை மாவட்ட முதல் மாநாடும், அதே ஆண்டு மே 5, 6 ஆகிய நாட்களில் சேலம் மாவட்ட முதல் மாநாடும், அதே ஆண்டு ஜூலை 29ஆம் தேதியன்று திண்டுக்கல்லில் எழுத்துரிமை, பேச்சுரிமை மாநாடும் நடைபெற்ற பிறகுதான் டிசம்பரில் சென்னையில் முதல் மாநில பொது மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடுகளில் 1950ஆம் ஆண்டு ஆகஸ்டு 26, 27 ஆகிய நாட்களில் நடைபெற்ற நெல்லை மாவட்ட முதல் மாநாட்டிற்குத் தலைமை வகிக்கும் பொறுப்பினை அண்ணா அவர்கள் எனக்கு வழங்கினார். இன்றைய அமைப்புச் செயலாளர் தம்பி டி.கே.எஸ். இளங்கோவன், எம்.பி.யின் அருமைத் தந்தையாரும், தொலைவிலிருந்து ஒலி பெருக்கியில் பேச்சைக் கேட்டால், அண்ணா அவர்கள் பேசுவதைப் போலவே தெரிகின்ற அளவிற்கு பேசக்கூடிய ஆற்றலாளருமான தத்துவமேதை டி.கே. சீனிவாசன்தான் அந்த மாநாட்டின் திறப்பாளர். நான் தலைமையேற்று நடைபெற்ற முதல் மாநாடும் அதுதான். அப்போது என்னுடைய வயது 26தான். எனது தலைமை உரையில், “என் போன்றவர்களுக்கு இந்தச் சிறப்பு வழங்கப்படுவதன் நோக்கம், இயக்கம் இளைஞர்களின் சொத்து, உழைப்பாளிகள் அமைத்த மாளிகை, அதில் உல்லாசபுரியினர் வாழ முடியாது என்பதை நாட்டுக்கும், நாட்டிலே நம்மைப் பற்றி நச்சுக் கருத்துக்களை நடமாட விடுபவர்களுக்கும் எடுத்துக் காட்டத்தான் என்றே நான் கருதுகிறேன். நாடு நம்மைத்தான் எதிர்பார்த்து நம்பிக் கிடக்கிறது. நாம் சொல்லுகிற ஒவ்வொரு வார்த்தையையும் காதைத் தீட்டிக் கொண்டு நாடு கவனிக்கிறது. இந்திய உபகண்டத்திலேயே நாம் பெரிய கட்சிகளில் ஒன்றாகி விட்டோம். வேறு எந்தக் கட்சிக்கும் இளைத்தவரல்ல நாம்; காங்கிரஸ் கட்சிக்கு இருக்கும் மதிப்பை விட, சோஷியலிஸ்டுகளைப் பற்றிய அபிப்பிராயத்தை விட, இந்து மகா சபைக்குக் காட்டப்படும் ஆதரவை விட, கம்யூனிஸ்டுகளிடம் காட்டப்படும் அக்கறையை விட, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அதிகமாகவே வரவேற்பு இருக்கிறது தென்னாட்டில்! இன்னும் சொல்ல வேண்டுமானால் தென்னாட்டிலேயே சிறந்த
பேச்சு வீரர்களையும், சிந்தனையை அள்ளி வீசும் புத்துலகச்
சிற்பிகளையும் கொண்டு, கடமை ஆர்வத்துடன் ஓயாது பாடுபடும்
கழகம் நமது திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்று மட்டும்தான். நாம் வளர்ந்திருக்கிறோம், வளர்ந்து கொண்டே இருக்கிறோம்.
நாம் நீதி, நேர்மைக்காகப் போராடுபவர்கள். கஷ்டங்களைப் புன்சிரிப்போடு ஏற்று, பொதுப்பணி புரிந்து வருபவர்கள். நமது கொள்கைகள் நாட்டின் நலிவைத் தீர்ப்பவை, நல்வாழ்வு தருபவை. கல்லடியும் சொல்லடியும் பட்ட காலத்திலே கரையாதது நமது இயக்கம்-பணக்காரர்களின் செல்வாக்கென்ற ஈட்டிகள் எறியப்பட்ட நேரத்திலே இறந்து போகாத இயக்கம்-மடாதிபதிகளின் எதிர்ப்பு, மகந்துகள் ஜீயர்களின் கொதிப்பு இவைகளால் மாண்டு போகாத இயக்கம்-பதவியும் பட்டமுமே தேவை என்பவர்களின் பாசக் கயிற்நிலிருந்து விடுபட்ட இயக்கம் - சொந்த வாழ்வும் சுயநலமுமே பெரிதென்போரின் பேய்ப் பிடியிலிருந்து தப்பிய இயக்கம் - கொள்கைக்காக வாழ்ந்த நாகை மணியை, மாயவரம் நடராசனை, ஆரூர் வி.எஸ். இராமனை, அழகிரிசாமியை அணைத்திருந்த இயக்கம் - மொழிக்காக உயிர் விட்ட தாளமுத்து நடராசன்களைக் கொண்டிருந்த இயக்கம் - கொள்கைக்காக மரத்திலே பிணமாக ஊஞ்சலாட்டப்பட்ட உடையார்பாளையம் வேலாயுதங்களை உற்பத்தி செய்யும் இயக்கம் - மதுரை மாநாட்டுத் தீயைக் கண்டு மனங் கலங்காத இயக்கம் - குடந்தைத் தெருவினிலே குருதி வெள்ளத்தைக் கண்டு குலை நடுங்காத இயக்கம் - இராம காவியம் இழுக்குடையது என்பதை எடுத்துக்காட்டி பாரதியார்களை, சேதுப் பிள்ளைகளை சொற்போரிலே வெற்றி கண்ட இயக்கம் - ஆறிலும் சாவுதான், நூறிலும் சாவுதான், ஆனது ஆகட்டும் என்று பாடிவரும் ஆயிரமாயிரம் தம்பிகளைப் பெற்றுள்ள இயக்கம் - தம்பிகளின் நெஞ்சைத் தட்டிப் பார்த்து “உறுதியானதுதானா இது” என்று உணர்ந்து அறப்போருக்கு உரிய காலம் பார்த்திருக்கும் உலக அறிஞர்களில் ஒருவராம் அண்ணாவைப் பெற்றிருக்கும் இயக்கம் - குள்ளநரிக் கூட்டத்தின் குடல் கிழிக்கும் கூற்றம் - குமுறும் எரிமலை புதுவைக் கவிஞர் பாரதிதாசனைப் பெற்றுள்ள இயக்கம் - அன்று முதல் இன்று வரை அடுக்கடுக்கான ஆபத்துக்களைத் தாங்கி, அவைகளைத் தாண்டி, நாம் வளர்ந்து வந்துள்ளோம்.
இந்தப் பதினொரு மாதங்களிலே ஐநூறுக்கு மேற்பட்ட கிளைக்
கழகங்கள் - ஆறு மாவட்ட மாநாடுகள் - தினசரி நம் கொள்கைகளை அக்கறையோடு கேட்கிற பல்லாயிரக்கணக்கான மக்கள், யாரால் எந்தக் கட்சியால் இதுபோல் முடிந்தது என்கிறார்கள். நம் வளர்ச்சி கண்டு நாமே பூரிக்கிறோம்” என்றெல்லாம் இயக்கத்தின் வளர்ச்சி பற்றி கோவில்பட்டி மாநாட்டில் என் தலைமையுரையில் குறிப்பிட்டேன். நீண்ட பேச்சு, முழுவதும் வெளியிட இதில் இடம் போதாது.
மாநாட்டுத் தலைவன் என்ற முறையில் கழகத்தின் அமைப்புகள், சிற்றூர்க் கிளை, நகரக் கிளை, வட்டக் கிளை, மாவட்டக் கிளை, தலைமைக் கழகம் என்கிற அளவில் பரவலாக்கப்பட வேண்டுமென்றும், ஒவ்வொரு அமைப்புக்கும் தொடர்பு இருக்க வேண்டுமென்றும், தலைமைக் கழகத்தின் தாக்கீதுகள் பிறப்பிக்கப்பட்ட உடனேயே அவைகள் சிற்றூர்க் கிளைகளுக்குச் சென்றடைகிற அளவிற்கு எல்லா மட்டத்திலும் உள்ள அமைப்புகளுக்கு இடையே ஒரு சங்கிலித் தொடர்பு இருக்க வேண்டுமென்றும் குறிப்பிட்டேன். மேலும் தமிழகம் புறக்கணிக்கப்படுவதைச் சுட்டிக் காட்டி, இந்தி ஆதிக்கத்தை எதிர்ப்பதன் அடையாளமாக கழகம் போராட்டங்களை வகுக்க வேண்டுமென்றும் எடுத்துச் சொன்னேன். இறுதியாகப் பேசிய அண்ணா அவர்கள் என் தலைமை உரையில் குறிப்பிட்ட குறைபாடுகளை எல்லாம் ஏற்றுக் கொண்டு, நான் கேட்டுக் கொண்டவாறு போராட்டத் திட்டங்களை அந்த மாநாட்டிலேயே வெளியிட்டார். 26 வயதிலே நான் ஆற்றிய என் உரையை பேரறிஞர் அண்ணா அவர்கள் தன்னுடைய “திராவிட நாடு” இதழில், முதல் பக்கத்தில் என்னுடைய புகைப்படத்தோடு சேர்த்து வெளியிட்டார். அந்த இதழில் வெளிவந்த என் படம்தான் இந்தக் கடிதத்தோடு இணைக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டில் “திராவிடத்தின் உலகத் தொடர்புகள்” என்று தலைப்பு கொடுக்கப்பட்டு, அந்தத் தலைப்பின் மீது நான் பேசினேன். அந்தக் காலத்திலேயே நம்முடைய கழக மாநாடுகளில்தான் இவ்வாறு தலைப்புகள் தரப்பட்டு பேசப்படும். எனக்குத் தந்த தலைப்பின் மீது நான் பேசும் போது, “மலேயா ரப்பர் தோட்டங்களில், சிலோன் தேயிலைக் காடுகளில், ஆப்பிரிக்கச் சுரங்கங்களில் திராவிடர்கள்
அவதியுறுகிறார்கள்; விலங்குகளைப் போல் நடத்தப்படுகிறார்கள்; சாக்கடை ஓரங்களில் வசிக்கிறார்கள்; மாடுகளைப் போல் உழைக்கும் கூலிகளாயிருக்கிறார்கள்; அந்தந்த நாடுகளில், கேவலமான நிலைகளுக்கு ஆளாக்கப்பட்டு, உரிமையிழந்து தவிக்கிறார்கள்; கண்ணீர் வடிக்கிறார்கள்; இதுதான் திராவிடத்தின் இன்றைய உலகத் தொடர்பு” என்பதுதான் என் பேச்சின் துவக்கம்.
மேலும் அந்தப் பேச்சில், “நேற்று வாழ்ந்தோம் - இன்று தாழ்ந்தோம் - நாளை வாழ்வோம் - அதற்காக வாளெடுப்போம்! சூளுரைப்போம்! அதற்காகவே இங்கு திருச்சிதனில் - தீரர்கள் உலவும் பூமியில் - மாநில மாநாட்டில் கூடியிருக்கிறோம்” என்றெல்லாம் இரண்டாவது மாநில மாநாட்டில் குறிப்பிட்டேன். இப்போது
மாநாடு நடைபெறும் இடம் அதே திருச்சி. அப்போது 1956இல் நான் பேசியது, இப்போதும் பொருந்தி வருவதைப் போல் என் பேச்சு அமைந்திருக்கிறதல்லவா? எனவேதான் இதை நினைவுபடுத்துகிறேன்.
திருச்சியில் நடைபெறும் இந்தப் பத்தாவது மாநில மாநாடு பற்றி தம்பி கவிதைப்பித்தன் எழுதிய அருமையான கவிதை
“மனம் நிறைந்த கழகத்தின் மாநாட்டு வரலாற்றில்
நினைவுகளின் கல்வெட்டாய் நிலைக்கவரும்
மாநாடு!
முனைமழுங்கிப் போய்விட்ட மூளை மடிப்புகளில்
இனஉணர்வுக் கனல்மூட்டும் எழுச்சிமிகு மாநாடு!
காடுகளாம் முட்புதராய் கள்ளிமண்டிக் கிடந்த மணல்
மேடுகளைச் சீராக்கி, மிகப் புதிய ஊராக்கிப்
பீடு மிகும் “இரட்டைமலைப்” பின்னணியில்,
மலைகளுக்கும் ஈடுதந்தே எழுந்துநின்று எழில்குலுங்கும் மாநாடு!
இருள்மண்ட பம்போல இடர்சூழ்ந்த தமிழ்நாட்டில்
மருள்மண்டும் நிலைமாற்றி மயக்கமொழித்தே,
திருச்சிக் “கருமண்டபம்” அருகில் கதிரவனின் ஒளியேற்றிப்
“பிராட்டியூர் பெருமையினைப் பெறப் போகும்
மாநாடு”
என்றெல்லாம் வளஞ்செறிந்த வார்த்தைகளால் இந்த மாநாட்டிற்கு மாலை தொடுத்திருக்கிறார்.
இதே திருச்சி மாநகரில் நடைபெற்ற இரண்டாவது மாநில மாநாட்டில், அண்ணா அவர்கள் உரையாற்றும் போது, “இந்த மாநில மாநாட்டில் கூடியிருக்கிற நீங்கள், 4000 அடி உயரத்திலே இருக்கிற வால்பாறையிலே இருந்தும், நெடுந்தொலைவிலே இருக்கிற தூத்துக்குடித் துறைமுகப்பட்டினத்திலே இருந்தும், தலைநகரம் என்று கருதப்படும் சென்னை நகரத்திலே இருந்தும், இவை எல்லாவற்றிலும் சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டிய சிற்றூர்களிலேயிருந்தும் இலட்சக்கணக்கில் இங்கே திரண்டிருக்கிறீர்கள். நான், நாட்டைப் பார்த்தும், நாட்டை ஆளுகிற ஆட்சியாளர்களைப் பார்த்தும் கொஞ்சம் ஆணவத்தோடு கூட நினைவுபடுத்த விரும்புகிறேன். “சென்னையில் நாங்கள் கூட்டிய மாநில மாநாட்டில் ஒரு இலட்சம் மக்கள் கூடினார்கள்; நாங்கள் இப்போது அடைந்திருக்கிற வளர்ச்சியை நீங்கள் காண வேண்டுமானால், திருச்சியில் நடைபெறவிருக்கிற மாநில மாநாட்டில் மூன்று இலட்சம் மக்களை நாங்கள் கூட்டிக் காட்டுகிறோம்” என்று நான் அப்போதே கூறினேன். சொல்லிவிட்ட பிறகு, எனக்கே கூடக் கொஞ்சம் சந்தேகம் வந்தது “சற்று அதிகமாகக் கூறி விட்டோமோ” - என்று! இன்று நாம் பார்க்கிற இடங்களில் எல்லாம் தி.மு.க. தோழர்களைத்தான் பார்க்கிறோம். “இந்த மாநில மாநாட்டுப் பெருந்திடலில் மட்டுமல்ல, திடலில் இருந்து திருச்சி கோடி வரை ஆறு; ஏழு மைல் தொலைவில் உள்ள இடங்களில் எல்லாம் - நெடுஞ்சாலைகளில் எல்லாம் நம்முடைய தோழர்கள் நிரம்பியிருப்பதை நாம் காண்கிறோம்” என்று குறிப்பிட்டார்.
இரண்டாவது மாநில மாநாட்டிலேயே மூன்று இலட்சம் பேரைக் கூட்டிக் காட்டுகிறோம் என்று நம்முடைய தலைவர்
அண்ணா அவர்கள் அப்போதே தெரிவித்துவிட்ட பிறகு, இது பத்தாவது மாநில மாநாடு அல்லவா? பத்து இலட்சம் பேராவது நாம் திரண்டிட வேண்டாமா? நம்முடைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் மாவட்டக் கழகக் கூட்டங்களை நடத்திய பிறகு “முரசொலியில் தந்திருக்கின்ற செய்தியில் “இந்த மாநாட்டில் எங்கள் மாவட்டத்தின் சார்பில் இத்தனை ஆயிரம் பேர் கலந்து கொள்வோம்” என்கிறார்கள்; ஒவ்வொரு அணியின் சார்பிலும் அவ்வாறே தெரிவிக்கிறார்கள். அந்தக் கணக்கையெல்லாம் சேர்த்தால் பத்து இலட்சம் பேர் திரண்டிட மாட்டீர்களா?
பந்தல் வேலையில் முனைப்பாக ஈடுபட்டிருக்கிற வரவேற்புக் குழுத் தலைவர் தம்பி கே.என்.நேரு, “தலைவர் பத்து இலட்சம் பேர் என்று சொல்லி விட்டாரே, அதற்கான பந்தலை நாம் அமைக்க வேண்டாமா?” என்று முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டாமா? அதற்காகத்தான் அண்ணா கூறியதை எடுத்துக்காட்டிக் குறிப்பிட்டேன். மேலும் நம்முடைய பொருளாளர் தம்பி ஸ்டாலின், பந்தல் வேலை நடக்கிறபோதே, திருத்தங்களைச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே இடத்தைப் பார்வையிட்டுவிட்டு, செய்தியாளர்களிடம் கூறும்போது “மாநாட்டின் பந்தல் 1100 அடி நீளமும், அகலம்
600 அடியிலும் அமையும். மேடை அமைப்பு 200 அடிக்கு 80 அடியில்! ஓலை முகப்பு ஒன்று அமைக்கப்படவுள்ளது. கொடிக்கம்பம் அவர்களின் வயதையொட்டி 90 அடி உயரத்தில் அமைக்கப்படவுள்ளது. கழகத் தோழர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு வசதியாக 100 ஏக்கர் நிலம் தயார் செய்யப்பட்டு வருகிறது. மொத்த மாநாட்டின் பரப்பளவு 200 ஏக்கர். தொண்டர்கள் வருவதற்கு வசதியாக மூன்று பெரிய பாதைகளும், அவர்கள் தங்குவதற்கு 100க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இந்த மாநாட்டுப் பந்தலுக்குள் குறைந்தபட்சம் 5 லட்சம் பேரும், பந்தலைச் சுற்றி 5 லட்சம் பேரும் ஆக மொத்தம் இந்த வெற்றி மாநாட்டிற்கு பத்து இலட்சம் பேர் வந்து செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” என்றெல்லாம் அவரே தெரிவித்துவிட்ட பிறகு நான் அந்த எண்ணிக்கையைக் குறைக்கலாமா? எனவே பத்து இலட்சம் பேர் திருச்சி மாநாட்டில்
திரண்டிடுவர் என்பதில் ஐயமில்லை. அந்த பத்து இலட்சம் பேரில்
நீயும் ஒருவனாக இடம் பெற வேண்டாமா? அதற்கு ஆயத்தமாகி
விட்டாயா என்பதை நினைவூட்டுவது என் கடமை அல்லவா?
இன்று ஜனவரி 12ஆம் தேதி! அடுத்த பிப்ரவரி 15ஆம் தேதி மாநாடு! இன்னும் ஒரே திங்கள்தான்!
அன்புள்ள,
மு.க.
12-01-2014
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 50 PDF ↗