தொகுதி 50 · கடிதம் 3848
தை திங்கள் முதல் நாளே, தமிழர் புத்தாண்டுத் திருநாள்!
2014-01-11
உடன்பிறப்பே,
23-1-2008 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் மேதகு ஆளுநர் அவர்கள் தனது உரையிலே செய்த அறிவிப்பில், திருவள்ளுவர் ஆண்டு பிறக்கும் தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப்புத்தாண்டுத் தொடக்கம் என்பது, ஒட்டுமொத்தமாகத் தமிழ் அறிஞர்கள் அனைவரும் ஒருமனதாக ஒப்புக் கொண்டுள்ள உண்மை என்பதால்; தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்திட தி.மு.கழக அரசு முடிவு செய்துள்ளது என்றும், எனவே, பொங்கல் திருநாளைத் தமிழர் திருநாளாகப் போற்றிக் கொண்டாடி வரும் தமிழ்நாட்டு மக்கள்; இனி - தமிழ்ப் புத்தாண்டு பிறந்த நாளாகவும் இணைத்து இந்நாளை இரட்டிப்பு மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் கொண்டாடும் வகையில், வாழை, மா, பலா என முக்கனித் தருக்களை நாட்டி; வண்ண வண்ணக் கோலங்களிட்டு; வரிசை விளக்குகளால் ஒளியுமிழ் இல்லங்கள் புது எழில் காட்டிட; புத்தாடை புனைந்து தமிழ் மானம், தன் மானம் போற்றிப் பாடியும், ஆடியும்; சமத்துவ உணர்வு பரப்பியும்; தமிழ்ப்புத்தாண்டு இதுவெனத் துள்ளும் மகிழ்ச்சியால் அன்பை அள்ளிப் பொழிய வேண்டுமென்றும் வெளியிட்டார்.
1939ஆம் ஆண்டு திருச்சியில் அகில இந்தியத் தமிழர் மாநாடு சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதில், தந்தை பெரியார், கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் உமாமகேசுவரனார், மறைமலை அடிகளார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், தமிழ்த் தென்றல் திரு.வி.க., பேராசிரியர் கா.சுப்பிரமணியம், தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், தமிழவேள் பி.டி.இராஜன், ஆற்காடு ராமசாமி முதலியார், பட்டுக்கோட்டை அழகிரி உட்பட பலரும் பங்கேற்றனர். அந்த மாநாடும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும், பொங்கல் திருநாளே தமிழர் திருநாள் என்றும் அறிவித்தது.
திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர், இளவல் வீரமணி அவர்களோ “தைத் திங்கள் முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கம் என்ற நமது நீண்ட நாள் கோரிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது. தமிழர் பண்பாட்டு வரலாற்றுத் திசையில் புதியதோர் மறுமலர்ச்சி அத்தியாயம் இது. பாராட்டுகிறோம், மகிழ்ச்சி அடைகிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆளுநரின் அறிவிப்பு வெளிவந்த மறுநாளே தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் விடுத்த அறிக்கையில் “தொன்மைக் காலம் தொட்டே சமயம் சார்ந்தும், இயற்கை வாழ்வு சார்ந்தும், மண்ணும் மனிதர்களும் சார்ந்தும் விவசாய வாழ்வு சார்ந்தும் தைத் திங்கள் முதல்நாளே தமிழர் வாழ்வு சார்ந்த எழுச்சியும் மகிழ்ச்சியும் ஊட்டுகின்ற திருநாளாகும். மறைமலை அடிகளார் போன்ற மூத்த தனிப்பெரும் தமிழ் அறிஞர்கள் தைத் திங்கள் முதல் நாளைத் தொடக்கமாய்க் கொண்டு அய்யன் திருவள்ளுவர் பெயரில் தமிழ்ப் புத்தாண்டாய் அறிவித்ததை நடைமுறைப்படுத்த உள்ள முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றி, பாராட்டுக்கள்” என்று தெரிவித்திருந்தார்.
கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் விடுத்த அறிக்கையில், “தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்று ஆளுநர் உரையில் கலைஞர் அரசு அறிவித்திருப்பது கண்டு உணர்வுமிக்க தமிழர்கள் கொண்டாடிக் கூத்தாடுகிறார்கள். எல்லா தேசிய இனங்களுக்கும் அழிக்க முடியாத சில அடையாளங்கள் உண்டு. தமிழர்களுக்கு நில அடையாளம் இருக்கிறது; இன அடையாளம் இருக்கிறது; ஆனால் கால அடையாளம் மட்டும் குழப்பத்தில் இருந்தது. அந்தக் குழப்ப இருள் உடைந்து விடிந்து இன்று வெளிச்சம் வந்திருக்கிறது. அய்யன் திருவள்ளுவரை கருத்துலகத்தின் அளவுகோலாய்க் காட்டியது திராவிட இயக்கம். இன்று காலத்தின் அளவுகோலாகவும் திருவள்ளுவரைக் கருதச் செய்திருக்கிறது கலைஞர் அரசு. இது சரித்திரத்தைச் சரி செய்யும் சரித்திரமாகும்” என்று எழுதியிருந்தார்.
கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இந்த நல் முயற்சிக்கு அ.தி.மு.க. ஆட்சியில் தற்போது ஒரு பெரும் ஆபத்து ஏற்பட்டது. தமிழ்நாட்டுச் சரித்திரத்திலே தமிழையே பகைத்துக் கொள்கிற - செம்மொழி என்றாலே வெறுக்கிற - ஒதுக்குகிற - புறக்கணிக்கிற
ஒரு பிற்போக்குக் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. அந்தக் காலத்திலும் இப்படி தமிழையே வெறுக்கின்ற புலவர்கள் ஓரிருவர் இருந்திருக்கிறார்கள். இதோ ஒரு கதை!
நக்கீரன் காலத்திலே குயக்கொண்டான் என்று ஒருவர் தமிழ்ச் சங்கத்திலே நடைபெற்ற ஒரு பட்டிமன்றத்திலே “ஆரியம் நன்று, தமிழ் தீது” என்று சொல்ல - உடனே நக்கீரனுக்குக் கோபம் வந்து, “தமிழ் தீதென்றும், வடமொழி நன்று என்றும் சொன்ன நீ, சாகக் கடவாய்” என்று அறம் பாடினாராம். உடனே குயக் கொண்டான் கீழே விழுந்து இறந்து விடுகிறார். உடனே அங்கேயிருந்த சிலர் நக்கீரனைப் பார்த்துக் குயக்கொண்டாரைப் பிழைக்க வைக்கக் கேட்டுக் கொண்டார்கள். அதைக் கேட்ட நக்கீரன், “ஆரியம் நன்று தமிழ் தீ தென்றுரைத்த காரியத்தால் காலன் கோட்பட்டானைச் - சீரிய அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணையினால் செந்தமிழை தீர்க்க சுவாகா!” என்று பாட, குயக்கொண்டான் உயிர் பெற்று எழுந்தானாம்.
ஆளுநர் உரையிலே செய்யப்பட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து அதே ஆண்டில் 29-1-2008 அன்று தமிழ்ப் புத்தாண்டு சட்ட முன்வடிவை பேரவை முன் நான் அறிமுகம் செய்தேன்.
1-2-2008 அன்று இச்சட்ட மசோதா மீதான விவாதம் நடைபெற்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈ.எஸ்.எஸ்.ராமனும், பா.ம.க. சார்பில் கி.ஆறுமுகமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் என்.நன்மாறனும், இந்தியக் கம்யூனிஸ்ட் சார்பில் வை.சிவபுண்ணியமும், ம.தி.மு.க. சார்பில் மு.கண்ணப்பனும், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கு.செல்வமும் அந்த மசோதாவினை மனமார வரவேற்றுப் பேசி அது நிறைவேறியது.
மலேசியா நாட்டில் தமிழர்கள் தை முதல் நாளையே புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறார்கள். டாக்டர் மு. வரதராசனார் அவர்கள், “முன் காலத்தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாளைத்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர் கொண்டாடினர். அந்த நாளில் புதிய ஆடைகளை வாங்கி உடுப்பார்கள். தெருவில் புது மண் போட்டு, செம்மண் இட்டு, ஒழுங்கு செய்வார்கள். ஊரெல்லாம் திருவிழா நடத்துவார்கள். இப்படி நகரங்களில் புத்தாண்டு பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்” என்று விளக்கியுள்ளார்.
இப்படியெல்லாம் போற்றப்பட்ட, பாராட்டப்பட்ட ஒரு முடிவு நடைமுறைப்படுத்தப்பட தி.மு. கழக ஆட்சியிலே சட்டமாகக் கொண்டு வரப்பட்டு 2008ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. தி.மு. கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது என்றால் இருக்கலாமா என்று ஆத்திரத்தோடு அதற்கு முடிவு கட்ட அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு மசோதா பேரவையிலே அறிமுகப்படுத்தப்பட்டது. மசோதாவை அவையிலேயே இரண்டு கம்யூனிஸ்ட்களும் எதிர்த்தார்கள் என்ற தகவலைச் செய்தியாளர்கள் என்னிடம் தெரிவித்து அதுபற்றிக் கருத்துக் கேட்டபோது “அவர்களின் தமிழ் உணர்வுக்குத் தலை வணங்குகிறேன்” என்று பதில் கூறினேன். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் விடுத்த அறிக்கையில் அ.தி.மு.க. அரசின் அந்த முடிவு தமிழ் உணர்வாளர்களை வேதனைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றும் திடீரென்று தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் சித்திரை மாதத்துக்கு மாற்றுவது முறையல்ல என்றும் அது மிகப் பெரிய வரலாற்றுப் பிழையாக அமைந்துவிடும் என்று கூறினார். தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களும் இந்த முடிவினை வன்மையாகக் கண்டித்துச் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இன்னும் சொல்ல வேண்டுமேயானால் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களே,
நித்திரையில் இருக்கும் தமிழர்!
சித்திரையல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
தரணியாண்ட தமிழருக்கு
தைம்முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!" என்று பாடியதையும் நினைவுகூர விரும்புகிறேன்.
தைத் திங்கள் முதல் நாளை - தமிழர் திருநாளாக - தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கழக ஆட்சியில் ஆர்வத்தோடு சிறப்பாகச் செய்தோம். ஆனால் 2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், கழக அரசின் மற்ற திட்டங்களுக்கு காழ்ப்புணர்வு மிகக் கொண்டு மூடுவிழா நடத்தியதைப் போல, தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தினம் என்பதை மாற்றிவிட்டு, சித்திரைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று
புரட்டிப் போட்டு மாற்றுகின்ற வகையில் மசோதா ஒன்றினைச் சட்டப்பேரவையிலே கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்.
அதன் மூலமாகத் தி.மு. கழகத்திற்கோ அது நடத்திய ஆட்சிக்கோ அவமானமா என்றால் இல்லை. அ.தி.மு.க. அரசின் திரிபுவாத மசோதாவினால் தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்ற பழம் பெரும் வரலாறு பொய்த்துப் போய்விடுமா? நம்மைப் பொறுத்த வரையில் பொங்கல் திருநாளை “தமிழர் திருநாள்” என்று நாம் கொண்டாடுகிறோம். இனியும் கொண்டாடுவோம். ஆண்டுக் கணக்கிலே ஆங்கிலேயர்களுடைய முதல் நாளை அவர்கள் கொண்டாடுவதைப் போல, நாமும் நம்முடைய ஆண்டு முதல் நாளை, விழா எடுத்துக் கொண்டாட வேண்டும். தமிழ் இனப் பகைவர் எப்படி வேண்டுமானாலும் செய்து விட்டுப் போகட்டும். நம்மைப் பொறுத்த வரையில், உண்மையான உணர்வுமிக்க தமிழர்களைப் பொறுத்தவரையில், தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள். அதேநேரத்தில், நான் ஏற்கனவே தெரிவித்தவாறு, சித்திரைத் திங்கள் முதல் நாளில் விழா கொண்டாடுவோரை, நாம் வேண்டாமென்று தடுக்க மாட்டோம். நம்மைப் பொறுத்தவரையில் தைத்திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடிடுவோம். அன்றையதினம் ஆங்காங்கு மின் விளக்குகளைத் தோரணமாக்கி, மின்மினி மின்னுவதைப் போல எல்லா மரங்களிலும் விளக்குகளைத் தொங்க விட்டு, கடைகளின் முகப்புகளில் எல்லாம் கண்கவர் அலங்காரம் செய்து, ஒவ்வொரு வீட்டிலும், எழில் குலுங்கச் சிங்காரித்து இந்நாளை ஏற்றமுடன் கொண்டாடிடுவோம். ஏழை, பணக்காரர் வேறுபாடு ஏதுமின்றி அனைவரும் சமத்துவம் கமழ்ந்திட இந்நாளைத் தமிழர் திருநாளாகப் புத்தாடை உடுத்திப் புத்துணர்வுடன் விழா எடுத்திடுவோம். தைத் திங்கள் முதல் நாளே, தமிழர் புத்தாண்டுத் திருநாள் என்பதைத் தரணி அறிய நிலைநாட்டிடுவோம். அன்புள்ள, மு.க. 11-1-2014
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 50 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 50 PDF ↗