தொகுதி 49 · கடிதம் 3816
இனியும் தமிழினம் ஏமாறத் தயாராக இல்லை!
2013-10-10
உடன்பிறப்பே,
7-10-2013 அன்று தமிழக அரசின் செய்தி வெளியீட்டில், முதலமைச்சர் ஜெயலலிதா என்ன உத்தரவிட்டிருக்கிறார் என்று ஏடுகளைப் பார்த்தேன். மகிழ்ச்சியாக இருந்தது. காரணம் என்ன தெரியுமா? தமிழ் மொழியைப் பற்றியும், அதன் மீது முதலமைச் சருக்கு உள்ள ஆர்வத்தைப் பற்றியும், திருக்குறள் பற்றியும், தொல்காப்பியம் பற்றியும், சங்கத் தமிழ் பற்றியும் ஏராளமான அறிவிப்புகள் பல கோடி ரூபாய்க்குச் செய்து தள்ளிவிட்டார்கள். எத்தனை கோடி ரூபாய்க்கான திட்டங்கள் என்று கேட்கிறீர்களா? அவசரப்பட வேண்டாம்; நானே விளக்கமாகச் சொல்கிறேன்.
சென்னைத் தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறந்த உட்கட்டமைப்புடன் கூடிய திருக்குறள் ஓவியக் காட்சிக் கூடத்தினை அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இந்த பத்து லட்ச ரூபாய் மதிப்பீட்டில் எவ்வளவு பெரிய ஓவியக் காட்சிக் கூடத்தினை அமைக்க முடியுமென்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள்!
அந்த ஓவியக் கூடத்தில் என்னென்ன அமையப் போகிறது தெரியுமா?
திருக்குறளை விளக்கும் ஓவியங்களைக் காட்சிப்படுத்துதல், ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ள திருக்குறள் நூல்களைச் சேகரித்துக் காட்சிப்படுத்துதல் மற்றும் உரைநடை வடிவில் உள்ள திருக்குறள் நூல்களைச் சேகரித்துக் காட்சிப்படுத்துதல், திருக்குறள் தொடர்பான படக்காட்சிகள், குறும்படங்கள் மற்றும் உயிரூட்டுப் படங்கள் சேகரித்துக் காண்பித்தல், அரசு கவின்கலைக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஓவியர்களைக் கொண்டு திருக்குறள் கூறும் அறநெறிக் கருத்துக்களை நிகழ்கால ஓவியங்களாகத் தீட்டுதல், பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள திருக்குறள் நூல்களைச் சேகரித்துக் காட்சிப்படுத்துதல் மற்றும் வட்டெழுத்து மற்றும் கல்லெழுத்தில் உள்ள திருக்குறளைச் சேகரித்துக் காட்சிப்படுத்துதல் ஆகியன செயல்படுத்தப்படுமாம்.
திருக்குறள்மீதும், திருவள்ளுவர்மீதும் இந்த ஆட்சியினருக்குத்தான் எவ்வளவு அக்கறை? கடந்த சில மாதங்களுக்கு முன்னால் “முறையான பராமரிப்பின்றிச் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுகிறது வள்ளுவர்கோட்டம் - வாடகைக் காதலிகளின் புகலிடமாகும் அவலம்” என்ற தலைப்பில் “தினத்தந்தி” நாளிதழே ஒரு செய்தியினைப் புகைப்படங்களோடு செய்திக் கட்டுரையாக வெளியிட்டிருந்தது. அதில், “சென்னை வள்ளுவர்கோட்டம் முறையான பராமரிப்பின்றிச் சமூக விரோதிகளின் கூடாரமாகவும், வாடகைக் காதலிகளின் புகலிடமாகவும் மாறிவருகிறது. திருக்குறள் எழுதப்பட்ட கல்வெட்டுகளில் காதல் ஜோடிகள், காதல் கவிதைகளும் காதல் சின்னங்களையும் எழுதிவைத்துள்ளார்கள். குடிமகன்கள் வள்ளுவர்கோட்டத்தினை திறந்தவெளி “பார்”ஆகப் பயன்படுத்தி வருகின்றனர்” என்றெல்லாம் எழுதப்பட்டிருந்தது.
வள்ளுவர்கோட்டம், சென்னையில் மத்தியப் பகுதியிலே மிகப் பெரிய அரங்கமாக அமைந்துள்ளது. இந்த ஆட்சியினர் அதைச் சரியாகக்கூடப் பராமரிக்கவில்லை. அந்த வள்ளுவர் கோட்டத்திலே திருக்குறள் ஓவியக்காட்சிகள் எல்லாம் அருமையாக ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. அதைக் கவனிக்காமல் விட்டுவிட்டு, சென்னைத் தரமணியிலே திருக்குறள் ஓவியக்காட்சிக் கூடத்தினை அமைக்கப் போகிறார்களாம்! “கூரை ஏறிக் கோழி பிடிக்கத் தெரியாதவன், வானத்தைக் கீறி வைகுண்டத்தைக் காட்டுகிறேன்” என்ற பழமொழிதான் ஞாபகத்திற்கு வருகிறது.
குமரி முனையிலே கழக ஆட்சியில் வைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை பராமரிப்பின்றி அ.தி.மு.க. அரசினால் விடப்பட்ட நிலையில், நான் விடுத்த அறிக்கையில், “அய்யன் வள்ளுவர் சிலை பராமரிப்புப் பணிக்காக உரிய நிதி ஒதுக்கீடு செய்து பணியை விரைந்து மேற்கொள்ள அ.தி.மு.க. அரசு முன்வரா விட்டால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலேயே, அந்தப் கழகத்தின் சார்பில் மிகப் பெரிய போராட்டம் ஒன்றினை நடத்தி ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கலாமா என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறோம்” என்று அறிக்கைவிடுத்தேன்.
அதன்பிறகு அரசின் சார்பில் அந்தச் சிலை பராமரிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டன.
அடுத்து, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் சிறப்பான கட்டமைப்பு மற்றும் நவீன வசதிகளுடன் கூடிய உலகத் தமிழ்ப் பண்பாட்டு வரவேற்பு மற்றும் தகவல் மையம் ஒன்றினை அமைக்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்களாம். இதற்கு எவ்வளவு கோடி ரூபாய் ஒதுக்கீடு தெரியுமா? இதற்கும் பத்து இலட்ச ரூபாய்தான் மதிப்பீடு.
திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் பெருமை சேர்க்க இவ்வளவு பெரிய திட்டங்கள் என்றால், தொல்காப்பியரை விட்டுவிட முடியுமா? முதலமைச்சர் உத்தரவு என்ன? உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தொல்காப்பியர் ஆய்விருக்கை ஒன்றினை ஏற்படுத்த முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதற்காக 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் உத்தரவிட்டுள்ளார்.
“தொல்காப்பியப் பூங்கா” என்று கழக ஆட்சியில் திறந்து வைக்கப்பட்ட பூங்கா, அ.தி.மு.க. ஆட்சியில் “தொல்காப்பியப் பூங்கா” என்ற அந்த உயரிய பெயர் மாற்றப்பட்டு “அடையாறு பூங்கா” என்று பெயரிடப்பட்டுள்ளது. இவர்கள்தான் தொல்காப்பியர் ஆய்விருக்கை ஏற்படுத்தப் போகிறார்கள்.
இந்தச் செய்தி 7-10-2013 அன்று அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டு, அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்துள்ளது. இதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்னால் 14-5-2013 அன்று இதே முதலமைச்சர் ஜெயலலிதா தமிழகச் சட்டப்பேரவையில் 110வது விதியின்கீழ் ஓர் அறிக்கையினைப் படித்தார். அந்த அறிக்கையில், “தமிழர்தம் வாழ்க்கை வளத்தை எடுத்துக்கூறும் தொல்காப்பியத்தின் பெயரால் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆய்விருக்கை ஏற்படுத்தப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதற்கென உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு 50 இலட்சம் ரூபாய் வைப்புத்தொகையாக வழங்கப்படும்” என்று முதலமைச்சர் அறிவித்துவிட்டு, நேற்றையதினம் மீண்டும் ஒரு முறை, அதே அறிவிப்பினைப் புதிய அறிவிப்புபோலச் செய்து, அதை அரசின் சார்பில் செய்தி வெளியீடாகவும் தந்திருக்கிறார்கள் என்கிறபோது இதற்கு என்ன பெயர் சூட்டுவது என்பதைத் தமிழ்நாட்டு மக்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.
அந்த அறிவிப்போடு சேர்ந்து அதே 14-5-2013 அன்று முதலமைச்சர் மற்றொரு அறிவிப்பையும் செய்தார். அதில், “அமெரிக்க நாட்டின் பெருமையையும் புகழையும் உலகளவில் பரப்பும் வகையில் அமைந்துள்ள சுதந்திரதேவி சிலையைப் போல், தமிழர்களின் நாகரீகம், பண்பாடு, இலக்கியச் செல்வங்கள், கட்டடக்கலைத் திறன் ஆகியவற்றை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில், மதுரையில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்த்தாய் சிலை அமைக்கப்படும்” என்று அறிவித்து, பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எல்லாம் அந்த அறிவிப்பினைச் செய்த முதல்வரைப் பாராட்டி மகிழ்ந்தார்கள். அந்த அறிவிப்பு செய்து ஐந்து மாதங்கள் முடிந்துவிட்டது. அந்தத் தமிழ்த்தாய் சிலை அமைக்கப்பட்டுவிட்டதா? அதன் திறப்பு விழாக் காணொலிக் காட்சி மூலமாகவே நடைபெற்றுவிட்டதா?
மேலும் ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றின் மாதிரிகளை உருவாக்கித் தமிழர்களின் தொன்மைச் சான்றுகளாய் விளங்கும் சங்க இலக்கியங்களில் குறிப்பிட்டுள்ள மரம், செடி, கொடிகளுடன் “தமிழ்த்தாய்ப் பூங்கா” ஒன்றும் அங்கு உருவாக்கப்படும் என்று ஜெயலலிதா அப்போது அறிவித்தார். அந்தப் பூங்கா எங்கே உருவாக்கப்பட்டுள்ளது?
தி.மு. கழக ஆட்சியில் அரும்பாடுபட்டு நிர்மாணிக்கப்பட்ட “செம்மொழிப் பூங்காவை”யும், “தொல்காப்பியர் பூங்காவை”யும் இந்த ஆட்சியில் சரியாகப் பராமரிக்கப்படாமல் காய்ந்துபோக விட்டிருக்கும் கொடுமையைத்தான் காணமுடிகிறதே தவிர, தமிழ்த்தாய்ப் பூங்காவினைக் காண முடியவில்லை.
ஆனால் இந்த அறிவிப்புகூட, தி.மு. கழக ஆட்சியில் கோவையில் நடத்தப்பட்ட உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவுரையில், “ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சங்க காலத்தில் தமிழகத்தைச் சூழல் இயலின் அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என நமது முன்னோர் ஐந்திணை நிலங்களாகப் பிரித்திருந்தனர். இந்த ஐந்திணை நில வகைகளில் தமிழக அரசு சார்பில், பாரம்பரிய மரபணுப் பூங்காக்கள் அமைக்கப்படும்” என்று நான் அறிவித்திருந்தேன். அந்த அறிவிப்புத்தான் தற்போது “தமிழ்த் தாய்ப் பூங்கா“வாகப் பெயர் மாறியிருக்கிறதோ என்று எண்ணுகிறேன்.
இன்னும் சொல்லப்போனால், 2010-2011ஆம் ஆண்டே, தி.மு. கழக ஆட்சியில் நிதிநிலை அறிக்கையில், பத்தி 115இல், “1982ஆம் ஆண்டில், மதுரைத் தல்லாகுளம் பகுதியில் உலகத் தமிழ்ச் சங்கத்திற்கென வழங்கி ஆணையிடப்பட்டுச் சமநிலைப்படுத்தப்பட்டுள்ள 14.15 ஏக்கர் நிலத்தில், “தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் சங்கம்” அமைத்து, தமிழகத்தின் கலை, இலக்கியம், பண்பாட்டு உயர்நிலை விளக்கும் காட்சியகம் அமைப்பதெனவும், உலகளாவிய நிலையில் தமிழர்க்கும், தமிழ் ஆய்வுக்கும் துணைசெய்திடும் வகையில் அரங்கம் அமைப்பதெனவும், அரங்கத்தில் சங்கப் புலவர்கள் மற்றும் தமிழ்ச் சான்றோர்களின் திருவுருவச் சிலைகளைக் கால வரிசைப்படி உரிய வகையில் வடிவமைப்பதெனவும் அரசு முடிவு செய்துள்ளது” என்று அறிவிக்கப்பட்டது.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்பின் இறுதியில் இந்த நடவடிக்கைகள் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழர் பண்பாட்டினை உலகறியச் செய்வதற்கும் வழிவகை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நேரத்தில் தி.மு. கழக ஆட்சியில் தமிழுக்காகச் செய்யப்பட்ட ஓரிரு சாதனைகளை நினைவூட்டவா?
மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை அவர்களின் “நீராருங் கடலுடுத்த” எனத் தொடங்கும் பாடலை 1970இல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக ஆக்கியது.
தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்
துறைக்காக தனி அமைச்சகம்.
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம்
நியமித்தது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைத்தது. தமிழக வரலாறு எழுத தமிழறிஞர்கள் குழு நியமனம். திராவிடப் பல்கலைக்கழகத்திற்கு 75 லட்ச ரூபாய் நன்கொடை. தமிழக வரலாறுகள் நூல்களாக வெளியிடப்பட்டன. மலேயா பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 50 லட்சம் ரூபாய். நூற்றாண்டுக் கனவான தமிழ் மொழிக்குச் செம்மொழித் தகுதி பெற்றது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. திருவள்ளுவருக்குக் குமரியில் 133 அடி உயரத்தில் சிலை - சென்னையில் வள்ளுவர் கோட்டம். தமிழில் பெயரிடப்படும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு. 10ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் தமிழ் கட்டாயப் பாடம் - தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை. “சென்னை மாநிலம்” என்று இருந்ததை “தமிழ்நாடு” என்று பெயர் வைத்தது. “மதராஸ்” என்பதைச் “சென்னை” என்று மாற்றியது மேலும் கோவை செம்மொழி மாநாட்டில் தமிழ் வளர்ச்சிக்கென்றே தனியாகத் தமிழக அரசின் சார்பில் நூறு கோடி ரூபாய் சிறப்பு நிதியம் உருவாக்கப்படும் என்றும் அறிவித்து அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டது. - என்று எழுதிக் கொண்டே போகலாம். ஆனால் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவதாக இப்போது அறிக்கை விட்டுக் கொண்டிருப்பவர்களின் தகுதி என்ன? கழக ஆட்சியில் தற்போதுள்ள தலைமைச் செயலகத்தில் “பாவேந்தர் செம்மொழித் தமிழ் ஆய்வு நூலகம்” தொடங்கி வைக்கப்பட்டதே, அந்த நூலகத்தில் இருந்த அரிய பழந்தமிழ் நூல்களையும், சுவடிகளையும் தமிழ் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும் பயன்படுத்தி வந்தார்களே, அந்த நூலகம் இப்போது எங்கே? 2011ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிந்து அ.தி.மு.க. ஆட்சி பதவியேற்ற உடனேயே அந்த நூலகத்தை அங்கிருந்து அகற்றியதோடு, அதிலிருந்த நூல்களையும் எங்கோ கொண்டுபோய், யாரும் பயன்படுத்த முடியாதபடி செய்தவர்களா தமிழ்மொழியை வளர்க்கப் போகிறார்கள் ?
சட்டப்பேரவையில் ஆண்டுதோறும் ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்றிய பிறகு, பேரவைத் தலைவர் அதன் தமிழ்மொழியாக்கத்தைப் படிப்பது மரபாக இருந்து வந்ததை, அ.தி.மு.க. ஆட்சியில் நீக்கிவிட்டார்கள். அதுபற்றிக் கழக உறுப்பினர்கள் கேட்டபோது, “நேரம் இல்லை” என்று கூறியவர்களா, தமிழ்மொழியை வளர்க்கப்போகிறார்கள் ?
10-5-2013 அன்று சட்டப்பேரவையிலே நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவித்தவர்களா, தமிழை வளர்க்கப்போகிறார்கள் ?
சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்களில் கழக ஆட்சியில் அச்சிடப்பட்டிருந்த திருவள்ளுவர் படத்தையே “ஸ்டிக்கர்” ஒட்டி மறைத்த மகானுபாவர்களா தமிழ்மொழியை வளர்க்கப் போகிறார்கள்?
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக வழங்கப்படவிருந்த “அவ்வையார் விருது”, அந்தத் துறையிலிருந்து நீக்கப்பட்டு வேறொரு துறைக்கு ஒப்படைத்தது மட்டுமல்லாமல், தமிழ்ப் புலமையே இல்லாத ஒருவருக்கு விருது வழங்கிய ஆட்சியினரா தமிழை வளர்க்கப் போகிறார்கள்?
அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தை முறையாகப் பராமரிக்காமல் விட்டிருப்பதும், தமிழகத்தின் பண்பாட்டுச் சின்னமான கண்ணகி சிலையை அகற்றியதும் தமிழின்மீது பற்றுக் கொண்டவர்கள் செய்கின்ற செயலா?
ஏன்; செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! தமிழைச் செம்மொழியாக்கவும், அதன் மத்திய நிறுவனத்தை தமிழகத்திலே ஏற்படுத்தவும் கழக ஆட்சியில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று என்ன நிலை?
செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்காக என்னுடைய சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை அளித்து, அதிலே கிடைக்கும் வட்டியைக் கொண்டு ஆண்டுக்கொருமுறை பத்து இலட்ச ரூபாய் மதிப்பில் விருது ஒன்றினை வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, கழக ஆட்சியில் கோவையில் செம்மொழி மாநாடு நடைபெற்ற போது, திரு. அஸ்கோ பர்போலா அவர்களுக்கு அந்த விருது வழங்கப்பட்டது. அதன் பிறகு இரண்டாண்டுகள் ஆகியும் அந்த விருது இன்றுவரை வழங்கப்படவில்லை. அதற்கான முயற்சியிலும் அ.தி.மு.க. அரசோ, முதலமைச்சர் ஜெயலலிதாவோ ஈடுபடவில்லை. அந்த அளவிற்கு செம்மொழியின்மீதும், தமிழின்மீதும் அம்மையாருக்கு அன்பு! இவர்கள்தான் திருக்குறள் ஓவியக் காட்சி, தொல்காப்பியர் ஆய்வு இருக்கை, சங்கத் தமிழ் காட்சிக்கூடம் என்றெல்லாம் அறிக்கைவிட்டு ஏமாற்ற நினைக்கிறார்கள்! இனியும் தமிழினம் ஏமாறத் தயாராக இல்லை!
அன்புள்ள, மு.க. 10-10-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 49 PDF ↗