உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 49

தொகுதி 49 · கடிதம் 3815

ஊழலைத் தவிர வேறு எதுவும் உயரப் போவதில்லை!

2013-10-09

உடன்பிறப்பே,

நெல் கொள்முதல் விலையை அ.தி.மு.க. அரசு அறிவித்தது பற்றியும், கழக ஆட்சிக் காலத்தில் எந்த அளவிற்கு உயர்த்தப்பட்டது என்பது பற்றியும் 29-9-2013 அன்று விரிவாகவே “கேள்வி-பதில்” பகுதியில் எழுதியிருந்தேன். அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேட்டில் கூட, 7-10-2013 அன்று “நெல் கொள்முதல் விலையை உயர்த்துக” என்ற கோரிக்கையை மத்திய, மாநில அரசுகளுக்கு விடுத்து தலையங்கமே தீட்டப்பட்டுள்ளது.

“கொல்லத் துடிக்கும் கொள்முதல் விலை” என்ற தலைப்பில் “தி இந்து” தமிழ் நாளிதழில் “உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது என்பது பழமொழி; அது இன்று நெஞ்சில் அறையும் நிஜ மொழியாகவே மாறிவருவதுதான் வேதனை. உற்பத்திச் செலவையும், கொள்முதல் விலையையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், வறண்டுபோன நீர்ப் பிடிப்புகளையும் நிறைக்கும் அளவுக்குக் கண்ணீர் சிந்துகிறார்கள் விவசாயிகள். கடந்த ஓராண்டில் மட்டும் விவசாயத்தில் நஷ்டம் அடைந்து பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். “நெல்லுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்காமல் பலரும் விவசாயத்தை விட்டே வெளியேறிவிட்டதாக” அதிர்ச்சியளிக்கும் தகவலைக் கூறுகிறார் “கிரியேட்” அமைப்பைச் சேர்ந்த பொன்னம்பலம். அரசு கொள்முதல் விலையைக் கூட்டுவது மட்டுமே இனி இந்திய விவசாயத்தை மீட்டெடுப்பதற்கான ஒரே வழி. வேலையும், கவனித்துக்கொள்ள ஆட்களும் இல்லாத வயோதிகர்களுக்கே மாதம் 1000 ரூபாய் ஓய்வூதியமாகக் கொடுக்கும் அரசு இயந்திரம்; வயக்காட்டில் ஆறு மாதம் பாடுபட்டு விளையவைக்கும் விவசாயிக்கு ஒரு ஏக்கரில் வருமானமாய்க் கொடுப்பது வெறும் 5000 ரூபாய் தான். இதுதான் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறுவதன் காரணம்...” என்றெல்லாம் எழுதியிருக்கிறது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவாரூர் மாவட்டச் செயலாளர், திரு. வெ. வீரசேனன் விடுத்துள்ள அறிக்கையில், “பாசனம் பெறும் கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீர் சென்று அடையாததாலும், குறைந்தபட்சம் தேவையான அளவு மழை பெய்யாததாலும் ஒரு போக சம்பாநெல் பயிர்களும், செம்மை நெல் சாகுபடிப் பயிர்களும் காய்ந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மன்னார்குடி, நீடாமங்கலம் ஒன்றியங்களில் வடவாறு விரிவாக்கக் கால்வாய்ப் பகுதிகளிலும் தண்ணீர் அறவே வராததால் நெல் சாகுபடிப் பணிகள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது” என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார். என்னுடைய திருவாரூர் தொகுதியிலும், அதற்குப் பக்கத்திலே உள்ள நன்னிலம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி தொகுதிகளிலும் பாசனம் பெறும் கடைமடைப் பகுதிகளுக்கு ஆறுகளின் மூலம் தண்ணீர் வரவே இல்லை. விவசாயிகளின் இந்த இன்னலைப் போக்கிடத் தமிழக அரசு உடனடியாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் திருவாரூர் மாவட்டத்தில் கருகும் சம்பாப் பயிர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்ற எண்ணத்தில் விவசாயிகள் வாய்க்கால்களில் தரையோடு ஓடும் நீரைச் சிறிது சிறிதாகச் சேகரித்துக் குடும்பத்தினருடன் குடங்களில் பிடித்து வயல்களுக்கு ஊற்றிப் பயிரைக் காப்பாற்றிடப் பதற்றத்தோடு முயற்சி செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 12 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் மூன்று போகம் விளைந்த நிலங்கள், தற்போது ஒரு போக விளைச்சலுக்குக்கூட வழியின்றி வறண்டு கிடக்கின்றன. அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்ற 2001ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டுவரை வேளாண்மைத் துறைக்காகச் செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு 3 ஆயிரத்து 396 கோடிரூபாய் என்றால், 2006ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டுவரையிலான தி.மு. கழக ஆட்சிக் காலத்தில் இந்தத் துறைக்காகச் செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடு 7 ஆயிரத்து 414 கோடி ரூபாயாகும். விவசாயிகள் வாங்கிய 7000 கோடி ரூபாய் கூட்டுறவு விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்து, 22 இலட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயிகள் குடும்பத்தினரைக் காப்பாற்றியதும் தி.மு. கழக ஆட்சிதான்.

விவசாயிகளுக்கான பயிர்க் கடன் வட்டி 2005-2006இல், அ.தி.மு.க. ஆட்சியில் 9 சதவிகிதம் என்று இருந்ததை;

2006-2007ஆம் ஆண்டு, தி.மு.கழக ஆட்சியில், 7 சதவிகிதமாகக் குறைத்து, 6,31,283 விவசாயிகளுக்கு, 1,250 கோடியே 62 இலட்சம் ரூபாயும்;

2007-2008இல் 5 சதவிகிதமாகக் குறைத்து, 6,48,397 பேருக்கு, 1,393 கோடியே 97 இலட்ச ரூபாயும்;

2008-2009இல் 4 சதவிகிதமாகக் குறைத்து, 6,91,192 விவசாயிகளுக்கு, 1,571 கோடி ரூபாயும்;

2009-2010இல் பயிர்க் கடன் வட்டியையே ரத்து செய்து 8,98,450 விவசாயிகளுக்கு 2,169 கோடியே 48 இலட்ச ரூபாயும்;

2010-2011இல் 8,01,960 விவசாயிகளுக்கு 2,453 கோடி ரூபாயும் என;

ஐந்தாண்டுகளில், தி.மு. கழக ஆட்சியில் மொத்தம் 36 இலட்சத்து 71 ஆயிரத்து, 372 விவசாயிகளுக்கு 8,838 கோடியே 29 இலட்ச ரூபாய் பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டன என்பதை யார் மறந்தாலும், விவசாயிகள் மறந்திருக்க முடியாது.

ஆனால், கடந்த இரண்டாண்டுகளாகச் சாகுபடி பொய்த்துப் போய் விட்ட நிலையில் சஞ்சலத்தில் வாடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் தற்போது விவசாயக் கடனால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருந்தி வருகிறார்கள். அவர்களின் கடன்களை இந்த அரசு அறவே ரத்து செய்வதுடன், ஏற்கனவே கடன் பெற்று அதையே கட்ட முடியாத நிலையில் உள்ள விவசாயிகளுக்குப் புதிய கடன்களை வழங்கி, தங்கள் சாகுபடியை அவர்கள் தொடர வழி வகுத்திட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.

அதுபோலவே விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ்த் தொடங்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் நல வாரியத்தில், 1 கோடியே 74 இலட்சத்து 65 ஆயிரத்து 498 விவசாயிகள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டு; 8 இலட்சத்து 72 ஆயிரத்து 981 உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு 684 கோடியே 2 இலட்சத்து 56 ஆயிரத்து 686 ரூபாய் முதியோர் ஓய்வூதியம், கல்வி, திருமணம், விபத்து போன்ற இனங்களுக்கு உதவித் தொகையாக வழங்கப்பட்டதும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலேதான்!

விவசாயிகளுக்கு தலவரி, தலமேல் வரி, தண்ணீர்த் தீர்வை ஆகியவை ரத்து செய்யப்பட்டதும் - விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதும் - தென்னை விவசாயிகள் நல வாரியம் கண்டதும் - உழவர் சந்தைகளை அமைத்ததும் - விவசாயிகளைச் சுய உதவிக் குழுக்களாக ஒருங்கிணைத்துச் சுழல் நிதி வழங்கும் திட்டம் தொடங்கியதும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலேதான்!

சிறு, குறு விவசாயிகள் அரசின் சலுகைகளைப் பெறுவதற்கு உரிய அதிகாரியிடமிருந்து சான்று பெற வேண்டும். உதாரணமாக மானிய விலையில் விதை, பூச்சிக்கொல்லி மருந்து போன்றவற்றைப் பெற வேண்டுமானால் அவர்கள் சிறு, குறு விவசாயிகளுக்குரிய சான்று வைத்திருக்க வேண்டும். ஆனால் இந்தச் சான்றுகளை அரசு அதிகாரிகளிடமிருந்து பெறுவதற்கு இயலவில்லை என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.

நெல் கொள்முதல் விலையைப் பொறுத்தவரை சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,000 என்றும், சாதாரணரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1,800 என்றும் நிர்ணயிக்கப்பட வேண்டுமென்று 2-10-2013 அன்று திருவாரூர் நகரத்தில், கழக விவசாயி அணிச் செயலாளர் டாக்டர் கே.பி. இராமலிங்கம், எம்.பி., தலைமையிலும், திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் பூண்டி கே. கலைவாணன் முன்னிலையிலும் நடைபெற்ற தஞ்சை மண்டல விவசாயக் கருத்தரங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இரண்டு நாட்களுக்குமுன் சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலேகூட நெல் கொள்முதல் விலையை இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு கடந்த ஆண்டு வழங்கிவந்த அதே ஊக்கத் தொகையினை இந்த ஆண்டும் வழங்கியுள்ளது போதுமானதல்ல என்றும், அனைத்துப் பொருள்களின் விலைகளும் உயர்ந்துள்ள நிலையில், ஊக்கத்தொகையினை குவிண்டாலுக்கு மோட்டா ரகத்துக்கு ரூ. 200 எனவும், சன்ன ரகத்துக்கு ரூ. 250 எனவும் வழங்கிட வேண்டுமென்றும் அந்தத் தீர்மானத்திலே கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதுபோலவே கழக ஆட்சியின்போது கரும்பு அரவைப் பருவம் தொடங்குவதற்கு முன்பாக விவசாயப் பிரதிநிதிகள், சர்க்கரை ஆலை அதிபர்கள், தமிழக அரசின் அதிகாரிகள் கலந்து கொள்ளும் முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட்டு, அதன்பிறகே கரும்புக்கு விலை நிர்ணயம் செய்கின்ற பழக்கம் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இருந்து வந்தது. ஆனால், தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு உதவி செய்திடும் நோக்கத்தோடு, கடந்த இரண்டாண்டுக் காலமாக அ.தி.மு.க. ஆட்சியில் கரும்பு விலையை நிர்ணயம்செய்ய முத்தரப்புப் பேச்சுவார்த்தையை நடத்த முன் வரவில்லை. மேலும் தற்போது சர்க்கரை லெவி முறையை மத்திய அரசு விலக்கிக்கொண்டதால், சர்க்கரை ஆலைகளுக்குப் பெரும் இலாபம் வந்தும்கூட, கரும்புக்கு கூடுதலாக விலை நிர்ணயம் செய்யத் தமிழக அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இனியாவது முத்தரப்புக் கூட்டத்தை முறையாக நடத்துவதோடு, தமிழக கரும்பு விவசாயிகளுக்கு, உற்பத்திச் செலவிற்கேற்ற விலை என்ற கணக்கில் கரும்புக்கு டன் ஒன்றுக்கு வண்டிச் சத்தத்தைக் கணக்கிலே சேர்த்துக்கொள்ளாமல், ரூ.3,500 வழங்கவேண்டுமென்றும், தற்போது நிலுவையிலே உள்ள அனைத்துக் கரும்பு விவசாயிகளுக்கான பணத்தையும் நவம்பர் 15ஆம் தேதிக்குள் வழங்கிட வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கோரிக்கையினை ஏற்காவிட்டால், 3-11- 2013 அன்று தமிழகச் சர்க்கரை ஆலைகள் முன்பாகக் கழக விவசாய அணியின் சார்பில் போராட்டம் நடைபெறும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளில் அ.தி.மு.க. வினரே நிர்வாகப் பொறுப்புக்கு வந்துள்ள காரணத்தால், விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய விவசாயக் கடன், விதை நெல், உரம் மற்றும் வேளாண்மை இடுபொருள்கள் அ.தி.மு.க.வினருக்கும், அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வினரால் நடத்தப்படும் ஆட்சி அ.தி.மு.க.வினர்க்கு மட்டுமே; பொது மக்களுக்கு அல்ல என்பதைப் போன்ற ஜனநாயக விரோத நடைமுறை உருவாக்கப்பட்டுவிட்டது!

கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட தென்னை நல வாரியம் தற்போது இந்த ஆட்சியில் செயலற்றதாக ஆக்கப்பட்டுள்ளது. தென்னை விவசாயிகளின் நலனைக் கருதி, அந்த வாரியத்தை மீண்டும் இயக்கிட அ.தி.மு.க. அரசு முன்வருமா என்று தெரியவில்லை. தி.மு. கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு முக்கியத் திட்டங்களை அ.தி.மு.க. அரசு காழ்ப்புணர்ச்சியோடு மூடி வருகின்ற வரிசையில், கழக ஆட்சியில் நாகப்பட்டினம் மாவட்டத்தில், கீவளூரில் விவசாயக் கல்லூரி ஒன்று தொடங்கப் பட்ட போதிலும், அதனைத் தற்போது செயல்படவிடாமல் இந்த அரசு தடுத்துள்ளதையும் விலக்கிக்கொண்டு, விவசாயிகளின் பொது நலன் கருதித் தொடர்ந்து அந்தக் கல்லூரியை நல்ல முறையில் இயங்கிடச் செய்ய முன்வருவார்களா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். பாசன நீர் மேலாண்மை பெரும் பாதிப்புக்குள்ளாகிவிட்டது. 4-10-2013 அன்று திருத்துறைப்பூண்டியில் சம்பா சாகுபடிக்குத் தண்ணீர் கேட்டு விவசாயிகள் சாலை மறியல் செய்திருக்கிறார்கள். மேட்டூர் அணை ஆகஸ்ட் 2ஆம் தேதி திறக்கப்பட்டும்கூட, காவிரி டெல்டாவில் கடைமடைப் பகுதிகளுக்கு இன்னமும் தண்ணீர் போய்ச் சேரவில்லை என்றும், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கடைமடைப் பகுதிகளில் தண்ணீர் இல்லாமல் கருகும் சம்பாப் பயிரைக் காப்பாற்ற அடப்பாற்றிலிருந்து வடக்கு ராஜன் வாய்க்காலுக்கு முறை வைக்காமல் தண்ணீர் விட வேண்டுமென்றும் அந்தப் பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். “வரப்புயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும்; நெல் உயர குடி உயரும்; குடி உயர கோன் உயரும்?” என்று பாடினார் அவ்வைப் பிராட்டி! ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் வரப்பும் உயரவில்லை; நீரும் உயரவில்லை; நெல்லும் உயரவில்லை; குடிமக்களும் உயரவில்லை; குவியும் ஊழலைத் தவிர வேறு எதுவும் உயரப் போவதில்லை!

அன்புள்ள, மு.க. 9-10-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 49 PDF ↗