உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 49

தொகுதி 49 · கடிதம் 3768

இத்தகையோர் மத்தியிலேதான்....

2013-06-21

உடன்பிறப்பே,

“அமைச்சர் வைகைசெல்வன் மீண்டும் மீண்டும் சொதப்பல்! தேர்வில் சாதித்த மாணவர்களுக்குப் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் பெரும் குளறுபடி” என்பது ஒரு பத்திரிகையில் முதல் பக்கத்தில் வெளிவந்த தலைப்புச் செய்தி. “முரசொலி”, “தினகரன்” போன்ற நாளிதழ்களில் வெளிவந்த செய்தி அல்ல. 20-6-2013 தேதிய “தினமலர்” நாளேட்டில் முதல் பக்கத்தில்தான் இந்தச் செய்தி வந்துள்ளது.

பிளஸ் 2 மற்றும் 10ஆம் வகுப்புத் தேர்வில், தமிழை முதல் பாடமாகப் படித்து, மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு ரொக்கப் பரிசு வழங்குவதுடன் அவர்களின் உயர்கல்விச் செலவையும் தமிழக அரசே பல ஆண்டுகளாக ஏற்றுவருகிறது. இதற்கான நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சர் அறையிலே நடைபெறும். இந்தத் தகுதி பெற்ற மாணவ, மாணவியரை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வந்து, முதலமைச்சர் அறையில், அந்த மாணவர்களின் பெற்றோர்கள் முதலமைச்சரோடு புகைப்படமும் எடுத்துக்கொண்டு, அதற்குரிய பரிசுகளையும், சான்றிதழ்களையும் பெற்றுச் செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு இதற்காக நடைபெற்ற விழா பற்றித்தான் “தினமலர்” நாளேடு மேலே குறிப்பிட்டுள்ளவாறு தலைப்பிட்டுப் புகைப்படத்தோடு செய்தியினை வெளியிட்டுள்ளது.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் கையால் இந்தப் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்படும் எனக் கூறி மாநிலம் முழுவதிலுமிருந்து பரிசுக்குரிய மாணவர்களை, பெற்றோர்களுடன் சென்னைக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். இரண்டு தேர்வுகளையும் சேர்த்து 211 மாணவர்களுக்கும் முதல்வர் பரிசு வழங்குகிறார், அனைவரும் 19ஆம் தேதி காலை 8 மணிக்குள், சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் ஆஜராக வேண்டும் என முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம் பெற்றோருக்குக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்ததையொட்டி, அந்த மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் நெல்லை, கோவை, தூத்துக்குடி, கன்னியா குமரி போன்ற தொலைதூரத்திலிருந்து சென்னை வந்து சேர்ந்து - எப்படியோ எங்கேயோ தங்கித் தயாராகி, டி.பி.ஐ. வளாகத்திற்கு காலை 7.30 மணிக்கே வந்து விட்டார்கள். காலை 10 மணியளவில் முதல்வர் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுமென்று அதிகாரிகள் அவர்களிடம் தெரிவித்து, அதன்பின் அந்த நிகழ்ச்சி காலையில் ரத்தாகி விட்டது என்றும், மாலையில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. அறிவித்தவாறு மாலையிலாவது அனைவருக்கும் அந்தப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டதா என்றால் அதுவுமில்லை. பிளஸ் 2 தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர் 13 பேர், பத்தாம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர் 9 பேர் என 22 பேருக்கு மட்டும் பிற்பகல் 2.30 மணியளவில் முதலமைச்சர் ஜெயலலிதா பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி, புகைப்படம் எடுத்து ஏடுகளில் எல்லாம் பெரிதாக விளம்பரம் செய்து விட்டார்கள். ஆனால் பத்தாம் வகுப்புத் தேர்வில் இரண்டாம் இடம் பிடித்த 52 மாணவர்கள், மூன்றாம் இடம் பிடித்த 137 மாணவர்களுக்கு ஏற்கனவே முதலில் அறிவித்தவாறு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் பரிசுகளையோ, சான்றிதழ்களையோ வழங்கவில்லை. அவர்களுக்கெல்லாம் பள்ளிக் கல்வி அமைச்சர் வைகைசெல்வன், டி.பி.ஐ. வளாகத்தில், சான்றிதழ்களை வழங்குவார் என்று அதிகாரிகள் கூறிவிட்டார்களாம். முதலமைச்சர் கையால் பரிசுகளையும், விருதுகளையும் பெறுவதற்காகத் தொலை தூரத்திலிருந்து வருகை தந்த அந்த 189 மாணவர்களுக்கும் அறிவித்தவாறு தலைமைச் செயலகத்திலே முதல்வர் கையால் அவை வழங்கப்படவில்லை. அதுமாத்திரமா? முதல்வர் கையால் பரிசும், விருதும் பெறாத அந்த 189 மாணவர்களையும், டி.பி.ஐ. வளாகத்தில் ஒரு அரங்கில் உட்கார வைத்து, அவர்களின் பெற்றோர்களை வெளிப்புறத்தில் அமர வைத்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இதோ வருகிறார், அதோ வருகிறார், வந்தவுடன் பரிசுகளையும் விருதுகளையும் வழங்கிவிடுவார் என்று அதிகாரிகள் கூறியவாறு இருந்துள்ளனர். மாலை 4 மணி வரை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவைகளை வழங்க வராததால், அதுவரை காத்திருந்த அந்த மாணவர்களின் பெற்றோர் ஆத்திரமடைந்திருக்கிறார்கள். தொலைதூரத்திலிருந்து மாணவர்களுடன் வந்திருந்த பெற்றோர், சென்னையிலே தங்குவதற்கு வசதியில்லாத நிலையில், அன்று மாலையில் 6 மணி அளவில் திரும்பிச் செல்வதற்காக டிக்கெட்டுகளைப் பெற்றிருந்த காரணத்தால் என்ன செய்வதென்று புரியாமல் தவித்திருக்கிறார்கள். அதிகாரிகள் வேறு வழியின்றி, ஆவேசமாக இருந்த பெற்றோர்களுக்குப் பதில் சொல்ல இயலாமல், அந்த அரங்கிற்குள் இருந்த ஓர் அறைக்குள் சென்று அமர்ந்துகொண்டு கதவையே பூட்டி விட்டார்களாம். இதிலே இன்னும் கொடுமை, பல மணி நேரமாகக் காத்திருந்த அந்த மாணவச் செல்வங்களுக்குக் குடிக்கத் தண்ணீர்கூடக் கொடுக்கவில்லையாம்.

4.30 மணிவரை பொறுத்திருந்த பெற்றோர்களில் சிலர் வேறு வழியின்றித் தங்கள் பிள்ளைகளை பரிசும் வேண்டாம், சான்றிதழும் வேண்டாம் என்று கூறி அழைத்துச் சென்றுவிட்டார்கள். அதற்கு மேலும் நேரம் ஆனால், எல்லா மாணவர்களுமே சென்று விடுவார்கள் என்பதால் மத்திய இடைநிலைக் கல்வி திட்ட இயக்குநர் மூலமாக அவசர அவசரமாகச் சான்றிதழ்களைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார்கள். முதலமைச்சரிடம்தான் அவைகளைப் பெற இயலவில்லை, குறைந்தபட்சம் அமைச்சரிட மாவது அவைகளைப் பெறலாம் என்று காத்திருந்த மாணவர்கள் அதற்கும் வழியின்றிச் சோகத்துடன் ஏன் சென்னைக்கு வந்தோம் என்ற நினைப்புடன் திரும்பிச் சென்ற கொடுமை நடைபெற்றுள்ளது.

இந்தத் தகவலையெல்லாம் சாங்கோபாங்கமாக “தினமலர்” நாளேடு விவரமாக எழுதியிருக்கின்றது. இதைவிட மற்றொரு வேடிக்கை, இதுபற்றி தமிழக அரசின் செய்தித் துறை, ஏடுகளுக்கு செய்திக் குறிப்பு தயாரித்து வழங்கியுள்ளது. அந்தச் செய்திக் குறிப்பில், பத்தாம் வகுப்பில் மாநில அளவில் இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடம் எடுத்த மாணவ, மாணவியருக்கும் முதல்வர் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினார் என்று எழுதி, நடைபெறவே இல்லாத ஒரு நிகழ்ச்சியை நடைபெற்றதைப் போலச் செய்திக்குறிப்பு தயாரித்து ஏடுகளுக்கெல்லாம் வழங்கிய கொடுமையும் நடைபெற்றுள்ளதாக - அதையும் “தினமலர்” நாளேடே அதன் நான்காவது பக்கத்தில் “முதல்வர் விழாச் செய்தியைத் தவறாகக் கொடுத்த செய்தித் துறை” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது. தனியார் நடத்தும் ஏடுகளில் தவறான செய்திகள் வந்தாலே அதனை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் தமிழக அ.தி.மு.க. அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பே இவ்வாறு தவறான தகவலைத் தருமேயானால் பின்னர் இதற்கு விமோசனம்தான் ஏது? உண்மையிலேயே அரசின் செய்தித் துறை தவறாகச் செய்திக்குறிப்பு தயாரித்துக் கொடுத்திருக்கிறதா? அல்லது “தினமலர்” நாளேடு தவறாகச் செய்தி வெளியிட்டுள்ளதா என்பதை அரசுதான் விளக்கிட வேண்டும்.

அ.தி.மு.க. அரசிலே நடைபெற்ற இந்த கூத்துகளையெல்லாம் வெளியிட்ட காரணத்தாலோ என்னவோ, இன்றைய தினம் முதலமைச்சர் கலந்துகொள்ளும் இரண்டு நிகழ்ச்சிகளுக்காக இரண்டு முழுப் பக்க விளம்பரங்கள் மற்ற நாளேடுகளில் எல்லாம் வெளிவந்திருக்கின்றபோது, “தினமலர்” நாளேட்டில் மட்டும் அந்த இரண்டு பக்க விளம்பரங்கள் வெளிவரவில்லை. ஒருவேளை அவர்களுக்குத் தரப்படவில்லையோ என்னவோ?

கல்வித் துறை பற்றிய இந்தச் செய்திகள் வந்திருக்கிற நேரத்தில், மின் வாரியம் பற்றியும் ஒரு செய்தி வந்துள்ளது. அந்தச் செய்தியின் தலைப்பு, “மின் வாரியத்தின் குறைகேட்பு மையம் சரியில்லை - துறை அமைச்சர் விஸ்வநாதன் தூக்கம்” என்ற தலைப்பில் நீண்ட விவரங்களைத் தந்திருப்பதோடு, அரசின் மீது மிகுந்த அக்கறையோடு “மின் வாரியத்தின் அலட்சிய மனப்பான்மையால் அவதிப்படுவதைத் தவிர்க்க, மின்சாரத் துறை அமைச்சர், நத்தம் விஸ்வநாதன் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வரும் தேர்தல்களில் இவர் ஒருவராலேயே அ.தி.மு.க.வுக்கு அதிக ஓட்டு இழப்பு ஏற்பட்டு, செல்வாக்கும் சரிந்துவிடும். இதை அமைச்சர் கவனத்தில் கொள்ளாததை, முதல்வர் ஜெ. கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றும் எழுதியுள்ளது. இதிலிருந்து “தினமலர்” போன்ற நாளேடுகளுக்கு அரசின் மீதுள்ள குறைபாடுகளை மறைக்கவும் முடியவில்லை. அதனால் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கெட்டப் பெயர் வந்துவிடுமோ என்பதைத் தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை. இத்தகையோர் மத்தியிலேதான் நாம் கழகத்தை நடத்திச் செல்ல வேண்டியிருக்கின்றது!

அன்புள்ள, மு.க. 21-6-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 49 PDF ↗