உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 49

தொகுதி 49 · கடிதம் 3767

பதவிக்குத்தக்க பண்பாடு வேண்டாமா?

2013-06-17

உடன்பிறப்பே,

ஜெயலலிதா முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் வறட்சி தாண்டவமாடுவதை எடுத்துக்காட்டி, மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறந்து விடப்படுவதைப் போல இந்த ஆண்டும் திறந்து விடப்படுமா என்று கேட்டதற்கு, ஜெயலலிதா தனது பதிலில், 2011ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 6ஆம் தேதியே குறுவைச் சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது என்று கூறியிருக்கிறார். 2011ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் தேதிவரை தமிழகத்தில் ஆட்சி செய்தது திராவிட முன்னேற்றக் கழகம். அந்த ஆண்டு கர்நாடகத்தோடு கழக அரசு சுமூகமாகப் பேசி நல்லுறவுடன் இருந்த காரணத்தால், மேட்டூர் அணையும் நிரம்பியிருந்த நிலையில், பதவிக்கு வந்த இருபதே நாட்களில் மேட்டூர் அணையைத் திறந்ததைப் பற்றி, ஏதோ அவருடைய ஆட்சியின் முயற்சியால்தான் அதைச் செய்ததைப் போல ஜெயலலிதா தற்போது தற்பெருமையாகப் பேசிக்கொண்டிருக்கிறார். கழக ஆட்சியில் விவசாயிகள் நலன் கருதி முன்னெச்சரிக்கையோடு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாகச் செய்யப்பட்ட ஒரு சாதனைக்கு ஜெயலலிதா தற்போது சொந்தம் கொண்டாட முயற்சி செய்கிறார் என்பதைத் தவிர இதற்கு வேறு என்ன அர்த்தம் என்பதை நடுநிலையாளர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகள்தான் உண்மையில் ஜெயலலிதா ஆட்சியில் இருக்கும் ஆண்டுகள். அந்த இரண்டு ஆண்டுகளில் மேட்டூர் அணை எப்போது திறக்கப்பட்டது என்பதை ஜெயலலிதா சொல்லியிருக்க வேண்டியதுதானே? இந்த இரண்டு ஆண்டுக் காலத்தில் அ.தி.மு.க. ஆட்சியின் இலட்சணம் என்ன?

அம்மையார் ஆட்சிக்கு வந்தது முதல் கர்நாடக அரசும், அது எந்த அரசாக இருந்தாலும் மேட்டூர் அணைக்கு நீர் கொடுப்பதில்லை. இயற்கையும்கூட இவருக்குப் பயந்து பதுங்கிக் கொள்வதால் மழை பெய்ய மறுக்கின்றது. ஆனால் எதற்கெடுத்தாலும் மத்திய அரசைக் குறை சொல்வது அல்லது இங்கேயுள்ள எதிர்க்கட்சிகளைக் குறிப்பாகத் தி.மு. கழகத்தைக் குறை சொல்வது என்பதிலேயே காலத்தைக் கழித்து விடலாம் என்று அவர் எண்ணுகிறார்.

“அ.தி.மு.க. அரசு இனியாவது விழித்துக்கொண்டு இந்த ஆண்டு குறுவைச் சாகுபடி உண்டா? இல்லையா? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்” என்று நான் விடுத்த அறிக்கை கேலிக் கூத்தான, நகைப்புக்குரிய, தெளிவற்ற அறிக்கையாம்! முதலமைச்சர் சொல்லுகிறார்! ஆம், அவருடைய பதவி அவ்வாறு அவரைச் சொல்ல வைக்கிறது! டெல்டா மாவட்ட விவசாயிகளின் குழப்பத்தையும் பதற்றத்தையும் போக்கும்படி நான் விடுத்துள்ள அறிக்கையிலே என்ன கேலி இருக்கிறது? விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றும்படி நான் வலியுறுத்தியதில் என்ன தெளிவற்ற தன்மை இருக்கிறது? நான் அறிக்கை விடுகின்றவரை, அதாவது ஜூன் 12 அன்று மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டிய நாள்வரை குறுவைச் சாகுபடி பற்றித் தமிழக அரசு அறிவிப்பு எதையாவது வெளியிட்டதா? நான் அறிக்கை விடுத்த பிறகுதானே, அவசர அவசரமாக ஆலோசனைக் கூட்டம்? அதற்குப் பிறகு சலுகைகள் அறிவிப்பு எல்லாம் நடைபெறுகிறது. இதற்கெல்லாம் மூல காரணம் என்னுடைய அறிக்கை அல்லவா? இதிலே என்ன நகைப்புக்கு இடம் இருக்கிறது? முதலமைச்சர் என்பதால் எப்படி வேண்டுமானாலும் அறிக்கை விடலாமா?

வறட்சி நிவாரணப் பணிகளுக்காகத் தமிழக அரசின் சார்பில் நிதி ஒதுக்கியதையும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே சுட்டிக் காட்டியிருக்கிறார். அந்த வறட்சி நிவாரணத் தொகையைத் தமிழக அரசு உடனடியாகவா அறிவித்தது? அதற்காகத் தமிழகத்திலே உள்ள அரசியல் கட்சிகள், விவசாயச் சங்கங்கள் எல்லாம் கொடுத்த குரல் எவ்வளவு? விவசாயிகள் நடத்திய போராட்டங்கள் எத்தனை? வெளியிட்ட அறிக்கைகள் எத்தனை? அதற்குப் பிறகுதானே மிகவும் தாமதமாக நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டது. அந்த வறட்சி நிவாரணம் வழங்குவதிலேதான் எத்தனை குளறுபடிகள்?

முதலமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய அமைச்சர் கள் சொல்வதையே கேட்டுக்கொண்டிராமல், சற்று இறங்கி வந்து தமிழ்நாட்டு விவசாயிகளின் குமுறலையும், குரலையும் கொஞ்சம் காது கொடுத்து நிதானமாகக் கேட்டால் உண்மை நிலவரங்களை எளிதில் புரிந்துகொள்ள முடியும். அல்லது அவர் கொடுக்கின்ற முழு பக்க விளம்பரங்களை வெளியிட்டுப் பயனடையும் சில பத்திரிகைகளே உண்மையில் வறட்சி நிவாரணப் பங்கீடு எவ்வாறு நடைபெறுகிறது என்பதைப் பற்றி வெளியிடும் செய்திகளையாவது படிக்க வேண்டும். அல்லது ஒரு சில தொலைக்காட்சி ஊடகங்களில் பாதிக்கப்படும் விவசாயிகள் தங்கள் மனக் கொதிப்பைக் கொட்டி நேரில் பேட்டி அளிக்கிறார்களே, அதையாவது பார்த்துத்தெரிந்துகொள்ள வேண்டும். அதையெல்லாம் விட்டுவிட்டு, நான் இத்தனை கோடி ரூபாயை வறட்சி நிவாரணமாக அளித்துவிட்டேன் என்று உப்பரிகையில் உட்கார்ந்து கொண்டு பெருமை பேசிக்கொள்வதில் எந்தப் பயனும் இல்லை? கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்தில் சாகுபடி பொய்த்துப் போன காரணத்தால், 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதைப் பெயர்களோடு ஏடுகள் எல்லாம் வெளியிட வில்லையா? அந்த 17 விவசாயிகளிலே கூட, அரசின் சார்பில் ஒரு சில குடும்பங்களுக்கு மட்டும் நிவாரணத் தொகையை அரசு அறிவித்துவிட்டு, மற்றவர்கள் எல்லாம் விவசாயிகளே இல்லை என்று கூறிவிடவில்லையா? சாகுபடி செய்யாத தரிசு நிலங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படுவதாகவும், சாகுபடி செய்த நிலங்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என்றும் புகார்கள் ஏடுகளிலே வரவில்லையா? நிலத்தின் உரிமையாளரும், விவசாயம் செய்தவரும் வெவ்வேறு நபர்களாக இருப்பதால், நிவாரணத் தொகையாருக்கு வழங்குவது என்பதில் குழப்பம் நிலவுகிறது என்று வந்த செய்தியை முதலமைச்சர் பார்க்கவில்லையா? ஒரு சில இடங்களில் அறிவித்த தொகையைவிட மிகவும் குறைவாக ஏக்கருக்கு 3000 ரூபாய் மட்டுமே நிவாரணத் தொகையாகக் கொடுக்கப்படுவதாக விவசாயிகள் சொல்லுகிறார்களே, அது அரசின் காதுகளிலே விழவில்லையா? கிராம நல அதிகாரிகள், கூட்டுறவு வங்கி அதிகாரிகள் நிவாரணத் தொகையில் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை பிடித்தம் செய்துகொள்கிறார்கள் என்று இன்னமும் சொல்லப்படுகிறதே, முதல் அமைச்சருக்கு அது தெரியுமா? வறட்சி நிவாரணத் தொகையில் பயிர்க் கடன் வசூலிக்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்டபோதிலும், சில கூட்டுறவு வங்கிகளில் வறட்சி நிவாரணத் தொகை கொடுக்கும்போதே பயிர்க் கடன்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது என்பது உண்மையா? பொய்யா? என்பதை விசாரித்துத் தெரிந்து கொள்ளட்டும்! அதையெல்லாம் விட்டுவிட்டு, “நுனிப்புல் மேய்வது” என்பார்களே, அதைப்போலப் பிரச்சினையின் ஆழத்தைப் புரிந்துகொள்ளாமல், என் மீது தாண்டிக் குதித்து வார்த்தைகளில் அநாகரிகத்தைக் குழைத்து அறிக்கை விடுவது என்பது அவருக்கு அழகாக இருக்கலாம்; ஆனால் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல!

“விழி இமை போல் விவசாயிகளைக் காத்து வரும் எனது தலைமையிலான அரசைப் பார்த்து “இனியாவது விழித்துக் கொண்டு” என்று கருணாநிதி கூறுவது தூங்குபவரை எழுப்பலாம், தூங்குபவரைப் போல நடிப்பவரை எழுப்ப முடியாது என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது” என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். விழி இமை போல் விவசாயிகளைக் காக்கின்றாரா? அல்லது இமையைத் திறந்து வைத்துக்கொண்டு விவசாயிகளின் விழியில் மண்ணை வாரிப் போடுகிறாரா? என்பதைத் தமிழ்நாட்டு விவசாயிகள் நன்றாகவே அறிவார்கள். “நடிப்பவரை” எழுப்ப முடியாது என்கிறார், உண்மைதான், “நடிப்பவரை” அல்லது “நடித்தவரை” எழுப்பத்தான் முடியாது!

“கர்நாடகாவில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டதைக் கருணாநிதி சுட்டிக்காட்டியிருப்பது நகைப்புக்குரியதாகவும், வியப்பளிப்பதாகவும் உள்ளது” என்கிறார் ஜெயலலிதா. இதிலே என்ன நகைப்பு வேண்டியிருக்கிறது? கர்நாடகாவில் அந்த மாநில முதலமைச்சர் காவேரி பிரச்சினைக்காக உடனடியாக அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டியது பொய்யான செய்தியா? அதிலே முன்னாள் முதலமைச்சர்கள் எல்லாம் கலந்துகொண்ட புகைப்படமே ஏடுகளிலே வெளிவந்ததே? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் திரு. கே. பாலகிருஷ்ணன் அவர்களும், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் திரு.வீரமணி அவர்களும் விடுத்த அறிக்கைகளில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தமிழகத்திலே கூட்ட வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்களே? இந்த இரண்டரை ஆண்டுக் காலத்தில் எத்தனையோ முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் வந்தனவே; அவற்றில் எதற்காகவாவது தமிழக முதலமைச்சர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கலந்தாலோசனை செய்தது உண்டா? “மெஜாரிட்டி” ஆட்சி என்பதால் எதை வேண்டுமானாலும் தன் மனம் போனபோக்கில் செய்வதா? இதுதான் மக்களாட்சிக்குக் கொடுக்கப்படும் மதிப்பா? ஜனநாயகத்தைப் போற்றிடும் அழகா?

“அரசியல் லாபத்திற்காக, சுயநலனுக்காக, குடும்ப நலனுக்காகத் தமிழக மக்கள் நலனை அடகு வைக்கக் கூடியவர், இரட்டை வேடம் போடக் கூடியவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி” - முதலமைச்சர் ஜெயலலிதா தனது அறிக்கையில் எனக்குச் செய்த அர்ச்சனைகள் இது! இலங்கைத் தமிழர் பிரச்சினையிலும், கச்சத் தீவு பிரச்சினையிலும், சேது சமுத்திரத் திட்டப் பிரச்சினையிலும், ஏன் காவிரிப் பிரச்சினையிலும் கூட ஜெயலலிதா போட்ட இரட்டை வேடம் பற்றித் தமிழ்நாட்டு மக்கள் அறியமாட்டார்களா என்ன?

வெலிங்டனில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்திய அரசு பயிற்சி அளிப்பது பற்றி மத்திய அரசை நான் எதிர்க்காததற்குக் காரணம், என் மகள் கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுக்காகத்தான் என்ற ஒரு அபூர்வக் கண்டுபிடிப்பையும் ஜெயலலிதா தன் அறிக்கையில் வெளியிட்டிருக்கிறார். இப்படிப் பட்ட “விநோதமான” எண்ணங்கள் எல்லாம் ஜெய லலிதாவுக்குத்தான் வரும். வெலிங்டனில் இலங்கை ராணுவ வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பது பற்றி நான் அறிக்கை எழுதியது இந்த மாதம் 10ஆம் தேதியாகும். அப்போது கனிமொழி மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றிய முடிவே எடுக்கப்படவில்லை. முடிவெடுத்து வேட்பு மனு தாக்கல் செய்தது

15ஆம் தேதியாகும். ஆனால் 10ஆம் தேதியன்றே காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவுக்காகத்தான் அப்படியொரு அறிக்கை விடுத்தேன் என்று திசைதிருப்பக் கூடிய வகையில் சிந்திக்கக் கூடியவர் ஜெயலலிதாவைத் தவிர வேறு யார் இருக்க முடியும்? அது மாத்திரமல்ல; அந்த அறிக்கையிலேகூட நான் மத்திய அரசை ஆதரித்து எதுவும் எழுதிடவில்லை. குறிப்பாக எனது அறிக்கையில் “ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இருக்கின்ற உணர்வுகளைத் தி.மு. கழகம் மதிக்கின்றது. இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது பற்றித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உணர்வும் அதுதான். அதிலே எந்த வேறுபாடான எண்ணமும் நமக்கு இல்லை. இந்த அறிக்கை மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக ஜெயலலிதா கூறியுள்ள குற்றச்சாட்டிற்கான பதிலே தவிர, இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை நியாயப்படுத்துவதாக அர்த்தம் ஆகாது” என்று தெளிவுபடுத்தி எழுதியிருக்கிறேன். இது மத்திய அரசுக்கு ஆதரவான கருத்தா என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் தான் கூற வேண்டும்.

“எதற்கெடுத்தாலும் உச்ச நீதிமன்றத்திலே முறையிடுவதும், மத்திய அரசின் மீது பழிபோட்டுத் தப்பித்துக்கொள்ள முயற்சிப்பதும் என்ற போக்கிலே செயல்படுவதன் காரணமாக உண்மையில் பல வகையிலும் பாதிக்கப்படுவோர் தமிழ்நாட்டு விவசாயிகள் தான்” என்று நான் அறிக்கை விட்டிருப்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்கிறார் ஜெயலலிதா. நான் கூறியது உண்மைக்குப் புறம்பானதா என்பதையும் தமிழ்நாட்டு விவசாயிகளே தீர்மானித்துக் கொள்ளட்டும்!

காவேரி நடுவர்மன்றத்தின் இறுதி ஆணை இவரது தலைமையிலான அரசு உச்ச நீதிமன்றத்திலே வற்புறுத்தியதன் காரணமாகத்தான் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது என்று ஜெயலலிதா திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தன்னிச்சையாக மத்திய அரசை வலியுறுத்திய காரணத்தால்தான் நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை மத்திய அரசிதழிலே வெளியிடப்பட்டதே தவிர, அதற்குத் தான்தான் காரணம் என்று ஜெயலலிதா பெருமை சேர்த்துக்கொள்ள முயற்சிப்பது தான் உண்மைக்குப் புறம்பானது.

காவேரி மேற்பார்வைக் குழுவின் கூட்டம் 12.6.2013 அன்று முடிந்தவுடன் குறுவைச் சாகுபடி குறித்த அறிவிப்பை ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசால் வெளியிடப்படும் என்பதை யூகித்துக் கொண்டு, “இந்த ஆண்டு குறுவைச் சாகுபடி உண்டா?” என்று நான் குதர்க்கமான, குரோதமான, முரண்பாடான அறிக்கை விட்டேனாம்! அரசு இவ்வாறு அறிக்கை வெளியிடக் கூடும் என்பதை யூகித்து, நான் முன்பே அதுபற்றி அறிக்கை வெளியிட்டிருந்தால், அது எதிர்க்கட்சியின் கடமைதானே? அதிலே என்ன குதர்க்கம்? குரோதம்? என்ன முரண்பாடு? என்ன விதண்டாவாதம்? இந்த ஆண்டிலாவது குறுவைச் சாகுபடி செய்ய தண்ணீர் கிடைக்குமா, கிடைக்காதா என்ற குழப்ப நிலையில் விவசாயிகள் இருக்கிறார்கள், அவர்களைக் காப்பாற்றி ஆறுதல் வழங்கிடும் வகையில் அரசின் சார்பில் அறிவுரை வழங்கப்பட வேண்டாமா என்று நான் நல்ல நோக்கத்தோடு அறிக்கை விடுத்தால்; அது குதர்க்கமா? குரோதமா? இறுதியாக முதலமைச்சர் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஓர் உறுதி அளித்துவிட்டார். என்ன உறுதி தெரியுமா? “காவேரி நீர் பிடிப்புப் பகுதியில் மழை பெறப்பட்டவுடன் நமக்கு உரிய தண்ணீர் பெறப்படும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார். மழை பெறப்பட்டவுடன் நமக்கு உரிய தண்ணீர் பெறப்படுமாம்! விவசாயிகளுக்கு எத்தகைய உறுதியை முதலமைச்சர் அளித்திருக்கிறார், பார்த்தீர்களா? நல்லவேளை, வானத்திலே மேகம் திரளட்டும், மேகம் திரண்டால் மழை வரும், மழை வந்தால் தண்ணீர் வரும் என்று விஞ்ஞான ரீதியாக விளக்கமாகவே சொல்லியிருக்கலாம்! காவிரியில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட அடுத்த நாளே காவேரியில் தண்ணீர் கரைபுரண்டோடும், டெல்டா மாவட்ட விவசாயிகள் எல்லாம் களிநடனமாடுவார்கள், முப்போகம் விளையும் என்றெல்லாம் ஊரை ஏமாற்றச் சொன்ன நம்பிக்கை வார்த்தைகள் எல்லாம் இப்போது எங்கே போய்விட்டன? ஒட்டுமொத்தமாக முதலமைச்சரின் அறிக்கையைப் படித்தால் நமக்கு வருத்தம்தான் ஏற்படுகிறது! முதல் அமைச்சர் மீண்டும் ஒருமுறை அவருடைய அறிக்கையைப் படித்துப் பார்க்கட்டும். அப்போது தெரியும், நான் சொல்வது உண்மையா? அல்லது அம்மையாரின் அறிக்கை உண்மையா? இனியாவது காழ்ப்புணர்வைக் கைவிட்டு, குரோதத்தை ஒதுக்கிவிட்டு ஆட்சியை நடத்த முயற்சி செய்யுங்கள்! பதவிக்குத் தக்க பண்பாடு வேண்டாமா?

அன்புள்ள, மு.க. 17-6-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 49 PDF ↗