தொகுதி 49 · கடிதம் 3765
உழைப்பேன்; உழைத்துக் கொண்டே இருப்பேன்!
2013-06-06
உடன்பிறப்பே,
என்னுடைய 90ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை எந்த ஆண்டும் இல்லாத வகையில் மிகவும் சீரோடும் சிறப்போடும் உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றிணைந்து நடத்தியிருக்கிறீர்கள். இரண்டு மூன்று நாட்களாக நான் சரியாகத் தூங்கவில்லை. என் வீட்டாரும் திரும்பத் திரும்ப அதுபற்றிக் கேட்டார்கள். இரண்டு மூன்று நாட்களாக என்னுடன் காலையிலும் மாலையிலும் பக்கத்திலே இருக்கின்ற பாசம் மிகுந்த என் தம்பிமார்கள் சிலர்கூட “என்ன அண்ணே, தூக்கம் வரவில்லையா” என்றார்கள்! தூக்கம் வராததற்குக் காரணம் எனக்குத்தான் தெரியும்; ஆம்; வேறொன்றுமில்லை. தமிழ் மக்கள் என்னிடம் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் எல்லையில்லாத அன்போடு இருக்கிறார்களே? எங்கோ ஒரு கிராமத்தில், அதுவும் மிக மிகச் சாதாரணமான குடும்பத்தில் பிறந்தவன் ஆயிற்றே? என் உயிர் மாறன்தான் எங்கள் குடும்பத்திலேயே முதல் பட்டதாரி! அதுவரை யாரும் எங்கள் குடும்பத்தில் பட்டதாரி கிடையாது! எங்கள் குடும்பத்திற்கு என்று எந்தப் பெருமையும் கிடையாது. ஆனால் ஐந்து முறை முதல் அமைச்சராக இருந்துவிட்டேன். 12 முறை சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு ஒரு முறைகூட தோல்வியடையாமல், தொடர்ந்து வெற்றி பெற்றிருக்கிறேன். பேரறிஞர் அண்ணா அவர்களின் மறைவுக்குப் பிறகு, 1969ஆம் ஆண்டு முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்துவருகிறேன். தமிழ்நாட்டில் ஏழு கோடி மக்கள் இருப்பதாக அண்மையில் ஏடுகள் தெரிவித்திருந்தன. இந்த ஏழு கோடி மக்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு என்னை எதிரியாகக் கருதக்கூடியவர்கள் ஒரு சிலர் இருக்கலாமே தவிர, மற்றவர்கள் எல்லாம் என்பால் அன்புதான் காட்டியிருக்கிறார்கள். ஒரு சில காலம் என்னை எதிர்த்தவர்கள்கூட, பின்னர் என்னிடம் அன்பு காட்டியிருக்கிறார்கள். ஏன் என்ன காரணம்? எனக்கென்று உள்ள பெருமைதான் எது? உழைப்பு ஒன்றுதான். சிறு வயது முதல் இடைவிடாமல் உழைத்திருக்கிறேன். கூட்டங்களில் பேசியிருக்கிறேன். எழுதியிருக்கிறேன்.
எழுதியிருக்கிறேன், பேசியிருக்கிறேன் என்றால் சும்மாவா? என்னுடைய சுயசரிதையும், அதோடு இணைந்த கழகத்தின் வரலாற்றையும் “நெஞ்சுக்கு நீதி” என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதியிருக்கிறேன். இதுவரை ஐந்து பாகங்கள் நூல்களாக “நெஞ்சுக்கு நீதி” வெளிவந்துவிட்டது. ஆறாவது பாகமும் “முரசொலி”யில் வாரந்தோறும் தொடராக எழுதிவிட்டேன். இன்னும் அது நூலாக வெளிவரவில்லை. இந்த ஆறு பாகத்தில் 1924ஆம் ஆண்டு நான் பிறந்தது முதல் 2002ஆம் ஆண்டு வரை நடைபெற்ற நிகழ்வுகளைத்தான் எழுதியிருக்கிறேன். இந்த ஆறு பாகங்களும் மட்டும் எத்தனை பக்கங்கள் தெரியுமா? 4,616 பக்கங்கள். ஆம், இந்த ஒரு நூல் மட்டுமே 6 பாகங்கள், 4,616 பக்கங்கள்.
அதுபோலவே தமிழகச் சட்டப்பேரவையில் நான் ஆற்றிய முக்கிய உரைகள் இதுவரை 12 பாகங்கள் வெளிவந்துள்ளன. அது எத்தனை பக்கங்கள் தெரியுமா? 6,077 பக்கங்கள். இதுதவிர நான் எழுதிய கவிதைகளை எல்லாம் தொகுத்து “கவிதை மழை” என்ற தலைப்பில் 1,107 பக்கங்கள்! தற்போது வெளியிடப்பட்ட “சிறுகதைப் பூங்கா” 670 பக்கங்கள்! ரோமாபுரிப் பாண்டியன், சரித்திர நாவல், 705 பக்கங்கள்! தென்பாண்டிச் சிங்கம் 453 பக்கங்கள்! முத்துக்குளியல் இரண்டு பாகங்களும் சேர்ந்து 1,062 பக்கங்கள்! புதையல் 380 பக்கங்கள்! சங்கத் தமிழ் 484 பக்கங்கள்! பொன்னர் சங்கர் 543 பக்கங்கள்! குறளோவியம் 648 பக்கங்கள்! குறள் உரை 285 பக்கங்கள்! தொல்காப்பிய பூங்கா (இதுவரை 14 பதிப்புகள் வெளிவந்துள்ளன) 551 பக்கங்கள்! நான் பேசி, எழுதி அச்சில் மட்டும் வந்திருப்பது மொத்தம் எத்தனை பக்கங்கள் தெரியுமா? 17,082 பக்கங்கள்! எனக்கே மலைப்பாகவும், பிரமிப்பாகவும் இருக்கிறது - இத்தனை பக்கங்களை எழுதியிருக்கிறோமா என்று! இது மட்டுமல்ல; சிறு சிறு நூல்கள் வடிவில் 100க்கு மேற்பட்ட புத்தகங்கள் நான் எழுதியவை வெளி வந்திருக்கின்றன. இதுதவிர, நான் “முரசொலி”யில் எழுதிய கடிதங்கள் 12 பாகங்கள் வெளிவந்துள்ளன. கல்வி நிலையங்களில் நான் ஆற்றிய உரைகளைத் தொகுத்து தம்பி இள.புகழேந்தி ஒரு பெரிய நூலாக வெளியிட்டுள்ளார்.
எழுதியது மாத்திரமல்ல; என்னுடைய இந்த 90 வயதில் தமிழகத்திலே உள்ள பெரு நகரங்களில், சிறு நகரங்களில், கிராமங்களில் நான் பேசாத இடம் எதுவுமே கிடையாது. வெளியூர்களிலும், நான் வெளியூர் செல்லும்போது சாலையோரங்களிலும், சென்னையிலும், மாநாடுகளிலும், பொதுக் கூட்டங்களிலும், ஏன் என்னுடைய இல்ல வாயிலிலும் என்று நான் நடத்திவைத்த திருமணங்கள் மட்டும் சுமார் 20 ஆயிரத்தைத் தொடும்!
இது மாத்திரமல்ல; தமிழ்நாட்டு அரசியலில், மாநில கட்சிகளில் ஒன்றின் தலைவராக இருந்தபோதிலும், என்னை அறிந்துகொள்ளாத அகில இந்தியத் தலைவர்கள் இல்லை என்ற அளவிற்குப் பழகியிருக்கிறேன். இந்திராகாந்தி அம்மையார் அவர்கள் பிரதமராக இருந்த காலந்தொட்டு, அதற்குப் பிறகு வந்த அனைத்துப் பிரதமர்களும் என்னுடன் அன்புடனே பழகியிருக்கிறார்கள். யாரும் என்னிடம் வெறுப்பு காட்டுகின்ற அளவிற்கு நான் நடந்துகொண்டதில்லை. பிரதமர்கள் மாத்திரமல்ல, மத்திய அமைச்சர்கள் மாத்திரமல்ல, மத்தியில் எதிர்க்கட்சி வரிசையில் இடம்பெற்ற அத்தனை தலைவர்களும் என்னை மதித்தே பாராட்டியிருக்கிறார்கள். ஏன், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள தலைவர்களும் என்னை நன்கறிவார்கள்.
முதுகில் மிகப் பெரிய வலி வந்து, அதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டு, தற்போது நடக்க முடியாத நிலையில் சக்கர வண்டியில் பயணம் மேற்கொள்கிற போதும், நான் என்னுடைய பணிகள் எதையும் நிறுத்தி விடவும் இல்லை; ஒத்திப் போடவும் இல்லை. கூட்டங்களுக்குச் செல்லாமல் இல்லை, எழுதாமல் இருப்பதில்லை. என்னுடைய அரசியல் பணிகளுக்கிடையே கலைத் துறையிலும் ஈடுபட்டு இதுவரை சுமார் 75 திரைப்படங்களுக்குக் கதை வசனம் எழுதி, அவற்றில் பெரும்பாலானவை வெற்றிகரமாக ஓடியுள்ளன என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள். நான் எழுதிய உரையாடல்கள், தமிழகத்திலே உள்ள பலரால் மனப்பாடம் செய்யப்பட்டதும், உரையாடல்கள் முதன் முதலாக நூல் வடிவில் வெளிவந்ததும் உண்டு. இத்தனைக்குப் பிறகும் நான் அகம்பாவம் கொண்டதில்லை. யாரையும் அலட்சியமாக நடத்தியதுமில்லை. எடுத்தேன், கவிழ்த்தேன் என்று பேசியதில்லை.
இப்படிப்பட்ட எனக்குத்தான் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா. பிறந்த நாள் 3ஆம் தேதிதான் என்றாலும், 1ஆம் தேதியன்றே 90 கவிஞர்களை அழைத்து உங்களைக் கெளரவிக்கப்போகிறேன் என்று தம்பி கவிப்பேரரசு வைரமுத்து ஒரு மாதத்திற்கு முன்பே என்னிடம் ஒப்புதல் பெற்றுவிட்டார். அந்த நிகழ்ச்சியை மிக அருமையாக ஏற்பாடு செய்திருந்தார். ஒவ்வொன்றையும் அவரே நேரடியாகச் சரிபார்த்து நடத்தினார். தமிழகக் கவிஞர்கள் 90 பேரை அங்கே கொண்டு வந்து குவித்துவிட்டார். மூத்த கவிஞர்கள் குலோத்துங்கன் என்ற வா. செ. குழந்தைசாமி, கவிக்கோ அப்துல் ரகுமான், காவியக் கவிஞர் வாலி, கல்யாண்ஜி, மனுஷ்யபுத்திரன், கவிதைப்பித்தன், வா.மு.சேதுராமன், கனிமொழி, பா.விஜய், இளைய பாரதி, பழனிபாரதி, சல்மா, கலாப் பிரியா, ஆண்டாள் பிரியதர்ஷினி, க்ருஷாங்கினி என்று 90 கவிஞர்கள் அங்கே ஒவ்வொருவராக என்னிடம் வந்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்கள்.
1ஆம் தேதியன்று காலையிலே மகளிர் அணியின் சார்பில் சகோதரி நூர்ஜகான் பேகம் தலைமையில் பிறந்த நாள் விழா கருத்தரங்கம். நூர்ஜகான் பேகம் இன்றைக்கு மகளிர் அணியின் தலைவராக இருந்தபோதிலும், அந்தக் காலம் தொட்டு நான் புகைவண்டியில் மதுரைக்குச் செல்கிறேன் என்றால், திண்டுக்கல் புகைவண்டி நிலையத்தில் இருபது மகளிரோடு கூடி நின்றுகொண்டு, “கலைஞர் வாழ்க” என்ற குரலை அந்தப் புகைவண்டி நிலையம் முழுவதும் கேட்கக்கூடிய அளவிற்கு எதிரொலிக்கும் நாள் முதல் நான் அறிவேன். பாசக்காரத் தங்கை! அந்தக் கருத்தரங்கில் தம்பி துரைமுருகன், நாடாளுமன்ற கழகக் குழுத் தலைவர் தம்பி டி.ஆர். பாலு, மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி, தம்பி கம்பம் செல்வேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு அருமையாக உரையாற்றினர்.
ஜூன் 2ஆம் தேதியன்று நான் எழுதிய “நெஞ்சுக்கு நீதி”யின் 5ஆம் பாகம் நூலும், “சிறுகதைப் பூங்கா” நூலும் வெளியீட்டு விழா. ஒவ்வொரு ஆண்டு எனது பிறந்தநாள் விழாவிலும் முன்னின்று பங்கேற்றுச் சிறப்பிக்கும் பொதுச் செயலாளர் பேராசிரியர், உடல் நலமின்றி இருப்பதால் நான் 2ஆம் தேதி மாலையில் இந்த நிகழ்ச்சிக்குச் செல்வதற்கு முன்பு அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றேன். இந்த விழாவில் நீதியரசர் மோகன் தலைமை தாங்கி, நூல்களை வெளியிட்டு என்மீது அவருக்குள்ள பாசத்தை அங்கே குற்றால அருவியெனக் கொட்டினார். முதல் பிரதியைப் பெற்றுக்கொண்ட நமது முனைவர் நன்னன் அவர்களோ உரிமையுடனும், உணர்வுடனும் கருத்துகளைப் பொழிந்தார். கவிப்பேரரசு வைரமுத்து அவர்களோ, அந்த நூல்களின் பெருமையை அவருக்கே உள்ள சிறப்போடு வியந்து போற்றினார். மனுஷ்யபுத்திரன் அவர்களின் கருத்தினை நான் ஏடுகளின் வாயிலாகவும், தொலைக்காட்சிகளின் வாயிலாகவும் தான் கேட்டிருக்கிறேன் என்ற போதிலும், நேரில் அன்றுதான் கேட்டேன். ஓர் ஆழமான ஆய்வுரையை நீண்ட நாள் சிந்தித்துக் கட்டுரையாக யாத்து, அதனைப் படித்துக் காட்டுவது போல, எந்தக் குறிப்பும் கையிலே இல்லாமல் அங்கே தொகுத்தளித்தார். வரவேற்புரை ஆற்றிய தம்பி துரைமுருகனோ, என் தம்பி என்பதை மீண்டும் ஒரு முறை அனைவரும் எழுச்சிகொள்ளும்வண்ணம் அங்கே நிரூபித்துக் காட்டினார்.
ஜூன் 3; அன்று காலை 5 மணி முதல் அன்றிரவு 12 மணியளவில் படுக்கச் செல்கின்ற வரையில் தமிழ் மக்கள் என் மீது பெய்த அன்பு மழை இருக்கிறதே; அதற்கு நான் என்ன கைமாறு எப்படிச் செய்யப் போகிறேன்? அண்ணா அறிவாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும்தான் பிறந்த நாளில் கழகத் தோழர்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் இந்த ஆண்டு எப்படி இவ்வளவு கூட்டம்? அண்ணா அறிவாலயத்திற்குள் நுழையும் கண்ணாடிக் கதவு தூள் தூளாகி விட்டது. முதல் நாள் இரவு அறிவாலய நண்பர்கள், கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக அமைக்கிறோம் என்று அழகாக “சாரம்” கட்டி வைத்திருந்தார்கள். அத்தனையும் மறுநாள் காலையில் மக்கள் கூட்டத்திற்கிடையே முறிந்து விட்டது. இடையில் ஒரு முறை கூட்டத்தினர் என் மீது சாய்ந்து விடக்கூடிய நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தில் பக்கத்தில் இருந்த அறைக்குள் அவசர அவசரமாகச் சென்று விட்டோம்!
ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்திலே தான் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம்! வேறு இடங்களிலே நடத்தினால் காவல் துறையினரிடம் அனுமதி பெறுவதில் சிக்கல் என்பதால் அங்கே கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மிகப் பெரிய திடல். அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர், தம்பி ஜெ. அன்பழகன் பற்றியும், அவரது தலைமையில் பணியாற்றிய கழக உடன்பிறப்புக்களைப் பற்றியும் நான் அவசியம் குறிப்பிட வேண்டும். அந்தப் பொதுக் கூட்டத்திலேயே குறிப்பிட வேண்டுமென்று எண்ணியிருந்தேன். அண்ணா அறிவாலயத்தையே அப்படியே பெயர்த்து எடுத்து அங்கே கொண்டு போய் நிறுத்திவிட்டார்களோ என்று ஆச்சரியம் கொள்கின்ற அளவிற்குச் செய்திருந்தார்கள். தென்சென்னை மாவட்டக் கழகச் செயலாளருக்கு என் மீது அப்படி ஒரு “பக்தி”! கடந்த ஆண்டு என்னுடைய பிறந்த நாள் விழா கூட்டத்தை ஏற்பாடு செய்தபோது, கோபாலபுரத்தில் என் இல்லத்திலே நான் அமர்ந்து உரையாற்றுவதைப் போலவே ஏற்பாடு செய்திருந்தார். வெளியூர்களில் தொலைக்காட்சி மூலமாக அந்த மேடையைப் பார்த்தவர்கள், கோபாலபுரத்தில் வீட்டில் இருந்தவாறே நான் பேசுவதைப் போல உணர்ந்தார்கள். ஜெ. அன்பழகனின் தந்தை பழக்கடை ஜெயராமன், இப்படித்தான் மேடைகளைப் புதுமை குலுங்க நிர்மாணிப்பார். ஒரு முறை பழங்களைக் கொண்டே மேடையை நிர்மாணித்திருந்தார். அவருடைய செல்வன் ஜெ. அன்பழகன் தந்தையை மிஞ்சும் மகனாக இந்தப் பொதுக் கூட்ட மேடையை நிர்மாணித்து விட்டார். அறிவாலயத்திற்குள் எப்படி அறைகள் இருக்குமோ, அதுபோலவே இங்கேயும் அறைகளை அசலைப் போலவே அமைத்து, என்னுடைய அறையிலே அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த தலைவர்களையெல்லாம் அழைத்து வந்து காட்டினார். அண்ணா அறிவாலய வாசலில் இருப்பதைப் போலவே அண்ணா சிலை ஒன்றையே அங்கே கொண்டு வந்து வைத்திருந்தார். உயரமாக மேடை அமைத்து, அங்கே கூடியிருந்த மக்களை அல்ல, மக்கள் கடலைத்தான் நாங்கள் பார்த்தோம்.
வீட்டில் இருந்து கிளம்பி, பொதுக்கூட்ட மேடைக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம்தான் இருக்கும். அந்தத் தூரத்தில், வரும் வழியில் ஒன்பது இடத்தில் வரவேற்பு என்ற பெயரால், ஒவ்வொரு பகுதிக் கழகத்தின் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாலை 6.30 மணிக்குப் புறப்பட்ட நாங்கள் இரவு 8 மணிக்குத் தான் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தை, அல்ல அல்ல, அங்கே உருவாக்கப்பட்டிருந்த புதிய அண்ணா அறிவாலயத்தை அடைய முடிந்தது. விழா ஏற்பாடுகளையும், அண்ணா அறிவாலய ஏற்பாடுகளையும் கட்டுக்கோப்பாக செய்துமுடித்த கழகப் பொருளாளர் தம்பி தளபதி; அண்ணா அவர்கள் இருந்தபோது நிகழ்ச்சிகளை ஏற்பாடுகளைச் செய்த என்னைத்தான் நினைவூட்டினார்.
பொதுக்கூட்ட மேடையில் தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர், என்னுடைய அருமை இளவல் வீரமணியார், விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தம்பி தொல். திருமாவளவன், பேராசிரியர் காதர்மொய்தீன், அருளாளர் ஆர்.எம்.வீ., பேராசிரியர் தம்பி சுப.வீரபாண்டியன் ஆகியோரும் என்னை வாழ்த்தியும், பாராட்டியும் பேசிய கருத்துக்கள் என் காதுகளில் இன்னமும் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையே 2ஆம் தேதியன்று இளைஞர் அணியின் சார்பாக, முன்னாள் மேயர் தம்பி மா. சுப்பிரமணியம், “காமராஜர் அரங்கத்தில்” முத்தமிழ்க் கருத்தரங்கம் ஒன்றினைக் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், திண்டுக்கல் லியோனி, வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோரைக் கொண்டு மிகச்சிறப்பாக நடத்தினார். பேசியவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கே உரிய சிறப்போடு மற்றவர்களை வெல்லுகின்ற அளவில் பேசினார்கள். மா. சுப்பிரமணியம் தொடர்ந்து பல நாட்களுக்கு நகரின் பல்வேறு பகுதிகளில் என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கிறார். அவர் ஏற்பாடு செய்திருந்த அந்த முதல் நிகழ்ச்சியே, முழு நிகழ்ச்சியாக, முத்தாய்ப்பு நிகழ்ச்சியாகக் காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.
விழாக்கள் இன்னும் முடிந்தபாடில்லை. மாவட்டங்கள் எல்லாம் 100 நிகழ்ச்சிகள் என்றும், மாதம் முழுவதும் நிகழ்ச்சிகள் என்றும், தொடர் நிகழ்ச்சிகள் என்றும் போட்டிபோட்டுக் கொண்டு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்பதுதான் இரண்டு மூன்று நாட்களாக என்னைத் தூங்க விடாமல் என் மனதிற்குள் எழுகின்ற கேள்வியாகும். இந்த அளவிற்கு என்னிடம் பாசத்தையும், அன்பையும் கொட்டுகிறார்களே, இவர்களுக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்? என் மனதாலும் செயலாலும் தொடர்ந்து உழைப்பேன், உழைப்பேன், தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன்!
அன்புள்ள, மு.க. 6-6-2013
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).
அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு
தொகுதி 49 PDF ↗