உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
← தொகுதி 49

தொகுதி 49 · கடிதம் 3764

சாதனைப் பட்டியலில் விட்டுப் போனவை!

2013-06-01

உடன்பிறப்பே,

29-5-2013 தேதிய “தினமலர்” நாளிதழில் வந்துள்ள ஒரு செய்திக்குத் தலைப்பு - “மதுரையில் மே மாதம் - கொலை மாதம்! மூன்று நாளில் ஐந்து கொலைகள் - நேற்றைய லிஸ்ட் ரவுடி “சங்கு அறுப்பு” - என்பதாகும். அந்தத் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “மதுரையில் மே 26ம் தேதி முதல் அடுத்தடுத்து தினமும் கொலைகள் நடந்து வருகின்றன. நேற்று மாலை, குடியிருப்புகள் மிகுந்த பகுதியில், ரவுடியை ஓட ஓட விரட்டிக் கொன்ற கும்பல், தொண்டைக் குழி “சங்கை” அறுத்து எடுத்துக்கொண்டு தப்பியது. மதுரையில் இந்த ஆண்டு ஜனவரி 31இல் தி.மு.க. செயற்குழு உறுப்பினர் “பொட்டு” சுரேஷில் ஆரம்பித்த கொலை, மாதந்தோறும் சராசரியாக மூன்று கொலைகள்வரை அரங்கேறி வருகின்றன. ஏப்ரல் 3ஆம் தேதி தனிச்சியம் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையக் காவலாளி செல்வம், ஏப்ரல் 21இல் மாடக்குளம் கூலித் தொழிலாளி முருகேசன், மே 18ல் முடக்காத்தான் குணவதி ஆகியோர் கொல்லப்பட்டனர். இவ்வழக்குகளில் இதுவரை “க்ளூ” கிடைக்கவில்லை. இந்த ஆண்டு ஜனவரியில் 3 பேரும், பிப்ரவரியில் 4 பேரும், மார்ச்சில் 5 பேரும், ஏப்ரலில் 4 பேரும், மே மாதத்தில் நேற்று முன்தினம்வரை 6 பேரும் கொலை செய்யப்பட்டனர். இதில் மே 26 முதல் நேற்று மாலைவரை அடுத்தடுத்து, 4 பேர் கொல்லப்பட்டனர்.” எப்படி அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு அமைதி?

மதுரையில் பொட்டு சுரேஷ் கொலை செய்யப்பட்டு நான்கு மாதங்கள் ஆகின்றன. முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் அட்டாக் பாண்டியை; சர்வவல்லமை படைத்த தமிழகக் காவல்துறை தேடுகிறது, தேடுகிறது, தேடிக்கொண்டே இருக்கிறது. அவருடைய மனைவி மற்றும் மாமனாரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. ஆனால் அவரைப் பிடிக்க முடியவில்லை. ஆனால் “குமுதம் ரிப்போர்ட்டர்” பத்திரிகை அதே அட்டாக் பாண்டியிடம் பேட்டி பெற்று அதனை அவர்களுடைய இதழிலே வெளியிட்டுள்ளது. எப்படி நமது ஜெயா ஆட்சி? இதற்கிடையே சசிகலாவின் அண்ணன் மகன் வெங்கடேஷ் என்பவர் திடீரென்று இந்த ஆட்சியில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் சிறையிலே கண்ணீர் வடிப்பதாகவும் பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. இந்த ஆட்சியில் யார் எப்போது கைது செய்யப்படுவார்கள், எப்போது அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பதற்கான காரணங்களைக் கேட்கக் கூடாது. சசிகலாவின் அண்ணன் மகன் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். கடந்த ஆண்டு சசிகலாவின் கணவரே கைது செய்யப்பட்டுச் சிறையிலே அடைக்கப்பட்டார். அப்போது அவர் ஆனந்தவிகடன் வார இதழுக்கு அளித்த பேட்டியில், “நில அபகரிப்பு செய்ததாகச் சொல்லி என்னைக் கைது செய்து 82 நாட்கள் சிறையில் அடைத்தார்கள். மொத்தம் ஆறு வழக்குகள் போட்டார்கள். இத்தனை மாதங்கள் ஆகியும் இவற்றில் எந்த வழக்குக்கும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லையே, ஏன்? ஜெயலலிதாவை முதன் முதலில் முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்ததே நான்தான். எங்களால்தான் இரட்டை இலைச் சின்னம் கிடைத்தது. எங்களால்தான் தலைமைக் கழகம் மீட்கப்பட்டது. எங்களால்தான் 1991ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி கலைக்கப்படும் அரசியல் சூழ்நிலை உருவாக்கப்பட்டது. “நான் ராஜினாமா செய்யப் போகிறேன்” என்று ஜெயலலிதா எழுதி வைத்திருந்த கடிதத்தை நான் கொண்டு போய்ப் பதுக்கி வைத்ததால்தான் அவரால் இன்றுவரை அரசியல் செய்ய முடிகிறது. இதை ஜெயலலிதாவால் மறுக்க முடியுமா?” - என்றெல்லாம் கேட்டிருந்தார். அதற்கே இந்த ஆட்சியினரோ முதல்வரோ பதிலளிக்க வில்லையே? முதலமைச்சர் நினைத்தால் சசிகலா மீதும், அவருடைய கணவர் மீதும், அவர்களுக்கு வேண்டிய ராவணன், திவாகரன் போன்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பார்! அடுக்கடுக்கான வழக்குகளைப் பதிவு செய்வார். பிறகு அந்த வழக்கிலே குற்றம் சாட்டப்பட்ட ராவணனைக் கொடநாட்டிற்கே அழைத்துப் பேசுகிறார் என்றால் இவைகள் எல்லாம் யாரை ஏமாற்றுகின்ற செயல்கள்? அவர்கள் மீதெல்லாம் போடப்பட்ட வழக்குகள் என்னவாயிற்று? நடராஜன் மீது புகார் என்றார்கள். பிறகு கொடுக்கப்பட்ட புகார்கள் திரும்பப் பெறப்பட்டன என்கிறார்கள். அப்படியென்றால் பொய்ப் புகார் கொடுத்தவர்கள் மீது என்ன நடவடிக்கை? அந்தப் புகார் பொய்யானதா, மெய்யானதா? என்று காவல் துறை முறையாக முதல் நிலை விசாரணை நடத்தாதது ஏன்? காவல் துறையினரின் அந்தத் தவறான நடவடிக்கைக்குக் காரணம் என்ன? அந்த வழக்கிலே சம்பந்தப்பட்டவர் சிறையிலிருந்து வெளியே வந்ததும், அவரை “என்கவுண்டர்” செய்ய முயற்சி நடைபெற்றதாக இந்த ஆட்சியினர் மீது குற்றம் சாட்டினாரே; அதற்கு இந்த அரசின் பதில்கள் என்ன? சசிகலாவின் கணவர் நடராசன் சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு 12-5-2012 அன்று கொடுத்த பேட்டியில் என்ன சொன்னார்? “என் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் பொய் வழக்குகள். என் மீது போடப்பட்ட ஆறு வழக்கில் 2 பேர் தற்போது வாபஸ் பெற்றுள்ளனர். நில அபகரிப்புச் சட்டத்தை என் மீது மோசடியாகப் பயன்படுத்தி உள்ளனர். இதற்காகத் தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி., திருச்சி ஐ.ஜி., டி.ஐ.ஜி., உள்ளிட்ட அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட்டில் 3 ரிட் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளோம். ஜெ. வீட்டில் இருந்து நான் வெளியேறி 20 ஆண்டுகள் ஆகிறது. என்னைக் கட்சியில் இருந்து நீக்கியதாக அறிக்கை வெளியிட்டார். நான் கட்சியில் உறுப்பினராகவே இல்லை. அப்படி இருந்ததாக அவர்களால் நிரூபிக்க முடியுமா? அவர்கள் என்ன செய்தாலும் அமைதி யாக இருந்தேன். இனி அப்படி இருக்க மாட்டேன். நேரடியாக அரசியலில் இறங்குவேன். 2011 தேர்தல் அறிக்கையைத் தயாரித்துக் கொடுத்ததே நான்தான். பொன்ராஜ், பன்னீர்செல்வம் ஐ.ஏ.எஸ்., ஆகியோர்தான் லேப் டாப் உள்ளிட்ட இலவசங்களை சேர்த்தோம். அந்த அறிக்கையின் முதல் பிரதி என்கிட்டேதான் இருக்கு. சசிகலா மீண்டும் சேர்வதற்கு முன்னாடி அவர் பெயரில் வந்த அறிக்கை, அவர் கொடுத்த அறிக்கை அல்ல. என் மனைவிக்கு அறிக்கை தயாரிக்கத் தெரியாது. 3 முறை முதல்வராக இருப்பவராலேயே ஒரு அறிக்கை தயாரிக்க முடியாது. என்னை மாதிரி ஒரு இளிச்சவாயன்தான் ரெடி பண்ணித்தரணும். அப்படிச் செய்தாலும் ஒரு குறிப்புகூட இல்லாமல் பேசத் தெரியாது. என்னை நில அபகரிப்பில் கைது செஞ்சீங்களே, எத்தனை ஏக்கரை மீட்டீங்க? சார்ஜ் ஷீட்டாவது போட முடியுமா? சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு 5 மணி நேரத்தில் காரில் போயிடலாம். என்னைக் கைது செய்து 12 மணி நேரம் அலைக் கழிச்சாங்க. டி.ஐ.ஜி. அமல்ராஜ் தஞ்சாவூர் பக்கத்தில் செங்கிப்பட்டியில் ஒரு நடுக்காட்டில் வண்டியை நிறுத்தி வைத்துவிட்டார். எதற்கு? என்கவுண்டரில் என்னைச் சாகடிக்கவா? திருச்சி ஐ.ஜி. அலெக்சாண்டர் மோகன் தஞ்சாவூரில் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் உட்கார்ந்துக்கிட்டு எல்லா இன்ஸ்பெக்டர்களையும் கூப்பிட்டு என் மேலே ஏதாவது ஒரு கேஸ் போட்டுட்டு வாங்கன்னு உத்தரவு போடுறாராம்” இப்படியெல்லாம் நடராசன் பேட்டி கொடுத்து ஏடுகளில் எல்லாம் வெளிவந்ததே? இந்த அ.தி.மு.க. அரசு இதற்கு

என்ன பதில் சொல்லியது? எதுவுமே சொல்லவில்லையே? அப்படியென்றால் அந்தப் பேட்டியிலே சொல்லப்பட்டவைகள் எல்லாம் உண்மைதானா?

இந்தத் தொடரில்தான் தற்போது வெங்கடேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதையும் பாராட்டி தலையங்கம் எழுத தமிழ்நாட்டில் சில ஏடுகள் தயாராகவே இருக்கின்றன என்பது தான் வேதனையினும் வேதனை!

இதற்கிடையே சசிகலாவின் அக்காள் மகன் பாஸ் என்கிற பாஸ்கரன் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக ஒரு செய்தி பரவி, அந்தச் செய்தியை மறுத்து அவரே ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அந்தப் பேட்டியில், அவர் தீவிர எம்.ஜி.ஆர். பக்தன் என்றும், 1995இல் ஒரு டி.வி.யைத் திறம்பட நடத்தி வந்ததாகவும், அரசியல் சூழ்ச்சியால் வெளியேற்றப்பட்டு, பாளையங்கோட்டை சிறையில் 8 மாதம் இருந்ததாகவும், தற்போது ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருப்பதாகவும், ஆனால் அந்தப் படத்தை வெளியிடவிடாமல் பயமுறுத்தப் படுவதாகவும் தெரிவித்திருக்கிறார். இவர் யார் என்றால் சசிகலாவின் அக்காள் மகன். கைது செய்யப்பட்டுள்ள வெங்கடேஷ், சசிகலாவின் அண்ணன் மகன். சிறையில் வெளியே வந்து இந்த அரசைக் குற்றஞ்சாட்டிப் பேட்டி அளித்திருப்பவரோ, சசிகலாவின் கணவர். ஆனால் இந்த நிலையில் முதலமைச்சர் ஜெயலலிதாவோடு நேற்றையதினம் திருவரங்கம் கோவிலுக்கு உடன் சென்றிருப்பவர் யார் என்றால் சாட்சாத் சசிகலாதான்! இதையெல்லாம் பார்ப்பவர் களுக்கு இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது? நினைத்தால் கைது, நினைத்தால் விடுதலை என்றால் ஏதாவது சட்ட விதி முறைப்படி நடவடிக்கைகள் நடக்கிறதா? யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம் என்றால், அதைப்பற்றியெல்லாம் விமர்சிக்க வேண்டிய பத்திரிகைகளோ தங்களுக்கு முழுப் பக்க விளம்பரங்கள் கிடைத்தால் போதும் என்ற எண்ணத்தோடு வாய் மூடி மெளனியாகக் கிடக்கிறார்கள். ஏன், ஒரு சில கட்சிகளே, அதே நினைப்போடுதான் செயல்படுகின்றன.

இந்த மே மாதத்தில் மட்டும் தமிழ்நாட்டில் நடைபெற்ற கொலைகள், அதுவும் ஏடுகளில் வெளிவந்த கொலைகள் மாத்திரம் எத்தனை தெரியுமா?

குடியாத்தத்தில் நகைக்கடை ஊழியர் கொலை - ஒன்றரை லட்சம் ரூபாய் கொள்ளை.

பனப்பாக்கத்தில் தந்தையை அடித்துக் கொன்ற மகன்.

கூடுவாஞ்சேரி அருகே வாலிபர் சுபாஷ் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை.

கொடுங்கையூரில் ஆட்டோ டிரைவர் சரவணன் வெட்டிக் கொலை.

சென்னை புதுப்பேட்டையில் வேன் டிரைவர் ரமேஷ் கொலை. சோழவரம் அருகே தலை துண்டித்து வாலிபர் கொலை. திருப்பெரும்புதூர் அருகே புரட்சி பாரதம் கட்சிப் பிரமுகர் ராமு கழுத்தை அறுத்துக் கொலை. தாராபுரத்தில் காதல் மனைவியைக் கொன்ற வாலிபர் ரமேஷ். ஜெயங்கொண்டம் அருகே மகளின் கள்ளக்காதலன் பழனிச்சாமி கொலை. திருப்பூரில் மின்சாரம் பாய்ச்சி மனைவி செல்வி கொலை செங்குன்றம் அருகே வாலிபர் எரித்துக் கொலை. கூடுவாஞ்சேரி அருகே கட்டிடத் தொழிலாளி சம்பத் அடித்துக் கொலை. பூவிருந்தவல்லி அருகே கழுத்தை இறுக்கி வாலிபர் கொலை. கோடம்பாக்கத்தில் லட்சுமி என்ற பெண் கொலை. சென்னை ஆதம்பாக்கத்தில் டிராவல்ஸ் நடத்திய பெண் உஷாராணி கொலை. புது வண்ணாரப்பேட்டையில் ரவுடி சுரேஷ் வெட்டிக் கொலை. மாதவரம் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்ற வியாபாரி கோபால் அடித்துக் கொலை. கடையநல்லூர் அருகே மாணவர் மதன் வகுப்பறையில் கொலை. சென்னை அருகே தி.மு.க. பஞ்சாயத்துத் தலைவர் பாலு குண்டு வீசிக் கொலை. வானூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் மூர்த்தி அடித்துக் கொலை. பூவிருந்தவல்லி அருகே குடிபோதையில் மனைவியை அடித்துக் கொன்ற கணவர். சங்கராபுரம் மாஜி சேர்மன் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை. சங்கராபுரத்தில் தி.மு.க. செயலாளர் முனுசாமி வெட்டிக் கொலை. தண்டையார்பேட்டையில் துண்டு துண்டாக வெட்டி வாலிபர் படுகொலை.

குரோம்பேட்டை அருகே வீட்டுக்குள் கட்டிப் போட்டு முன்னாள் கவுன்சிலர் குப்புசாமி படுகொலை.

வளசரவாக்கத்தில் சொத்துத் தகராறில் தந்தை பரமசிவம் கொலை.

ராஜபாளையத்தில் ஒன்றரைக் கோடி ரூபாய்க்காகத் தொழில் அதிபர் மகன் பிரேம் குமார் கொன்று புதைப்பு.

அரியலூரில் இரண்டு வயது குழந்தை கடத்திக் கொலை.

புரசைவாக்கத்தில் மதுக்கடை பார் முன்பு வாலிபர் படுகொலை

கொருக்குப்பேட்டையில் புது மாப்பிள்ளை கமல்ராஜ் வெட்டிப் படுகொலை.

நாகர்கோவிலில் திருமணம் செய்த பெண் மாமனாருடன் வெட்டிக் கொலை.

சோழவரம் அருகே மது குடிக்கும் தகராறில் பெயிண்டர் விமல்பிரபு படுகொலை.

செங்குன்றம் அருகே பரோலில் வந்த கைதி முத்துபிரகாஷ் வெட்டிக் கொலை.

பல்லடம் அருகே மணி என்பவர் சாமாரி வெட்டிக் கொலை. செம்மஞ்சேரியில் வாலிபர் சுரேஷ் கொலை.

சோழிங்கநல்லூர் அருகே பூட்டிய வீட்டில் பெயிண்டர் சுரேஷ் பிணம்.

சங்கராபுரம் அருகே விடுதலைச் சிறுத்தைப் பிரமுகர் விசுவநாதன் வெட்டிக் கொலை.

மறைமலைநகர் அருகே நள்ளிரவில் வாலிபர் முருகன் வெட்டிக் கொலை.

அருப்புக்கோட்டையில் சொக்கலிங்கம் குத்திக் கொலை

சேரன்மகாதேவியில் தொழிலாளி இசக்கி முத்து பாண்டியன் படுகொலை.

சேலையூர் அருகே ஆட்டோ டிரைவர் ராஜேஷ் தலையில் அம்மிக்கல்லைப் போட்டுக் கொலை...

ராணிப்பேட்டை அருகே சிலோன் போகன் படுகொலை. சேலம் ரியல் எஸ்டேட் அதிபர் ரங்கநாதன் துண்டு துண்டாக

வெட்டிக் கொலை சென்னையில் மாநகராட்சி ஊழியர் வீர கொலை. சென்னையில் டெய்லர் முனியாண்டி படுகொலை. செங்கோட்டை அருகே அ.தி.மு.க. நிர்வாகி முத்தையா வெட்டிக்

கொலை வேலூர் காவல் நிலையம் அருகே இளம்பெண் வெட்டிக் கொலை. சென்னையில் பழ வியாபாரி மணி வெட்டிக் கொலை சூளையில் வியாபாரம் செய்தபோது வேலு வெட்டிக் கொலை. வியாசர்பாடியில் பெண் தகராறில் வாலிபர் ராஜா படுகொலை. வானூர் கோயில் திருவிழாத் தகராறில் தே.மு.தி.க. பிரமுகர் பாஸ்கர் வெட்டிக் கொலை... ஒரே மாதத்தில் கொலைகள் - அ.தி.மு.க. ஆட்சியில் இரண்டாண்டு சாதனைப் பட்டியல்களில் இவைகளையெல்லாம் சேர்க்கலாமே? மனச்சாட்சி இல்லாத பத்திரிகைக்காரர்கள் இதற்கும் மெளனம் சாதிக்கலாமோ?

அன்புள்ள, மு.க. 01-06-2013

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 49 (சீதை பதிப்பகம், முதல் பதிப்பு, 2022).

அச்சு நூலுடன் ஒப்பிடுவதற்கான துணை இணைப்பு

தொகுதி 49 PDF ↗