உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
திரைக்கதை & வசனம்

திரும்பிப்பார்!

காட்சி 68 · 68 / 93

பரந்தாமன் : ஆ !

பூமாலை: கூண்டிலே நிறுத்துகிறேன். குற்றவாளி நீதான் என்று கூறுகிறேன். ஊரார் நகைக்கட்டும். ஊதாரித் தலைவனே என்று கேலி செய்யட்டும்!

பரந்தாமன் : அக்கா வேண்டாம்!

பூமாலை : அப்படிச் செய்தாலாவது நீ திருந்தமாட்டாயா? அதையும் செய்து பார்க்கிறேன். உன்னைத் தம்பியாகப் பெற்றதற்கு வேறென்னதான் எனக்கு சுகம் !

பரந்தாமன் : என்னைக் காட்டிக் கொடுப்பதுதான் உனக்குச் சுகமென்றால், நான் கைதியாக நிற்பதுதான் உனக்குக் களிப்பு தரும் காட்சி என்றால், உன்னை நம்பி என்னை ஒப்புவித்து விட்டுப் போனார்களே - அந்த அம்மா அப்பாவின் ஆத்மாக்கள் நீ செய்யும் அந்தப் புனித காரியத்தால்தான் சாந்தியடையுமென்றால் இப்போதே போ ! போலீஸாரிடம் சொல்! பொதுமக்களிடம் பறை சாற்று ! தம்பியைக் காட்டிக் கொடு! போ அக்கா போ! அம்மாவும் அப்பாவும் உனக்கு இட்ட கட்டளை அதுதானே !

அதை நிறை வேற்று போ!

பூமாலை: பரந்தாமா! (அழுதல்) பரந்தாமா இனிமேலாவது நீ திருந்தி நடக்கிறாயா?

பரந்தாமன் : நான் என்ன தவறு செய்கிறேன் திருந்தி நடக்க.

(போகிறான். பூமாலை கண்ணீருடன் நிற்கிறாள்.)

★

[டைப்ரைட்டிங் ஆபீஸ்

[அங்கே பல கிளர்க்குகள். குமுதாவும் டைப் செய்து கொண்டிருக்கிறாள். எல்லா மேஜையிடமும் கவனித்து வந்த மேனேஜர் குமுதாவுக்கு பின்புறம்

வந்து நிற்கிறார்.குமுதா பாண்டியன் பாண்டியன் என்று அதே வார்த்தையை டைப் செய்து கொண்டிருக்கிறாள்]

மேனேஜர்: ரொம்ப ஒழுங்காயிருக்கு டைப் பண்ற லக்ஷணம்!

(குமுதா திடுக்கிட்டு எழுதல்)

முதல் பதிப்பு: 1953