உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
திரைக்கதை & வசனம்

திரும்பிப்பார்!

காட்சி 30 · 30 / 93

(ஒருவனிடம்) ஏய்...நீ ஆமோதிடா!

ஒருவன்: (நடுக்கமுடன்) பரந்தாமன் தலைமை வகிப்பதை நான் ஆ ...ஆ ..மோதிக்கிறேன்.

கருடன்: நல்லா மோதிக்கிட்டீங்க!

(மாலை போடுதல் - கைதட்டல். பரந்தாமன் மாலையைக் கழற்றாமலே பேசுகிறான்)

பரந்தாமன் : தலைவர் அவர்களே ! (ஜனங்கள் சிரிப்பது )ஓகோ, நான்தான் தலைவரோ. மன்னிக்கவும். காடு வெட்டி கழனி திருத்தி காலையிலே மாடோட்டி கலப்பை யெடுத்துச் சென்றால் மாலையிலே வீடுதிரும்பும் மனமொடிந்த பாட்டாளியும், ரத்தத்தை வியர்வைக்குளமாக்கி,சித்தம்சோர்ந்து நித்த நித்தம் உழைக்கும் பஞ்சாலைத் தொழிலாளியும், புத்தம் புதிய வாழ்வு பெறவேண்டுமென்பதே என் நோக்கம் ... ஏழைகள் பசி என்று கூறினால் என் இருதயம் வெடித்துவிடும் போலிருக்கிறது.

அவர்கள் கண்ணீர்விட்டால் என் ரத்தமெல்லாம் கொதிக்கிறது.நம் கோரிக்கைகளை ஏற்க மறுக்கும் அவர்களின் கொட்டமடக்க - உடனே வேலைநிறுத்தம். ஒட்டுமொத்தக் கூட்டாகப் புறப்பட வேண்டும் / வெற்றி நமதே! வெற்றி நமதே !

★

(கரகோஷம். புண்யகோடிக்கு ஒரே பூரிப்பு)

[பூமாலை பிள்ளைகளுடன்!]

பூமாலை: ஜீவஹிம்சை கூடாதென்றவர்கள் இருவரைச் சொல்லு.

பையன் : புத்தர், காந்தி

பூமாலை: முகுந்தா! மூவேந்தர் யார்?

பையன் : சேரன், சோழன்.... (திணறுவது)

பூமாலை : உம். சொல்லு

பாண்டியன்

முதல் பதிப்பு: 1953