உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
பராசக்தி/காட்சி 9
திரைக்கதை & வசனம்

பராசக்தி

காட்சி 9 · 9 / 46

டாக் : ஞானசேகரனு? அப்படி ஒருவர் இங்கே இல்லையே.

சந் : ஆ! அப்படியானால் எங்கே இருப்பார்கள்.

டாக் : அந்தக் குண்டு வீச்சிலே மீதி இருப்பவர்கள் இவ்வளவு பேர்தான். இதைத்தவிர மற்றவர்களெல்லாம் செத்துப் போயிட்டாங்க.

சந் : ஆ! ஞானசேகரா! நீ இறந்தா போனாய்? சரஸ்வதி ஊருக்குப் போனவுடன் ஞானசேகரன் எங்கேன்னு அப்பா கேட்டாரே—கல்யாணிக்கு என்ன பதில் சொல்வேன்.

சரஸ் : டாக்டர்! அவருக்கு கொஞ்சம் சொல்லுங்க.

டாக் : மிஸ்டர் சந்திரசேகரன் மனதைக் குழப்பிக்கிடாதீங்க அமைதியாக இருங்க.

(மதுரையில் கடன்காரர்கள் மாணிக்கம் பிள்ளையின் வீட்டை ஏலமிடுகின்றனர்)

விளம்பரம் : இதனால் யாவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்; மாசிக்கோணார் தெரு, மாணிக்கம் பிள்ளையின் வீட்டாகிய இந்த ஆறும் நம்பர் வீட்டை நாளை பகல் மூன்று மணிக்கு பகிரங்க ஏலத்தில் விற்கப்படும், இது கோர்ட்டார் உத்தரவு.

ஒரு : டேய் தம்பி! பார்ரா இந்த பரிதாபத்தை...இரங்கூனிலே வில்லுக்கொத்து போல மூணு பிள்ளைகள் செல்வச் சிறப்போடு இருக்காங்க என்ற தைரியத்திலே இந்த அப்பாவி மாணிக்கம் பிள்ளை கடன் வாங்கி மகள் கல்யாணத்தை ஆடம்பரமாக நடத்திட்டு அந்த மனுஷனும் மண்டையைப் போட்டுட்டான். இரங்கூனில் ஜப்பான் குண்டு வீச்சிலே இந்த பசங்கள் என்ன ஆனுங்களோ? அட அதுதான் போகட்டும் இந்தப் பொண்ணு கல்யாணி கையிலே இருந்த பணம், நகை நட்டையெல்லாம் விற்றுக்கொடுத்துக்கூட ஒண்டி இருந்த வீட்டுக்கே ஆபத்து வந்திரிச்சி...ம் இன்னும் என்ன நடக்கப் போகுதோ?

(கல்யாணி கண்ணீர் சிந்திய முகத்துடன் கையிலே குழந்தையை வைத்துக்கொண்டு வாசலில் உட்கார்ந்து பாடுகிறாள்)

பூமாலே நீயே புழுதி மண்மேலே வீணே வந்தேன் தவழ்ந்தாய்? (பூமாலே பாராயோ என் பன்னீர் செல்வமே சீரோடு வாழ்ந்தோம் வேரோடு சாய்ந்தோம் ராஜாங்கம் போலே வாழ்ந்த வாழ்வும் வீழ்ந்ததே பாரான எந்தன் வயிற்றில் பிறந்தாய் ராஜா? நீயேன் பிறந்தாய் (பூமாலே பறவை வீட்டில் நீ பிறந்திருந்தாலும் பசி நீங்கவே உணவும் பறந்தோடி வந்திடும் கோடானு கோடி ஏழை மாந்தர் வாழும் சீமான்கள் வாழும் நாட்டில் பிறந்தாய்—ராஜா நீயேன் பிறந்தாய்?

(பூமாலே

(பாடல் முடிந்ததும் பார்வதி வருகிறாள்)

பார் : கல்யாணி எப்ப பார்த்தாலும் இப்படிக் கண்ணீரும் கம்பலையுமாக இருந்தால் என்ன ஆகும்? நடக்க வேண்டியதைப் பாரு.

கல்யா : இந்தக் குழந்தையை வளர்க்க யாராவது முன் வந்தால் நடக்க வேண்டியதுதானே நடக்கும்.

பார் : குழந்தை என்ன செய்யும் பாவம்...

கல் : அக்கா குழந்தை ஒண்ணும் பாவமில்ல! இந்தக் குழந்தையை வறுமையிலே வளர்க்க முடியாததுதான் பெரிய பாவம்.

பார் : கல்யாணி! நான் சொல்வதைக் கேளு. ஊர்க் கோடியிலே எங்களுக்கு இருக்கும் காலி மனையிலே ஒரு வீடு ஒண்ணு கட்டிக்கோ ஒரு சாதாரண இட்லி கடை வைத்தால் வயிறு வளர்க்க முடியாமலா போகும்?