உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
பராசக்தி/காட்சி 42
திரைக்கதை & வசனம்

பராசக்தி

காட்சி 42 · 42 / 46

சேகர் : கல்யாணி! கல்யாணி! என் கல்யாணி ஏழை அவளுக்கு நல்ல சேலை கிடையாது ஒரே புடவை ஒட்டுத் துணி...அவளுக்கு வைர நெக்லஸ் கிடையாது அவள் கழுத்திலே கயிறுதான் இருக்கும்...அய்யோ அதுகூட கிடையாது அவள் விதவை.

சரஸ் : டாக்டர்

டாக் : பயப்படாதீங்க மூணுக்கொதிப்பு மருந்து கொடுத்தால் சரியாகப் போய்விடும்.

சேகர் : மருந்து! ஹா ஹா எனக்கா மருந்து எனக்கு வேண்டாம் ஏழைக்குப் பசிக்காமல் இருக்க ஏதாவது மருந்து இருந்தால் கொடுங்க டாக்டர் கொடுக்கமாட்டீரா? கொடுக்கமாட்டீரா? அதுக்கப்புறம் குழந்தைகளை ஆற்றிலே போட்டுவிடுவார்கள் டாக்டர் ஆற்றிலே போட்டு விடுவார்கள் என் கல்யாணியும் அப்படித்தான் செய்து விட்டாள் கல்யாணி! கல்யாணி!

(கோர்ட்டில் குணசேகரன்)

குண : நீதி மன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது புதுமையான மனிதர்களைக் கண்டிருக்கிறது ஆகவே இவ்வழக்கு விசித்திரமுமல்ல வழக்காடும் நான்புதுமையான மனிதனுமல்ல வாழ்க்கைப்பாதையிலே சர்வ சாதாரணமாக காணக்கூடிய ஜீவன் நான். கோவிலிலே குழப்பம் விளைவித்தேன் பூசாரியைத் தாக்கினேன் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்; நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேனென்று இல்லை!

நிச்சயமாக இல்லை! கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்

கோவில் கூடாது என்பதற்காக அல்ல கோவில் கொடியவரின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக பூசாரியைத் தாக்கினேன் அவன் பக்தனென்பதற்காக அல்ல பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக

[நடுவில் ஒரு வக்கீல் எழுந்திருக்கிறார்]

வந்தார்கள் பிரதி உபகாரமாக அவள் கடைக்கண் பார்வையைக் கேட்டனர். அதில் தீவிரமானவன் இந்தப் பூசாரி கல்யாணியின் கற்பை காணிக்கையாக கேட்டிருக்கிறான் பராசக்தியின் பெயரால் உலகமாதாவின் பெயரால் கல்யாணி உலகத்தில் புழுவாகத் துடித்தபடியாவது உயிரோடிருந்திருப்பாள் அவள் தற்கொலை செய்துகொள்ளத் துணிந்தது இந்த பூசாரிதான் தன் குழந்தையை இந்த இரக்கமற்ற உலகத்தில் விட்டுச் செல்ல அவள் விருப்பவில்லை தன் குழந்தை ஆதரவற்றுத் துடித்துச் சாவதைக்காண அவள் விருப்பவில்லை அவளே கொன்று விட்டாள்.

விருப்பமானவர்களைக் கொல்வது விந்தையல்ல உலக உத்தமர்காந்தி, அகிம்சாமூர்த்தி ஜீவகாருண்யசீலர் அவரே நோயால் துடித்துக்கொண்டிருந்த கன்றுக்குட்டியைக் கொன்றுவிடச் சொல்லியிருக்கிறார் அது கஷ்டப்படுவதைக் காணச் சகியாமல். அந்த முறையைத்தான் கையாண்டிருக்கிறாள் கல்யாணி, இது எப்படி குற்றமாகும்? வெளிநாட்டிலிருந்து திரும்பிய ஒரு தமிழனுக்கு வாழ்வுரிமையில்லா தமிழ் நாட்டில் பிறந்த பெண்ணுக்கு வாழ்வதற்கு தக்க பாதுகாப்பில்லை ஆனால் என் தங்கை கொஞ்சம் விட்டுக் கொடுத்திருந்தால் கோடீஸ்வரன் வீட்டுப்பள்ளியறையிலே ஒருநாள் மானத்தை விலை கூறியிருந்தால் மாளிகைவாசியின் மடியிலே ஒருநாள் இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்டுக்கே, இதைத்தானு இந்த நீதிமன்றம் விரும்புகிறது பகட்டு என் தங்கையை மிரட்டியது—பயந்து ஓடினாள் பணம் என் தங்கையைத் துரத்தியது—மீண்டும் ஓடினாள் பக்தி என் தங்கையை பயமுறுத்தியது—ஓடினாள், ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே.

ஓடினாள் அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்க வேண்டும், வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும் இன்று சட்டத்தை நீட்டுவோர் செய்தார்களா? வாழவிட்டார்களா என் கல்யாணியை?

வக் : குற்றவாளி யார் வழக்கிற்கோ வக்கீலாகமாறுகிறீர்

குண : யார் வழக்கிற்குமில்ல. அதுவும் என் வழக்குத்தான், என் தங்கையின் வழக்கு தங்கையின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட அண்ணன் ஒருவனில் என்ன தவறு? கல்யாணி தற்கொலை செய்துகொள்ள முயன்றது ஒரு குற்றம் குழந்தையைக் கொன்றது ஒரு குற்றம் நான் பூசாரியைத் தாக்கியது ஒரு குற்றம் இத்தனை குற்றங்களுக்கும் யார் காரணம் கல்யாணியை கஞ்சிக்கில்லாமல் அலையவிட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா அல்லது விதியின் பெயரைச்சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா பணம் பறிக்கும் கொள்ளைக்கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்?

பஞ்சத்தின் குற்றமா அல்லது பஞ்சத்தை மஞ்சத்

திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா? கடவுளின் பெயரால் காமலீலைகள் நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாடவிட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும் கல்யாணிகளும் குறையப்போவதில்லை இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப்பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம் பகுத்தறிவு பயனுள்ள அரசியல் தத்துவம்.

நீதி : குற்றவாளியைத் தண்டிக்க தனிப்பட்ட எவருக்கும் உரிமை கிடையாது உன்னுடைய வாதம் சர்க்காரையோ, சட்டத்தையோ அவமதிப்பதாக இருக்கக்கூடாது நடந்ததை சொல்வதுதான் உனக்கு உரிமை கொடுக்கப்பட்டதே தவிர அனுவசியமா எதையும் பேசக்கூடாது உன்னிடம் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல் கல்யாணி உண்மையிலேயே உன் தங்கைதானு?

குண : இந்தக்கேள்வி தங்களுக்கு வேடிக்கையாக இல்ல

நீதி : சரி கல்யாணியை வரச்சொல்

நீதி : இவன் உன் அண்ணனா?