உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
பராசக்தி/காட்சி 16
திரைக்கதை & வசனம்

பராசக்தி

காட்சி 16 · 16 / 46

1வது : எனக்கு மட்டும் மூணு ஆஸ் இருந்தால்

வேணு : ஒரு லாண்டறியே வச்சிருவே

1வது : என்னப்பா சிரிக்கிறீங்க? நான் தான் ஆட்டத்துக்கு வர்லே.

வேணு : ஏது ஆள் அவுட்டா...சும்மா கெடப்பா போன காசையெல்லாம் திருப்பிடலாம்.

1வது : ஏண்டா அதற்குக்கூட காசு வேணுமே! ஏய்...நீ வச்சிருந்தால் கொடுக்கமாட்டியா? ஏய் ஒரு டேபின் மட்டும் கொடப்பா

வேணு : பைசா நஹி! என்னப்பா...இரும்புப் பெட்டி சாவியை ஒங்க அப்பா ஒன்கிட்டே கொடுத்திருக்காரு பயப்பட்றியே...

1வது : சாவிதானே...எனக்கு அடிக்கடி காக்கா வலிப்பு வர்றது வழக்கம் அதனாலே கொடுத்திருக்காரு.

வேணு : ஏய்—அங்கே வர்றியா போவோம்...

1வது : எங்கே?

[மைனர் வேணுவால் அழைத்துச் செல்லப்படுகிறான்]

[பைத்தியம்போல் வேணுமென்றே பிதற்றிக் கொண்டிருக்கிறான்]

குண : கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்...குடிக்கத்தான் கற்பித்தானா? (சிரிக்கிறான் நானே மகாராஜன் இல்லை சந்தேகம்—யாரவர்கள், மந்திரி பிரதானீகளே வருக இவ்வாசனத்தில் அமருங்கள்! பரத நாட்டியம் ஆரம்பமாகட்டும் டுமீர் டுமீர் டுமீர்!)

கோபாலனோடு நான் ஆடுவேனே—நந்த கோபாலனோடு நான் ஆடுவேனே—வேணு கோபாலன்—ஆ நந்தகோபாலன்—ஊ நந்த கோபாலன் இசைக்குயில் போல் ஆடுவேனே

ஐயோ! ஐயோ! போதும் போதும்! தேச விசாரணை ஆரம்பமாகட்டும் டும் டும் டும்! மந்திரி நமது மாநகர் தன்னில் மாதம் மும்மாரி மழை பொழிகிறதா? டுமீர்! டுமீர்! அதுக்குத்தான் வருண பகவானுக்கு ‘கடக்கட்டு’ கட்டி தந்தி அடிச்சிருக்கோம் மகாராஜ்! சபாஷ் சபாஷ்! யார் அவர்கள்? ஏன் கத்துகிறார்கள்? ஓய் ஓய் மகாராஜா வயிறு பசி தாங்கல்லே—குடும்பம் குடும்பமாக சாகிறோம். வாட் வசிக்குதா? அப்படிச் சொல்லாதே பாவி! பவுன் விளையுற நாடுடா!

பரதேசிப் பசங்களா பட்டினி கிடக்கிறீங்களா? சாவுங்க சந்தோஷமாக சாவுங்க! அப்படித்தாண்டா வால் நட்சத்திரம் கிளம்பும். சர்—சர்—ர் மகாராஜ் பணம் இல்லையா? வேர் யு ஆர்! வேறே வாட் யு வாண்ட்? வடமலையானுக்கு காவடி எடுங்கடா—வடமலையானுக்கு... (ஒரு செங்கல்லை எடுத்து) அரோகரா சர்வராம சஞ்சீவி நாம பர்வதம் ராம சங்கீர்த்தனம்...கோவிந்தா...ஹரே கோவிந்தா!

(கல்லை சுமைதாங்கி மீது வைத்துக்கொண்டு)

நட்டகல்லை தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே சுற்றிவந்து மொணமொணன்னு சொல்லும் மந்திரம் ஏதடா நட்டகல்லும் பேசுமோ நாதனுள்ளிருக்கையில்—சுட்ட சட்டி சட்டுவங் கறிச்சுவை அறியுமோ?

பஜனை செய்வோம் கண்ணன் நாமம் பட்டினிகிடந்து பஜனை செய்வோம் கண்ணன் நாமம் பஜனை செய்வோம் கண்ணன் நாமம்-பட்டினி கிடந்து பஜனை செய்வோம் கண்ணன் நாமம்