உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மனோகரா/காப்பக வழிசெலுத்தல் பகுதி 7
திரைக்கதை & வசனம்

மனோகரா

காப்பக வழிசெலுத்தல் பகுதி 7 · 7 / 57

(மனோகரன் மாளிகையில்)

* * *

சத்யசீலர் : வஞ்சகம் வாழ்ந்தது கிடையாது...கொடுமை நிலைத்ததில்லை...இதைக் கேள்! விழா உன் பொருட்டு நடைபெறுகிறது... விழாவுக்கு நீ வந்துதான் தீர வேண்டும்...

மனோ : என்பொருட்டு விழா நடைபெறுகிறது. மனப்பூர்வமாகவா? இல்லை... சம்பிரதாயத்திற்கு!

சத் : தவறு மனோகரா! புத்திர வாஞ்சையற்றவரல்ல புருஷோத்தமர்.

மனோ : உங்களுடைய ஆசை, அந்த வாஞ்சையும் அற்றுவிடக்கூடாதென்று! ஆனால் அப்பா அணு அணுவாக விஷமாக்கப்படுகிறார்.

சத் : எப்படியானாலும் சரி, ராஜ குடும்பத்திலே தகராறு இப்படி பிறர் பேசக்கூடாது.

மனோ : உயர்ந்த எண்ணம்! ஆனால் அந்த ஊர் கெடுப்பவளுக்கு உதயமாகியிருக்க வேண்டும்.

சத் : மனோகரா! உன்னுடைய பிறந்தநாள்... அதிலே நீ இல்லையென்றால்...

ராஜப்பிரியன் : அரசர் கவலைப்பட மாட்டார்... அந்த ஆனந்தவல்லி, அருகிலே இருக்கும்போது!

சத் : உம்... இருவருமே இளக்காரம் அடிக்கிறீர்கள்!

மனோ : அமைதி கற்பிப்பது விவேகிகளின் பண்புதான்! ஆனால் ஆமைபோல் அடங்கிக் கிடப்பது வீரர்களின் பண்பல்ல! அந்த மயக்கு மொழிக்காரியும் வருவாள்; அங்கே என் மாதாவும் வரவேண்டும், முடியாது! என்னால் அதைக் காண முடியாது!

பத்மாவதி : மனோகரா!

மனோ : அம்மா!...

பத் : செல்வா... கேட்டுக்கொண்டுதான் வந்தேன்! ராஜப்பிரியன் கூட சீறி விழுந்தானே, ஏன்? மந்திரியாரே... மனோகரன் கட்டாயம் நாடகத்துக்கு வருவான்...

(மனோகரன் மெளனியாகிறான்)