மனோகரா
காப்பக வழிசெலுத்தல் பகுதி 6 · 6 / 57
(அரண்மனை. வசந்தசேனை முத்தாரத்தில் உள்ள பதக்கத்துள்ளே மறைத்து வைக்கப்பட்டிருக்கும் உக்ரசேனன் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.)
தோழி : என்னம்மா... தினம் தினம் எதை மறந்தாலும் இதை மறப்பதில்லை நீங்கள்? அப்படியென்ன இந்தப் பதக்கத்தில் கண்ணை இழுக்கும் காந்தம் இருக்கிறது?
வச : காந்தமில்லையடி! ஆபத்தில் கை கொடுக்கும் கடவுள்!
தோ : கடவுளா?
வச : பாரேன்... (படத்தை காட்டுகிறாள்)
தோ : அம்மா, மகாராஜா! வருகிறார்.
புருஷோத்தமன் : இன்னுமா முடியவில்லை, அலங்காரம்? நேரமாகிவிட்டதே நாடகத்துக்கு...
வசந் : இதோ முடிந்துவிட்டது.
புரு : மறந்துவிட்டாயா, இன்று மனோகரன் பிறந்தநாள்.
வசந் : மறப்பேனா, செல்வன் பிறந்த நாள்; எனக்கு வேறு ஒரு நினைவு வந்தது...
புருஷோத் : எது? வசந்தி!
வசந் : நமதுகாதல் விழாவின் பதின்மூன்றாவது ஆண்டு.
புருஷோத் : ஆமாம் கண்ணே... வருடங்கள் ஓடியதே தெரியவில்லை.
[வந்துகொண்டே வசந்தாவைத் தொடுகிறான்]
வசந்தன் : நெருப்பைத் தொடாதீங்க! சுட்டுவிடும் தேகம்! கொஞ்சம் கொட்டிவிடும் - இதிலெல்லாம் எனக்கு சந்தேகமில்லே...சந்தேகமில்லே.... எப்படியம்மா இன்னிக்கு புதுப்பாடம்? எம்மா!... அடே... அப்பா! அம்மா அழகைப் பாருப்பா... எனக்கும் அம்மாவைப்போல ஒரு பெண்ணு கிடைச்சா...
வசந் : சீ... பேசாமலிரு!
வசந்தன் : பிள்ளையாரு மாத்திரம் கேட்டாரா, அவுங்க அம்மா பார்வதியைப் போல பெண்ணு! நான் கேட்டா என்னப்பா...
புருஷோத் : தீரவே தீராது இது!
வசந்தன் : சந்தேகமில்லை.
புருஷோத் : வசந்தி, நான் போகிறேன்... சீக்கிரம் புறப்படு...
