உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மனோகரா/காப்பக வழிசெலுத்தல் பகுதி 55
திரைக்கதை & வசனம்

மனோகரா

காப்பக வழிசெலுத்தல் பகுதி 55 · 55 / 57

[மனோகரனின் முன்பு]

உக்ர : ஆகா! இது போன்ற ஒரு பலி கொடுத்த பிறகு வசந்தனின் பட்டாபிஷேகம் நடைபெறுவது சாஸ்திரப்படி, சாலச் சிறந்த காரியமாகும்!

வசந்தி : ஆமாம். அந்த வாய்ப்பு நமக்கு வலுவிலே கிடைத்திருக்கிறது. வசந்தன் அதிர்ஷ்டக்காரன்.

உக்ர : சோழ சாம்ராஜ்யத்தின் இளந்தென்றல் பாவம், பச்சிளங் குழந்தை, அப்பன் செய்த பாவத்திற்காக இந்த அரும்பு சாகப் போகிறது. மனோகரா! உன் அழகான குழந்தையின் திருமுகத்தை ஒரு முறை பார்த்துக்கொள். நீ அடக்கி வைத்திருக்கும் ஆவல் எல்லாம் உதட்டிலே தேக்கி உன் குழந்தையின் இளங் கன்னத்திலே கடைசியாக ஒரு முத்தம் கொடு.

[குழந்தையை மனோகரனிடம் நீட்டி ஏமாற்றுதல்]

உம் கண்ணீரால் குளிப்பாட்டு உன் பிள்ளைக் கனியமுதை!

(மனோகரன் கலக்கம்—குழந்தை எதுவும் அறியாமல் புன்னகை புரிகிறது)

உக்ர : உம் சிரிக்கிறாய்—பாவம் நன்றாகச் சிரி, அழுது கொண்டு பிறந்த நீ, சிரித்துக்கொண்டு சாவிறாய். பாண்டிய ரத்தமும் சோழ ரத்தமும் அல்லவா உன் உடம்பில் பாய்ந்து ஓடுகிறது. அதனால் மகிழ்ச்சி போலும் தான் மரணத்தின் தொட்டிலில் தூங்குவாய்.

வசந்தி : சீக்கிரம்! (உக்ரசேனன் குழந்தை மீது வாளை ஓங்குதல்)

பத் : சேனா! (அலறியபடி ஓடிவருகிறாள்) கொலை வாளை முதலில் என் மீது வீசுங்கள்.

வசந்தி : அதுதான் முடியாது! மரண தேவதையின் கொடிய வாயிலே இந்த குழந்தை விழுவதை நீ கண்குளிரப் பார்க்க வேண்டும். இதற்குப் பிறகுதான் சோழ பரம்பரை சுக்கு நூறாகத் தெறித்து தூள் தூளாக சிதறுவதை நான் பார்த்து பரவசப்படப் போகிறேன்.

பத்மா : நிறுத்து வசந்தி, நிறுத்து! பல ஆண்டு கால என் பர்த்தாவை உன்னுடையவராக்கிக் கொண்டு என் வாழ்வை நிலவில்லா வானமாக்கிறாய். பொறுத்துக்கொண்டேன். சபா மண்டபத்திலே சக்கரவர்த்திக்குப் பக்கத்திலே சாம்ராஜ்ய மகாராணி போல் அமர்ந்து கொண்டாய். அதையும் பொறுத்துக் கொண்டேன். பொல்லாத மொழி பேசி கொல்லாமல் கொன்று போட்டாய் அதையுங்கூட பொறுத்துக் கொண்டேன். புலியென என் புதல்வன் சீறி எழுந்த போதெல்லாம்—உறைவிட்டு கிளம்பிய வாளை உடனே தடுத்து உன் உயிரைக் காப்பாற்றி யிருக்கிறேன். காரணம் என்ன? கத்தி முனையிலே சோழ நாட்டின் சொர்ண விக்ரகத்தை நிறுத்தியிருக்கும் புத்திகெட்டவளே உன்னைத்தான் கேட்கிறேன். நான் பொறுமையாய் இருந்ததற்கு காரணம் என்ன?

வசந்தி : அது உன் பூர்வ ஜன்ம வினை.

பத்மா : இல்லை புருஷன் மீது வைத்த அன்பு. அவருடைய பொருள் நீ. அந்த பொருளுக்குத் தீங்கு செய்து கணவருக்கு கவலை உண்டாகக் கூடாதென்று கருதினேன். ஆனால் இன்று நீ என் கணவரையே காராகிரகத்தில் அடைத்து விட்டாய். வசந்தசேனை இன்று வரை நான் காட்டிய பொறுமையின் பேரால் கேட்கிறேன். உனக்கு நாடு தானே வேண்டும். எடுத்துக் கொள். நடத்து உன் ராஜ்யத்தை! எங்களுக்கு காடு போதும். எங்கள் எல்லாரையும் விட்டுவிடு.

வசந்தி : ஆ! உங்களை விட்டுவிடுவதா! கனவு காணாதே! சோழ சாம்ராஜ்யத்தின் சாம்பல்மேடு இன்னும் அரை நொடியில் என் காலடியில் குவியப் போகிறது.

பத்மா : வசந்தசேனா! உண்மையின் சொரூபம் புயலாக உருவெடுத்தால் அந்த சாம்பல் மேட்டில் நீ அமிழ்ந்து விடுவாய் ஜாக்கிரதை!

வசந்தி : என்னையா பயமுறுத்துகிறாய்?

பத்மா : ஆமாம் உன்னைத்தான். வான் பெய்ய நாடு! மான் உலவும் காடு! தேன் பொழியும் வீடு—எங்கள் சோழ மண்டலம். அங்கே காதல் கமண்டலம் ஏந்தி வந்தவளை சூழ்ச்சி பல வகுத்து சுந்தர வாழ்வை சூறையிட்டவளே வந்தவளை வரவேற்று இத்தனை நாள் இன்பமாக வாழ இடமளித்தேன்! இன்றோ ஆள்வதற்கு நீ, மாள்வதற்கு நாங்கள் என்று ஆணவம் பேசுகிறாய். இல்லை! உன்னுடைய அழிவுக்கு நீயே ஆரத்தி எடுக்கிறாய். வீணே அழிந்து போகாதே!

வசந்தி : என்ன சொன்னாய்?

(பத்மாவை வசந்தி அறைகிறாள்)

மனோ : அம்மா!...... (அலறிவிடுகிறான்)

பத்மா : மனோகரா! (அவனிடம் போகிறாள்)

பத் : மனோகரா! என் மங்காத புகழ்விளக்கே! மன்னித்துவிடடா என்னை! சோழ சாம்ராஜ்யத்தின் மேன்மையைக் காப்பாற்றுவதற்காக நீ வீறு கொண்டு எழுந்து வீர காவியம் தீட்டும்போதெல்லாம் எழுத்தாணியை மறைத்து வைத்தும், ஏடுகளை ஒளித்துவைத்தும், தடுத்து நின்ற பழிகாரி நான்தான். தாயின் ஆணையைத் தலைமேல் கொண்ட என் தங்கமே! அநீதியை அழித்துவிடு என்று உன் அன்னையே இப்போது உத்தரவிட்டாலும் அசைய முடியாத நிலை பெற்றுவிட்டாய், என் செல்வமே! அழிந்தது. எல்லாம் அழிந்தது.

மனோ : இல்லையம்மா......! இல்லை! அநீதியை அழித்துவிடு, என்று என் அன்னையே! இப்போது உத்தரவு கட்டளை இடுங்கள்! கடைசி நேரம்! கடைசி வேண்டுகோள்! என் தமிழ்த் தாயே! இன்பச் சோலையின் இடையே தோன்றிய கணவாயின் வழியாக இந்தப் பூமியிலே குடியேறி நிலையுற்றுவிட்ட குள்ளநரி, இன்று ஆட்சிபீடம் ஏறுவதற்கு அச்சாரம் போட்டுவிட்ட அக்ரமத்தைக் கண்ட பிறகாவது அனுமதி தருவீர்களா? வாள் வேண்டாம் தாயே! வாய்மொழி ஒன்று போதும். படை வேண்டாம் தாயே - தாயின் தடை நீங்கினால் போதும்! கட்கம் தரவேண்டாம் தாயே - ஒரு கண் ஜாடை போதும் - உங்களுக்கும், எனக்கும் எல்லோருக்கும் விடுதலை. எங்கே தாயே உத்திரவு? உத்திரவு கொடுங்கள் உருத் தெரியாமல் ஆக்குகிறேன் - இவர்களை.

பத்மா : என் அருமைச் செல்வமே! உன் தந்தையின் நன்மைக்காகத்தான் உன் வீரக் கரங்களைக் கட்டிப் போட்டேன். இந்த விஷமக்காரியின் முன்னே சிரம் தாழ்த்தி நின்றேன். யாருக்காக பொறுமை பொறுமை என்று சொல்லி வந்தேனோ அவரையே சிறையில் பூட்டிவிட்ட பிறகு பொறுமைக்கு எங்கே இருக்கிறது பெருமை? மனோகரா! பொறுத்தது போதும். பொங்கியெழு!

மனோ : அம்மா!

பத் : தாயின் ஆணை கிடைத்துவிட்டது. புறப்படு! மனோகரா! மனோகரா!! மனோகரா!! மனோகரா!!!

[அரசன் சிலையிடம் ஓடி]

பத் : மகாராஜா! நம்முடைய செல்வக் குடும்பம் எப்படி சரழிகிறது பார்த்தீர்களா? கட்டுண்டு துடிக்கும் மனோகரனைப் பாருங்கள். மனோகரனைப் பாருங்கள் மகாராஜா! மகாராஜா!! மகாராஜா!!!

[உக்ரசேனன் வசந்தி சிரிப்பு]

பத் : ஏன் சிரிக்கிறீர்கள்? செவ்வாழைத் தோட்டத்திலே குதித்தாடும் குரங்குகளே! மங்கை உருவில், மகான் உருவில், இந்த மண்ணை வளைக்க வந்த மகா பாதகர்களே! இப்படி சிரித்தவர் வாழ்ந்ததில்லை, அழுதவர் கெட்டதில்லை என்று ஜெகம் சொல்லும் சரித்திரத்தை மறந்தவர்களே! செப்படி வித்தையால் செழுந் தமிழர் செங்கோலை முறிக்க வந்த சிறு நரிக் கூட்டமே! சிரிக்காதே! கண்ணீரின் வலிமையை உணர முடியாத கயவரின்கூட்டமே! கண்ணீர் துளிகள் சாதித்ததை கத்தி முனையும் சாதித்ததில்லை என்பதை மறந்துவிட்டு சிரிக்காதே. நொந்துபோனவர் மத்தியிலே சந்து புனை சிந்து பாடும், துரோகிகளே சிரிக்காதீர்கள், சிரிக்காதீர்கள்...... ஓ தாயகத்து மண்ணே! உன் வீட்டத்து திருவிளக்கு மனோகரனைப் பார்! சோழ மாதா! உன் சுந்தரத் தோளிலே வெற்றி மாலை சூட்டிய வீராதி வீரன் துடி துடிக்கும் கொடுமையைப் பார். அன்னியப் பகைவரின் ரத்தத்தால் உன் அழகு நெற்றிக்கு திலகமிட்ட மைந்தன்—அய்யகோ! அடிமைத் தளையால் கட்டுண்டு தவிக்கும் காட்சியைப் பார். சோழ குடும்பத்தின் கொலு மண்டபமே என் வெற்றியின் உருவத்தை இந்த வீணர்கள் மத்தியிலே

எவ்வளவு நேரம் தலை குனியவைக்கப் போகிறாய்? பச்சிளங் குழந்தை - பட்டத்திளவரசன்! பாராளும் மன்னன். அத்தனை பேரையும் பழிவாங்க துடிக்கும் பாதகியைத் தாங்கி நிற்கும் பூமி மாதா! நீ நன்றியுள்ளவள் என்பது உண்மையானால் மறக்குடியில் பிறந்த மாதாக்களின் கண்ணீருக்கு சக்தி உண்டென்பது உண்மையானால் மாற்றானுக்கு மண்டியிட்டறியாத மாவீரன் மனோகரன் என் மகன் என்பது உண்மையானால் இந்த சங்கிலி பொடிப்பொடியாகட்டும், அக்ரமக்காரர்களின் சிரிப்பு அடங்கட்டும், இந்த மண்டபமே இடிந்து தூள் தூளாகட்டும். தூள் தூளாகட்டும்! தூள் தூளாகட்டும்!! தூள் தூளாகட்டும்!!!

(மனோகரனின் பலத்தால் தூண் நொறுங்கி விழுகிறது அதற்குத் தாய்மைக் குரலும் உதவியாகிறது.)

உக்ர : பிடியுங்கள் அவனை! கைது செய்யுங்கள்!

வசந்தி : குத்துங்கள்! கொல்லுங்கள்.

[உக்ரசேனன் மனோகரனால் கொல்லப் படுகிறான், பாண்டியன் படையும் வருகிறது. குழந்தை கேசரிவர்மனால் காப்பாற்றப்படுகிறது.]

(வசந்தி மனோகரன்மீது வீசிய கட்டாரி வசந்தன்மீது பாய்கிறது)

வசந்தி : வசந்தா!

வசந் : அண்ணா!

மனோ : வசந்தா...! வசந்தா...! வசந்தா...!

வசந் : அண்ணா!

வசந்தன் : அண்ணா என்னை ஒரு முறை ‘தம்பி’ என்று அழைக்கக்கூடாதா! சொல்லு அண்ணா ‘தம்பி’ன்னு!

மனோ : தம்பி!

வச : அண்ணா! இந்தப் பாவி வீசிய கட்டாரி உன் மீது பட்டிருந்தால் நீ எவ்வளவு வலியோடு கஷ்டப்படுவாய் என்பதை நான் உணருகிறேன், நீ வாழ வேண்டும் அண்ணா! அண்ணா நீதான் நாட்டை ஆளவேண்டும்! நான் சாக வேண்டும்.

(வசந்தன் சாகிறான். மனோகரன் வசந்தியை கொல்லம் முயலும்போது.)

கேசரி : வேண்டாம் இளவரசே! அவளை என்னிடம் விட்டு விடுங்கள். இந்த நல்ல காரியத்திற்காக நான் பல நாட்கள் காத்திருக்கிறேன். ஒரே வீச்சில் அவள் சாகக்கூடாது. இறுதி மூச்சுவரையில், கொஞ்சம்... கொஞ்சமாக கொல்ல வேண்டும். (ஓடுகிறாள் வசந்தி)

கேசரி : எங்கே ஓடுகிறாய்? ஆளப் பிறந்தவளே! அடங்காப் பிடாரி நில்! நில்!

(சிறைக் கதவு திறக்கிறது)

அரசர் : சத்திய சீலரே! என்னை மன்னித்துவிடும். பத்மாவதி எங்கே? என் பத்மாவதி எங்கே!

சத்ய : என்னுடன் வாருங்கள்.

அரசர் : ராஜப் பிரியா! ராஜம் பிரியா!