உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மனோகரா/காப்பக வழிசெலுத்தல் பகுதி 36
திரைக்கதை & வசனம்

மனோகரா

காப்பக வழிசெலுத்தல் பகுதி 36 · 36 / 57

அரசர் அவைக்கூடம்

ராஜப்பிரியன் : புயல் வீசப்போகிறது மன்னவரே! புழுதி மேடாகப் போகிறது இந்த அரண்மனை!

அர : ராஜப்பிரியா!

ராஜ : அரசர் விடுத்த அவசர ஆணை கேட்டு அடலேறு போல வந்துகொண்டிருக்கிறான் மனோகரன்!

அரசர் : ஆ!

ராஜப் : அமைதியாகத்தான் வருகிறான். ஆனால் எரிமலை குமுறுவதற்குமுன் எச்சரிக்கை செய்வதில்லை. மகாராணிக்கு சிறைச்சாலை. மனோகரன் மன்னிப்புக் கேட்க வேண்டும்! வேந்தே. வேங்கையிடம் விஷமம் காட்டலாமா? வீரன் சினந்தால் விபரீதம் ஏற்படுமே! திரும்பப் பெறுங்கள் உத்திரவை! இல்லையேல் தீப்பொறி கிளம்பும்! தீப்பொறி கிளம்பும்!

(வசந்தி நடுங்குதல்)

அரசர் : பயப்படாதே! பார்க்கிறேன் அந்த தீப்பொறியை! உம் அவனை இரும்பு சங்கிலியால் பிணைத்து அழைத்து வாருங்கள்,

சிப்பாய் : (மனோகரனிடம்) மன்னரின் ஆணை... இந்த சங்கிலியால் பிணைத்து தங்களை சபைக்கு அழைத்து வர வேண்டும்.

மனோ : விலங்கா ?

* * *

பத்மாவதி : விலங்கா! விபரீதம்தான். (தோழியிடம்) எடு என் மேலங்கியை!

(ஓடி வருகிறாள்)

* * *

சத்திய : மனோகரா! நீ சபைக்குச் செல்வது காரணம் கேட்க. அதற்கு எப்படிச் சென்றால் என்ன? விலங்கு கைகளுக்கே தவிர வாய்க்கு அல்லவே! (விலங்குடன் மனோகரன் இழுத்துவரப்படுதல்)

* * *

அரசர் : மனோகரா! உன்னை எதற்காக அழைத்திருக்கிறேன் தெரியுமா?

மனோ : திருத்திக் கொள்ளுங்கள் தயவு செய்து, அழைத்து வரவில்லை. இழுத்துவரச் செய்திருக்கிறீர்கள்,

அரசர் : என் கட்டளையைத் தெரிந்து கொண்டிருப்பாய் நீ

மனோ : கட்டளையா இது? கரைகாண முடியாத ஆசை! பொன்னும், மணியும், மின்னும் வைரமும் பூட்டி மகிழ்ந்து, கண்ணே! முத்தே! தமிழ்ப் பண்ணே! என்றெல்லாம் குலவிக் கொஞ்சி, தந்தத்தால் ஆன கட்டிலிலே...சந்தனத் தொட்டிலிலே! வீரனே! என் விழி நிறைந்தவனே வீர வழி வந்தவனே! என்று யாரைச் சீராட்டி பாராட்டினீர்களோ... அவனை அந்த மனோகரனை சங்கிலியால் பிணைத்து சபை நடுவே நிறுத்தி சந்தோஷம் கொண்டாட வேண்டும் என்ற தங்கள் தணியாத ஆசைக்குப் பெயர் கட்டளையா தந்தையே?

சபையோர் : சச்...சச்...

அரசர் : நீ நீதியின் முன்னே நிற்கும் குற்றவாளி, தந்தையின் முன் தனயனல்ல இப்போது!

மனோ : குற்றவாளி! ஹூம் யாருக்கு என்ன தீங்கிழைத்தேன்? என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? அரசே! தந்தையின் முன் தனயனாக அல்ல. பிரஜைகளில் ஒருவனாகவே கேட்கிறேன். கொலை செய்தேனா? கொள்ளையடித்தேனா?... நாட்டைக் கவிழ்க்கும் குள்ள நரி வேலை தான் செய்தேனா? குற்றம் என்ன செய்தேன் கொற்றவனே குற்றம் என்ன செய்தேன்? கூறமாட்டீர்களா? நீங்கள் கூற வேண்டாம்.

இதோ...அறிஞர்களும் அமைச்சர்கள் இருக்கிறார்கள். மறவர் குடிப் பிறந்த மா வீரர்கள் இருக்கிறார்கள்! மக்களின் பிரதிநிதிகள்! இந்த நாட்டின் தூண்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூறட்டும்... என்ன குற்றம் செய்தேன்?

சபையோர் : குற்றத்தை மகாராஜா கூறத்தான் வேண்டும்.

அரசர் : இது உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது.

மனோ : சம்பந்தம் இல்லாதது சபைக்கு வருவானேன்? குடும்பத் தகராறு கொலு மண்டபத்துக்கு வரும் விசித்திரத்தை சரித்திரம் இன்றுதான் முதன் முதலாக சந்திக்கிறது மகாராஜா!

அரச : போதும் நிறுத்து... வசந்த விழாவில் நீ செய்த தவறுக்காக வசந்தசேனையிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

மனோ : அதற்குத்தான் காரணம் கேட்கிறேன்!

அர : எதிர்த்துப் பேசுபவர்களுக்கு ராஜ சபையில் என்ன தண்டனை தெரியுமா?

மனோ : முறைப்படி மணந்த ராணிக்கு சிறைத் தண்டனை அளித்துவிட்டு, மூலையில் கிடந்ததற்கு முடி சூட்டியவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையைவிடக் குறைவானதுதான்.

அர : ஆத்திரத்தைக் கிளப்பாதே! நிறைவேற்று அரசன் உத்திரவு—

மனோ : அரசன் உத்திரவென்ன? ஆண்டவனின் உத்திரவுக்கே காரணம் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். அரசே! “சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டும் தாய்” என்று கேள்விப்பட்ட பின்னும் அடங்கிக் கிடப்பவன் ஆமை!

அர : தாய்க்கும் தந்தைக்கும் வேற்றுமை அறியா மூடனே! தந்தையின் ஆணை கேட்டு தாயாரின் தலையை வெட்டி யெறிந்த பரசுராமனைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா நீ?

மனோ : பரசுராமன்—அவதாரம். மனோகரன்—மனிதன்!

அர : என் உத்தரவை நிறைவேற்றப் போகிறாயா இல்லையா?

மனோ : நிறைவேற்றுகிறேன்—மன்னிப்பு கேட்க வேண்டும்—மனோகரன்.

அர : ஆமாம்; அதுவும் அரை நொடியில்

மனோ : அரை நொடியென்ன? அதற்குள்ளாகவே! ஆனால் யாரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் தெரியுமா? கோமளவல்லி—கோமேதகச் சிலை—கூவும் குயில்—குதிக்கும் மான் என்றெல்லாம் உம்மால் புகழப்படும் இந்தக் கோணல் புத்திக்காரியின் கொள்விழிக் கண்களை—கொடிய நாக்கை—என் கூர்வாளுக்கு இரையாகத் தந்துவிட்டு—அதை எதிர்த்தால் உம்மையும், உமக்குப் பக்கத் துணை வந்தால் அந்தப் பட்டாச்சியையும்

பிணமாக்கிவிட்டு...சூன்யக்காரிக்கு ஆலவட்டம் சுற்றியவர்களை—சுடுகாட்டுக்கனுப்பி விட்டேன்...என்று சுழலும் வாளுடன்...சூழும் புகழுடன் என் அன்னையிடம் ஓடி மன்னிப்புக் கேட்க வேண்டும். நிறைவேற்றட்டுமா—அந்த உத்திரவை?......தயார் தானா...? தயார் தானா?...

ஏன் நடுங்க வேண்டும். ஹ...ஹ...ஹ புருஷோத்தமர் பேரிலே புலி - வாள் எடுத்தால் வையம் கலங்கும். அவரா இப்படி பயப்படுகிறார்? பாவம் வேலின் கூர்மையை சோதித்த விரல்கள், வஞ்சகியின் விரலை அல்லவா ரசித்துக்கொண்டிருக்கின்றன. பாசறையைப் பார்வையிட்ட கண்கள் இந்தப் பாம்பாட்டத்தின் பாவத்தில் அல்லவா லயித்துக் கிடக்கின்றன. கோட்டை கொத்தளங்களை நினைத்துக் கிடந்த நெஞ்சம், இந்தக் குட்டி சுவரின் நிழலில் அல்லவா குளிர்ச்சி காணுகிறது?....—

அர : பேசாதே!

மனோ : ஊர் பேசுகிறது...உலகம் பேசுகிறது!

அர : ஆமாம் நீ வேசி மகன் என்று

மனோ : ஆ!

அர : ஏன் கேட்பதற்கு திகைக்கிறதா? ஆயிரம் முறை சொல்வேன் நீ வேசி மகன்!

மனோ : ஹா...அம்மா,

போதும் உம் பேச்சு. இதோ! அந்த வாயை சுக்கு நூறாக கிழிக்கிறேன்.

[சங்கிலி அறுபடுதல்]

சத். சீல : மனோகரா!

மனோ : யாரும் குறுக்கிடாதீர்கள். மனோகரனின் ஆத்திரம் நல்லவர் கெட்டவர் என்றுகூட பார்க்காது. விடும் என் எடும் கையை.

மனோ : புருஷோத்தமரே! புரட்டுக்காரியின் உருட்டும் விழியில் உலகத்தைக் காண்பவரே! மானமொன்றே நல் வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த மறவேந்தர் பரம்பரையில் மாசாக வந்தவரே! மயிலுக்கும் மந்திக்கும் வித்தியாசம் தெரியாத மதிவாணரே! குளிர் நிலவை

கொள்ளிக்கட்டையெனக் கூறிய குருடரே; என் தாய் அன்பின் பிறப்பிடம்—அறநெறியின் இருப்பிடம்—கருணை வடிவம்—கற்பின் திருவுருவம்—மாசற்ற மாணிக்கம்—மாற்றுக் குறையாத தங்கம்—அவர்களை அவதூறு கூறிய உமது அங்கங்கள் பிளந்தெறிவேன்! இந்த துரோகப் பேச்சுக்கு உம்மைத் தூண்டிவிட்ட தூர்த்தையின் உடலைத் துண்டாடுவேன். துணிவிருந்தால்—தோளிலே வலுவிருந்தால் எடுத்துக் கொள்ளும் உமது வாளை—தடுத்துக் கொள்ளும் உமது சாவை! தைர்யமில்லாவிட்டால்—குலுக்குக்காரியின் குலுக்குச் சிரிப்பிலே நீர் கோழையாகி விட்டிருந்தால் ஓடிவிடும் இதைவிட்டு! புறமுதுகு காட்டி ஓடும்! புறநானூற்றின் பெருமையை மூடவந்த புழுதிக் காற்றே! புறமுதுகு காட்டி ஓடும்! கலிங்கத்துப் பரணியை மறைக்க வந்த காரிருளே! கால் பிடரியில் இடிபட ஓடும்......ஓடும்...ஓடும்...ஒலமிட்டு ஓடும்.....ஓங்காரம் கூச்சலிட்டு ஓடும்...ஏன் அவமானமாயிருக்கிறதா?

என் அன்னையைத் தூஷித்த சின்னஞ்சிறு புழுவே...

ஏன் சிலையாக மாறிவிட்டீர்? ஏ, ராஜவிக்ரகமே : பழி வாங்கும் பக்தன் பூஜைசெய்ய வந்திருக்கிறான்! அப்படியே நில்லும்! அசையாமல் நில்லும்! இந்த சித்து வேலைக்காரியின் ரத்தத்தை மொண்டு உமக்கு அபிஷேகம் செய்விக்கிறேன். இந்த நாசகாரியின் நரம்புகளால் உமக்கு மாலை சூட்டுகிறேன், முல்லைச் சிரிப்பென புகழ்வீரே, மோக போதையில்! அந்தப் பல்லை பெயர்த்து உம்மை அர்ச்சனை செய்கிறேன்! பாவி...பார்...பத்தினியை இகழ்ந்த படுபாவி பார்! நீயும் உன் பஞ்சணை ராணியும் படும் பாட்டைப் பார்!

பத்மாவதி : [வந்துகொண்டே] விடு வாளை!

மனோ : யார், நீ?... (திகைத்தபடி) அம்மா! அம்மா! நீங்கள் எங்கே அம்மா வந்தீர்கள்? கயமைத்தனம் ஆட்சி புரியும் இந்த இடத்திலே உங்கள் தூய்மையான காலடிகள் படக்கூடாதே, அம்மா!

பத் : மனோகரா!

மனோ : சற்று பொறுங்கள் தாயே! (அரசரைப் பார்த்து] எங்கே ஓடப் பார்க்கிறீர்கள்? நில்லுங்கள்,

பத் : மனோகரா! உன்னையும் மறந்து விடாதே!

மனோ : அம்மா சற்றுமுன் இந்தக் கொலு மண்டபத்திலே தங்களைப்பற்றி ஒலித்த கொடிய வார்த்தைகளை தாங்கள் கேட்டிருந்தால் இப்படி சொல்லமாட்டீர்கள். இருங்கள் வருகிறேன்.

[மனோகரன் வாளை உருவுகிறான். அதை பத்மாவதி தடுக்க அது அவள் கையைச் சிராய்க்கிறது.]

மனோ : அம்மா! பாதகமில்லை. உங்கள் புனிதப் பொற்கரத்திலிருந்து சொட்டும் ஒவ்வொரு துளி இரத்தத்திற்கும், இந்தப் பொல்லாதவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

பத் : மனோகரா! என்னைத்தானே இகழ்ந்தார்கள்?

மனோ : விடுங்கள்! தாயை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்.

பத் : மனோகரா! நீ என் மகன் என்பது உண்மையானால் சொல்வதைக் கேள்.

மனோ : அம்மா.

பத் : முதலில் நீ வார்ந்த இந்த வயிற்றிலே வாளைப் பாய்ச்சிவிட்டு பிறகு மகாராஜாவிடம் போ! தாயின் பிணத்தின் மேல் நின்றுகொண்டு, தந்தையிடம் போரிடு. உம்...இதோ உன் தாய்...கொல் என்னை. பிறகு உன் கொள்கைப்படி நட...நான் நிற்கிறேன்

மனோ : அம்மா!...

பத் : இனி நான் பேசிக் கொண்டிருக்கப் போவதில்லை. யாரை நானாக வந்து பார்க்க மாட்டேன் என்று சத்தியம் செய்திருந்தேனோ, அவரை உன்னால் பார்க்க நேர்ந்ததும், சபையில் இப்படி பெற்ற மகனிடம் பிச்சைக் கேட்பதும் சகிக்க முடியாத அவமானம்!

மனோ : இப்போது என்னம்மா செய்யச் சொல்கிறீர்கள்?

பத் : வாளை இப்படி கொடு!

மனோ : மன்னிப்பும் கேட்கட்டுமா?

பத் : மனோகரா! என் மாணிக்கமே! உன் மாதா கோழையின் குடும்பத்தில் பிறக்கவும் இல்லை. கோழையின் மனைவியாக ஆகவும் இல்லை. கோழையை மகனாகப் பெறவும் இல்லையடா கண்ணே! மன்னிப்புக் கேட்பதைவிட மரணமடைவதே மேல்.

அரசன் : ஆமாம்; அதுதான் என் முடிவும். இந்தக் கொடியவனை உயிரோடுவிடக் கூடாது. மனோகரனுக்கு மரண தண்டனை!

மனோ : ஹா! அம்மா!...

இப்போதாவது அனுமதி கொடுங்களம்மா. இந்த நீசர்களைக் கசக்கி எறிந்து விடுகிறேன். இன்னுமா அம்மா பொறுமை?

பத் : இப்போதுதான் பொறுமை!

மனோ : அப்படியானால் நான்?

பத் : சாகத்தான் வேண்டும்.

மனோ : நானா சாக வேண்டும்? உங்கள் மகன் மனோகரனு சாகவேண்டும்?

பத் : ஆமாம்! யாருக்கும் கிடைக்க முடியாத பாக்கியம்; தந்தையே மகனைக் கொல்வது! அதற்கு தாயாரும் தலையசைப்பது, தங்கமே, இந்த தரணியிலே யாருக்கடா கிடைக்கும் இந்த ராஜ பாக்கியம்! போ, மகனே சாகப் போ!

மனோ : அம்மா! நீங்களா இப்படி சொல்கிறீர்கள்?

பத் : ஆம்! உன்னை ஈன்ற தாய்! நானே சொல்கிறேன்! இறந்துவிடு!

மனோ : அம்மா உங்களைப் பிரிந்தா?

பத் : நானே உன்னைப் பிரிய துணிந்துவிட்டேன்.

மனோ : அம்மா! அம்மா!

[மனோகரன் மயக்கத்தோடு தரையில் சாய்கிறான்]

(சபையோர்)

“இளவரசனை விடுதலை செய்யுங்கள்.”

“அநீதியான தீர்ப்பு,”

“அநீதியான தீர்ப்பு! அநீதியான தீர்ப்பு.”

பத்மா : அமைதியாயிருங்கள்! சத்தியசீலரே! மனோகரனைத் தூக்கிக்கொண்டு போக ஏற்பாடு செய்யுங்கள்—கொலைக்களத்திற்கு!

சபையோர் : “கூடாது!”

“தீர்ப்பு அக்ரமம்...அக்ரமம்!”

பத் : யாரும் பேசாதீர்கள் என் மகன்—அவனை என் இஷ்டப்படி நடத்துவேன்! மரண தண்டனை நிறைவேறிய பிறகு சவ அடக்கம்கூட இந்த சாம்ராஜ்யத்திற்கு வெளியில் தான் நடைபெறவேண்டும்!

[மனோகரன் கையை எடுத்து]

செல்வா! இதுவே என் கடைசி முத்தமாயிருந்தால் அடுத்தபடி நம் கல்லறைகளை சந்திக்கட்டும்!

(போய்விடுகிறாள்)

* * *

[அரசனின் தனியிடம் : விஜயா ஓடி வந்து அரசன் காலில் விழுகிறாள்.]

விஜயா : மாமா......மலர்ந்திருந்த ரோஜாவின் இதழ்களை ஏன் மாமா பிய்த்தெறிந்தீர்கள்... படர்ந்திருந்த மல்லிகையின் பச்சைக் கிளையை ஏன் மாமா வெட்டிவிட்டீர்கள்... தொடர்ந்து வந்தேன் தூய நற்காதலால்...... துன்ப அலைகளிலே ஏன் மாமா தள்ளிவிட்டீர்கள்... சொல்லுங்கள் மாமா இனி என் வாழ்வு பாலைவனந்தானா?......... என் இருதயம் இருட்டறைதானா? விமோசனமே கிடையாதா மாமா?......

அரசன் : தீர்ந்துபோன விஷயம் திரும்பக் கிளறுவதில் பயனில்லை.

விஜயா : எது மாமா தீர்ந்துபோன விஷயம். தந்தை மகன் - என்ற பந்தமா?...... கணவன் மனைவி என்ற சொந்தமா? தங்களைப் பொறுத்த வரையில் இரண்டுமே தீர்ந்துவிட்டாலும், என் நிலையில் இருந்து நினைத்துப்பாருங்கள்; நான் உங்கள் பகைவரின் மகள். என் உள்ளத்தைக் கவர்ந்த உத்தமர் உங்கள் மகன். எதிரியையும் இழுக்கக்கூடிய இதயம் படைத்தவரை இத்தகைய கொடுமைக்கு ஆளாக்குவது, அதுவும் கர்ப்பிணி பெண்ணது விந்தையல்லவா, மாமா? பாண்டிய நாட்டு ராஜகுமாரி சோழநாட்டு

அரண்மனைக்கு ஏன் வந்தாள்............ சோகப் பதுமையாக மாறவா...? சுகத்தை இழக்கவா? சொல்லுங்கள் மாமா.

வ. சே. : மாமியார் பாடம் அப்படியே மருமகளுக்கு!

[வந்துகொண்டே]

விஜயா : என் மாமாவோடு பேசுகிறேன்...

வசந்தி : மாமா... உனக்கு மகாராஜா மாமா... அந்த சந்தேகத்தில் வந்தது தாண்டி இவ்வளவு சங்கடமும்!

விஜயா : சீ... பேசாதே வேசி...

வசந்தி : என்ன சொன்னாய்... வேசியின் மகனுக்கு மனைவியாக வாய்த்த வேசி... என்ன சொன்னாய்...

விஜயா : ஆ... வசந்த சேனை...

[கட்டாரியை வீசுகிறாள்...... குறி தவறுகிறது.]

வசந்தி : கற்புக்கரசிகளே கட்டாரி மட்டுமில்ல... கடவுளே கூட நெருங்க முடியாது!...

அரசன் : வசந்தி!...

[விஜயாவைப் பார்த்து]...

பாவி!... என் ஆசைகளை அரைநொடியில் அழித்து விடப் பார்த்தாயே...

வசந்தி : சதி நடக்கிறது மகாராஜா என்னை சாய்க்க!...

அரசன் : பயப்படாதே...சதிக்கு முடிவு கட்டுகிறேன்...... யாரங்கே?

[காவலன் வருதல்]

பத்மாவதியுடன், விஜயாவையும்—பாதாள சிறையிலே அடையுங்கள்... உம்... நடக்கட்டும்...

விஜயா : மாமா...

[மயக்கமுற்ற நிலையில் மனோகரன் ஒரு ரதத்தில் எடுத்துச் செல்லப்படுகிறான். சத்யசீலரும், காவலாளிகளும் பின் தொடர]

[அப்போது அரூபம் (கேசரிவர்மன்) ரதத்தைத் தடுத்து நிறுத்துகிறது. காவலாளிகள் பயந்து ஓடுகிறார்கள். அரூபம் ரதத்தை ஓட்டிச் செல்கிறது. ராஜப்பிரியன் பின் தொடர்கிறான்.]