உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மனோகரா/காப்பக வழிசெலுத்தல் பகுதி 33
திரைக்கதை & வசனம்

மனோகரா

காப்பக வழிசெலுத்தல் பகுதி 33 · 33 / 57

[பத்மாவதி அறை]

பத்மா : அப்படியா சொன்னாள்! அதை அரசர் கேட்டுக் கொண்டு நின்றார்? அப்போது சத்யசீலர் அங்கே இருந்தாரா விஜயா?

விஜயா : இருந்தார்.

பத் : மனோகரனைத்தான் தாயின் ஆணை தடுத்தது. சத்யசீலரை எது தடுத்தது...... அந்தக் கொடுமையை எதிர்த்துப் பேச முடியாமல் குரலிலே நடுக்கம் ஏற்பட்டதா? அல்லது நெஞ்சிலே கோழைத்தனம் குடி கொண்டதா? (தோழியிடம்) கூப்பிட்டி சத்யசீலரை... உடனே போ...இப்போதே அழைத்துவா!

[வசந்தசேனை முத்தாரத்திலிருக்கும் பதக்கத்திலுள்ள உக்ரசேனன் படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள்]

தோழி : என்னம்மா...ஏன் இப்போது அதை...

வ. சே. : நான் தான் சொல்லியிருக்கிறேனடி... ஆபத்தில் கைகொடுக்கும் கடவுள் இதுதானென்று.

தோழி : அதன் உதவி இப்போது தேவையேயில்லை.

வ. சே. : அதிருக்கட்டும்... போன செய்தி...

தோழி : மனோகரன் கோபாவேசமாய் இருக்கிறார். மகாராணியும் விஷயத்தைக் கேட்டு துடித்துப்போய்......

வ. சே. : அடுக்காதே... சீக்கிரம் சொல்.

தோழி : சத்யசீலரை உடனே அழைத்து வரும்படி தோழியை அனுப்பியிருக்கிறார்கள்.

வ. சே. : இந்நேரத்திலா?

தோழி : ஆமாம்...

வ. சே. : இருட்டு வேளையிலா?

தோழி : ஆமாம்...

வ. சே. : பத்மாவதியின் அந்தப்புரத்தில் சத்யசீலர் வருகிறார்... இரவு நேரத்தில்...

தோழி : வசந்த விழா சம்பவம் பற்றி விசாரிக்க,

வ. சே. : தெரியுமடி எனக்கு... அவர் ஏன் அழைக்கப்பட்டிருக்கிறார்... அது தெரியும்... அதைத்தான் திருப்பி விடவேண்டும்...

இருட்டுவேளை! பத்மாவதியின் அந்தப்புரம்! அங்கே சத்யசீலர்! அதை நேரே காணவேண்டும்! யார்? யாரடி? அரசர் காணும்படி நாம் ஏற்பாடு வேண்டும்... அதற்கு ஒரு வழி செய்யவேண்டும்... வா...

[அரசர் அறை வசந்தசேனையின் தோழி கதவைத் தட்டுகிறாள்]

தோழி : மகாராஜா...மகாராஜா ஆபத்து...கதவைத் திறங்க மகாராஜா...கார்யம் கெட்டுவிடும்...ஆபத்து மகாராஜா,

அரசர் : என்ன இது?

தோழி : மகாராஜா! அய்யோ...

அர : சொல்லு விஷயத்தை...

தோ : வசந்த சேனையம்மா...தூக்கு போட்டுகிட்டு

அர : ஆ!

தோ : சாகப் போறுங்க...சீக்கிரம் போனாத்தான் காப்பாத்தலாம்...

அர : எங்கே?

தோ : இந்தப் பக்கம்தான் போறுங்க......அய்யோ......அம்மா......

[ஓடுகிறார்கள். ஒரு மரத்தடியில் வசந்த சேனை தூக்குப் போட்டுக் கொள்ள எத்தனிப்பவள் போல் நிற்கிறாள்]

வ. சேனை : ஆண்டவனே...... அடியாளை உன் திருவடிகளிலே ஏற்றுக் கொள். அரசன் மீது நான் காட்டிய விஸ்வாசமெல்லாம் விழலுக்கிறைத்த நீராகிவிட்டது... அவர் மேல் குற்றமில்லை... என் விதி—நான்தானே அனுபவிக்க வேண்டும்

அரசர் : சே! சே? (ஓடி வருகிறார்) வசந்தி!...என்ன காரியம் செய்தாய்...இது என்ன பைத்தியக்காரத்தனம்

வ. சே : இல்லை...உண்மைக் காதலுக்குக் கிடைத்த பரிசு மகாராஜா... இனி நான் ஒரு கணமும்கூட உயிரோடிருக்க விரும்பவில்லை. உங்கள் கண்ணெதிரிலேயே கண்ணை மூடுகிறேன். அதுவே எனக்குப் பேரானந்தம் பிரபு!

அர : வசந்தி...வேண்டாம்...

வ. சே : விட்டு விடுங்கள் பிரபு!

அர : வசந்தி...வேண்டாம்...வா...இங்கே

வ. சே : என்னை விட்டுவிடுங்கள் — மகாராஜா — மரண முகப்பிலே ஒரு வேண்டுகோள். தயவு செய்து நிறைவேற்றுங்கள். தற்கொலை செய்துகொண்டாள் வசந்தா என்ற அவச்சொல் தங்களுக்கே வேண்டாம். தாங்களே கொன்று விடுங்கள்—இதோ (கட்டாரியைக் காண்பிக்கிறாள்). தங்கள் நினைவுகள் ஏந்திக் கொண்டிருக்கும் என் நெஞ்சிலே இதைப் பாய்ச்சுங்கள். இதைக் கத்திக் குத்தாகக் கருதமாட்டேன். என் கண்ணாளன் தந்த கடைசி முத்தமாகக் கருதுவேன். உம்...தயங்காதீர்கள்—ஏன் ஸ்வாமி தயக்கம்...

அர : வசந்தி...உனக்கு என்ன புத்தி மாறாட்டமா?

வ. சே : உங்கள் அன்பை இழந்த பிறகு நான் யாருக்காக வாழ வேண்டும்?

அர : வசந்தி...ஏதோ கோபத்தில் சொல்லிவிட்டேன்...

தோழி : நல்ல கோபம்...கொஞ்சம் தாமதித்திருந்தால் இந்நேரம் கொலை விழுந்திருக்கும்...ஏமாற்றி வாழ்பவர்கள் எல்லாம் இன்ப லோகம் போக வேண்டும்... நீங்கள் எமலோகம் போகவேண்டும்...நல்ல நியாயம் அம்மா இது...

வ. சே : சீ...என்னடி தத்துவார்த்தம் பேசுகிறாய்...மகாராஜாவிடம் பேசுகிறோம் என்ற மரியாதை கூட இல்லாமல்.

தோழி : மனங் கொதிக்குதம்மா...மகாராணியும்...

அர : என்ன...

வ. சே : வாயை மூடு...போ இதைவிட்டு...

தோ : என்னை அடியுங்கள்...கொல்லுங்கள் கவலையில்லை. என்றைக்கு இருந்தாலும் உண்மை வெளிவரத்தான் போகிறது...பல நாள் திருடன் ஒரு நாள்...

வ. சே : மாலினி...நீ போகமாட்டாய்......

தோழி : முடியாது...வந்து பாருங்கள், மகாராணி அந்தப் புரத்தை! அர்த்தராத்திரியில் அங்கே சத்யசீலருக்கு என்ன வேலை...

வ. சே : அய்யோ! அய்யோ?...

அரசர் : ஆ!......அப்படியா...உண்மையாகவா?... (ஓடுகிறார். வசந்தி, தோழி சிரிப்பு)