உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மனோகரா/காப்பக வழிசெலுத்தல் பகுதி 25
திரைக்கதை & வசனம்

மனோகரா

காப்பக வழிசெலுத்தல் பகுதி 25 · 25 / 57

[அந்தப்புரம்]

வசந்தா : உம், நாளை மனோகரனுக்கு வெற்றிவிழா வரவேற்பு!...அப்போது நான் விதவையைப் போல ஒரு மூலையில்......

அரசன் : (சங்கடத்துடன்).........வசந்தி! இப்படியெல்லாம் பேசாதே - சகலகெளரவத்தோடும் நீ சபைக்கு வரலாம்......

வச : வரலாமா?

அர : உம்...வரலாம்.

வச : உம்...தயக்கம் பிறந்துவிட்டது...பாவம்! நீங்கள் என்ன செய்வீர்கள். சபையோர்கள் அனுமதிக்க மாட்டார்கள். சக்கரவர்த்தியாயிருந்தாலென்ன சாதாரண பிரஜைகளுக்கு பயப்பட வேண்டியவர்தானே தாங்கள்!

அர : இல்லை...வரலாம்......

வச : வரலாம்!... எங்கே வந்தால் என்ன? எதிரி நாட்டிலே இருந்து வந்திருக்கிற அந்த ரத்ன சிம்மாசனத்திலே அல்லும், பகலும் உங்கள் அன்பையே நினைத்து தவம் இருக்கும் இந்த தரித்திரம் பிடித்தவள் பட்டமகிஷிபோல பக்கத்திலே அமர முடியுமா என்ன? அவ்வளவுக்கு கொடுத்து வைத்த பாவியா நான்?

அர : பக்கத்திலென்ன—பரமசிவனைப் போல பலமிருந்தால் உன்னை என் தலையில்கூட வைத்துக் கொள்வேன், கங்கையைப் போல!

வசந்தி : அப்படியானால் நாளை...... தர்பாரில்!