உள்ளடக்கத்திற்கு செல்லவும்
கலைஞர்கலைஞர்
மனோகரா/காப்பக வழிசெலுத்தல் பகுதி 18
திரைக்கதை & வசனம்

மனோகரா

காப்பக வழிசெலுத்தல் பகுதி 18 · 18 / 57

(பாண்டியன் அரண்மனை)

மனோகரன் : விஜயா.... இந்த அரண்மனையில் நீ ஒருத்தி தான் அழகி என்று நினைத்தேன். உனக்குப் போட்டியாக ஒரு பொற்கொடி யிருப்பது தெரியாமல் போய் விட்டது.

விஜயா : யார்?

மனோ : [கண்ணாடியில் தெரியும் விஜயாவின் உருவத்தை காட்டி] அதோ! தங்க ரோஜாவிலே வைரப்பனித்துளிகளின் சதிராட்டம் இந்தச் சிரிப்பு!

விஜ : அதிருக்கட்டும்! எதிரியின் மகள் நான்! என்னை தங்கள் தாய் தந்தையர்கள் ஏற்றுக்கொள்வார்களா?

மனோ : நானும் அப்படித்தான் சந்தேகித்தேன். எதிரியாயிற்றே நான் என்னை நீ ஏற்றுக்கொள்வாயோ என்று!

விஜ : உங்கள் வீரத்தைக் காதலித்தேன். என் தாய் நாட்டு மண் அதைத் தடுத்தது! உங்கள் வசீகரத்தில் மயங்கினேன்! அப்பாவின் பாசம் அதற்கு அணை போட்டது. முடிவில் உங்கள் நேர்மையான இருதயம் என்னை ஜெயித்துவிட்டது! என்ன?

மனோ : பேசு கண்ணே... பேசு! உன் அமுதூறும் இதழ் கடலின் தேனலைகளை... கண்கள் எழுதிக் குவிக்கும் காதற் காவியங்களை ரசித்துக்கொண்டே யிருக்கிறேன் இதயராணி... இன்னும் கொஞ்சம் பேசு...